காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தி திரும்பி தன் படைகளை பார்த்தார். அவர்களால் போரிட இயலவில்லை என்பது தெரிந்தது. எந்தப் படையாலும் அர்ஜுனனை எதிர்கொள்ள முடிந்திருக்கவில்லை. அதைப்போலவே மறுபக்கம் பாண்டவப் படையின் எந்தப் பிரிவாலும் பீஷ்மரை எதிர்கொள்ள முடியவில்லை. அவர்களின் விழிமுன் பேருருக்கொண்டு காட்சியிலிருந்தே அவர்கள் மறைந்துவிட்டதுபோல் தோன்றினார்கள். விண்ணிலிருந்து என அம்புகளைப் பொழிந்து அவர்களை கொன்றார்கள்.
எளிய மக்கள்! தங்களால் புரிந்துகொள்ள முடியாதவற்றால் ஒவ்வொருநாளும் ஆட்டிவைக்கப்படுபவர்கள். துரத்தி வேட்டையாடப்படுபவர்கள். கொன்று குவிக்கப்படுபவர்கள். பெருமழைகள், புயல்கள், வெயிலனல்கள், காட்டெரிகள், நோய்கள். அவற்றுக்கிணையாகவே அவர்கள் அரசனையும் கொடுந்தெய்வங்களையும் எண்ணினர். அந்தப் புடவிவிசைகளுக்கு முன் சொல்லின்றி அழிவதை, அழியும் தருணத்திலும் அவற்றின் எஞ்சும் அளியால் மீண்டும் முளைத்தெழமுடியும் என நம்புவதை அன்றி அவர்கள் எதையும் உளம்பயின்றிருக்கவில்லை. பீஷ்மரென்றும் பார்த்தரென்றும் களத்திலெழுந்திருப்பது அவர்கள் நன்கறிந்த, அத்தனை இறைவேண்டல்களிலும் அஞ்சி மன்றாடிய அவ்வழிவாற்றல்கள்தான்.
அவர் தத்தளித்துக்கொண்டிருந்தார். அவர் அருகே நின்றிருந்த வேலேந்திய வீரன் அஞ்சி அலறியபடி பாய்ந்து திரும்பி ஓட அவன் மேல் வேல் ஒன்று பாய்ந்து தரையுடன் அறைந்தது. அவன் எதை அஞ்சினான் என அவர் திகைக்கையில் அவன் வேலுடன் எழுந்து கைகளை விரித்து “தந்தையே!” என்று கூவினான். “மறுபக்கம் சென்றுசேர்க! பாண்டவர்களுடன் சேர்க!” அவன் உதடுகள் நிலைக்க வலப்பக்கம் சரிந்து விழுந்தான். க்ஷேமதூர்த்தி துடிப்புகொண்ட உடலுடன் தேர்த்தட்டில் நின்று பதறி உடனே இரு கைகளையும் விரித்து ஆணையிட்டார். “உடனடி ஆணை! காரூஷநாட்டு அரசரின் ஆணை! காரூஷப் படைகள் திரள்க! ஒருவரோடொருவர் உடல் பற்றிக்கொள்க! அரசரை தொடர்க!”
உடனடி ஆணை காரூஷநாட்டு வீரர்களை திகைக்கச் செய்தது. அனைவரும் போரை அக்கணமே நிறுத்தினர். படைமுழுக்க ஒரு நடுக்கமெனப் பரவியது அச்செய்தி. பின்னர் அவர்கள் படைக்கலங்களை மேலே தூக்கி “காரூஷம் வெல்க! மாமன்னர் வெல்க!” என்று கூவியபடி ஒருவரை ஒருவர் அணுகினர். சில கணங்களிலேயே அங்கு கலந்து போரிட்டுக்கொண்டிருந்தவர்களில் காரூஷர்கள் மட்டும் ஓர் அணியாக இணைந்தனர். பாற்றிக்கழிக்கப்படும் முறத்தில் கற்களும் அரிசிமணிகளும் அதிர்ந்து அதிர்ந்து தனித்தனியாகப் பிரிவதுபோல அவர்கள் பிறரிடமிருந்து வேறுபட்டனர். க்ஷேமதூர்த்தி தன் தேரை படைமுகப்பை நோக்கி செலுத்த ஆணையிட்டார்.
