அஸ்தினபுரியிலிருந்து நாற்பத்திரண்டு காதம் அப்பால், மைய வணிகப்பாதையில் அமைந்திருந்த முசலசத்ரம் என்னும் சிற்றூரில் தொன்மையான குதிரைச்சூதர் குலமான சுகித குடியில் சதமருக்கும் சாந்தைக்கும் மகனாக விசோகன் பிறந்தான். அவனது குடியில் அனைவருமே கரிய சிற்றுடல் கொண்டவர்கள். நெடுங்காலம் புரவிகளுடன் வாழ்ந்து புரவியின் உடல்மொழியையும் உளநிலையையும் அடைந்தவர்கள். தங்களை அவர்கள் புரவிகளென்றே உள்ளாழத்தில் நம்பியிருந்தனர். தொலைநாட்டுப் பயணத்தில்கூட அறியாத புரவிகள் அவர்களை புரவியின் வேறு வகையினர் என்பதுபோல் அடையாளம் கண்டுகொண்டு குறுஞ்சொல் எடுத்து அழைத்து உரையாடத் தொடங்குவதுண்டு.
புரவி எப்போதும் பாய்ந்து ஓடுவதற்கான உள்ளத்துடனும் உடலுடனும் இருப்பது. நின்றிருக்கையிலும் தனக்குள் விரைந்தோடிக்கொண்டிருப்பது. அதன் ஒவ்வொரு தசையும் தனிப் புரவிபோல் சிலிர்த்து இழுபட்டு சுருங்கி பாய்ந்துகொண்டிருக்கும். புரவிச் சூதர்களும் அவ்வண்ணமே எப்போதும் நாணிழுத்து அம்பேற்றப்பட்ட வில் போன்று இருப்பவர்கள். அவர்களின் உடலில் தசைகள் விதிர்ப்பதுண்டு. கைநொடிக்கும் ஓசையில் சுண்டப்பட்டதுபோல் அவர்கள் திரும்பி நோக்குவார்கள். அதற்கேற்ற சிற்றுடல் அவர்களுக்கு காலப்போக்கில் அமைந்தது. சுகிதர்கள் புரவிமேல் ஒரு வெட்டுக்கிளிபோல் அமர்ந்திருப்பார்கள், புரவி எடையுணர்வதேயில்லை என்பார்கள்.
ஆனால் விசோகன் பிறவியிலேயே பேருடல் கொண்டவனாக இருந்தான். அவன் அன்னையின் உடலுக்குள்ளிருந்து அவனை வெளியே எடுத்த வயற்றாட்டி அவன் எடையை எதிர்பாராததனால் கைநழுவவிட்டாள். குழவி மண்ணில் இரும்புக்குண்டு விழும் ஓசையுடன் அறைந்ததாக அவள் பின்னர் சொன்னாள். கைகால்களை உதைத்து முகம் சுளித்து அழுத குழந்தையை அவளும் துணைவயற்றாட்டியுமாக இருபுறமும் பிடித்து தூக்கினர். பெரிய மரத்தாலத்தில் வைத்து அதை அவன் தந்தையிடம் காட்டியபோது அவர் ஒருகணம் திகைத்து “இது?” என்றார். “பேருடலன். நம் குடியில் இதைப்போன்று ஒரு குழந்தை எழுந்ததில்லை” என்று வயற்றாட்டி சொன்னாள். தந்தை அக்கணமே திரும்பி அங்கிருந்து வெளியேறினார். பின்னர் ஒருமுறைகூட அவர் விழி தூக்கி அவனை நோக்கியதில்லை. அவனிடம் நேர்ச்சொல் உரைத்ததில்லை.
அவன் வளர்ந்தபோது பிற சூதமைந்தரின் ஏளனத்துக்கும் பின்பு அச்சத்திற்கும் மெல்ல மெல்ல வெறுப்புக்கும் உள்ளானான். அவனை அரக்கர் குருதியை கொண்டவன் என்றனர் குலப்பெண்டிர். ‘உன் அன்னை காட்டுக்குள் புரவி மேய்க்கச் சென்றபோது விண்ணிலிருந்து இழிந்த பேரரக்கன் ஒருவனிடமிருந்து குருதி பெற்றுக்கொண்டாள்’ என்றாள் அவன் மூதன்னை. இளமையில் அச்சொற்கள் அவனை துன்புறுத்தின. பிறரைப்போல் தான் ஏன் இல்லை என்று நீரில் குனிந்து தன் பாவையை நோக்கி அவன் ஏங்கினான். தூண்கள்போல் திரண்டெழுந்த கைகளை பார்க்கையில் அவை தன்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் விரும்பத்தகாத இரு அயலார்போல் உணர்ந்தான்.
