பிரம்மானந்தன்

சில வருடங்களுக்கு முன்னர் ஓர் ஓட்டலில் ஷாஜியுடன் பேசிக்கொண்டிருந்தபோது எவரிடமோ அவர் தொலைபேசியில் பேசிவிட்டு என்னிடம் ‘ராகேஷ் பிரம்மானந்தன்.பாடகர் பிரம்மானந்தனின் மகன். இவரும் பாடுகிறார்’ என்றார். 2004, ஆகஸ்ட் பத்தாம்தேதியில் தன்னுடைய 58 ஆவது வயதில் பிரம்மானந்தன் மறைந் செய்தியை அப்போதுதான் நான் கேள்விப்பட்டேன்.

ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது. உண்மையில் நான் பிரம்மானந்தனை எப்போதும் மறந்ததில்லை. என் இளமை நினைவுகளில் அழியாது கலந்த ஒரு பெயர் அவர். அவர் குரலின் அசாதாரணமான நெகிழ்ச்சி என் எத்தனையோ இரவுகளை ஆழம் கொண்டதாகச் செய்திருக்கிறது. இரவில் கோயில்முன் மண்மேடையில் அமர்ந்து ரேடியோவில் அவரது பாடல்களைக் கேட்டு நானும் ராதாகிருஷ்ணனும் கனவில் மயங்கி அமர்ந்திருக்கிறோம்.

ஆனால் அவர் எழுபதுகளுக்குப் பின்னர் ஏன் பாடவில்லை என யோசிக்கவில்லை. அவர் என்ன ஆனார் என்று சிந்திக்கவேயில்லை. ஒருவகையில் அது சரிதான். பிரம்மானந்தனின் உடலோ ஆளுமையோ எங்களுக்கு தேவைபப்டவில்லை. அழியாத அவரது குரல் மட்டுமே போதுமானதாக இருந்தது.

பிரம்மானந்தன் 1946 ல் திரிச்சூர் அருகே கடக்காவு என்ற ஊரில் பிறந்தவர். கடக்காவு சுந்தர பாகவதர் இவரது முதல் குரு. பின்னர் சென்னைக்கு வந்து டி.கெ.ஜெயராமனிடம் மரபிசை பயின்றார். அகில இந்தியவானொலி நடத்திய மெல்லிசைப்போட்டியில் சிறந்த பாடகருக்கான முதல் பரிசை 1968ல் பெற்றார். 1969ல் இவரை இசையமைப்பாளர் கெ.ராகவன் தன்னுடைய கள்ளிச்செல்லம்மா என்ற படத்தில் அறிமுகம்செய்தார்

அந்தப்படத்தில் வரும் ’மானத்தே காயலில்’ என்ற பாடல் மலையாளத்தில் இன்றும் அழியாது நிற்கும் அபூர்வமான இன்னிசைமெட்டுக்களில் ஒன்று. அந்த ஒருபாடலுடன் பிரம்மானந்தன் பெரும்புகழ்பெற்றார். என் இளவயதில் பித்தேறியது போல பாடித்திரிந்த பாடல் அது. மிகமென்மையானது. தனக்குள்ளே பாடிக்கொள்வதற்கே உரிய மெட்டு.

பிரம்மானந்தனின் குரல் கனத்தது. தாழ்ந்ததளங்களில் இசைக்கும்போது அது மனதை வருடிச்செல்லும். அவரால் வேகமான பாடல்களை பாடமுடிந்ததில்லை. இன்னிசைமெட்டுதான் அவருக்கு உகந்தது. பாடலின் வரிகளுக்கு உண்மையான உணர்ச்சியை உருவாக்கியளிப்பதில் மலையாளப்பாடகர்களில் அவருக்கு நிகர் வேறு எவருமில்லை என்று சொல்லப்படுவதுண்டு.

ஆகவே அவருக்கு மெல்லிசைமெட்டுகளாக வந்தன. பாடிய பெரும்பாலான பாட்டுக்கள் பெரும் வெற்றி பெற்றன. உண்மையில் சதவீதக்கணக்கை வைத்துப் பார்த்தால் இத்தனை வெற்றிப்பாடல்களை கொடுத்த எந்த பாடகரும் இந்திய திரைவானில் இருக்க வாய்ப்பில்லை. பிரம்மானந்தன் பாடிய அனேகமாக எல்லா பாடல்களும் பெருவெற்றி பெற்றவையே

அவருக்கு கெ.ராகவன், தட்சிணாமூர்த்தி, எம்.கெ.அர்ஜுனன், ஏ.டி.உம்மர் ஆர்.கெ.சேகர் போன்ற இசையமைப்பாளர்கள் நிறைய வாய்ப்புகளை கொடுத்தார்கள். ஆனால் அன்று மலையாள இசையுலகின் முதன்மை இசையமைப்பாளராக இருந்த தேவராஜன் மாஸ்டர் பிரம்மானந்தனை தொடர்ந்து புறக்கணித்தார். ஆகவே பிரம்மானந்தன் குறைவான பாடல்களையே பாட நேர்ந்தது. ஒருகட்டத்தில் வாய்ப்பே இல்லாது போயிற்று

