வாசிப்பில் சோர்வு

reader

வணக்கம் சார்…..

கடந்த காலங்களில் காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, உயிர் எழுத்து போன்ற இலக்கிய இதழ்கள்  மாதத் தொடக்கத்தில் என்று வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. யாரெல்லாம் கதை கட்டுரை எழுதியிருப்பார்கள் என்ற ஆவலும் மேலாேங்கும்..கடந்த சில வருடங்களாக அந்த எதிர்ப்பார்ப்பு எல்லாம் போய்விட்டது…

நாஞ்சில்நாடன், சுந்தரராமசாமி,காநாசு, பிரபஞ்சன்…..

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,ரமேஷ்-பிரேம்,…. என படைப்பாளிகளின்  புதிததாக இப்போது என்ன  எழுதி வருகிறார்கள் என்பது மனதில் மகிழ்ச்சி ஊற்று  இருக்கும்…

அப்போது வரும் புதிய படைப்பை வாசித்தால் மன நிறைவு இருக்கும்…

அதே போன்று இலக்கிய விவாதங்கள் விமர்சனங்கள், சர்ச்சைகளும் கலைகட்டும்..

இப்போது அந்த இலக்கிய  சூழல் இல்லையோ என தோன்றுகிறது.

அன்று நிரந்தர வேலை இல்லை. வாசிப்பு மட்டுமே என்னுடன் இருந்த நண்பன். இப்போது வேலை குடும்பம் என ஆனதால் ஒரு புத்தகத்தை படிக்க ஒரு வாரம், மாதம் ஆகுகிறது. இந்த சூழலும் ஒரு காரணம் என்றாலும்….இந்த மனநிலையில் இருந்து வெளியே நினைக்கிறேன்.

நன்றி சார்…

அன்புச்செல்வன்

***

அன்புள்ள அன்புச்செல்வன்

எவராயினும் ஒரு புதிய கலைக்குள், அறிவுத்துறைக்குள் நுழைகையில் ஒரு பெரும் பரவசம் இருக்கும். எல்லாமே ஆர்வமூட்டும். சலிக்காமல் அதில் ஈடுபடுவோம். அந்தக் கலையும் அறிவுத்துறையும் சற்றுப் பழகிவிட்டபின்னர் அந்த ஆர்வம் மட்டுப்பட்டு உயர்ந்தவற்றில் மட்டும் ஈடுபடுவோம். அது இயல்பு

உலகியல் சார்ந்து மிதமிஞ்சிய ஆர்வம் கொண்டு ஈடுபடுவது, அதன் விளைவாக கலை- அறிவியக்கத்தில் நீண்ட இடைவெளிகள் விட்டுவிடுவது ஆகியவை ஆர்வத்தைக் குறைக்கும். வாசிப்பைப் பொறுத்தவரை சில ஆண்டுகள் வாசிக்காமலிருந்தால் பிறகெப்போதுமே வாசிக்கமுடியாமலாகிவிடக்கூடும்.

உங்கள் சோர்வு எதனால் என நீங்களே முடிவுசெய்யவேண்டும். எதனாலாக இருந்தாலும் ஒவ்வொருநாளும் சிறிதளவாயினும் வாசிக்க, வாசித்தவற்றை எங்கேனும் சற்றே பேச முயல்க. மெல்லமெல்ல உள்ளம் அதில் ஈடுபடும். முதலில் உள்ளே நுழைவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். நாம் நம்மை வலுக்கட்டாயமாக ஆழ்த்திக்கொண்டால் அதுவே நம்மைக் கொண்டுசெல்லும்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-68
அடுத்த கட்டுரைகீழ்மையின் சொற்கள்