சர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்

sarkara

ஜெ

விஜயலட்சுமி முகநூலில் எழுதிய குறிப்பு இது

நவீன்

சர்க்கார் + ஏ.ஆர். முருகதாஸ் எனச் சமூக வலைத்தளங்களில் நிறைய memes, trollsகள் உருவாவதையும் விரைந்து பகிரப்படுவதையும், இன்னொரு பக்கம் ஜெயமோகனை கிண்டலடித்துப் பதிவுகள் பரவுவதையும் பார்த்துக் கொன்டிருந்தேன். இன்று நவீனுடன் விழுதுகள் நிகழ்ச்சியில் பேசிய பின்னர் இதுகுறித்து சற்று விரிவாக உரையாடினேன். பின்னர், முருகதாஸ், கதை திருடப்பட்டதாக கூறிய நபர், பாக்கியராஜ், ஜெமோ இவ்விவகாரம் குறித்து பேசியவைகள், எழுதியவைகளை வாசித்தேன். மிக சுவாரசியமான அதே சமயம் copyright, Intellectual Property Rights குறித்து நீண்ட விவாதங்களையும் தெளிவையும் உருவாக்கக்கூடிய வாய்ப்பை இவ்விவகாரம் உருவாக்கித் தந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், எழுத்தாளர், வாசகர்கள், பிரபலங்கள், முகநூல் வீரர்கள் உள்ளிட்ட பலரும் ஜெயமோகனை கிண்டலடித்து, அவமதித்துக் கடந்து செல்வதை மட்டுமே முழுமூச்சாக செய்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனவருத்தமே மீந்தது. எனது இப்பதிவின்மூலம் உரையாடலுக்கான சூழல் உருவாகுமோ இல்லையோ ஜெயமோகனை போகிர போக்கில் தலைதட்ட நினைப்பவர்களுக்குக் கொஞ்சமேனும் உரைக்கவாவது செய்யட்டும்.

முதலில் தன்னுடைய கதை திருடப்பட்டுவிட்டது என்று கூறுபவர் (1)கரு-idea, (2)கதை, (3)திரைக்கதை இதில் எது திருடப்பட்டது என்று எதையும் தெளிவாகக் குறிப்பிட்டதற்கான சான்றுகள் இல்லை. (அப்படி இருந்தால் நண்பர்கள் குறிப்பிடலாம்). ஒருவேளை கரு திருடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தால் அது copyright சட்டப்படி செல்லாது. அதுவே கதை அல்லது திரைக்கதை திருடப்பட்டதாகக் குறிப்பிட்டு சான்று காட்டினால் ஏ.ஆர். முருகதாஸ் செய்தது சட்டப்படி குற்றமாகும்.

Copyright, Intellectual Property Rights ஆகியவற்றின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வது இவ்விவகாரத்தை அணுக உதவியாக இருக்கும். ஒரு படைப்பு அல்லது ஆக்கம் (1)idea + (2)expression ஆகிய இருகூறுகளின் இணைவின் அடிப்படையில்தான் copyright உரிமைப் பெறுகிறது. இதனை சர்க்கார் பட விவகாரத்துடன் விளக்கினால்:

• ஒருவன் ஓட்டுப்போட வருகிறான். அவன் பெயரில் ஏற்கனவே கள்ள ஓட்டு போடப்பட்டிருக்கிறது. இதையொட்டிய அவனது எதிர்வினை. – இது idea
• அவன் யார், அவன் பின்புலம் என்ன, இச்சம்பவம் நடக்கும் நிலம், அதன் அரசியல், அவன் நேரடியாக பலிவாங்குகிறானா, அரசியலில் குதித்து எதிர்வினையாற்றுகிறானா என்பது போன்றான விடயங்கள் – expression.

ஆக, வெறும் ideaவுக்கு எவ்வித காப்புரிமையும் சர்வ நிச்சயமாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவையனைத்தும் முழுக்க முழுக்க அந்நபர், ஏ.ஆர். முருகதாஸ் சார்ந்த விவகாரம்.

அடுத்து, ஜெயமோகன் இவ்விவகாரம் குறித்து தனது இணையப்பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவு இருவிடயங்களில் சாரம் கொண்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். (1)தனக்கு ஒற்றை வரி மட்டுமே கொடுக்கப்பட்டது; (2)அதைக்கொண்டு திரைக்கதை வளர்ந்த விதம்.
//தொடங்கும்போது வெறும் ஒரு மெல்லிய ஒற்றைவரிதான் கையிருப்பு// என ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பது idea மட்டுமே. இதைதான் முருகதாஸ் ஜெயமோகனிடம் கொடுத்தார் எனும்போது இதற்கு Copyright சட்டத்தில் இடமில்லை. நிலை இப்படியிருக்க ஜெயமோகனை ஏன் எல்லாரும் வசைபாடுகிறார்கள் என்பதுதான் இவ்விவகாரத்தில் வெளிபடும் முரண்நகை.

ஜெயமோகன் தன் தொடர் வாசிப்பாலும், படைப்புகளாலும், இலக்கிய விமர்சனங்களாலும் இவையனைத்தையும் சமரசமின்றி தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதாலும் தமிழ் இலக்கிய சூழலில் தன் வேரினை ஆழ ஊன்றியவர். அது அவரது இடம். இயல்பாகவே அவர் ஆளுமைமீது மற்றவர்களுக்கு மிரட்சியும், பயமும், பதட்டமும் தோன்றுவதைத் தடுக்கவியலாது.

அதில் அவருடன் சரிசமமாய் நின்று விவாதிக்க முடியாதவர்கள், அவரது படைப்புகளை தர்க்கரீதியாக விமர்சித்து மூக்குடைந்தவர்கள், ஒரு வரிகூட வாசிக்காதவர்கள் தங்களுக்குத் ‘தெரிந்த’ ஒரு விடயத்திற்குள் அவரை இழுத்து வந்து கல்லெறிவதுதான் சர்க்கார் பட விவகாரத்தில் நடந்துள்ளது. இவைதான் காழ்ப்புணர்வின் வெளிப்பாடுகள்.

விஜயலட்சுமி

https://www.facebook.com/viijay.mj/posts/1484180221684277

முந்தைய கட்டுரைசிறுகதையும் தி.ஜானகிராமனும்
அடுத்த கட்டுரைசர்க்கார்- ஒரு கடிதம்