பழைய யானைக்கடை -கடலூர் சீனு

pazaiya

 

கவிஞர் இசை, காலச்சுவடு வெளியீடான , .தனது ”சாம்பிள் சர்வே ”ஆய்வு நூலுக்கு சூட்டி இருக்கும் தலைப்பு , பழைய யானைக் கடை . பழைய இரும்பு கடை ,பழைய வீட்டு உபயோக பொருட்கள் கடை ,பழைய புத்தக கடை போல பழைய யானைக் கடை . யானை இருந்தாலும் ஆயிரம் பொன் ,இறந்தாலும் ஆயிரம் பொன் . அதை பழைய யானை கடையில் வாங்கினால் ஐநூறு பொன் என இருக்குமோ . பேரம் பேசாமல் வாங்கினால் அதன் அங்குசத்தை இலவசமாக தருவார்களோ .தந்தம் இல்லாத கிழட்டு ஆண் யானை ,பிச்சை எடுக்க தெரியாத, எதையும் சுமக்க இயலாத பெண் யானை இவற்றை இந்த பழைய யானை கடையில் விலைக்கு எடுப்பார்களா ? நகைப்பூட்டும் வினோத கற்பனைகளை எழுப்பும் தலைப்பு .

இசையின் ஆய்வு நோக்கம் . சங்க காலம் முதல் இன்றைய உலகமயமாக்கல் காலம் வரை தீவிர தமிழ்க் கவிதைப் பரப்பில் நிகழ்ந்திருக்கும் நகை எனும் மெய்ப்பாடுக்கான வெளிப்பாட்டு சான்றுகள் . தான் ”எதை” நகை என்றும் விளையாட்டு என்றும் கருதுகிறாரோ அதை [மிகவும் கறாராக அன்றி ] சற்றே கோடிட்டு காட்டிவிட்டு , அந்த ஆய்வு நோக்கி சென்ற காரணத்தயும் குறிப்பிட்டு விட்டு , அவரே சொன்னது போல ,இந்த சாம்பிள் சர்வே நூலுக்குள் நுழைகிறார் .

அறிமுக வாசகர்களையும் கணக்கில் கொண்டு , அகப்பாடல்கள் ,புறப்பாடல்கள் ,நீதிநூல்கள் ,காப்பியங்கள் ,பக்தி இலக்கியங்கள் ,சிற்றிலக்கியங்கள் ,கம்பராமாயணம் ,தனிப்பாடல்கள் என பாரதி காலம் வரை , அனைத்து கவிதைகளில் இருந்தும் சிலவற்றை முன் வைத்து ,அவற்றின் பின்புலத்தை அழகியலை அறிமுகம் செய்து விட்டு ,அதன் இறுதியில் தனது ஆய்வு வழியே கண்டடைந்த கவிதைகளை முன்வைக்கிறார் . பாடலுக்கான உரைகளை அவரே அவரது பாணியில் எது கோடிட்டு காட்டப் பட வேண்டுமோ அதை மையப்படுத்தி [சம்பிரதாயபடி பெரியவா எல்லோர் வசமும் மாப்புகேட்டுவிட்டுத்தான்] எழுதி இருக்கிறார் . உதாரணம்

ஈர்ங்கை விதிரார் காவலர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு .

கயவர்கள் ஈரக்கையைக் கூட உதறமாட்டார்கள் .யாருக்கு எனில் அவரது செவிட்டிலேயேஅடித்து அதை உடைக்கும் வல்லமை இல்லாதவருக்கு .
அதாவது செவிட்டிலேயே நாலு போடு .தானா தருவான் என்கிறார் அய்யன் .

சங்க கவிதைகளில் துவங்கி ,பாரதி ,நா.பிச்சமூர்த்தி ,ஆத்மாநாம் ,சி .மணி ,ஞானக்கூத்தன் ,மௌனி ,சுந்தர ராமசாமி ,தேவதச்சன் ,கலாப்ரியா ,சமயவேல் ,சுகுமாரன் ,விக்ரமாதித்தன் ,யுவன் சந்திரசேகர் ,மகுடேஸ்வரன் ,கரிகாலன் ,மனுஷ்ய புத்ரன் ,ஷங்கர் ராமசுப்ரமண்யன் ,பெருந்தேவி ,லீனா மணிமேகலை ,முகுந்த் நாகராஜன் ,இளங்கோ கிருஷ்ணன் ,வெய்யில் ,கண்டராதித்தன் ,செல்மா ப்ரியதர்ஷன் ,நரன் ,லிபி ஆரண்யா ,போகன் ஷங்கர் ,சபரிநாதன் ,பேயோன் ,கதிர்பாரதி , [இந்த கறார் ஆய்வாளரின் சுயமதிப்பீட்டின் படி கவிஞர் இசை] என இந்த கவிஞர்களின் குறிப்பிட்ட கவிதைகளில் ,அதன் நகை வழியே அக் கவிதையின் பேசுபொருள் கொள்ளும் தீவிரம் குறித்து பேசி இருக்கிறார் .

