வெள்ளையானை வாங்க
ஒரு புவியியல் பரப்பில் மழைப்பொழிவின் சராசரி அளவிற்க்கும், அங்கு வாழும் சமூகத்தின் பயிர் வேளாண்மை, நீர்நிலை மேலாண்மைக்கும் வருடந்தோறும் நடைபெறும் மல்லுக்கட்டுப் போர்தான் ‘வறட்சி’ (Drought) என்கிறார் மைக் டேவிஸ் (Mike Davis). தனது (Late Victorian Holocaust) ‘பிற்கால விக்டோரிய அரசின் பாரிய இனப்படுகொலை’ என்னும் நூலில், அவர் மேலும் ,ஒரு முதலீட்டிய (Capitalism)சமூகத்தில் பெருந்துயர் நேரும் போது அதன் , எந்நிலையிலிருப்பவரும் பழியை அடுத்த அடுக்கிலிருப்பவர் மீது சுமத்தி குற்றத்திற்கு பொறுப்பேற்றகாமல் தப்பிக்க இயலும் என்கிறார். ஜெயமோகன் தனது ‘வெள்ளையானை’ என்கிற வரலாற்று நாவலின் மூலம், தக்காணப் பஞ்சம் என்றழைக்கப்பட்ட தாதுவருட வறட்சி காலத்தின் இரக்கமில்லாத களவிவரணைகளை புனைவின் துணைகொண்டு அனைத்து புலன்களையும் மொழிவழியாக நிரப்பிய அனுபவத்தினை தருகிறார். அக்கால சமூக அடுக்குகளின் பிரதிநிதிகளை முன்னிறுத்தி, அன்று நிகழ்ந்த மானுடப் பெருங்குற்றத்தின் பங்கினை அவரவர்களுக்கு பங்கிட்டுப் பொருத்திக் கொடுத்து காலத்தின்முன் கைவிலங்கிட்டு நிற்க வைக்கிறார்.