தேர் முன்னால் சென்றதும் கோட்டைவாயில் ஒன்று திறந்து கிடப்பதுபோல பாண்டவப் படையை அணுகுவதற்கான இடைவெளி ஒன்று அகன்றிருப்பதை கண்டார். முன்னரே அது திறந்துவிட்டிருக்கவேண்டும். அவருக்கு மைந்தரின் அழைப்பு எழுவதற்கும் நெடுநேரம் முன்னதாகவே. அவர் உடல் மெய்ப்பு கொண்டது. “படைக்கலம் திருப்புக! படைக்கலம் திருப்புக!” என்று கூவியபடி கைகாட்டினார். அவருடைய தேருக்கு வலப்பக்கம் வந்த முழவுக்கழையர் இருந்த தேரிலிருந்து அந்த ஆணை முழங்கியபோது படைவீரர்களிடமிருந்து சொல்லில்லா முழக்கம் ஒன்று உருவாகியது. அவருடைய தேரிலிருந்த ஆவக்காவலன் தேரின்மேல் பறந்த காரூஷநாட்டுக் கொடியை இழுத்து தலைகீழாக கட்டினான். வில்லை தலைகீழாக ஏந்தியபடி அவர் பாண்டவப் படையின் இடைவெளி நோக்கி சென்றார். கொடிகள் தலைகீழாக பறக்க படைக்கலங்களை தலைகீழாக ஏந்தியபடி காரூஷநாட்டுப் படையினர் அவரைத் தொடர்ந்து பாண்டவப் படைக்குள் நுழைந்தனர்.
அவர்கள் வருவதைக் கண்ட பாண்டவர்களின் முரசுமாடத்திலிருந்த காவலர்தலைவன் திகைத்தான். பின்னர் முரசுகள் முழங்கின. அந்த ஆணைகளை ஏற்று பாண்டவர்களின் படை இரு கைகளாக உருக்கொண்டு நீண்டு வந்து அவர்களின் இருபக்கமும் அரண்செய்து அணைத்து உள்ளிழுத்துக்கொண்டது. அப்போதுதான் அவர்கள் படைவிட்டு முன்செல்வதை கௌரவர்களின் படை புரிந்துகொண்டது. அவர்களிடமிருந்து இளிவரல் ஓசைகள் எழுந்தன. சில அம்புகள் எழுந்து வந்து அவர்களை பின்னாலிருந்து தாக்கின. கொடிகள் அசைந்து அவர்கள் செல்வதை அறிவிக்க முழவுகள் ஓசையிட்டன. க்ஷேமதூர்த்தி திரும்பி நோக்கியபோது பின்னணியில் சிலர் விழுந்துவிட்டதை தவிர்த்தால் காரூஷர்களில் பெரும்பாலானவர்கள் பாண்டவப் படைக்குள் நுழைந்துவிட்டதை கண்டார்.
“நான் படைத்தலைவரை காணவேண்டும்… நாங்கள் அணிமாறுகிறோம். எங்கள் குடித்தெய்வத்தின் ஆணை இது!” என்றார் க்ஷேமதூர்த்தி. “அதை படைத்தலைவர் திருஷ்டத்யும்னர்தான் முடிவெடுக்கவேண்டும்…” என்ற காவலன் “உங்கள் படைகள் இங்கே நின்றிருக்கட்டும். நீங்கள் சென்று படைத்தலைவரை பார்க்கலாம்” என்றான். காவலன் ஒருவன் க்ஷேமதூர்த்தியை அழைத்துக்கொண்டு புரவியில் போரில் கொந்தளித்துக்கொண்டிருந்த பாண்டவர்களின் படைப்பிரிவுகளின் இடைவெளிகள் வழியாக சென்றான். மலைப்பாறை வெளியில் இறங்குவதுபோல வளைந்தும் ஒசிந்தும் நின்றும் தாவியும் அவர்கள் சென்றார்கள். கழையன் ஒருவன் விண்ணிலெழுந்து அமைந்த இடமே திருஷ்டத்யும்னன் இருக்குமிடம் என க்ஷேமதூர்த்தி உணர்ந்தார்.