ஒருநாள் அன்னையிடம் அவன் அதைப்பற்றி கேட்டான். “அன்னையே, என்னை எவ்வண்ணம் கருக்கொண்டீர்கள்? என் குருதி எது?” அவள் அவ்வினாவை நெடுநாட்களாக எதிர்பார்த்தவள் போலிருந்தாள். “உன் தந்தையின் குருதிதான், பிறிதொன்றல்ல” என்று அவள் சொன்னாள். அவன் விழிகளை பார்த்தபின் “ஆனால் எண்ணத்தால் அவருக்கு நான் உன்னை பெறவில்லை” என்றாள். அவளே மேலும் சொல்வதற்காக விசோகன் காத்திருந்தான். அவனுடைய பெரிய கைகளை தன் கைக்குள் எடுத்துக்கொண்டு அன்னை சொன்னாள் “இங்கு அவர் வந்திருந்தார். அருகிருந்த காட்டில் தன் படையினருடன் காட்டுப்புரவிகளை கொக்கிக்கயிற்றை வீசி சிறைப்பற்றினார். நான் அப்போது காட்டிலிருந்தேன். அவர்கள் வரும் ஓசை கேட்டு என் குடியினர் அஞ்சி அகன்றோடினர். நான் அங்கிருந்த அசோகமரத்தின் மீதேறி இலைகளுக்குள் ஒளிந்துகொண்டு அவரை பார்த்தேன்.”
“அவருடைய ஒவ்வொரு தசையையும் என் உள்ளத்தில் பதியவைத்துக்கொண்டேன். விழிகளால் உன்னை கருவுற்றேன்” என்றாள் அன்னை. அவன் அவர் யாரென்பதை உணர்ந்திருந்தான். இருப்பினும் “அவரா?” என்றான். “ஆம், அஸ்தினபுரியின் இளைய பாண்டவர் பீமசேனர்தான்” என அன்னை தயக்கமே இல்லாமல் சொன்னாள். “இந்த அஸ்தினபுரியின் மண்ணில் மட்டுமல்ல, பாரதவர்ஷத்திலேயே பல்லாயிரம் பெண்டிர் அவரால் நயனகர்ப்பம் அடைகிறார்கள். நீயும் அவ்வண்ணம் எழுந்தவனே. நீ அவரிடம் சென்று சேர். உன்னை அவர் அறிந்துகொள்வார்.” அவன் அவளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். “பிறர்போல் இருப்பது ஒரு விடுதலை. தனித்தன்மை என்பது பொறுப்பு” என்றாள் அன்னை. “பொறுப்புகளிலிருந்தே பெருஞ்செயல்கள் எழுகின்றன. பெருஞ்செயல்களால் மானுடர் சான்றோரும் வீரரும் ஆகிறார்கள்.”
அன்று அவன் தான் யார் என்றும் மண் வந்த நோக்கம் என்னவென்றும் தெளிவுகொண்டான். அதன் பின்னர் அங்கிருந்த சூதமைந்தர்களின் இளிவரலோ பெண்டிரின் அலரோ மூத்தவர்களின் கூர்நோக்கோ அவனுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அதுவரை அவன் புரவிப்பணி கற்பதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவனுடைய தந்தை அவனை பலமுறை அதன்பொருட்டு கடிந்துகொண்டார். அவன் செவிபட “பேருடல்கொண்ட சூதன் அடுமனையாளனே. அவன் படைக்கலமேந்தி போரிட இயலாது என்று அவ்விழிமகன் அறிக!” என்றார். அவன் குலத்து மூத்தவர்கள் “புரவித்தொழிலே நம் செல்வம். அதில்லையேல் நாம் வறியர்” என்றனர். அவன் உள்ளம் புரவிகளை வெறுத்தது. அவன் பார்த்தது எல்லாம் களைத்து வாயில் நுரைவலை தொங்க பிடரி உலைத்து ஒற்றைக்கால் தூக்கி நின்று துயிலும் வண்டிக்குதிரைகளை மட்டுமே.
