தமிழிசை-இரு பார்வைகள்

ஆபிரகாம் பண்டிதர்
து.ஆ.தனபாண்டியன்

அன்புள்ள ஜெ,

என்னை பொறுத்தவரை கர்நாடக சங்கீதம் இன்றைய வடிவில் உயிரோடு இருப்பதற்கு காரணம், கடந்த 400 வருடங்களாக உள்ள பஜனை சம்பிரதாயமே. கச்சேரி மேடைகளில் கர்நாடக சங்கீதம் இந்த நூற்றாண்டின் துவக்கம் வரை வேறொரு வடிவில் இருந்தது. வெறும் அரசவை மற்றும் புரவலர்களின் இல்லங்களில் மட்டுமே கச்சேரிகள், ராகம்-தானம்-பல்லவியாக பாடப் பட்டு வந்தன.

கர்நாடக சங்கீதத்தின் அப்போதைய வெகுஜன வடிவம் பஜனையே. ஐம்பதுகள் வரை மிகப் பிரபலமாக இருந்து, சிறிது இடைவெளிக்கு பிறகு கடந்த பதினைந்து வருடங்களாக மறுபடியும் புத்துயிர் பெற்றுள்ளது. இப்போது பஜனை, பிராமண சமூகத்தில் பிரபலமாக இருந்தாலும், முன்பு சகலரும் பங்கு கொள்பவையாக இருந்தது.

எங்கள் ஊரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு முதலியார்களும் செட்டியார்களும் பஜனையில் பங்கு கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நாலே தெருக்களில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பஜனை மடங்களே சாட்சி. எல்லாமே முதலியார்களுக்கும் செட்டியார்களுக்கும் சொந்தமானவை. இப்பொழுது அங்கு எங்குமே பஜனைகள் நடப்பதில்லை என்பது வருத்தமான விஷயம். இன்று வெகு diluted form-இல் அய்யப்ப பஜனைகள் நடந்து கொண்டிருப்பது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது.

சம்பிரதாய பஜனைகளிலேயே கீர்த்தனைகள் அதிகம் பாடப் பட்டன. கீர்த்தனை வடிவமே பஜனைக்கு உரித்தானதுதான். த்யாகராஜ சுவாமிகள், ஊத்துக்காடு முதல் பாபநாசம் சிவன் வரை எல்லோருக்கும் பஜனை சம்ப்ரதாயத்துடனான தொடர்பு உண்டு. சங்கீத மூவர் கீர்த்தனை பாரம்பரியத்தை தங்கள் திறமையால் அற்புதமான உயரத்திற்கு கொண்டு சென்றார்கள். எப்படி? அற்புதமான கீர்த்தனைகளின் வரிகளாலும், அதில் உள்ள இசையை செவ்வியல் தரத்திற்கு உயர்த்தியதாலும். என்னை பொறுத்தவரையில் இந்த பங்களிப்பே இன்று கர்நாடக இசையை ஒரு செவ்வியல் வடிவமாக ஆக்கியுள்ளது.

மக்கள் மத்தியில் பஜனையின் ப்ராபல்யமே அரியக்குடி ராமானுஜ ஐயங்காரை கச்சேரி வடிவத்தை நாம் இப்பொழுது இருக்கிறார்ப் போல் மாற்றி அமைக்க தூண்டி இருக்கும். அதற்கு காரணம் அவர் காலத்தில்தான் கர்நாடக சங்கீதம் பொதுமக்களின் அவைக்கு வந்தது (சபாக்களின் மூலமாக). அவர் ராகம்-தானம்-பல்லவியை அகற்றாமல், அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து பல கீர்த்தனைகள் பாடப் படும் விதமாக மாற்றி அமைத்தார்.

கீர்தனைகளினால் கச்சேரி பஜனை மாதிரி ஆகிவிடாமல் இருக்க, முதற் பாதியில் செவ்வியல் தரத்தில் உள்ள கீர்த்தனைகளை மற்றும் ராகம்-தானம்-பல்லவியும் அதற்கு பிற்பாடு பஜனைகளில் பிரபலமாக இருக்கக்கூடிய பாடல்களான “கிருஷ்ணா லீலா தரங்கிணி”, “ஜெயதேவரின் அஷ்டபதி”, “திருப்புகழ்” ஆகியவன பாடப் பட்டன. தாளம் சேர்த்து பாட முடியாதவையான, பக்தி இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்ட பாகங்கள் மற்றும் சமஸ்க்ருத ஸ்லோகங்கள் விருத்தங்களாக பாடப் பட்டன.