அங்கே செல்வதற்குள் திருஷ்டத்யும்னன் அவர் வருவதை அறிந்திருந்தான். கைகளாலும் வாய்மொழியாலும் ஆணைகளை இட்டு படைகளை நடத்திக்கொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து கழையர்கள் மாறி மாறி வானிலெழுந்தமைந்தனர். அறிவிப்புமாடங்களில் முரசுகளும் முழவுகளும் முழங்கின. “வருக, காரூஷரே. தாங்கள் நெறிநின்று அணிமாறியதை பாண்டவர்களின் படை வரவேற்கிறது. நாம் வெல்வோம்!” என்று அவன் சொன்னான். “ஆம், வெல்வோம் என்று என் குலதெய்வம் ஆணையிட்டது. நாங்கள் அச்சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்” என்று க்ஷேமதூர்த்தி சொன்னார். “உங்களுக்கான படைப்பிரிவுகளை சற்று கழித்து ஒதுக்குகிறேன். உங்கள் படைகள் இப்போது படைமுகப்பிலிருந்து பின்விலகி நிலைகொள்ளட்டும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.
அப்போது எழுந்த முழவொலி அவன் விழிகளை திருப்பியது. “பீமசேனரின் ஆணை!” என்றான். பின்னர் திரும்பி “உங்களை ஏற்கவியலாது என்று ஆணையிடுகிறார். திரும்பிச்செல்லும்படி கோருகிறார்” என்றான். பின்னர் தூதனை நோக்கி “அவருக்கு சென்று சொல்க! ஒரு படை மிகச் சிறியதாயினும் அங்கிருந்து விலகி இங்கு வருவது அவர்களின் உள உறுதியை தளர்த்துவது, நமது படைகளின் நம்பிக்கையை பெருக்குவது. போர் இப்போது நிகர்நின்று நிகழ்வதனால் எந்தச் சிறுமாற்றமும் நன்றே. இந்தச் சிறுசெயலால் ஒருவேளை நம்மை நோக்கி வெற்றி திசைதிரும்பக்கூடும். போரில் வெற்றி என்பது உருளைக்கல் குவியல்கள் சிறுதொடுகையில் உருண்டு சரிவதைப்போல கணநேரத்தில் நிகழ்பவை” என்றான்.
அவன் சொல்லச்சொல்ல அந்த வீரன் அதை குறிமொழியில் தோல்சுருளில் எழுதிக்கொண்டான். தன் தோள்பையிலிருந்த புறாக்களில் ஒன்றை எடுத்து அதன் கண்களை மூடியிருந்த ஈரத்துணியுறையை அகற்றி தோல்சுருளைச் சுருட்டி அதன் கால்களில் கட்டி வானில் விட்டான். திருஷ்டத்யும்னன் “எழுக, சிகண்டியை துணைசெய்க! சதானீகனும் சர்வதனும் சிகண்டியின் இணைநின்று பொருதுக… கிருபரை எதிர்க்கும் சாத்யகிக்கு கிராதர்களின் அணி ஒன்று நீளம்புகளுடன் துணைசெல்க!” என்று ஆணையிட்டான். “பீஷ்மருக்கு நேர்முன்னால் கேடயப்படை மட்டுமே நிற்கட்டும். வில்லவர்கள் அவருடைய அம்புவளையத்திற்கு வெளியே நின்று நீளம்புகளால் மட்டும் அவரை எதிர்த்துப் போரிடுக! ஜயத்ரதனிடம் போரிடும் அபிமன்யூ பீஷ்மரை எதிர்த்து செல்க! அதுவரை பாஞ்சால வில்லவர் பீஷ்மரை அரண்செய்க!”