முசலசத்ரம் தென்மேற்கே மச்சர்நிலத்திலிருந்து அஸ்தினபுரிக்குச் செல்லும் வணிகப்பாதை ஒன்றில் அமைந்திருந்தது. தொல்காலத்தில் வணிகர்கள் அங்கு நின்றிருந்த செங்குத்தான உலக்கைப்பாறையின் அடியில் செழித்திருந்த ஆலமரத்தின் கீழ் தங்கள் புரவிகளை அவிழ்த்திட்டு நீர்காட்டி இளைப்பாறிச் செல்லும் வழக்கம் இருந்தது. அதன் பொருட்டு அங்கொரு விடுதி உருவாகியது. அதைச் சுற்றி புரவிகளுக்கு புல்லும், பயணிகளுக்கு உணவும், விளக்குகளுக்கு நெய்யும் கொண்டு வந்து அளிக்கும் மலைக்குடிகளின் சந்தை ஒன்று உருவாகியது. அது வளர்ந்து ஊராயிற்று. வண்டியிழுக்கும் புரவிகள் அங்கு மிகுதியாக தங்கத்தொடங்கியதும் புரவி மருத்துவர்களான சூதர் குடிகள் அங்கே குடியேறினர். அங்கே புரவிகளுக்கு புதிய பாகர்களை பெற்றுக்கொண்டு பயணம் தொடரலாம் என்ற எண்ணம் வணிகர்களுக்கு எழுந்தபோது சூதர் குடி பெருகியது.
அங்கிருந்த புரவிச்சூதர் அனைவருமே வண்டிகளை இழுக்கும் புரவிகளை ஓட்டுவதற்கு மட்டுமே கற்றிருந்தனர். போர்ப் புரவிகள் அவ்வூரில் மிகச் சிலவே தென்பட்டன. அவ்வழியே செல்லும் அஸ்தினபுரியின் காவலர்கள் ஊரும் பெரிய புரவிகளை சிறுவர்கள் சாலையோரத்தில் கூடி நின்று விழிவிரிய நோக்கினர். வண்டியிழுக்கும் புரவிகளையே கண்டு பழகியிருந்த சூதமைந்தர்களுக்கு அந்தப் போர்ப்புரவிகள் பேருடல் கொண்டு விண்ணின் ஆற்றலை பெற்றவை என்று தோன்றின. “புரவியென்றால் அவைதான். இவை அத்திரிகளின் சற்று பெரிய வடிவங்கள்” என்று விசோகன் பிற சூதமைந்தரிடம் சொன்னான். அவர்கள் “ஆனால் அவற்றை ஆள தெய்வங்களின் ஆணை தேவை” என்றனர். “அவற்றை நாம் அணுக இயலாது. அவை தங்கள் உரிமையாளரன்றி பிறர் கைபடுமென்றால் கொலைவெறி கொள்பவை.”
தந்தையிடம் “நான் புரவிக்கலை கற்கும் பொருட்டு அஸ்தினபுரிக்கு செல்கிறேன்” என்று அவன் சொன்னபோது அவர் வழக்கம்போல அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலையசைத்தார். ஒருநாள் அவன் அஸ்தினபுரிக்கு கிளம்பிச் சென்றுவிடுவான் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவன் அன்னையிடம் விடைபெற்றபோது அவள் சற்று கலங்கினாள். அவன் திரும்பவரமாட்டான் என அவள் அறிந்திருந்தாள். “அங்கு சென்று நீ கற்கும் புரவிக்கலையை இங்கு கற்க இயலாதா?” என்று மட்டும் தலைகுனிந்து தன் கைவிரல்களை நோக்கியபடி கேட்டாள். “நான் போர்ப்புரவிகளை மட்டுமே பயில விரும்புகிறேன், அன்னையே” என்று அவன் சொன்னான். அன்னை மறுசொல் இன்றி அவன் தலைதொட்டு வாழ்த்தினாள்.
