நேர்கோடற்ற எழுத்து தமிழில்..

sura

வணக்கம் திரு ஜெயமோகன்

முன்பொரு கடிதத்தில்(இலக்கியமும் மொழியும்) ஆங்கில நடையை என்னால் ரசிக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு காரணமாக ஆங்கிலம் செவியில் விழும் சூழலில் நான் இல்லை எனவும் கூறியிருந்தீர்கள். நான் படிக்கும் புத்தகங்களும் பார்க்கும் படங்களும் பெரும்பாலும் பிரிட்டிஷ் படைப்பாளர்களது தான். ஆனால் அதுமட்டும் அல்ல நான் ஆங்கில இலக்கியத்தை நோக்கி செல்ல காரணம். நான் லீனியர் நரேட்டிவ்(nonlinear narrative) ஆங்கில புத்தகங்களில் என்னை பெரிதும் கவர்ந்த ஒன்று. போர்ட் மடோஸ் போர்டின்(Ford Madox Ford) எ குட் சோல்ஜர் மற்றும் பரேட்ஸ் எண்ட் நாவல்கள், பால் ஸ்காட்டின்(Paul Scott) தி ராஜ் குஆர்டெட் நாவல்கள் இவ்வகையிலான நடை அமைப்பை கொண்டது.

குட் சோல்ஜெரில் தன் மனைவி பற்றிய நினைவுகளை கணவன் நம்மிடம் பகிர்ந்து கொள்வது தான் கதை. அதை சொல்லும் விதத்தில் இப்புத்தகம் மற்ற நாவல்களிடம் இருந்து தனித்து நிற்கிறது. கதை நேராக சொல்லப்படவில்லை. அவர் தன் நினைவுகளில் முன்னும் பின்னுமாக அலைபாய்கிறார். கதையின் முக்கியமான முடிப்புகள் முன்னரே எவ்வித அறிவிப்பும் இன்றி நம் முன்னே சாதாரணமாக சொல்லபடுகின்றன. கதையின் மிக முக்கியமான நிகழ்வுகளை போகிற போக்கில்  ஒரு வரியில் சொல்லிவிட்டு பின்பு வேற விஷயங்களை பற்றி பேச துவங்கிவிடுகிறார் கதைசொல்லி. Unreliable narrator என்பதற்கான சிறந்த உதாரணம் இந்நூல். இவ்வாறான திகைப்புகளை கதை நெடுக அடைந்து வந்தாலும் இறுதியை நோக்கி ஆர்வம் அதிகரித்தப்படி தான் செல்கிறது. பரேட்ஸ் எண்ட் நாவல்களும் நான் லீனியர் முறையில் எழுதப்பட்டது தான்.

பால் ஸ்காட்டின் ராஜ் குஆர்டெட் நாவல்கள் ப்ரௌஸ்ட் மற்றும் டால்ஸ்டாயின் எழுத்துக்களுடன் ஒப்பிடப்படுகின்றனவை. கதையின் மையமான ஒரு கற்பழிப்பு காட்சியை பற்றி முன்னரே எவ்வித அறிமுகமும் இன்றி சொல்லி செல்கிறார். அதே போல் ஒரு கதாபாத்திரத்தின் மரணம் அது கதையின் போக்கில் நடக்கும் முன்னரே நமக்கு வேறு ஒரு காலநேரத்தில்(timeline) இன்னொரு கதாபாத்திரம் மூலம் சொல்லப்படுகிறது.

asokamithran

நான் லீனியர் நூல்கள் படிக்கும்பொழுது நம்மை சிந்திக்க செய்கின்றன. மூளை தொடர்ந்து தூண்டபட்டு கொண்டே இருக்கிறது. அறம் கதைகளுக்கு பின் நான் நேரே விஷ்ணுபுரம் தான் துவங்கினேன். அதற்கு காரணம் நூலின் முதல் மூன்று அத்தியாயங்கள். நான் தமிழில் படித்த முதல் நான் லீனியர் நரேட்டிவ் அது தான். அதன் பிறகு வெண்முரசிலும் தொடர்ந்தது. மாமழையின் வருகையை ஒரு காவலனின் மூலம் காண செய்வது. ஒரு போரின் பின் ஓய்ந்திருக்கும் கதாபாத்திரத்தை விவரிக்க துவங்கி அதன் மூலம் முன்னரே நிகழ்ந்த போரை மீள செய்வது. பின்னர் நிகழவிருப்பதை குறிப்புக்கள் மூலம் முன்னரே சொல்வது என பல நான் லீனியர் அமைப்புகளை கொண்டது வெண்முரசு. நான் வெண்முரசின் நூல்களை திரும்ப திரும்ப வாசிப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

நான் லீனியர் எழுதுவதில் சவால்கள் என்ன? தமிழில் நான் லீனியர் அமைப்பை கொண்ட சிறந்த நூல்கள் என நீங்கள் பரிந்துரைப்பவை எவை?