புறா வானிலிருந்து சிறகடித்து வந்து இறங்கி காவலன் தோளில் அமர்ந்தது. அவன் அதை எடுத்து தோல்சுருளை விரித்து உரக்க படித்தான். “களத்தில் அணிமாறுபவரை ஏற்குமளவுக்கு பாண்டவப் படை நலிந்துள்ளது என்றும் இச்செய்தியை உருமாற்றலாம். சகுனி அதையே செய்வார். அவர்கள் இதை இவ்வாறு அறிவித்து ஒரு வெற்றிக்கூக்குரலிட்டால் நம்மவர் உளம்தளர்ந்துவிடுவார்கள். அறம் மீறியும் வெல்ல நாம் ஒருங்கிவிட்டோம் என நம்மவர் பொருள்கொண்டால் நம் ஆற்றல் அழியும். காரூஷரை ஏற்கவேண்டியதில்லை. இது அரசாணை, காரூஷர்களை உடனடியாக கொன்று தலைவீழ்த்துக!”
திகைப்புடன் பின்னடைந்த க்ஷேமதூர்த்தி “இது நெறிமீறல்! இதற்கு உங்களுக்கு உரிமை இல்லை” என்று கூவினார். “நான் என் தெய்வங்களின் ஆணைக்கு ஏற்ப இங்கே வந்தேன். என் மைந்தர்கள் இறந்தமையால் உங்களுக்காக போரிட வந்தேன்… என்னை இங்கு வரும்படி ஆணையிட்டவர்கள் என் மறைந்த மைந்தர்களே” என்றார். திருஷ்டத்யும்னன் “நான் ஒன்றும் செய்வதற்கில்லை, காரூஷரே. பீமசேனர் அரசரின் முதலிளையோர். அவருடைய ஆணை இந்திரப்பிரஸ்தத்தில் அரசாணையேதான் என்பது யுதிஷ்டிரரின் நிலையாணை. என் கடமை உங்களையும் காரூஷர்களையும் கொல்வது” என்றான்.
“தெய்வங்கள் இதை ஏற்கா! இது நெறிமீறல்” என்று க்ஷேமதூர்த்தி கண்ணீருடன் கூவினார். “எங்கும் பொதுநெறி இதுவே. உங்களை எப்படி திருப்பியனுப்ப முடியும்? நீங்கள் எங்கள் படைகளுக்குள் வந்து எங்கள் சூழ்கைகளின் அமைப்புகளை அறிந்துவிட்டீர்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் எதையும் பார்க்கவில்லை… மெய்யாகவே பார்க்கவில்லை! பார்த்தாலும் எதையும் அறிந்துகொள்ளக்கூடியவனல்ல நான்!” என்றார் க்ஷேமதூர்த்தி. திருஷ்டத்யும்னன் மறுமொழி சொல்லாமல் திரும்பிக்கொள்ள கழையன் எழுந்தமைந்து கைவீசி செய்தியை அளித்தான். “துருபதரைச் சூழ்ந்து நில்லுங்கள், பாஞ்சாலர்களே. அவருடைய பின்புலம் ஒழிந்துள்ளது. கேடயப்படை அவருக்கு இருபுறமும் காப்பாகட்டும்!” என திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான்.
இரண்டு வீரர்கள் வாளுடன் வந்து க்ஷேமதூர்த்தியின் இருபுறமும் நின்றனர். “வருக!” என்று அவர்களில் ஒருவன் சொன்னான். “எங்கே?” என்றார் க்ஷேமதூர்த்தி. “புறக்களத்திற்கு… உங்களை தலைகொய்திடும்படி ஆணை!” என்றான். “இல்லை, அது நெறியல்ல. நான் அரசன்… என் குடி இப்பழியை பொறுக்காது” என்றார் க்ஷேமதூர்த்தி. இடப்பக்கத்திலிருந்து புரவியில் சுதசோமன் வந்து பாய்ந்திறங்கி “முழவுச்செய்தி கேட்டு வந்தேன். பாஞ்சாலரே, காரூஷர் கொல்லப்படலாகாது. அவர் உடனே திருப்பி அனுப்பப்படவேண்டும். அவர் கௌரவப் படைக்கு செல்லக்கூடுமென்றால் அவ்வாறே ஆகட்டும். அன்றி களமொழிவார் என்றால் அதுவும் ஒப்புதலே” என்றான்.