மரவுரிமூட்டையில் மாற்றுடையும் உலருணவும் தோல்குடுவையில் நீருமாக அவன் கிளம்பி வணிக வண்டிகளுடன் நடந்தான். வழியில் அவனைக் கண்ட அனைவருமே அவனை மாற்றுருவில் செல்லும் ஷத்ரியன் என்றே எண்ணினர். ஒரு வணிகன் மட்டும் “வீரரே, தாங்கள் பேருடல் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உடலெங்கும் தேடியும் ஒரு போர்வடுவைக்கூட காண முடியவில்லை. தாங்கள் படைக்கலம் பயிலவில்லையா?” என்று கேட்டான். அவன் “நான் பயில்வது வடு அமையாத போர்” என்று மட்டும் சொன்னான். தன் சொற்கள் ஒவ்வொன்றும் எண்ணியதைவிட எடைகொண்டிருப்பதை அப்பயணத்தில் அவன் கண்டான். அவன் உண்ண அமர்ந்ததும் கேளாமலேயே உணவு அவன் முன் வந்து குவிந்தது. அவன் உண்ணுவதை பிற வணிகர்கள் சூழ்ந்து நின்று மகிழ்ந்து நோக்கினர்.
“வீரரே, எங்கள் வணிகக்குழுவுடன் காவலுக்கு வருகிறீர்களா?” என்று முதுவணிகர் சுபூதர் கேட்டார். “நான் அஸ்தினபுரிக்கு சென்றுகொண்டிருக்கிறேன். என் பணி அங்குதான்” என்று அவன் சொன்னான். “எங்கு?” என்று இளைய வணிகனாகிய பிரபவான் கேட்டபோது “இளைய பாண்டவர் பீமசேனருடன். நான் அவருடைய அணுக்கன்” என்றான். அதை சொல்கையில் அவனுக்கு உடல் மெய்ப்பு கொண்டது. அதை சொல்லும் பொருட்டே பிறந்திருக்கிறோம் என்று எண்ணினான். அவன் விழிகளைக் கண்ட எவருக்கும் அதில் ஐயம் எழவில்லை. ஒருநாளிலேயே அவன் இளைய பாண்டவரின் அணுக்கன் என்று வணிகர் நடுவே அறியப்பட்டான். “ஆம், தாங்கள் பிறிதெவரும் அல்ல. பிறிதெங்கும் தங்களால் அமையவும் இயலாது” என்று வணிகர்கள் சொன்னார்கள்.
அஸ்தினபுரிக்குச் சென்று சேரும்போது அவன் தன்னை முழுமையாகவே பீமசேனரின் அணுக்கனாக ஆக்கிக்கொண்டிருந்தான். ஆனால் அந்நகரின் விரிவை அருகணைந்து கண்டதும் அவனில் நம்பிக்கையின்மை எழுந்து பெருகத் தொடங்கியது. அந்நகரின் தெருக்களினூடாக சென்றபோது ஒவ்வொருவரின் தோளையும் நெஞ்சையுமே விழிகளால் அளவிட்டுக்கொண்டிருந்தான். அங்கு பேருடலர்கள் பலர் இருந்தனர். அவனுக்கு நிகரான எவரும் அவன் எதிரில் தென்படவில்லை. எதிர்படும் ஒவ்வொருவரும் தன் தோளையும் நெஞ்சையும் அளவிடுவதை அவன் பார்த்தான். எவர் விழிகளிலும் துணுக்குறலோ வியப்போ இல்லையென்பதை கண்டான். அவர்கள் பேருடலர்களைக் கண்டு பழகியிருந்தனர். அப்பேருடலனை அடையாளப்படுத்திக்கொள்ளவே முயன்றனர்.