இவை எது ஆக சிறந்த கவிதைகள் எனும் வரிசை அல்ல .கவிதையில் விளையாட்டு தொழில்படும்போது அக் கவிதையின் பேசுபொருள் கொள்ளும் தீவிரம் சார்ந்தே இந்த ஆய்வு என இசை தெளிவாகவே சொல்லி விடுகிறார் . விளையாட்டு எனும் கருதுகோளுக்கு வரையறை அளித்து விட்டு ,அந்த வரையறை கொண்டு பலவற்றை கேள்வி கேட்கிறார் .உதாரணமாக தேவதச்சனின் ஹையா ஜாலி கவிதையை , இந்தக் கவிதைக்குள் வார்த்தைகளாக மட்டுமே இருக்கிறது இந்த ஹையா ஜாலி . வாசகனுக்கு எங்கே ஐயா கிடைக்கிறது அந்த ஜாலி என வினவுகிறார் . [எனது சொற்களில் எழுதி இருக்கிறேன் இசையின் சொற்கள் வேறு ] .

isai

இந்த நூல் பேசும் பொருள் சார்ந்து ஒரு கவிதை வாசகன் இதுவரை தவறவிட்ட பல்வேறு அவதானங்களை மீட்டுக்கொள்ள இயலும் .உதாரணமாக இந்த நூலில் வாணிஸ்ரீ நீ வரவேண்டாம் ,மற்றும் பேன் புராணம் என்ற மனுஷ்ய புத்திரனின் இரண்டு கவிதைகள் குறித்து பேசப்படுகிறது .மனுஷ்யபுத்திரன் கவிதைகள் அதன் பேசு பொருள் சார்ந்து ,பெரும்பாலும் ஒரே உணர்வை மீள மீள வெவ்வேறு தருணங்களில் நுண்மையாக சொல்வதன் வழியே தனது ”வித்தியாசங்களை ”[வேரியேஷன்] தக்கவைத்துக் கொள்கிறது .

இந்த நிலையில் மேற் சொன்ன இரண்டு கவிதைகளும் அதற்குள் தொழிற்படும் நகை எனும் மெய்ப்பாடு காரணமாகவே , தன்னியல்பாக தனக்கேயான வெவ்வேறு களங்களையும் , தருணங்களையும் ,ஆழத்தையும் ஈட்டிக் கொள்கிறது என்பதை இசையின் இந்த நூல் வழியே ஒருவர் அவதானிக்க இயலும் . புதிய சாத்தியங்களை நோக்கி பாயும் இந்த நிலை மீதே இந்த நூலில் இசை கவனம் குவிக்கிறார் .

என் நோக்கில் இசையின் வரையறைக்கு உட்பட்டு இருப்பினும் கூட ,இந்த வரையறைக்குள் வரும் சில கவிதைகளை எழுதி இருக்கும் முன்தோன்றி மூத்த குடி பிரமிள் விடுபட்டு இருக்கிறார் . இந்த தலைமுறையில் விடுபட்டோர் யாவர் என ,இந்த நூல் சக கவிஞர்களால் வாசிக்கப்பட்டு , அதன்பயனாய் இசையின் சொக்காய் கிழியும் நாளில் தெரியவரும் .

தொல்காப்பியர் வகுத்துரைக்கும் எட்டு மெய்ப்பாடுகளில் முதல் மெய்ப்பாடே நகைதான் . அங்கிருந்துதான் தனது ஆய்வு பயணத்தை துவங்குகிறார் இசை . முடிவை மட்டும் விளக்கெண்ணெயில் விழுந்த வாழைப்பழம் போல , அப்படி எல்லாம் தமிழ்க் கவிதை வரலாற்றில் [அவரது அளவுகோலின் படி ] நகை என ஒன்றில்லை என சொல்லி விட முடியாது . ஆங்காங்கே தென்படுகிறது . எனும் வகையில் கூறி ,இனி இந்த மெய்ப்பாடு செழிக்கும் அறிகுறி தெரிகிறது என ஜோதிடம் போல கட்டியம் கூறி முடிக்கிறார் .

உணர்வுகளின் உச்ச வெளிப்பாடு இலக்கியம் .இலக்கியத்தின் சிகர முனை வெளிப்பாடு கவிதை . பொதுவாகவே தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு .அது இங்கே எந்த அளவில் இருக்கிறதோ அதே அளவில்தான் தமிழ்க் கவிதை வரலாற்றிலும் இருக்கிறது .

மேற்கண்டவை இசை சொல்லாதது . இசையின் இந்த நூலின் வழி நான் சரிபார்த்துக்கொண்டது. இந்த நூலின் அட்டைப்படத்தை பற்றி சொல்லி ஆக வேண்டும் . அந்த கொம்பன் யானையின் உடல் மொழியும் ,அதன் கண்களில் மிளிரும் ஞானச் செருக்கும் அடா அடா . எந்த அரசன் ,எந்த பாணனுக்கு பரிசாக அளித்து , அந்த பாணனால் பழைய யானைக் கடையில் போடப்பட்ட யானையோ தெரியவில்லை : )

கடலூர் சீனு

 

பழைய யானைக்கடை வாங்க 

முந்தைய கட்டுரை‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி
அடுத்த கட்டுரைநிழல்யுத்தம் -கடிதங்கள்