அதற்கு பலகாரணங்கள் சொல்லப்படுகின்றன. பிரம்மானந்தன் முன்கோபமும் கர்வமும் கொண்டவர், தேவராஜனை புண்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள். தேவராஜனை ஜேசுதாஸ் தன் பிடியில் வைத்திருந்தார் என்கிறார்கள். பிரம்மானந்தனை ஜேசுதாஸ் ஒழித்துக்கட்டினார் என்று சொல்பவர்கள் உண்டு.

மலையத்திப்பெண்ணு கன்னி நிலாவு என்ற இரு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கன்னிநிலாவு வெளியாகவே இல்லை. வெறும் பத்து வருடங்களே பிரம்மானந்தன் திரையுலகில் இருந்தார். எழுபதுகளின் இறுதியில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் குடிக்க ஆராம்பித்தார். தனிக்கச்சேரிகளில் பாடினார். பக்தி இசைத்தட்டுகள் வெளியிட்டார். ஆனால் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டது அவரை சித்திரவதை செய்தது. ஆகவே தன்மீதே வன்மம் கொண்டவர் போல மேலும் மேலும் குடித்தார்.

பிரம்மானந்தன் தமிழில் பத்துபடங்களுக்குமேல் பாடியிருக்கிறார். இளையராஜா அவருக்கு வாய்ப்புகள் வழங்கினார். ஆனால் அவரது குரலின் வசீகரம் இல்லாமலாகிவிட்டிருந்தது.

குடி முதிர்ந்து பொருளிழந்து தெருவில் அலையும் நாடோடியாக ஆனார். திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அவர் தன்னை இன்னாரென சொல்லாமல் குடிக்க காசு கேட்டு கையேந்துவதை பலர் கண்டிருக்கிறார்கள்.

பிரம்மானந்தனுக்கு மிக காலம் தாழ்த்தி 2003ல் கேரள சங்கீத நாடக அக்காதமி விருது கொடுக்கப்பட்டது. அவர் மனமுடைந்த நிலையில் இருந்த காலம் அது. வேறெந்த விருதும் அளிக்கப்படவில்லை. அவரது அற்புதமான பாடல்கள் வெளிவந்தகாலத்தில் மீண்டும் மீண்டும் எல்லா வருடங்களிலும் ஜேசுதாசுக்கே விருது அளிக்கப்பட்டது.

பிரம்மானந்தனை நினைத்துக்கொண்டு அவரது பாடல்களைக் கேட்கும்போது ஆழ்ந்த துயரம் மனதை நிரப்புகிறது. அவரது மெல்லிய மனம் இப்பாடல்களில் ஒலிக்கிறது. அது தான் அவரை வணிக உலகை எதிர்கொள்ளமுடியாமல் தோற்றுப்பின்வாங்கச் செய்தது போல

https://youtu.be/IL-0D2FuD68

தாரக ரூபிணி நீ எந்நும் என்னுடே
பாவன ரோமாஞ்சமாயிரிக்கும்
ஏகாந்த சிந்த தன் சில்லயில் பூவிடும்
ஏழிலம்பால பூவாயிரிக்கும்

நித்ரதன் நீரத நீல விஹாயஸில்
நித்யவும் நீ பூத்து மின்னி நில்கும்
ஸ்வப்ன நட்சத்திரமே நின் சிரியில்
ஸ்வர்க சித்ரங்கள் ஞான் கண்டுநில்கும்

காவிய விருத்தங்களில் ஓமனே நீ
நவ மாதங்க மஞ்சரி ஆயிரிக்கும்
என் மணி வீண தன் ராகங்ஙளில் சகி நீ
சுந்தர மோகனமாயிரிக்கும்

ஈஹர்ஷ வர்ஷ நிஸீதினியில் நம்மள்
ஈணமும் தாளமுமாய் இணங்ஙி
ஈ ஜீவ சங்கம தன்யத காணுவான்
ஈரேழு உலகும் அணிஞ்ஞொருங்ஙீ

தாரக ரூபிணி நீ எந்நும் என்னுடே
பாவன ரோமாஞ்சமாயிரிக்கும்
ஏகாந்த சிந்த தன் சில்லயில் பூவிடும்
ஏழிலம்பால பூவாயிரிக்கும்

[தமிழில்]

நட்சத்திர வடிவம் கொண்டவளே நீ என்றும் என்
கற்பனையின் புல்லரிப்பாக இருப்பாய்
தனிமை நினைவின் சிறுகிளையில் பூக்கும்
ஏழிலம்பாலை மலராக இருப்பாய்