இங்கு தன் தனித்தன்மை என்று எப்போதும் அவன் எண்ணிக்கொண்டிருந்த பேருடல் பொருளற்றதாகிவிடும் என்று அஞ்சினான். எந்தப் பயிற்சியும் அற்றவனும் உலகறியாதவனுமாகிய அவனை நோக்கியதுமே அடுமனைக்கு கலம் தூக்குவதற்கு அனுப்பிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டான். அதற்கேற்ப அவன் அணுகி பேசிய முதல் காவலர்தலைவனே அவனிடம் “எங்கு செல்கிறீர்கள்?” என்று மதிப்பற்ற உரத்த குரலில் கேட்டான். அவன் சீண்டப்பட்டு “நான் இளைய பாண்டவர் பீமசேனரை பார்க்கும்பொருட்டு வந்துள்ளேன்” என்று சொன்னான். “அவரை பார்க்கும்பொருட்டு ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கில் மல்லர் வருகிறார்கள். அவர்கள் அனைவரையுமே அருகில் உள்ள குடிகாட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். அவர்களில் தகுதியானவருடன் அவர் தோள்கோத்து மல்லிடுவார்” என்றான் காவலர்தலைவன்.
“ஆம், அதன்பொருட்டே வந்தேன்” என்றான் விசோகன். “நீர் மற்கலை கற்றவரா?” என்று காவலர்தலைவன் கேட்டான். ஒருகணத்திற்குப் பின் அவன் “ஆம்” என்றான். “அறிந்திருப்பீர் மற்கலையில் அவர் இரக்கமற்றவர். நீர் உயிர் துறக்கக்கூடும்” என்றான் காவலர்தலைவன். “உயிர் வைத்து களமாடுவதற்கு துணிந்தவர்களுக்கு மட்டுமே இங்கு இடம்.” விசோகன் “அதன்பொருட்டே வந்துள்ளேன்” என்றான். காவலர்தலைவன் அவனுக்கு ஓலை அளித்து அருகிருந்த குடிகாட்டுக்குள் தங்கச்செய்தான். அங்கு பாரதவர்ஷத்தின் பல ஊர்களிலுமிருந்து வந்த நூற்றுக்கணக்கான மல்லர்கள் தங்கியிருந்தனர். ஒவ்வொரு நாளும் அடுமனையிலிருந்து அவர்களுக்கு அத்திரிகள் இழுத்த வண்டிகளில் உணவு வந்தது. அதை அவர்கள் குவித்திட்டு உண்டனர். கற்பாறைகளை தூக்கிச்சுழற்றியும் கதை வீசியும் அவர்கள் உடல் பயின்றனர். ஒருவரோடொருவர் கைபற்றி தோள் கோத்து மற்போர் பழகினர்.
அவன் அதுவரை மற்போரை பார்த்ததே இல்லை. அந்தப் பிடிகளும், தோள் முட்டலும், கைவீச்சும், உடலறைந்து, துள்ளி அகன்று, எழுந்தமைந்து மீண்டும் தழுவுதலும், மண்ணில் பிணைந்து புளைந்தெழுந்து மீண்டும் பாய்தலும் அவனுக்கு வியப்பை அளித்தன. ஆனால் சற்றும் அச்சம் எழவில்லை. அங்கு அவனைவிட பெருந்தோளர்கள் இருந்தனர். அவர்களிடம் உரு பெரிதாகுந்தோறும் ஒரு மிதப்பு உருவாகியிருந்தது. எங்கும் செல்லாமல் தங்கள் உடலெனும் பெருங்கட்டமைப்புக்குள்ளேயே சிறைப்பட்டுவிட்டவர்கள் போலிருந்தனர். பெரும்பாலானவர்கள் நீரில் தங்கள் தசைகளை தாங்களே நோக்கி நோக்கி மகிழ்ந்தனர். அவர்கள் உடலுக்கு உள்ளிருந்து தாழிட்டுக்கொண்டவர்கள்.
அங்கு சென்ற பதினெட்டாவது நாள் பீமசேனர் அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் மல்லர்கள் அனைவரும் விரைந்துவந்து குலமும் குடியும் ஆசிரியமரபும் கூறி வணங்கி கைகட்டி இருபுறமும் நின்றனர். ஒவ்வொருவரிடமாக இன்சொல் பேசி வந்த அவர் விழிகள் அவனை தொட்டதும் அவன் நிலத்தில் குப்புற விழுந்து அவர் கால்களை தொட்டான். “எழுக!” என்று அவர் சொன்னார். அவன் எழுந்ததும் “மற்போர் அறிவீரா?” என்று பீமசேனர் கேட்டார். “இல்லை, அரசே. தங்களை சந்திக்கும்பொருட்டு அவ்வாறு கூறினேன். நான் தங்களுக்கு அணுக்கனாக இருக்கும் பொருட்டு வந்தேன். ஏவலனோ அடுமனையாளனோ எப்பணியாயினும் தங்களை நோக்கிக்கொண்டிருக்கும் பேறு மட்டுமே கோருகிறேன்” என்றான்.
