புனைவுகளுக்கான காப்புரிமை

c

அன்புள்ள ஜெ

உங்கள் பதில் உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. கதைக்கருக்களுக்குக் காப்புரிமை இல்லை என்ற செய்தியே எனக்கு இப்போதுதான் தெரியும். இதை இவ்வளவு பேசும் எந்த ஊடகமும் இதுவரை சொல்லவில்லை. இவற்றில் எழுதுபவர்களும் பேசுபவர்களும் பெரும்பாலும் டீக்கடையில் வம்புபேசுபவர்களின் தரத்திலேயே இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு புனைவுப் படைப்பின் காப்புரிமைக்கான நிபந்தனைகள் என்னென்ன என்று அறியவிரும்புகிறேன், ஏனென்றால் நான் இந்தத்துறையில் வேலைபார்க்கிறேன் – உங்களுக்கும் தெரியும்

அருண்குமார்

***

அன்புள்ள அருண்குமார்

புனைவுகளுக்கான காப்புரிமையில் சட்டம் தோராயமாகவே உள்ளது. பொதுவாக ஏராளமான வழக்குகள் வழியாக தீர்ப்புவிதிகள் வழியாகவே சட்டங்கள் தெளிவடைகின்றன. புனைவுகளுக்கான காப்புரிமை சார்ந்து அதிக வழக்குகள் இல்லை. ஆகவே தெளிவான நெறிகள் உருவாகவில்லை.

இன்றுள்ள சட்டங்களின்படி வழக்கறிஞர்கள் சொல்வது இந்த நெறிகள்

அ. கருக்களுக்கு காப்புரிமை இல்லை. அவை பொதுவானவை. ஆனால் அவை ஆசிரியரின் தனிவாழ்விலிருந்து உருவான கதைக்கருக்கள் என நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் பரிசீலிக்கலாம். ஆனால் பரிசீலித்தே ஆகவேண்டும் என்பதில்லை

ஆ. காப்புரிமை ஒரு புனைவின் ஆசிரியருக்கு மட்டுமே உரியது. அவருக்கு அதை உருவாக்க உதவியவர்கள் உரிமைகொண்டவர்கள் அல்ல. அவர் அதை சட்டபூர்வமாக விற்றிருந்தால் மட்டுமே இன்னொருவர் உரிமைகொண்டாட முடியும்.

இ. காப்புரிமை உள்ளவர் மட்டுமே காப்புரிமை மீறலைப்பற்றி வழக்கு தொடுக்கமுடியும் அவரிடமிருந்து வெளியீடு வினியோகம் முதலிய உரிமைகளை வாங்கியவர்கள் வழக்கு தொடுக்க முடியாது

உ.காப்புரிமை சட்டபூர்வமாக பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். ஒரு படைப்பை சாதாரணமாக எங்கேனும் பதிவுசெய்திருந்தால் அது சட்டபூர்வமாகச் செல்லுபடியாகாது. அந்த நிறுவனம் காப்புரிமைச் சட்டப்படி பதிவுசெய்யப்பட்டதாக இருக்கவேண்டும்

அதாவது நீங்கள் ஒரு நூலை சொந்தமாக வெளியிட்டால் அது சட்டபூர்வமான காப்புரிமை கொண்டது அல்ல. அப்படைப்பு காப்புரிமையை அரசிடம் பதிவுசெய்துள்ள குமுதம் அல்லது கிழக்கு போன்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். அப்படைப்பில் அது சட்டபூர்வ காப்புரிமை கொண்டது என்னும் அறிவிப்பு இருக்கவேண்டும்.

அந்நிறுவனங்கள்கூட அந்தப்படைப்பின் காப்புரிமையை சட்டபூர்வமாக தனியாக பதிவுசெய்திருக்க வேண்டும்.ஏனென்றால் அந்தப் படைப்பு வெளியான தேதி போன்றவற்றுக்கு அப்போதுதான் சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கிறது. நீங்கள் இன்றைக்கு வரும் ஒரு சினிமாவின் கதையை நூலாக எழுதி அதை ஓராண்டு முன்னதாக வெளியிட்டதாக தேதியிட்டு அச்சிட்டு வெளியிட்டுவிட்டு அதை சான்றாக்கி வெளியிட்டு வழக்கு தொடுக்கமுடியாது அல்லவா? அந்தத் தேதி, அதைப் பதிவுசெய்தவர் ஆகிரோருக்கு அந்த பதிவுநிறுவனம் சட்டபூர்வமாக பொறுப்பேற்கவேண்டும். அதற்கு சட்டப்படி பதிவுசெய்திருக்கவேண்டும்,

ஊ. ஒரு தனிநபரே சட்டபூர்வமாக காப்புரிமைப் பதிவு செய்வதற்கான விதிகள் சிக்கலானவை. காப்புரிமைப் பதிவு செய்வதற்காகக் கோரினால் அதற்கு முன் அந்தப் படைப்பை வேறு எவரேனும் காப்புரிமை பதிவுசெய்திருக்கிறார்களா, காப்புரிமைப் பதிவு கோருபவருக்கு அது உண்மையிலேயே உரிமையுள்ளதுதானா என்று விசாரித்தபின்னரே அனுமதி கிடைக்கும். அதற்குச் சற்று காலமாகும்.

எ. காப்புரிமை கோரும் படைப்பு பொதுவெளியில் வைக்கப்பட்டு எங்கும் கிடைத்தால் ஒழிய அது பிறரால் திருடப்பட்டது என்று நீதிமன்றம் கருதாது. அந்தப் படைப்பை எதிரி படித்திருக்கிறார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவேண்டும். ஒரு படைப்பை நீங்கள் எழுதி ரகசியமாகப் பதிவுசெய்து ரகசியமாகவே வைத்திருந்தால் அதை இன்னொருவர் எப்படி அறிந்துகொள்ள முடியும்? அப்படி எந்தெந்த கதைகளை எவரெல்லாம் எங்கெல்லாம் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள் என எவருக்குத்தெரியும்? அப்படியென்றால் எவர் எதை எழுத முடியும்?

ஏ. அந்தப்படைப்பு அதற்கு முன் வேறு எவராலும் காப்புரிமை பெறப்பட்டதல்ல என்று வாதி தரப்பால் நிரூபிக்கப்படவேண்டும். ஏனென்றால் காப்புரிமைத் தொகை அளித்தபின் இன்னொருவர் உரிமையுடன் வந்தால் என்ன செய்யமுடியும்?

இவ்வளவு சிக்கல்கள் உள்ளன நீதிமன்ற நடவடிக்கையில். நீதிமன்றத்தில் இழுத்தடிப்போம் என்ற மிரட்டல் அன்றி பெரும்பாலும் நடைமுறையில் எதுவும் சாத்தியம் அல்ல

ஜெ

முந்தைய கட்டுரைடால்ஸ்டாய் நிச்சயம் இரு சுவையானவர்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-64