ஐரோப்பா,திராவிட இயக்கம் -கடிதங்கள்

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு

அன்புடன் திரு . ஜெயமோகன் அவர்களுக்கு

 

ஐரோப்பா – கலைத்தடுக்கப்பட்ட வரலாறு படித்தேன்.  வரலாற்றின் பல்வேறு ஆளுமைகளையும்  இணைந்த குறிப்புகளையும் செறிந்து வழங்கிய ஒரு பதிவு.   நானும் அந்த சதுக்கத்தில் காலாற நடந்து சிலைகளைப் பார்த்து பின் ஓரிடத்தில் உட்கார்ந்த மறுகணம் நிகழுலகுக்கு வந்துவிட்டேன்.

 

சிறுசிறு மிகச் சுவாரஸ்யமான தகவல்கள்.  ராய் பூலான் தேவியுடன் தங்கியிருந்தது, உப்புவேலியைப் பற்றிய அவரது ஆய்வு, அவரது வீட்டில் சுவற்றிலிருந்த ராமர் படம், பிரிட்டிஷ் ஏற்படுத்திய பஞ்சங்களும் இறப்புகளும் பற்றிய தகவல்கள்,  நெல்சன் வெற்றித்தூணிலிருந்து உள்ளார்ந்த பயணமாக  வேறு உளநிலை காட்டும் சித்தூர்கர் கீர்த்தி ஸ்தம்பம் பற்றிய குறிப்பு,  இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றமாக பள்ளிப்புத்தகம் மூலம் அறிமுகமாகிய ஆக்டேவியன் ஹியூம் உப்புவேலியின் நிர்வாகத்தை முழுமையாக ஒருங்கிணைத்தது  போன்ற தொகுப்பு ஒரு வித்தியாசமான வரலாற்றுப் பயண அனுபவத்தை அளித்தன.

 

ஆணவமும் திமிரும் வெளிப்படும் சர்ச்சிலின் சிலைக்கு முன் நிற்கும் உங்கள் முகத்தில் வெளிப்படும் ஒரு இறுக்கமும் மிடுக்கும், காந்தியின் முன்னால் நிற்கும்போது கனிந்திருக்கிறதுபோல் புகைப்படத்தில் தோன்றுகிறது.  கைக்குள் கை வைத்தபடி சீரிய சிந்தனையுடன் பக்கவாட்டில் பார்த்தபடி காந்தி இருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.  அப்படி அமைவதும் இயல்பென்றே தோன்றியது.

 

ஒருவரியாயினும்,  சென்னை  மூச்சுத்திணறும் மாநகரமாக ஆகிவிட்டிருப்பதை திடுக்கிடும் நிஜத்தோடு எழுதியிருப்பது நிதர்சனம்.

 

தாவிச்செல்லும் ஒரு வரலாற்றினூடே ஒரு சுழற்பயணம் இருந்த இடத்திலிருந்தே சாத்தியமானது.

 

 

நா. சந்திரசேகரன்

manush

 

மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்

 

அன்புள்ள ஜெ,

 

அன்புள்ள ஜெ

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் திரட்டி எடுத்த இந்த மூர்க்கம்தான் மறுபக்கம் எதிர்மூர்க்கமாக இன்று திரண்டுள்ளது

என்ற உஙகள் கருத்து உங்கள் இலக்கிய தரத்திலும் இல்லை..  உண்மை நிலையை பிரதிபலிக்கவும் இல்லை

உதாரணமாக பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் ஒரு குறிப்பிட்ட சூழலில் கம்யூனிச்தின் பெயரில் நிகழ்ந்த தவறுகளை சொல்லி இருப்பீர்கள்…  அதற்காக கம்யூனிச சித்தாந்தமே தவறு என சொல்ல மாட்டீர்கள்…   சொல்லப்போனால் உங்கள் எழுத்துகள் மூலம் கம்யூனிச தத்துவம் மூலம ஆர்வம் ஏற்பட்டு மேலதிக தகவல்கள் தேடி கற்றவர்கள் பலர் உண்டு.