“நீர் சூதரல்லவா?” என்று பீமசேனர் கேட்டார். “ஆம், புரவிச் சூதன். ஆனால் இதுவரையில் புரவிக்கலை எதுவும் நான் பயிலவில்லை. என் ஊரில் வண்டிப்புரவிகள் மட்டுமே உள்ளன. அவற்றை பயில்வதில் எனக்கு விருப்பமில்லை” என்றான். “உமது குருதியில் புரவிக்கலை உண்டு. நினைவுபடுத்திக்கொண்டால் மட்டும் போதும். நீர் போர்ப்புரவி பயில்வதற்குரியவர். என் இளையோனிடம் செல்க!” என்று பீமசேனர் சொன்னார். அன்று பதினெட்டு மல்லர்களை பீமசேனர் தூக்கி நிலத்தறைந்து வெல்வதை அவன் பார்த்தான். இருவர் முதுகொடிந்து அங்கேயே உயிர் துறந்தனர். அவர்களுக்காக அவர் அமர்ந்து மலரும்நீருமிட்டு கடன்செலுத்தினார்.
அவர் கிளம்பிச்செல்லும்போது தேரில் ஏறியபின் நின்று திரும்பி அவனைப் பார்த்து “வருக!” என்றார். அவன் தேருடன் ஓடத்தொடங்கியதும் “தேரில் ஏறிக்கொள்க!” என்றார். “அரசே!” என்று திகைப்புடன் அவன் சொன்னான். “ஏறுக!” என்று அவன் தோளை அறைந்தார். தேரிலேறி அவர் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான். தன்னை ராகவராமனின் காலடியில் அமர்ந்த அஞ்சனை மைந்தனாக உணர்ந்தான். அவர் அவன் தலையைத் தொட்டு “இளையவராக இருக்கிறீர்” என்றார். அவன் மெய்ப்புகொண்டான். அவருடைய பெரிய கை அவன் தோளில் விழுந்தது. அப்பயணம் முழுக்க அது அவனை தொட்டபடியே இருந்தது. பின்னர் எப்போது அவனை பார்த்தாலும் அவருடைய கை வந்து அவனை தொடுவதுண்டு. ஆனால் அந்த முதல் தொடுகையை அவன் ஒவ்வொரு கணமும் என நினைவில் வைத்திருந்தான். விழிநீர் வழிய தேரில் தலைதாழ்த்தி அமர்ந்திருந்தான்.
பீமசேனர் அளித்த ஓலையுடன் சென்று நகுலரிடம் பணிக்கு சேர்ந்தான். புரவிநிலையில் ஒரு பெண்புரவியை உடல்நோக்கி நரம்பு ஆய்ந்து கொண்டிருந்த நகுலர் அவனைப் பார்த்ததுமே அப்பால் நின்ற கரிய பெரும்புரவியைச் சுட்டி “அவன் பெயர் காரகன். அவிழ்த்து வருக!” என்றார். “அரசே, நான் புரவி பயிலாதவன்” என்றான். “உமது உடல் புரவியசைவு கொண்டது. புரவி அதை அறியும்” என்றார் நகுலர். அவன் அருகே சென்றதும் காரகன் திரும்பி அவனை நோக்கி மெல்ல கனைத்து பிடரி சிலிர்த்தது. அவன் தயங்காமல் சென்று அதன் கடிவாளத்தை அவிழ்க்க அது திரும்பி அவன் தோளை தன் மரப்பட்டைபோன்ற நாவால் நக்கியது. அப்பால் நின்ற இன்னொரு புரவி அவனை நோக்கி தன் பெருந்தலையை நீட்டியது.