ஸ்ரீராம்

***

பி.கு. nonlinear என குறிப்புச்சொல்லிட்டு தளத்தில் தேடியதில் இரா.முருகனின் பானை என்ற கதை மட்டுமே கிடைத்து.

koNangki
கோணங்கி

அன்புள்ள ஸ்ரீராம்

நேர்கோடற்ற எழுத்து [nonlinear narrative ] எனப்படுவது ஓர் எழுத்துமுறை அல்ல. ஓர் இலக்கியவகைமை அல்ல. அது எழுத்தின் ஓர் இயல்பைச் சுட்டிக்காட்ட விமர்சகர்கள் உருவாக்கிய அடையாளம். வேண்டுமென்றால் அதை ஓர் இலக்கிய உத்தி என்று சொல்லலாம். அப்படி பல அடையாளங்கள் வழியாகவே இலக்கியத்தை விமர்சகர்கள் வரையறைசெய்கிறார்கள். அது இலக்கியம் உருவானபின்பான செயல்பாடே ஒழிய இலக்கியத்தின் வெளிப்பாட்டு இயல்பு அல்ல. இந்த வேறுபாட்டை நம் கல்விப்புலத்தில் மீளமீளச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

நேர்கோடற்ற புனைவு குறித்துப் பேசும்போது முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். புனைவு என்பதே நேர்கோடற்றதன்மை கொண்டதுதான். மகாபாரதம் அல்லது இலியட் என மானுடம் உருவாக்கிய தொடக்ககால படைப்புகளையே உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். ஆயிரத்தொரு அராபிய இரவுகள், கதாசரித சாகரம் போன்ற நாட்டார்த்தன்மை கொண்ட ஆக்கங்களும் நேர்கோடற்ற புனைவுத்தன்மை கொண்டவைதான். தமிழில் உருவான ஐம்பெருங்காப்பியங்களில் இன்று கிடைக்கும் மூன்றும் நேர்கோடற்ற தன்மை கொண்டவைதான்.

ஏன் அந்த நேர்கோடற்ற தன்மை? வாழ்க்கையில் இருக்கும் நேர்கோடற்றத் தன்மையால்தான். வாழ்க்கை கட்டின்றி விரிந்து கிடக்கிறது. அதை நுட்பமாக எதிரொளிக்கும் இலக்கியமும் அவ்வடிவையே இயல்பாக வந்துசேர்கிறது. வாழ்க்கையின் கட்டற்றதன்மையை சொல்வதற்கான முயற்சி ஒருபக்கம். இன்னொருபக்கம் எழுதப்பட்ட கதையை மேலும் மேலும் வாழ்க்கையைக்கொண்டு நிறைப்பதற்கான பின்னாளைய முயற்சிகள். அவை இடைச்செருகல்களாக உள்ளே நுழைந்து படைப்பை நேர்கோடற்ற புனைவாக ஆக்கி ஒரு கட்டத்தில் வலைப்பின்னலாகவே மாற்றிவிடுகின்றன. உதாரணம், மகாபாரதம்.

yuvan
யுவன் சந்திரசேகர்

அத்துடன் ஒன்றைக் கவனிக்கலாம். தொன்மையான பெரும்பாலான செவ்விலக்கியங்கள் மீபுனைவு [Meta-fiction]த் தன்மை கொண்டவை. ஆசிரியரே கதைக்குள் வந்து கதையை மாற்றிச் செல்கிறார். ஏனென்றால் பெரும்பாலான கதைகள் ஒருகாலத்தில் வாய்மொழியாகச் சொல்லப்பட்டவை. வாய்மொழிக்கதையின் உளநிலை எழுத்து என ஆனபின்னரும் நீடித்தது. அது  ‘சொல்லப்படும் கதை’. மகாபாரதம் சொல்லப்பட்ட கதையை மீண்டும் சொல்லி இன்னொருவர் அதை மீண்டும் சொல்லும் கதை.