எங்கோ சில ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கம்யூனிச சித்தாந்தமே தவறு என நிறுவவது உங்கள் அறத்துக்கு எதிரானது..  இலக்கியம் என்று பார்த்தாலும் எலியின் உயிர் பயத்தை மட்டுமல்ல   பூனையின பசியையும் சொல்வதுதான் உங்கள் எழுத்தில் நான் கண்டது

ஆனால் திராவிட இயக்கம் என வருகையில் தொண்ணூறுகளுக்குப் பிறகான திமுக நடவடிக்கைகளை வைத்து ஒட்டு மொத்தமாக திராவிட இயக்க பங்களிப்பை சாதனைகளை நிராகரிக்கிறீர்களோ என ஐயுறுகிறேன்

அந்த காலத்தில் எல்லாம் திமுகவை எம் ஜிஆர் கட்சி என்றுதான் கிராமத்தில் அழைப்பார்கள்…  அண்ணா இதை பெருந்தன்மையாக ஏற்றார்

நான  ஏன் பிறந்தேன் நூலில் தன்னை பயன்படுத்திக்கொண்டு வளர்ந்த சிலர் தனக்கு துரோகம் செய்ததை எழுதியிருப்பார்

அந்த காலத்தில் நிலவிய அறியாமைக்கு எதிராக பெரியாரின் கடுமை தேவைப்பட்டது . அதன் பின  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அண்ணா சற்று கடுமையை குறைத்தார்    அதன்பின  எம் ஜிஆர் மக்கள் மொழியில் பேசினார்
எழுத்து சீர்திருத்தம் இட ஒதுக்கீடு கல்வி.வளர்ச்சி  சத்துணவு  தமிழுக்குமதிப்பு  தமிழ் நாடு என்ற பெயர் என பல நல்ல.விஷயங்கள் திராவிட இயக்க ஆட்சியில் நடந்தன..எம ஜி.ஆரின  முதல் ஆட்சியில் மது விலக்கு இருந்தது.

நீங்கள சொல்லும் மூர்க்கம் இந்த கால கட்டங்களில் இல்லை..  அதாவது திராவிட இயக்கத்தின் உண்மையான தலைவர்களான அண்ணா மற்றும எம் ஜி ஆர் ஆட்சிகளில் அறவே இல்லை

வளர்ப்பு மகன் திருமணம்  சொத்துக்குவிப்பு…  ஸ்பெக்ட்ரம் ஊழல்   வாரிசு அரசியல் போன்றவற்றுக்கெல்லாம் பழியை திராவிட இயக்கம் மேல போடலாகாது

பெரியார் அண்ணா எம் ஜி ஆர் ஆகியோரது நோக்கம் சமூக நீதிமட்டுமே..     அரசியல் சட்டத்தையும் மீறி 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீட்டை அதிமுக கொண்டுவந்தது என்றால் இணக்கமாக நடந்துகொள்ளும் தன்மைதான்…

டிவி பத்திரிக்கை சினிமா வாய்ப்புகளுக்காகவும் அறியாமையாலும் சிலர் எம் ஜி ஆருக்கு பிறகான தொண்ணூறுகளுக்குபிறகான ஆட்சிகளை திராவிட இயக்க ஆட்சியாக கருதலாம்…  நீங்களும  அந்த கருதுகோள் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கத்தை நிராகரிப்பது அறமல்ல

இலக்கியத்தின் பங்களிப்பு குறித்துபேசும்போது சிறந்த மாதிரிகளைமுன் வைத்து விவாதிக்கிறோம்..
யாரோ இரு எழுத்தாளர்கள் டாஸ்மாக்கில் மது அருந்தி சண்டையிட்டதை ஆதாரமாககாட்டி இலக்கியத்தை நிராகரிப்பதில்லை

அதேபோல திராவிட இயக்க பங்களிப்பு என்றால் அண்ணா கலைஞர் ஜெ முதல் எடப்பாடிவரை பலரை முதல்வராக்கிய எம் ஜிஆரை முன்வைத்தே பேச வேண்டும்

அன்புடன்
பிச்சைக்காரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76
அடுத்த கட்டுரைரயிலில், கடிதங்கள் -6