ஈராண்டுகளில் புரவிக்கலையில் நகுலருக்கு இணையானவன் என்று அவன் அறியப்பட்டான். திமிறும் பெரும்புரவிகளை ஒற்றைக்கையில் பிடித்து நிறுத்துபவனாகவும், இளம்புரவிகளை தோளில் தூக்கிக்கொண்டு ஓடும் ஆற்றல் கொண்டவனாகவும் திகழ்ந்தான். நகுலர் அவனிடம் “இனி நீர் மூத்தவரின் தேர்ப்பாகன் என்று அமைக! உமக்கிணையான ஒருவரே அவருக்கு தேரோட்ட இயலும்” என்றார். அவன் இந்திரப்பிரஸ்தத்தில் அவருக்காக தேர் பயின்றான். ஒருமுறைகூட பீமசேனருக்காக தேரோட்டும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் அத்தருணம் வரும் என்று அவன் அறிந்திருந்தான். நூறுமுறை அவருக்காக கனவில் அவன் பெருங்களங்களில் தேரோட்டினான். அக்கனவினூடாகவே பயிற்சிபெற்றான்.
உபப்பிலாவ்யத்தில் போர் குவியம் கொண்டபோது பீமசேனரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. தன் தேர்ந்த புரவிகள் பதினான்கை அழைத்துக்கொண்டு அவன் உபப்பிலாவ்யத்திற்கு சென்று சேர்ந்தான். பீமசேனரின் தேரை சிற்பிகள் அமைத்திருந்தனர். அதை ஏழு முறை பிழை நோக்கி திருத்தங்கள் செய்து அவன் பெற்றுக்கொண்டான். தேர்ந்த புரவிகளை அதில் கட்டி ஓட்டி கை பழகினான். புரவியும் தேரும் அவன் உடலும் இணைந்து அவன் உள்ளம் என்றாயின. நினைத்ததை தேர் இயற்றியது. முதல் நாள் களத்தில் அவன் தேரோட்டுவதைக் கண்ட பீமசேனர் “நீர் என் வடிவாக அங்கு அமர்ந்திருக்கிறீர். என் எண்ணங்களை இத்தேர் இயற்றுவதைக் கண்டு வியக்கிறேன்” என்றார். “நான் தங்களில் ஒரு சிறு துளி மட்டுமே, அரசே” என்று அவன் சொன்னான்.
அவன் போரில் பீமசேனருக்காக தேரோட்டினான். அவர்களிடையே பேச்சு மிக அரிதாகவே நிகழ்ந்தது. போர் முடிந்து தேரிலிருந்து இறங்குகையில் பீமசேனர் அரைவிழி நோக்கால் அவன் விழிகளைத் தொட்டு தலையசைத்து செல்வார். இரவெல்லாம் தேரை மீண்டும் பிழை நீக்கி, முற்றொருக்கி, புண்பட்ட புரவிகளை மாற்றி பிற புரவிகளை கட்டி, ஏழு முறை அவற்றை ஓட்டி பயின்று மறுநாள் புலரியில் அவன் சித்தமாக நின்றிருப்பான். அவனிடம் நகுலர் “இந்தப் பெருங்களத்தில் இருவரே பரிவலர். ஒருவர் பார்த்தருக்கு தேரோட்டும் இளைய யாதவர். நிகரென்று நீரும் அமைந்திருக்கிறீர்” என்றார். அவன் தலைவணங்கி “அங்கே தேர்த்தட்டிலும் பாகனே நின்றிருக்கிறார். இங்கே தேர்த்தட்டில் நின்றிருப்பவரே அமரமுனையில் அமர்ந்து தேரோட்டுகிறார்” என்றான். “சொல்லெடுக்கவும் கற்றிருக்கிறீர்!” என்று நகுலர் அவன் தோளை தட்டினார்.
விசோகன் போர்க்களத்தில் நிகழ்வதென்ன என்பதை பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. தன் எதிரே தெரிந்த தேருக்கான வழிகளை அன்றி வேறெதையும் உளம் கொள்ளவில்லை. வீழ்ந்த தேர்களின் இடையினூடாக, சரிந்த புரவிகளின் உடல்கள் மீதேறிக் கடந்து, குவிந்து பரவிய மானுட உடல்களின்மீது சகடங்கள் சேற்றிலென சிக்கி மீள, அம்புப்பொழிவின் அடியில் அவன் தேரை செலுத்தினான். எண்ணியிரா இடங்களிலெல்லாம் அவன் தேர் ஏறிக்கடந்தது. யானைகளை பின்பக்கத்திலிருந்து பிளந்தெழுந்து வேட்டைச் சுறா என தோன்றியது. விண்ணிலூர்வதுபோல் விழுந்த யானைகளின் மேலேறி அப்பால் சென்றது.