நித்திரையின் நீர் நிறைந்த நீல வெளியில்
நித்தமும் நீ பூத்து மின்னி நிற்பாய்
சொப்பன நட்சத்திரமே உன் சிரிப்பில்
சொற்க சித்திரங்கள் நான் கண்டு நிற்பேன்

கவிதை யாப்புகளில் அன்பே நீ
புதுமையான மாதங்க மஞ்சரி ஆயிருப்பாய்
என் மணி வீணையின் ராகங்களில் சகி நீ
சுந்தர மோகனமாக இருப்பாய்

இந்த மெய்சிலிர்ப்ப்புப் பெருக்கின் நீளிரவில் நாம்
ராகமும் தாளமும் போல இணைந்தோம்
இந்த உயிர்சங்கமத்தை காண
ஈரேழு உலகமும் அலங்கரித்துக்கொண்டன

[பாடல் ஸ்ரீகுமாரன் தம்பி. இசை தட்சிணாமூர்த்தி. பாடியவர். பிரம்மானந்தன். படம் சாஸ்திரம் ஜயிச்சு மனுஷ்யன் தோற்று]

தாமரப்பூ நாணிச்சு
நின்றெ தங்க விக்ரகம் விஜயிச்சு
புளகம் பூக்கும் பொய்க பறஞ்ஞு
யுவதீ நீயொரு பூவாய் விடரூ

நதியுடே ஹிருதயம் ஞான் கண்டு
நின் நடையில் ஞானா கதி கண்டு
காற்றாம் காமுக கவி பாடி
கரளே நீ ஒரு புழயாய் ஒழுகூ

பூவாய் ஓமன விடராமோ
நின்னே புல்காம் ஞான் ஒரு ஜலகணமாய்
புழயாய் ஓமன ஒழுகாமோ
உணராம் ஞான் ஒரு குளிர்காற்றாய்

[தமிழில்]

தாமரைப்பூ வெட்கியது
உன் தங்கச்சிலையே வென்றது
புல்லரிப்பு பூக்கும் பொய்கை சொன்னது
யுவதியே நீ ஒரு பூவாக விரிக

நதியின் இதயம் நான் கண்டேன்
உன் நடையில் நான் அந்த கதி கண்டேன்
காற்றாகிய காதலக்கவிஞன் பாடினான்
இதயமே நீ ஒரு நதியாய் ஓடுக

பூவாக அன்பே நீ விரிவாயா
உன்னை தழுவுவேப் நான் ஒரு நீர்த்துளியாய்?
நதியாய் அன்பே நடப்பாயா
உன்னை உணர்வேன் நான் ஒரு குளிர்காற்றாய்?

பாடல். ஸ்ரீகுமாரன் தம்பி இசை ஆர்.கெ.சேகர் .படம் – டாக்ஸிகார் 1972

நீல நிஸீதினீ
நின் மணி மேடையில்
நித்ராவிஹீனயாய் நிந்நூ
நின்மலர்வாடியில் நீறும் ஒரு ஓர்ம போல்
நிர்மலே ஞான் காத்து நிந்நு

ஜாலக வாதிலில் வெள்ளிக்கொளுத்துகள்
தாளத்தில் காற்றில் கிலுங்ஙி
வாதில் துறக்கும் எந்நு ஓர்த்து
விடர்ந்நிதென் வாசந்த ஸ்வப்ன தளங்ஙள்

தேயுறும் சந்திரிக தேங்ங்குந்ந பூவின்றே
வேதன காணாத மாஞ்ஞு
தேடித்தளரும் மிழிகளுமாய் ஞான்
தேவியே காணுவான் நிந்நு

[தமிழில்]

நீல நிசியே
உன் மணிமேடையில்
நித்திரையில்லாமல் நின்றேன்
உன் மலர்வனத்தில் நின்றெரியும் ஒரு நினைவுபோல
கள்ளமற்றவளே உன்னை காத்து நின்றேன்

சாளார வாசலில் வெள்ளித் தாழ்கள்
தாளத்துடன் காற்றில் குலுங்கின
வாசல் திறப்பாய் என நினைத்து
விரிந்தன என் வசந்தகால கனவின் இதழ்கள்

தேய்வுகொள்ளும் நிலவு தேம்பும் மலரின்
வேதனையைக் காணாமல் மறைந்தது
தேடித்தளாரும் விழிகளுடன் நான்
தேவி உன்னை காண்பதற்காக நின்றேன்

எழுதியவர் ஸ்ரீகுமாரன் தம்பி. இசை எம் கெ அர்ஜுனன். படம் சிஐடி நசீர் 1971

முந்தைய கட்டுரைதகர முரசு-கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாஞ்சில் சென்னையில்…