“தங்கள் தந்தையின் ஆணை!” என்றான் திருஷ்டத்யும்னன். “அதை நான் மாற்றியமைக்கிறேன். இது என் ஆணை!” என்றான் சுதசோமன். “பாஞ்சாலரே, நானும் இவர் மைந்தர்கள் ஹஸ்திபதனும், சுரவீரனும், மூஷிகாதனும் கீழ்மச்ச நாட்டு சம்ப்ரதனுடனும் சௌகிருதனுடனும் சௌமூர்த்தனுடனும் இணைந்து ஆடிய உண்டாட்டை மறக்க முடியாது. அவர்கள் விண்புகுந்தமையாலேயே அவர்களின் விழைவை நாம் மறுக்கமுடியாதவர்களாகிறோம். தங்கள் தந்தை கொல்லப்படுவதை ஹஸ்திபதர் விரும்ப மாட்டார்.” “ஆனால் தங்கள் தந்தை…” என திருஷ்டத்யும்னன் தயங்க “என் ஆணைக்கு மாற்றாக தந்தையிடமிருந்து சொல்லெழும் என எண்ணுகிறீர்களா?” என்றான் சுதசோமன். “இல்லை” என பெருமூச்சுவிட்ட திருஷ்டத்யும்னன் “செல்க, காரூஷரே! உங்கள் படையினருடன் விரைந்து விலகிச்செல்க!” என்றான்.
“எங்கள் குலதெய்வத்தின் காப்பு எனக்குண்டு. எங்களை எவரும் அழிக்கவியலாது!” என்றார் க்ஷேமதூர்த்தி. பின்னர் சுதசோமனிடம் “இச்செயலை காரூஷர்குடி மறவாது. என்றேனும் இதற்கு நிகரீடு செய்வோம்” என தலைவணங்கியபின் சென்று புரவியில் ஏறிக்கொண்டார். அவர் உடல் அப்போதும் நடுங்கிக்கொண்டிருந்தது. புரவியிலிருந்து விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? மெய்யாகவே அவரைக் கொல்ல ஆணையிடப்பட்டதா? அது இயல்வதா? ஷத்ரியன் ஒருவனை தலைகொய்திட ஆணையிடுவார்களா என்ன? அதுவும் கீழ்க்குருதிகொண்டவர்களாகிய பாண்டவர்களில் ஒருவன்?
காரூஷநாட்டுப் படைகளை அடைந்தபோது அவர் கண்களிலிருந்து அனல் எழ உடல்தசைகள் தளர்ந்தன. வியர்வை பெருக அவர் ஓய்ந்து நின்றார். அவருக்கு முன் காரூஷ நாட்டு வீரன் ஒருவன் வேலை ஏந்தியபடி ஓடிவந்தான். வந்த விசையில் விழுந்துகிடந்த தேரொன்றை தாவிக்கடந்து அவர் முன் வந்து விழுந்து சுருண்டுச் சுழன்று எழுந்து கைகளை விரித்து தொண்டை புடைக்க கண்களின் கருவிழிகள் உருண்டு மறைய புலிக்கண்களென அவை திரண்டு விழிக்க நரம்புகள் புடைக்க உடல் முறுகி அதிர உறுமலோசை எழுப்பினான். அவன் குரல் பிளிறல்போல் எழுந்தது.
“என் மைந்தரே! என் மைந்தரே! செல்க! மறுபக்கம் மீள்க! கௌரவர்களின் தரப்பில் நின்று போரிடுக! உங்களை குலச்சிறுமை செய்த பாண்டவர்களின் நெஞ்சு பிளந்து குருதி உண்க! உங்களை காலடியிலிட்டு மிதித்த இளைய பாண்டவன் பீமசேனனையும் அவன் மைந்தனையும் கொன்று குருதிப்பழி தீர்த்து என்னை விண்ணிலேற்றுக!” என்று அலறினான். சுழன்று அப்பால் விழுந்து வலிப்பு வந்து வாயிலிருந்து நுரைவழிய துடித்துப்புரண்டான். அவன் மேல் வானிலிருந்து பொழிந்த அம்புகள் தைத்து நிற்க அவன் குருதிகொப்பளிக்கும் மூக்குடன் உடல் அலையடித்து பின் மெல்ல அமைந்தான்.