அப்படியென்றால் எப்போது நேர்கோட்டு எழுத்து உருவானது?  இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக நோக்கினால் நேர்கோட்டு எழுத்து என்பது நவீன இலக்கியத்தின் ஆக்கம் என்பதைக் காணலாம். நவீன உரைநடை இலக்கியம் உருவாகி ஒரு தலைமுறைக்குப் பின்னர்தான் மெல்லமெல்ல நேர்கோட்டுக் கதைசொல்லல்முறை உருவாகி வந்தது. ஆரம்பகால உரைநடை இலக்கியங்கள் நேர்கோடற்ற தன்மைகொண்டவை. பொக்காஷியோவின் டெக்கமேரான் கதைகளையோ சாஸரின் காண்டர்பரி கதைகளையோ வீராச்சாமிச் செட்டியாரின் வினோத ரசமஞ்சரியையோ உதாரணமாகச் சுட்டலாம். தமிழில் உருவான முதல்நாவலான பிரதாபமுதலியார் சரித்திரமே நேர்கோடற்ற கதை கொண்டதுதான்

அடுத்தகாலகட்டத்தில்தான் படைப்பின்  ‘வடிவ ஒருமை’ முக்கியமான அழகியல்கூறாக முன்வைக்கப்பட்டது. க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரையிலான விமர்சகர்கள் வடிவஒருமை, மொழியொருமை ஆகிய இரண்டையும் வலியுறுத்தி அதைக்கொண்டே படைப்பை மதிப்பிடுவதைக் காணலாம். அந்த வடிவ ஒருமை எங்கிருந்து வருகிறது? அந்தப்படைப்பின் பின்னால் ஆசிரியன் என ஒருவன் இருக்கிறான். அவனுக்கு ஒரு நிலைபாடும் நோக்கமும் உணர்வுநிலையும் உள்ளது. அதுவே மையம். படைப்பு அந்த மையத்தைவிட்டு விலகாமல் இருந்தால் அதுவே வடிவ ஒருமை எனப்படுகிறது.

நவீனத்துவ எழுத்தின் மையம் இப்படி ஒருங்கிணைவுள்ள ஒற்றை ஆளுமையாக முன்வைக்கப்படும் எழுத்தாளனே. அவனுடைய ஆளுமையின் வெளிப்பாடே படைப்பு என அங்கே கருதப்பட்டது. அந்த ஆளுமை அவன் தன்னுணர்வுடன் தர்க்கபூர்வமாகக் கட்டமைத்துக்கொள்வது. தெளிவாக மாற்றமில்லாமல் முன்வைப்பது. இலக்கியத்தைப் பற்றிய பேச்சுக்கள் எல்லாமே ஆசிரியனைப்பற்றிய பேச்சுக்களாக மாறிய காலம் அது. அக்காலகட்டத்தில்தான் எழுத்தாளனின் வாழ்க்கையைச் சொல்லும் புனைவுகள் பெருகின – தமிழில் நகுலனின் ஆக்கங்கள், ஜே.ஜே சிலகுறிப்புகள் போன்றவை.

Charu_Nivedita
சாரு நிவேதிதா

ஆனால் வியாசமகாபாரதத்தை இந்த இலக்கணத்தில் நிறுத்த முடியுமா என்ன? அது கிருஷ்ண துவைபாயனனாலும் மாணவர்களாலும் இயற்றப்பட்டது. அதாவது இருநூறாண்டுக்காலம் வளர்ந்துகொண்டே இருந்த ஆக்கம். அதற்குப்பின்னால் ஒற்றை ஆசிரிய ஆளுமை இருக்க முடியுமா? பண்டைய ஆசிரியர்கள் எவருமே ஒற்றை ஆளுமைகள் அல்ல. ஏற்கனவே வெவ்வேறுவகையில் செவிவழிப்பாடல்களாக திகழ்ந்தவையே பின்னர் காவியமாக ஆக்கப்பட்டன. ஆகவே அவை ஒற்றை ஆசிரியனின் ஆளுமையை வெளிப்படுத்துவன அல்ல.