அவன் தேரோட்டும் திறனை இரு நாட்களுக்குள்ளேயே கௌரவப் படையும் பாண்டவப் படையும் முற்றறிந்துவிட்டிருந்தன. ஆகவே பீமனை எதிர்கொண்ட அனைத்து வில்லவர்களும் அவனை வீழ்த்தும் பொருட்டு அம்பை எய்தனர். துரியோதனனும் துச்சாதனனும் பீமனுடன் போரிடுகையில் அவர்களுக்கு இருபுறமும் நின்று கௌரவர்கள் அவனை வீழ்த்துவதற்காக மட்டுமே அம்புகளை தொடுத்தனர். ஆனால் பீமனைவிட இருமடங்கு பருமன் கொண்ட பெருங்கவசங்களை அவன் அணிந்திருந்தான். “ஆமைபோல் அமர்ந்திருக்கிறான். அவன் தலை பிறிதொரு ஆமையென ஓடு கொண்டிருக்கிறது” என்று கௌரவர்கள் சொல்லிக்கொண்டனர்.
அவன் உடலில் அம்புகள் மணியோசை எழுப்பி வந்தறைந்து உதிர்ந்துகொண்டே இருந்தன. ஒருமுறைகூட அவனுடைய கவசத்தைப் பிளக்க அவர்களால் முடியவில்லை. போர் முடிந்து இறங்குகையில் கையூன்றி பாய்ந்து நிலத்தில் நிற்கும்போது அவனது கால்குறடுகள் பதிந்த மண் உளைசேறு என அழுந்தி உள்வாங்கியது. அவன் தன் கையால் எளிதாக தேர்த்தூண்களை அறைந்துடைத்தான். “அரக்கன்போல் பேருருக்கொண்டிருக்கிறீர். இந்திரப்பிரஸ்தத்தின் இரும்புப்பாவை எனத் தோன்றுகிறீர்” என்று திருஷ்டத்யும்னன் அவனிடம் சொன்னான். விசோகன் புன்னகைத்து “நான் என்னைப்பற்றி ஒருகணமும் எண்ணாதொழியவேண்டும் என்பதற்காக” என்றான்.
பீமனின் உடல்மொழி அவனில் திகழ்ந்தது. ஆகவே நகுலனும் சகதேவனும் அவனை பன்மை விகுதியுடன் மட்டுமே அழைத்தனர். “தாங்கள் நெடுங்காலம் மூத்தவருடன் வாழ்ந்ததில்லை. மூத்தவரின் உடல்மொழி எப்படி தங்களிடம் அமைந்தது?” என்று நகுலன் ஒருமுறை கேட்டபோது “நான் எப்போதும் அவருடனே இருக்கிறேன்” என்று விசோகன் புன்னகையுடன் மறுமொழி சொன்னான். யுதிஷ்டிரர்கூட அவனிடம் மதிப்புடன் மட்டுமே பேசினார். “உமது கைகளில் என் இளையோனின் விழிகள் திகழவேண்டும்” என்றார். “இந்தக் களத்தில் அவனுக்கு எவ்விடரும் நிகழலாகாது.” விசோகன் “அவர் இத்தகைய சிறிய களங்களில் ஒருபோதும் விழமாட்டார்” என்று சொன்னான்.
யுதிஷ்டிரரின் விழிகள் சற்றே சுருங்க “அவனுடைய களம் எது?” என்றார். “இன்னும் பெரிய களம். அறியாத படைக்கலங்களுடன் மானுடருடன் விளையாட தெய்வங்கள் வந்து நின்றிருக்கும் இடம். அங்கு அவர் வீழ்வார். அதுவரைக்கும் இங்கு நின்றிருப்பார். எந்த மானுடரும் அவரை அணுக முடியாது. வெள்ளிமுடி சூடி வடக்கே நின்றிருக்கும் பெருமலைகள்போல” என்று அவன் சொன்னான். சிலகணங்கள் அவனை நோக்கியிருந்துவிட்டு யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார்.