“திரும்புக! கௌரவர்பக்கம் செல்க!” என்று க்ஷேமதூர்த்தி தன் படைகளுக்கு ஆணையிட்டார். அவருடைய ஆணை முழவொலியாக எழுந்ததும் காரூஷநாட்டுப் படை எந்த ஓசையையும் எழுப்பவில்லை. அவர் தன் கைவாளைத் தூக்கி மீண்டும் மீண்டும் ஆணையிட்டார். “திரும்புக! நம் அன்னையின் ஆணை! கௌரவர்களுடன் சேர்ந்துநின்றிருக்க அன்னை உரைக்கிறாள். வெற்றி நமக்குரியதே! நீடுபுகழும் நம்முடையதே!” படைகள் மீண்டும் கொடிகளையும் படைக்கலங்களையும் தலைகீழாக தூக்கிக்கொண்டன. ஒரு சொல்லும் உரைக்காமல் சிதையூர்வலம்போல வீரர்கள் நடந்தார்கள். தேர்கள் மேடேறுவதுபோல அசைந்து அசைந்து சென்றன.
அவர்களைப் பார்த்ததும் கௌரவப் படையில் இருந்து ஆரவாரம் எழுந்தது. அவர்கள் கௌரவர்களை சென்றுசேரும்பொருட்டு பாண்டவப் படை உருவாக்கிய இடைவெளியினூடாக அவர்கள் சென்று எதிரே நின்றிருந்த காந்தாரப் படை முன் தயங்கினர். காந்தாரநாட்டு படைத்தலைவன் எதிரே வந்து “தங்கள் சொல்” என்றான். “நாங்கள் பிழையாக பாண்டவர்பக்கம் சென்றுவிட்டோம். மீண்டும் கௌரவர் தரப்பில் நின்று போரிட விழைகிறோம். எங்கள் அன்னையின் சொல் எழுந்துள்ளது. நாங்கள் அன்னையின் ஆணைக்கு அடிமைப்பட்டவர்கள்” என்றார் க்ஷேமதூர்த்தி. அவன் கைகளை அசைக்க முழவுகள் அச்சொற்களை முழங்கின. அப்பாலிருந்து அவர்களை உள்ளே அனுப்பும்படி சகுனியின் ஆணை எழுந்தது.
“செல்க!” என்று க்ஷேமதூர்த்தி ஆணையிட்டார். ஆனால் காரூஷநாட்டுப் படையினர் தயங்கி நின்றனர். “நமக்கு எந்த இடரும் அமையாது. அன்னை துணையிருப்பாள். செல்வோம்!” என்றார் க்ஷேமதூர்த்தி. படைகள் மெல்ல தேங்கி ஒழுகி கௌரவப் படைக்குள் சென்றன. “படைகள் இங்கிருக்கட்டும். நீங்கள் மட்டும் காந்தாரரைச் சென்று பார்த்து மீள்க!” என்றான் காவலர்தலைவன். காவலன் ஒருவன் வழிநடத்த க்ஷேமதூர்த்தி நிமிர்ந்த தலையுடன் கௌரவர்களின் நடுவே சென்றார். அவருக்கு இருபக்கமும் எழுந்த இளிவரல்கூச்சல்களை கேட்டார். எவரோ பழைய மரவுரி ஒன்றை எடுத்து அவர் மேல் வீசினர். எந்த முகமாறுதலும் இல்லாமல் அவர் அதை எடுத்து நிலத்திலிட்டு மேலே சென்றார்.
