சர்க்கார்- ஒரு கடிதம்
சர்க்கார், அவதூறுகளின் ஊற்று
சர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்
அன்புள்ள ஜெ.,
சர்கார் விஷயத்தில் பேசப்பட்ட வம்புகள், அவதூறுகள், நக்கல்கள், உங்கள்மீது வேண்டுமென்றே வீசப்பட்ட வசைகள் எதுவும் வியப்பளிக்கவில்லை. இது இப்படித்தான் நடக்கும்.
ஆனால் இவ்விவகாரத்தில் எனக்கு உங்களிடம் கேட்க ஒன்று உள்ளது. பாக்கியராஜ், முருகதாஸ் மற்றும் உங்கள் பேட்டிகளின் படி, இந்தக் கதை திருடப்படவில்லை, ஒரே கதைக்கருவை இருவர் ஒரேபோன்று எழுதிவிட்டனர்.
பாக்கியராஜ் தரப்பு கூறுவது, இதேபோல 10 வருடங்கள் முன்பே வருண் எழுதிவிட்டதால், அவருக்கு சிறு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்பது. அனைத்து உதவி இயக்குனர்களையும், அவரகளது உழைப்பையும் மனதில் கொண்டு எடுக்கப்பட்ட emotionalஆன, இரக்கமான முடிவு.
அப்ப இதேபோல இன்னும் பலர் எழுதியிருந்தால் அவர்களுக்கும் credit கொடுக்கவேண்டுமா(எழுதுவதர்க்கு வாய்ப்பு உள்ள்து என்றே நினைக்கிறேன்) என முருகதாஸ் தரப்பு கூறுவது logicalஆனது.
நீங்கள் இதை எப்படிப் பார்க்கிரீர்கள்? சர்காரை முன்வைத்து கேட்கவில்லை. பொதுவாக நான் ஒரு கதை எழுதி வெளியிடால் வைத்திருக்கிறேன். இன்னொருவர் அதேபோல ஆரம்பம், முடிவோடு எழுதி வெளியிட்டுவிட்டால், கதையின் உரிமையை வைத்து(வணிகத்தை தவிர்த்து), உங்களது தார்மீகமான கருத்து என்ன என நேரமிருப்பின் பதில் அளிக்கவும்.
கிரி.
அன்புள்ள கிரி
உங்கள் கேள்வியிலேயே பதிலையும் சொல்லிவிட்டிருக்கிறீர்கள். தனிவாழ்விலிருந்து வரும் கதைக்கருக்கள் தவிர்த்த பொதுக் கதைக்கருக்கள் அனைத்துமே பலவகைகளில் பல வடிவங்களில் சூழலில் உலவிக்கொண்டிருக்கும்.
எந்த ஒரு கதைக்கருவும் சில ஆண்டுகளுக்குள் பொதுவான பேசுபொருளாக ஆகிவிடும். சினிமா என்னும் சின்ன உலகில் இது மிகச்சாதாரணம். நான் எழுதிய பல கருக்கள் , பல காட்சிகள் வேறு இயக்குநர்களின் எழுத்தாளர்களின் சினிமாக்களாக வந்துவிட்டன பத்தாண்டுக்கு முன் நான் எழுதி இன்னமும் படமாக ஆகாத ஏழுகோட்டைவீடு என்னும் திரைக்கதையின் பலகாட்சிகள் சமீபப் படம் ஒன்றில் இருந்ததாக இதழியல் நண்பர் ஒருவர் கூப்பிட்டுச் சொன்னார்.
இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு காலச்சூழலில் அதற்கான கதைக்கருக்கள் திரும்பத்திரும்ப பேசப்படும். பின்னர் அக்கருக்கள் காலாவதியாகும். ஐம்பதுகள் வரை விதவைத்திருமணம் ஒரு முக்கியமான கதைக்கரு. சரத்சந்திரர் முதல் ஜெயகாந்தன் வரை அத்தனைபேரும் அதை எழுதியிருப்பார்கள். ஆனால் இன்று அது முக்கியமான கரு அல்ல. இன்றைய கதைக்கருக்கள் வேறு.
கதைக்கருக்கள் ஒரு காலகட்டம் கூட்டாக எதைப்பற்றி அக்கறைகொள்கிறது, எதைப்பற்றி சிந்திக்கிறது என்பதைக் காட்டுகின்றன. சமூகம் கூட்டாகவே வாழ்க்கையைப்பற்றிப் பேசிக்கொள்கிறது. ஒரு படைப்பு உருவாக்கும் கேள்வியையும் பதிலையும் இன்னொன்று மேலும் முன்னெடுக்கிறது. ஒரு காலகட்டத்தின் பொதுவான கதைக்கருக்களை ஒன்றாகச் சேர்த்தால் அந்தக்காலகட்டம் எதைப்பற்றி முன்னுரிமை கொண்டிருக்கிறது என்று தெரியும்.
எனக்கு வந்த கடிதங்களைப்பார்த்தால் இந்தக் கருவை இதுவரை ஏழுபேர் எழுதிவைத்திருக்கிறார்கள். இருவர் அதை கதையாக முன்னரே வெளியிட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். வரும்காலத்தில் எல்லா சினிமாக்களுக்கும் இப்படி பலர் கிளம்பி வருவார்கள்
கதைக்கரு [theme] வேறு கதை வேறு [ story,plot] திரைக்கதை [screenplay] வேறு. பெரும்பாலான கதைக்கருகள் வெளியே இருந்து கிடைப்பவை, ஏற்கனவே இருப்பவை, ஆகவே பொதுவானவை. ஆகவே அதை சட்டம் தனியொருவருக்கு உரிமையானதாகக் கருதாது. கதையும் திரைக்கதையுமே படைப்பாளியால் உருவாக்கப்படுபவை. இந்த வேறுபாட்டை சினிமாஇதழாளர்களும் இணையவம்பர்களும் உடனடியாக உணரவாய்ப்பில்லை. சினிமா சம்பந்தப்பட்டவர்களாவது உணரவேண்டும்
ஜெ