நவீனத்துவம் உருவாக்கிய அந்த ஒற்றை ஆசிரியன் என்னும் ஆளுமை ஒரு பிழையோ, மீறலோ அல்ல. அது ஒரு மானுடச்சாதனை. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் அங்கே மெல்லமெல்ல உருவாக்கப்பட்டு எழுந்துவந்த ’சிந்திக்கும் தனிமனிதன்’ என்னும் உருவகத்தின் உச்சநிலைகளில் ஒன்று அது. மொத்தச் சமூகத்தையும் மறு எல்லையில் நிறுத்தி, தன்னை இப்பால் வைத்து, ஆராய்ந்து, மதிப்பிட்டு வழிகாட்டும் ஆளுமையாக நவீனத்துவச் சூழலில் எழுத்தாளன் நிலைகொள்கிறான்.

இப்சனின் மக்களின் எதிரி [‘An Enemy of the People] நாடகத்தின் டாக்டர் தாமஸ் ஸ்டாக்மான் அந்த ஆளுமைக்கு மிகச்சிறந்த முன்வடிவம். இப்சன் தன் நாடகங்களுக்கு எதிராக எழுந்த மக்களின் எதிர்ப்பை அறைகூவும்பொருட்டு தன்னையே முன்னிலைப்படுத்தி உருவாக்கிய கதாபாத்திரம் அது. தனித்துநிற்பவனே ஆற்றல்மிக்கவன் என்னும் அதிலுள்ள வரி இன்றுவரை இலக்கிய ஆசிரியர்களை ஊக்கம்கொள்ளச் செய்வது. சுந்தர ராமசாமியில் அந்தக்குரல் எப்போதும் உண்டு. அதை ஜே.ஜே அழுத்தமாக முன்வைக்கிறான். அனைத்து அமைப்புகளுக்கும் நெறிகளுக்கும் எதிராக நின்றிருக்கும் ஆசிரியன் தன்னை அந்த எதிர்நிலையாலேயே ஒன்றாகத் திரட்டிக்கொண்டு ஓர் ஆளுமையாக ஆக்கிக்கொள்கிறான்.

இரா முருகன்

ஆனால் அடுத்தக் காலகட்டத்தில் அந்த ஆசிரியன் என்ற ஒற்றை ஆளுமை சிதையத் தொடங்கியது. ஆசிரியன் என்னும் அந்த அடையாளம் தன்னுணர்வுடன் திரட்டப்பட்டு வீம்புடன் முன்வைக்கப்படுவது மட்டுமே என்றும், அவன் அகம் என்பது பல்வேறு பண்பாட்டுக்கூறுகளால் கட்டமைக்கப்படுவது என்றும், வரலாற்றின் ஒரு காலத்துளியில் அப்போது செயல்படும் பலநூறு விசைகளின் நிகர்நிலைப்புள்ளி மட்டுமே என்றும், ஓர் எண்ணம் உருவாகியது. ரோலான் பார்த்தின் ஆசிரியனின் இறப்பு என்னும் புகழ்மிக்க வரி அதையே சுட்டுகிறது  ஆசிரியன் அழியவில்லை. ஒன்றாக இருந்தவன் பலவாகிப் பெருகினான்.

அவன் பலவாக ஆனபோது புனைவு மீண்டும் நேர்கோட்டுத்தன்மையை இழக்கத் தொடங்கியது.ஒன்றையொன்று ஊடுருவும், ஒன்றையொன்று மறுக்கும் பல்வேறு புனைவுச்சரடுகள், கருத்தியல்கூறுகள் பின்னி முடைந்த வெளியாக புனைவுகள் மாறின. நேர்கோடற்ற எழுத்துமுறை என்று இதையே சொல்கிறார்கள். தன்னுணர்வுடன் நேர்கோடற்ற எழுத்துமுறையை சிலர் முயன்றதுண்டு. ஆனால் இந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான இலக்கிய ஆக்கங்கள் இயல்பாகவே நேர்கோடற்ற தன்மை கொண்டவைதான்

