சிறுகதைகள் -கடிதங்கள்

 

sirru

ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க

 

அன்புடன் ஆசிரியருக்கு

 

காலை சிறுகதை வாசித்தேன்.  இந்த மிகச்சிறிய கதை மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துவிட்டது. “இதெல்லாம் என்ன” என்று மட்டுமே உள்ளம் மீண்டும் மீண்டும் அரற்றுகிறது. அந்த சேவல் ஏன் கூவியது. அதற்கு என்னதான் அர்த்தம். அது மொத்த மானுடத்தையும் நோக்கி சிரிக்கிறதா? அதுவொரு வசைச்சொல்லா? ஊமைச்செந்நாயில் துரையை பற்றிக் கொள்ளாமல் இறந்து போகிறவனுக்கு நேரெதிரே நிற்கிறது இந்தச் சேவல்.

 

விடியலின் நம்பிக்கையின் அடையாளமாக உருவகப்படுத்தப்பட்டிருப்பது சேவல் கூவுவது. அதையும் தாண்டி மனதிற்குள் ஒரு இனிய படிமமாக என் போன்று கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களிடம் நீடிப்பது . அதற்கு முற்றிலும் எதிரான ஒரு நிலையில் இந்த சேவல் கூவுகிறது. அதுதான் இத்தகைய தீவிரமான பாதிப்பை மனதில் ஏற்படுத்துகிறது என்று எண்ணி சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

 

அன்புடன்

 

சுரேஷ் பிரதீப்

 

 

அன்புள்ள ஜெ

 

சமீபத்தில் உங்கள் சிறுகதைத் தொகுதியில் வாசித்த கதை திருமதி டென். மானுட மனத்தின் குரூரத்தைச் சொன்ன கதைகளில் ஒன்று அது. திருமதி டென் ஒரு அன்னை. அன்னை என்பவள் கருணையின் உறைவிடம் என்றே நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. எந்த உயிருக்கும் அவள் அன்னை. ஆனால் அன்னை தன் பிள்ளைகளுக்காக எந்தக்குரூரத்தையும் செய்வாள். அவளுடையது ஒரு உயிரியல் இயல்பே ஒழிய அறம் அல்ல. அதை பொட்டிலறைந்ததுபோலச் சொன்ன கதை அது. உங்கள் கதைகளில் குரூரமான ஒன்று

 

ராஜேஷ்

முந்தைய கட்டுரைபிரதமன் கடிதங்கள் 5
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனின் அயோத்திதாசர் ஆய்வுகள்- சுனீல் கிருஷ்ணன்