காந்தாரப் படை நடுவே சகுனியின் அறிவிப்புமாடத்தில் முழவுகளும் முரசுகளும் ஓசையிட்டுக்கொண்டே இருந்தன. கொடிகள் சுழன்றன. அவர் அருகே சென்றதும் சகுனி திரும்பி நோக்கி அணுகிவரும்படி கையசைத்தார். பின்னர் திரும்பி ஏறி இறங்கிய கழையனை நோக்கிவிட்டு “கடோத்கஜனை சூழ்ந்துகொள்க! இடும்பர்களை நம் கதைவீரர்களும் யானைகளும் மட்டுமே எதிர்கொள்ளவேண்டும். தேர்கள் அவர்கள் முன்னிருந்து ஒழிக!” என்று சொன்னபின் திரும்பி அவரை நோக்கி “சொல்லுங்கள்” என்றார். க்ஷேமதூர்த்தி “நான் என் அன்னையின் ஆணை எழுந்தமையால் பாண்டவர்பக்கம் சென்றேன். அவர்களால் ஏற்கப்படவில்லை. அப்போது அன்னை எழுந்து நான் இப்பக்கம் வரவேண்டும் என ஆணையிட்டாள். ஆகவே வந்தேன்” என்றார்.
“நீங்கள் போர்தொடங்குவதற்கு முன்னரும் இருமுறை அணிமாறினீர்கள்” என்றார் சகுனி. “ஆம், அதுவும் அன்னையின் ஆணையே. நாங்கள் தொல்குடி ஷத்ரியர். அன்னையின் ஆணைக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்.” சகுனி சலிப்புடன் தலையசைத்து “அதோ அருகில்தான் கௌரவர்கள் நின்றிருக்கிறார்கள். நீங்கள் அரசரின் ஆணையை பெற்று வரலாம்” என்றார். க்ஷேமதூர்த்தி “எவராயினும் என் சொல் இதுவே. இது எங்கள் குடிகாக்கும் அன்னையின் ஆணை.” சகுனி திரும்பிக்கொண்டு “எழுக! பால்ஹிகர்களும் சைப்யர்களும் மத்ரர்களும் இணைந்து பாஞ்சாலப் படையை சூழ்ந்துகொள்க!” என ஆணையிட்டார். காவலன் “நாம் செல்வோம், அரசே” என்று க்ஷேமதூர்த்தியிடம் சொன்னான்.
கௌரவப் படையை நோக்கி செல்கையில் க்ஷேமதூர்த்தி தன்னுள் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தார். அது ஏன் என்று அவருக்கு புரியவில்லை. எதுவாயினும் அன்னை என்னை வழிநடத்துக என்று எண்ணிக்கொண்டார். ஆனால் உள்ளமென அமைந்திருந்த குளிர்ந்த எடைமிக்க உருளையுடன் தொடர்பின்றி காற்றென வேறெங்கோ ஓடின அச்சொற்கள். அவர் கௌரவர்களின் மையத்தை அடைந்தபோது அங்கே துச்சாதனனும் துர்மதனும் இருந்தார்கள். துர்மதன் அவரைப் பார்த்ததுமே கையிலிருந்த கதையை ஓங்கியபடி அறைய வந்தான். அவர் தயங்கி நின்றிருக்க துச்சாதனன் அவனை ஆணையிட்டு தடுத்தான். க்ஷேமதூர்த்தி அணுகிச்சென்றார்.
துர்மதன் “இந்த இழிமகன் ஷத்ரியர்களுக்கே இழுக்கை தேடித்தந்துள்ளான். இவன் தண்டிக்கப்படவேண்டும்…” என்றான். துச்சாதனன் “ஏற்றுக்கொள்ளலாம் என்பது காந்தாரரின் ஆணை. இவர் திரும்பி வந்தது பாண்டவர்களின் தோல்வி உறுதி என தெரிந்தமையால்தான் என முரசறையும்படி மாதுலர் சொல்கிறார்” என்றான். “அந்தச் சூது நமக்கு தேவையில்லை. கண்முன் நிகழ்ந்தது ஒரு கீழ்மை. அதை நாம் ஏற்கலாகாது!” என்றான் துர்மதன். “நான் எவர் சொல்லுக்கும் கட்டுப்பட்டவன் அல்ல. என் அன்னையை தொடர்வதில் எனக்கு கீழ்மை என ஏதுமில்லை. நாங்கள் பாரதவர்ஷத்தின் தொல்குடி ஷத்ரியர். எங்கள் நெறிகளை புதியவர்களால் உணரமுடியாது” என்றார் க்ஷேமதூர்த்தி.
