செவ்வல்லி- கடிதங்கள்

j

செவ்வல்லியின் நாள்

 

ஜெ

 

பாண்டி போகும் வழியில் சிறு குளங்களில் கண்டவை மீண்டும் எழுந்து வந்தன

குமரிக்கு இயற்கையின் ஒரு தனி தீண்டல் உண்டு போல. கேரளத்தின் நீட்சி என்பதால், அந்த மழை காலங்கள் ஒரு வரம். அம்மழை  தரும் பசுமையின் தாண்டவம் அந்த வரத்தின் தொடர்ச்சி. மலையும், தொடர் மழையும், கடலும், ஆறும், அருவியும் என இயற்கை அள்ளி கிடக்கும்  நிலம் + உங்களின் சொல் அகராதி மிக பெரிது. அதனினும் பெரிது கணம் என தினம் என நீங்கள் தீராத மோகத்துடன் இயற்கையை அனுபவித்தபடி வாழ்வது… எனவே இத்தனை விரிவாக வரைய முடிகிறது. பொதுவில் “நேத்து நல்ல மழையாமே “ என்பது உங்களை பல பக்கங்களில் விரிய செய்கிறது. நுணுக்கி விரித்து குந்தி அரண்மனை உள்ளே கால் எடுத்து வைக்கும் கணம் வரை அழைத்து போக வைக்கிறது.

ஒவ்வொரு காட்சியும் நீங்கள் நடந்த நடையுடன்  நடக்க வைத்தது. சில வெண்ணல்லி அருகே இருக்க ஊர் உள்ளே செவ்வல்லி நிறைந்த குளம், திவலை வட்டமாக ஒட்டாத பாதரச நீர் கோலங்கள், நிலத்தில் பச்சையும், வான் தொடும் மலையும் வானும் நீலமும் என வண்ண மாற்றம்… மிக மெல்லியதாக ஒரு எட்டு வைத்து குளத்தில் நடந்து மெதுவாக நீர் மேல் உந்தி காற்றில் ஏறி விண்ணில் கலந்திடும் நிறைவை தருகின்றன படங்களும் எழுத்துகளும்.

 

லிங்கராஜ்

f

அன்புள்ள ஜெ

செவ்வல்லியின் நாள் ஒரு அருமையான கட்டுரை. நான் காலையில் அந்தக்கட்டுரையை வாசித்தேன்.மாலையில் தீபச்சுடர்களைப் பார்த்தபோது நினைத்துக்கொண்டேன். மழையில் அணையாத தீபங்களைக் காலையில் ஜெ சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார் என்று. அற்புதமான காட்சி அது. அந்த வயல்கள், கொக்குகள். வரிக்கு வரி படிமங்கள். ஒரு நீண்ட கவிதை. அந்தக்காலை நேரத்தையே அந்தக்கட்டுரை அழகாக ஆக்கிவிட்டது

 

ஜெயராமன்

 

g

அன்புள்ள ஜெ

 

செவ்வல்லியின் நாள் ஒரு அருமையான கட்டுரை

 

அதற்கு முந்தையநாள் நீங்கள் கொஞ்சம் மனத்தொந்தரவுக்கு ஆளாகியிருந்ததைப் பற்றி வாசித்திருந்தேன். என்ன காரணம் என்று தெரியும். ஆனால் அதிலிருந்து இந்த காலைவழியாக மீண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ச்சியாக பயணம் வழியாகவும் இயற்கையைப் பார்ப்பதன் வழியாகவும் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வருவதைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அதை இந்தக்கட்டுரையிலிருந்த பரவசத்திலும் பார்த்தேன்

 

திரும்பச்சென்று முகநூலில் பார்த்தேன். எழுத்தாளர்கள் என்னென்ன பொறாமைகளிலும் கசப்புகளிலும் வம்பு வழக்குகளிலும் மூழ்கி நாளைச் செலவிடுகிறார்கள் என்று தெரிந்தது. எவ்வளவு வேறுபாடு என்ற ஆச்சரியம் எழுந்தது. உங்களுக்கு அவர்களால் ஒருசில தொந்தரவுகள் வரலாம். ஆனால் ஒரு sublime state வழியாக நீங்கள் வெளிவந்துவிடுகிறீர்கள். அவர்கள் அதிலேயே கிடக்கிறார்கள். பாவம் என நினைத்துக்கொண்டேன்

 

செல்வா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-64
அடுத்த கட்டுரைகாம அம்பும், கரிய நிழலும்