இந்த இரண்டாம் பாகம் இன்று “துக்கடா” என்று குறுக்கப் பட்டு விட்டது. அனால், கச்சேரிகளுக்கு மக்களை கொண்டு வர இப்பாகமே தொண்டாற்றுகிறது.

அப்படிப் பார்க்கையில் அரியக்குடி கொண்டு வந்த “formula” ஒரு அபாரமான விஷயம். இன்றைக்கும் கர்நாடக இசையில் ரசனையை வளர்த்து கொள்கிறவர்கள் துக்கடாக்களிலிருந்தே தங்கள் பயணத்தை துவக்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, அரியக்குடி கச்சேரி வடிவத்தில் செய்த இந்த மாற்றம் தான் கர்நாடக சங்கீதத்தை இன்று வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

இங்கு தமிழ் அல்லாத மொழிகளுக்கு எப்படி இப்படிப் பட்ட இடம் கிடைத்தது? அதற்கும் காரணம் இந்த பஜனை சம்ப்ரதாயம் தான். சங்கீத மூவர் தமிழ் அல்லாத மொழிகளில் கீர்த்தனைகளை படைத்தது மேலும் இதை வலுப்பெறச் செய்தது.

பஜனை சம்பிரதாயத்தில் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி மற்றும் சமஸ்க்ருதம் ஆகிய மொழிகள் பயன் படுத்தப்பட்டு வந்தன. ஏன் என்றால், சம்பிரதாய பஜனை ஒரு “compilation”. மருதநல்லூர் சத்குரு சுவாமிகள் நாடெங்கும் சென்று அங்கு பாடப் படும் பக்தி கீதங்களை கேட்டு இந்த பஜனை சம்பிரதாயத்தை உருவாக்கினார்.

தமிழ் அல்லாத கீர்த்தனைகள் யாவும் பக்தி ரசம் ததும்பும், கேட்பவர் மனத்தை கரைக்கும் பாடல்களே. அவற்றில் முக்கியமானவை: பத்ராசல ராமதாசர் கீர்த்தனைகள், நாராயண தீர்த்தர் தரங்கங்கள், கன்னட தாசப் பதங்கள், ஜெயதேவர் அஷ்டபதி, மராட்டிய அபங்கங்கள், மீரா-கபீர் பாடல்கள். அற்புதமான இப்பாடல்களுக்கு அதி-அற்புதமான இசை வடிவத்தை சம்பிரதாய பஜனைகளில் அளித்தனர். இதனாலேயே மொழி ஒரு பொருட்டில்லாமல் போனது. நீங்கள் பிரபல பஜனைப் பதிவுகளை கேட்டாலே உங்களுக்கு அது புரிந்து விடும்.

மற்றும் பல காலங்களாகவே தென்னிந்தியாவில், பக்தி இயக்கத்தோடு சார்புடையவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் இருந்து விஷயங்களை க்ரஹித்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. அதை தமிழ் அல்லாத பாடல்களுக்கு “extend” செய்வது ஒன்றும் பெரிய விழயமாகப் படவில்லை.

அதனால், கச்சேரி மேடைகளில் அற்புதமான தமிழ் அல்லாத கீர்த்தனைகளை ஏற்க, மொழி ஒரு பெரிய தடையாக இருக்கவில்லை. இந்த பக்தி இயக்கம் இல்லை என்றால், கச்சேரிகளில் தமிழ் அல்லாத மற்ற மொழிகளின் நிலைமை கேள்விக் குறி தான். அதற்கு விதி விலக்கு பதங்கள் மற்று ஜாவளிகள் தான். இவ்வடிவங்களின் நிலைமை இன்று கச்சேரிகளில் கேள்விக் குறிதான்.

இனி கர்நாடக சங்கீதம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல அ-பக்தி பாடல்கள் தேவையா, அல்லது ஹிந்துஸ்தானி போன்று வலுவான வாத்ய இசை பரிமாணமா என்றால், காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இன்றைய கர்நாடக இசை “practitioners” பக்தியை விட்டு விலகுவதென்பது ஒரு கேள்விக் குறிதான்.

– சீனு நரசிம்மன்

****

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் தானே?

தங்கள் சாதி பற்றிய கடிதங்கள் என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தன – அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நண்பர்களிடமும் பகிர்ந்தேன்.

