புதிய புத்தகங்கள்-கடிதங்கள்

அன்புள்ள ஜே

தமிழினியில் உங்கள் ‘இரவு’ கதை வாங்கி வாசித்தேன். சிக்கலில்லாத நாவல் எனவே நல்ல வேகமாக வாசித்துச்செல்ல முடிகிறது. அழகான வர்ணனைகள் உள்ளன. கனவில் இருந்து வாசிப்பதுபோல பிரமை உருவாகியது எனக்கு. நன்றி. பொதுவாக சொல்லப்போனால் உங்கள் நாவல்களில் முழுக்கமுழுக்க பெஸிமிஸ்டிக் ஆன நாவல் இது இல்லையா? மனிதனுடைய அறமோ ஒழுக்கமோ அவனது மனசை கட்டுப்படுத்துவதில்லை என்று சொல்கிறீர்களா? எனக்கு பல இடங்களில் ஷாக். ஆனால் மேனன் மனைவி இறந்ததை எதிர்கொள்ளும் இடம் நீங்கள் எழுதிய டாப் மொமெண்ட்களில் ஒன்று.

நான் நண்பருடன் பேசும்போது சொன்னேன். நீங்கள் மனிதனைப் பற்றி நம்பிக்கையே இல்லாத யதார்த்தவாத மனிதர் என்று. மனிதன் தப்புதான் செய்வான் என்றுதான் சொல்கிறீர்கள். ஏதாவது ஒரு கதாபாத்திரம் மட்டும் ஆன்மீகம் மூலம் அதை மீறிச்செல்லலாம் என்று கனவு காண்கிறது. அதுதான் காடு ஏழாம் உலகம் நாவலில் உள்ளது. யோசித்துப்பார்த்தால் பின் தொடரும் நிழலின் குரலும் விஷ்ணுபுரமும் எல்லாம் அப்படித்தானே

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்

நன்றி.

நான் என்ன நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று நானே தெளிவாக அறியவில்லை. ஒவ்வொரு நாவலிலும் அதன் மனநிலைக்கு ஏற்ப அது மாறுகிறது. இரவு நாவல் இரவின் இருண்ட பக்கம் என்ன என்று பார்க்கிறது.

அதில் கடைசியில் வரும் கனவுகள் -கமலா திரும்பி வருவது- தான் உச்சம் என நான் நினைக்கிறேன்

ஜெ

=======================================

ஜெ….

தொடர்கதை இறந்துவிட வில்லை..தமிழில் அதன் ஆசிரியர்கள் இறந்துவிட்டார்கள்….

புனைவை சவாலாக நினைக்கும் ஒரு ஆசிரியனால் ஒரு தொடர்கதை எழுதிவிடமுடியும்.இன்னும் சரியாக சொல்லப்போனானால் காலத்தை தன் கதையில் வினை புரிய வைக்கும் ஒரு நாவலாசிரியனால் ஒரு தொடர்கதை எழுதிவிட முடியும்]

துரதிரஷடம்..தமிழின் தொடர்கதை என்பது வணிக எழுத்து. நீங்கள் நம்பும் டால்ஸ்டாயும் நான் நம்பும் தஸ்தாவெஸ்கியும் தொடர்கதைதான் எழுதினார்கள்.

அன்புடன்

தூரன் குணா.

அன்புள்ல தூரன் குணா,

தொடர்கதை ஏன் இறந்துவிட்டதெனச் சொல்கிறேன் என்றால் அந்த வடிவை வாசிக்கும் பொறுமை இன்றில்லை என்பதனால். அந்தவடிவின் எல்லா அம்சங்களும் ஏற்கனவே தோண்டப்பட்டுவிட்டன என்பதனால்

தஸ்தயேவ்ஸ்கி தல்ஸ்தோய் போன்றவர்கள் தொடர்கதை எழுதவில்லை. நாவலை வரிசையாக வெளியிட்டார்கள். மோகமுள் கூட அப்படி வெளிவந்ததே. மலையாளத்தில் இன்றும் பெரிய நாவல்கள் அப்படி வெளியாகின்றன

ஜெ
=========================================

அன்புள்ள ஜெயமோகன்

உலோகம் வாசித்தேன். திரில்லர் என்று தெரிந்து கொஞ்சம் யோசித்தேன். கொஞ்சநாளாகவே திரில்லர்களை வாசிப்பதில்லை. நேரம் வேஸ்ட் என்ற நினைப்பு. வாசித்து முடித்ததும் ஏமாறியதுபோல தோன்றக்கூடிய நாவல்கள்தான் திரில்லர்களிலே அதிகம். எனக்கு உலகப்போரைப்பற்றிய நாவல்கள் பிடிக்கும். இந்நாவலை வாசித்தபோது திரில்லர் மட்டும் இல்லை. ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் என்று சொல்லலாம். அந்த கதாபாத்திரத்தின் மனசுக்குள் சென்றிருக்கிறீர்கள். முடிவு அதிர்ச்சி. நிறைய யோசிக்க வைத்தது.

செல்வம் பாபு

அன்புள்ள செல்வம்

நன்றி. நான் வெறும் திரில்லர் எழுத நினைக்கவில்லை. அந்த வடிவத்தை ஒரு குறிப்பிட்ட மனநிலையைப்பற்றிச் சொல்ல பயன்படுத்தலாமே என்று பட்டது. வேட்டையாடும் மிருகங்களுக்கு என ஒரு பொறுமை உண்டு. அசையாமல் மணிக்கணக்காக காத்திருக்கும். பூனை புலி நாய் போன்றவற்றில் இதைக் காணலாம். அந்த மனநிலை மனிதர்களுக்கும் வரும் தருணம்

ஜெ

முந்தைய கட்டுரைதமிழிசை மேலும் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தியம் ஒரு கடிதம்