அப்பால் தேர்த்தட்டில் மல்லாந்து கிடந்த துரியோதனனின் வயிற்றிலிருந்த அம்பைப் பிடுங்கி மெழுகுத்துணியால் சுற்றி கட்டிக்கொண்டிருந்தனர் மருத்துவர். கந்தகநீரின் கெடுமணம் அங்கே நிறைந்திருந்தது. துர்மதன் “நாவை அடக்குக! மூத்தவர் ஆணையிட்டால் என் கையால் உமது தலையை உடைத்து தலைக்கூழை அள்ளி வீசுவேன்” என்றான். க்ஷேமதூர்த்தியின் உடல் மெய்ப்புகொண்டது. துச்சாதனன் “எதுவாயினும் முடிவெடுக்கவேண்டியவர் நம் அரசர்” என்றான். “ஆம், அவர் முடிவெடுக்கட்டும். அவர் வீரர்களை நம்பி போரிடுகிறாரா இல்லை இந்தக் கோழைகளையா என நானும் அறிய விழைகிறேன்” என்றான் துர்மதன்.
துரியோதனன் எழுந்துகொண்டு க்ஷேமதூர்த்தியை பார்த்தான். அவன் முகத்தில் சிரிப்பு எழுந்தது. கையை ஊன்றி எழுந்து அவன் நின்றதும் அஞ்சியவராக க்ஷேமதூர்த்தி சற்று பின்னடைய துரியோதனன் வெடித்து நகைத்தான். “நான் என் அன்னையின் ஆணைப்படியே சென்றேன்” என்றார் க்ஷேமதூர்த்தி. “உமது அன்னை நுண்ணறிவுகொண்டவள்” என்றான் துரியோதனன். “மூத்தவரே சொல்க, இக்கோழையின் தலையை பிளக்கிறேன்!” என்றான் துர்மதன். “அதை ஏன் நாம் செய்யவேண்டும்? பாண்டவர்களே செய்வார்கள். அவரை களம்செல்லும்படி சொல்” என்றான் துரியோதனன். “என்ன சொல்கிறீர்கள்? இந்தக் கோழை…” என்று துர்மதன் சொல்ல “இளையோனே, இந்தக் களத்தில் இத்தகைய எச்சொற்களுக்கும் பொருளில்லை” என்றபின் துரியோதனன் க்ஷேமதூர்த்தியிடம் “செல்க, முன்பிருந்த படைப்பிரிவிலேயே சென்று சேர்ந்துகொள்க!” என்றான்.
துச்சாதனனை நோக்கியபின் க்ஷேமதூர்த்தி “நான் அன்னையால் காக்கப்படுகிறேன் என அறிவேன்” என்றார். துர்மதனிடம் “எந்தக் கெடுமதியாளரும் எனக்கு எந்தத் தீங்கையும் செய்துவிடமுடியாது” என்றபின் திரும்பி காவலனிடம் “செல்லலாமா?” என்றார். காவலன் தலைவணங்கினான். “முழவுகள் உங்களுக்கான ஆணையை ஒலிக்கும், செல்க!” என்றான் துச்சாதனன். அவர் செல்லத் திரும்பியபோது துரியோதனன் “உங்கள் மைந்தரை எண்ணி நானும் துயருறுகிறேன், காரூஷரே. அவர்கள் விண்நிறைவு கொள்க!” என்றான். க்ஷேமதூர்த்தி அவனை நடுங்கும் தலையுடன் சிலகணங்கள் நோக்கினார். பின்னர் திரும்பிச்சென்று தேரிலேறிக்கொண்டார்.