கோணங்கியின் கதைகளில் மொழியே தன்னை சிதறடித்துக்கொண்டிருக்கிறது. அதற்குள் ஒன்றுக்குமேற்பட்ட கதைகளும் படிமங்களும் முறையாக அடுக்கப்படாமல் முட்டிக்குழம்பி அமைந்துள்ளன. நான் எழுதிய தொடக்ககாலச் சிறுகதைகளான படுகை முதல் நேர்கோடற்ற எழுத்துமுறையே உள்ளது. படுகை பலகதைகளின் வெளி. அத்துடன் மீபுனைவும்கூட. சுந்தர ராமசாமிக்கு அது ‘வடிவம் அமையாத’ கதையாகவே தோன்றியது. விஷ்ணுபுரம், பின்தொடரும்நிழலின் குரல் போன்ற நாவல்கள் நேர்கோடற்ற கதைப்பின்னலும் மீபுனைவுத்தன்மையும் கொண்டவைதான். மேலோட்டமான ஒரு கதைகூறுமுறைக்குள் அடக்கப்பட்டாலும் காடு ஆழத்தில் நேர்கோடற்ற கதையோட்டம் கொண்டது. வெண்முரசின் எல்லா நாவல்களுமே நேர்கோடற்ற கதையோட்டம் கொண்டவை. ஒன்றையொன்று ஊடுருவும் கதைகளால் ஆனவை

pa-ve
பா வெங்கடேசன்

சாருநிவேதிதா தன்னுணர்வுடன் திட்டமிட்டு நேர்கோடற்ற புனைவை எழுதியவர். அவருடைய சீரோடிகிரி, எக்ஸைல் போன்றவை அதற்குச் சிறந்த உதாரணம். யுவன் சந்திரசேகர் முற்றிலும் வேறொருமுறையில் நேர்கோடற்ற எழுத்துமுறையை உருவாக்கியவர். அவருடைய புனைவுலகில் கதைகளுக்குள் கதைகளுக்குள் கதைகள் விரிவதைக் காணலாம். இரா.முருகன் எழுதிய அரசூர் நாவல்களும் நேர்கோடற்ற புனைவுத்தன்மை கொண்டவைதான்.

பிரேம் ரமேஷ் தொடக்க காலத்தில் நேர்கோடற்ற புனைவுமுறைகளை பயின்று எழுதியவர்கள். இப்போது ரமேஷ் பிரேதனும் நேர்கோடற்ற புனைவுகளை எழுதிவருகிறார். எம்.ஜி.சுரேஷ் நேர்கோடற்ற புனைவுமுறையின் பலவடிவங்களை முயன்றிருக்கிறார். இப்போது பா.வெங்கடேசனும் நேர்கோடற்ற புனைவுமுறையை கொண்டு நாவல்களை எழுதியிருக்கிறார்.

ரமேஷ் பிரேதன்
ரமேஷ் பிரேதன்

நேர்கோடற்ற புனைவுத்தன்மை ஒவ்வொரு ஆசிரியரிலும் அவருடைய இயல்புக்கும் பார்வைக்கும் ஏற்ப வெவ்வேறு வடிவில் வெளிப்படுகிறது. நான் வரலாற்றின் அடுக்குகள், பண்பாட்டின் படிநிலைகளை முடைந்து நேர்கோடற்ற தன்மையை உருவாக்குகிறேன். யுவன் சந்திரசேகர் ஒரு புள்ளி வெவ்வேறு மானுடரிடம் வெவ்வேறுவகையில் வெளிப்படுவதை, அதன் வழியாக அப்படியொரு புள்ளியே இல்லாமலாவதை கதைகளில் உருவாக்குகிறார். இரா முருகன் சமகால வரலாறு என்ற முகமில்லாத பிண்டத்தை ஒவ்வொரு மானுடரும் ஒவ்வொரு கைப்பிடி அள்ளிக்கொள்வதை நக்கலும் கிண்டலுமாகச் சொல்லி அந்த நேர்கோடற்ற தன்மையை உருவாக்குகிறார். 

நேர்கோடற்ற எழுத்துமுறை என்பது ஓர் இலக்கணம் கொண்டது என்னும் எண்ணத்திலிருந்து விடுபட்டு அது ஒரு நிகழ்கால வெளிப்பாட்டுப்போக்கு என்று கொண்டோம் என்றால் அதன் பல்வேறு வண்ணவேறுபாடுகளை நாம் தமிழ்ப்புனைவுலகில் கண்டுகொள்ள முடியும்

ஜெ

கதைச் சதுரங்கம்
கதைகள்- உத்திகள்-கடிதங்கள்
முந்தைய கட்டுரைஅமிஷ் நாவல்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67