கர்நாடக சங்கீதம் பற்றிய கடிதங்கள் கண்டேன். இதை பற்றி எனக்கு கொஞ்சம் ஆழமாக படிந்த எண்ணங்கள் உண்டு. திரு. வேங்கடசுப்ரமணியன் கூறியவற்றை முழுதும் ஏற்க்கின்றேன். இந்த மரபை இன்று காக்கும் சிலர் சாதி உணர்வடனோ, மொழி உணர்வு இல்லாமலோ பாடவில்லை என்றே நான் கொள்கிறேன். எனது இடர் வேறு ஒன்று.

நம் மரபில் வந்த அனைத்து கலைகளுக்கும், அறிவியலுக்கும் வித்தாய் முழு முதல் நோக்கமாய் இருப்பது தனி மனித விடுதலையே (Liberation) என்பது நான் புரிந்து வைத்தது. அந்த கோணத்தில் இந்த கர்நாடக சங்கீதம் ஆர்வலர்கள் பார்ப்பதில்லையோ என்று தோன்றுகிறது. சில நூற்றாண்டுகள் முன் யோகம் போன்ற அறிவியல் கருவிகளின் வாசற்படிகள் பொதுமக்கள் பலருக்கு மறுக்கப்பட்டிருந்தன. காலத்திற்கேற்ப, இந்து மரபின் பல சீர்திருத்தவாதிகளால், நோக்கம் முக்கியத்துவம் பெற்று, அதை அதனுள்ளேயே முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாக்க வேண்டிய செவ்வியாலாக எண்ணியிருந்த சிலரிடம் இருந்து மீட்கபட்டு அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளப் பட்டது. செவ்வியல் தன்மைக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல், கற்போர் திறனுக்கு ஏற்ப பல நிலைகள் உருவாக்க பட்டு கற்பிக்க பட்டது.

செவ்வியல் அறிஞர்களின் நல்லுணர்வு இருப்பினும், அவர்களுக்கு தங்கள் கலைஇன் மீது பற்று இருந்தால், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் இதை பரப்ப ஆர்வம் இருக்க வேண்டாமா? மதம், இனம், நாடு எல்லைகளை மீறி பகிர வேண்டும் என்ற என் களரிபயத்து (martial art) ஆசிரியரிடம் உள்ள இந்த ஆர்வம், என் கர்நாடக சங்கீதம் அறிஞர்களிடம் இல்லை? Catch 22 ஒரு வசதியான சாதனமாக பட்டது.

முக்கியமாக, ஆன்மீகம் வளர இசை எவ்வளவு உறுதுணை நிற்க முடியும் என்று வரலாற்றில் கண்டதுண்டு. இங்கோ, ஆன்மீகத்தை தனியே சமாளிக்க விட்டு, சபாக்களில் தஞ்சம் புகுந்து விட்டனரோ என்று ஐயம். சுபி எண்ணங்களை காவ்வாலீ (Qawwali) இன்றி மக்களிடம் சுலபமாக பகிர்ந்து இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

நுஸ்ரத் அலீ காண் போன்ற கலைஞர்களுக்கு தனது முதன்மை நோக்கம் தெளிவாக இருந்தது எனத் தோன்றுகிறது – சுபிகளின் குருவான அலீ அவர்களின் எண்ணங்கள் மக்களை ஆன்மீகத்தில் ஆழ வைக்க வேண்டும் என்பது; அதை விட்டு, செவ்வியாலாக நூற்றாண்டுகளாக, சமூகத்தில் தன் ஆளுமையை வார்தெடுக்கும் கருவியாக மட்டுமே போற்றி பாதுகாத்து, உலகமே தன்னை ஆதரிக்க வில்லை என்று பிற்பாடு வருத்த படுவதல்ல. தங்கள் ஆன்ம சாதனையில் துணை நின்ற இவரது இசைக்காக பல பாமரரின் ஆசிகள் அவருக்கு கிடைத்திருக்கும்.

குருபரம்பரை முறைமைகள் வழி வந்த நுஸ்ரத் அலீ காண், (செவ்வியாலாயினும் பஞ்சாபி சொற்கள் கலந்து, பலரும் உணர) சுபிகளின் முதன்மை குருவான அலீ பற்றி பாடும் போது வரும் நெகிழ்ச்சி, செவ்வியல் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் ஒரு சிறிய மக்கள் தொகுப்பில் மட்டுமே வருவது எனக்கு வருத்தமே.

தங்கள் உண்மையுள்ள,

கோகுல்

முந்தைய கட்டுரைகாந்தியம் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபொங்கல்காலையில்