‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-63

bowமாளவ மன்னர் இந்திரசேனர் படைக்கலத்துடன் தேரிலேறிக்கொண்டபோது படைத்தலைவன் சந்திரஹாசன் அருகே வந்து தலைவணங்கினான். அவர் திரும்பிப்பார்க்க “அனைத்தும் ஒருங்கிவிட்டன, அரசே. நமது படைவீரர்கள் இன்று வெல்வோம் என்று உறுதி கொண்டு களம் எழுகிறார்கள்” என்றான். “வெற்றி நம்மை தொடர்க!” என்று முறைமைச்சொல் உரைத்தபின் தேரிலேற படிப்பெட்டியை கொண்டு வைக்கும்படி ஏவலனிடம் கைகாட்டினார். ஏவலன் படியை வைக்கும்போது அவரை மீறி கசப்பு மேலெழுந்தது. திரும்பி சந்திரஹாசனிடம் “எதன் பொருட்டு இந்த முறைமைச்சொல்? நாமிருவரும் சேர்ந்து தெய்வங்களை ஏமாற்றிக்கொள்கிறோமா?” என்று கேட்டார்.

படைத்தலைவன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “இல்லை. நமது படைகள்…” என்றான். “நமது படைவீரர் ஒவ்வொருவரும் இல்லம் திரும்பவே விழைகிறார்கள். முன்னால் இருப்பது வெற்றியல்ல, வெற்றிறப்பு மட்டுமே என ஒவ்வொருவரும் அறிவார்கள். அதை நீரும் நானும் அறிவோம்” என்றார். படைத்தலைவன் “ஆம் அரசே, நாமிருவரும் அறிவோம். ஆனால் நாமிருவரும் அதை நாவால் சொல்லிக்கொள்ளக்கூடாது. எண்ணங்கள் ஆயிரம் எழலாம். நாக்கு தெய்வங்களால் கண்காணிக்கப்படுகிறது. சொல் பிறப்பது ஓர் உடலெழுவதுபோல. அது தொட்டு உணரும் பருவடிவம். நம்முடன் உடனிருக்கும் இருப்பு. எழுந்தசொல் அழிவதில்லை” என்றான்.

“சரி, மங்கலச் சொற்களையே சொல்வோம். நம்மைச் சூழ்ந்து சூதர்களின் இன்னிசையும் அவைக்கலைஞர்களின் வாழ்த்தும் எழட்டும். நம் இறப்பிற்குப் பின்னும் அது தேவைப்படலாம்” என்றார் இந்திரசேனர். படைத்தலைவன் “வெற்றி நம்மை தொடரட்டும்” என்றான். அவனை புண்படுத்தவேண்டும் என்ற உளவிசை எழ இந்திரசேனர் தன் கட்டுக்களை கடந்து “வெற்றி என்று எதை சொல்கிறீர்கள்? அர்ஜுனனின் அம்பை நெஞ்சில் வாங்கி அலறி விழுவதா?” என்றார். “அதுவும்தான். களத்தில் வெற்றியென்பது பின்வாங்கும் எண்ணமின்றி இறுதிவரை நின்றிருப்பது மட்டுமே” என்றான் சந்திரஹாசன்.

அச்சொல்லில் இருந்த நஞ்சை உணர்ந்து சீற்றம் கொண்ட இந்திரசேனர் “நீர் பின்வாங்கியதே இல்லையா?” என்றார். “முன்னெழும் பொருட்டு பின்வாங்குதல் ஓர் போர்க்கூறு” என்றான் சந்திரஹாசன். “அதை உணர்ந்துகொள்க”! என்றபின் “நேற்று நமது படைப்பிரிவில் எழுந்த பூசலை ஒற்றர்கள் கூறினார்கள்” என்று பேச்சை கடத்திச்சென்றார் இந்திரசேனர். “பூசல் அல்ல, நமது யானைகளில் சில புண்பட்டிருக்கின்றன. உரிய முறையில் அவற்றுக்கு மருத்துவம் செய்ய இயலவில்லை. ஆகவே இரவில் அவை வலி தாளாமல் அலறின” என்று சந்திரஹாசன் சொன்னான்.

“ஏன் மருத்துவம் செய்ய இயலவில்லை?” என்று இந்திரசேனர் கேட்டார். “அரசே, புண்பட்ட யானைகளை இரவு துயிலவைப்பதற்கு அகிபீனா கொடுப்பது வழக்கம். மானுடருக்குக் கொடுப்பதைவிட நூறு மடங்கு அகிபீனா அவற்றுக்கு தேவைப்படும். இங்கு ஒவ்வொரு நாளும் அகிபீனா குறைந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களுக்குப்பின் வெளியிலிருந்து அகிபீனா கொண்டு வந்தால் மட்டுமே போர் நிகழமுடியும் எனும் நிலை. ஆகவே மருத்துவர்கள் அகிபீனா மறுத்துவிட்டனர்” என்றான் சந்திரஹாசன். “போருக்கு உணவைவிட இருமடங்கு அகிபீனாவை சேர்த்துக்கொள்வதுதானே வழக்கம்?” என்று இந்திரசேனர் கேட்டார். “ஆம், ஆனால் இங்கு உணவு உண்பவர்கள் குறைந்துவருகிறார்கள். அகிபீனா அருந்துபவர்கள் மும்மடங்கு பெருகுகிறார்கள்” என்றான் சந்திரஹாசன்.

கைவீசி அவனை செல்லும்படி பணித்துவிட்டு தேரில் அமர்ந்து “எந்த யானை? அஸ்தினபுரியிலிருந்து நமக்கு கொடையளிக்கப்பட்டதே அதுவா?” என்றார் இந்திரசேனர். “அல்ல” என்று படைத்தலைவன் மறுத்தான். “இந்த யானைகள் நமது நாட்டிலேயே போர்முகப்பு காப்புக்கென பயிற்றுவிக்கப்பட்டவை. அவை அனைத்துமே துதிக்கையில் காயம் பட்டுள்ளன.” இந்திரசேனர் “துதிக்கையில் கவசங்களில்லையா?” என்றார். “துதிக்கையை காத்துக்கொள்ள வேண்டும் என்பது எந்த யானைக்கும் உள்ளுறையும் எச்சரிக்கை. துதிக்கையின் முனை வரை கவசங்கள் செல்வதில்லை. சுருட்டி அள்ளிப்பற்றுவதற்காக முழநீளம் விடப்பட்டிருக்கும். அவை துதிக்கைகளை நன்கு சுருட்டி வைத்துக்கொண்டால் நுனிதுதிக்கையை அம்புகள் தாக்கா. ஆனால் படைமுகத்தில் எழுந்து அச்சமோ வெகுளியோ கொண்டு அவை நிலையழிந்துவிட்டால் பயிற்சிகளை மறந்து கான்விலங்கென மாறி தலைக்குமேல் துதிக்கையை தூக்கி ஓலமிடும். அந்நிலையில் எளிதாக அவற்றின் நுனிக்கையை அம்புகளால் தாக்க இயலும்” என்று சந்திரஹாசன் சொன்னான்.

“நேற்றும் முன்னாளும் பாண்டவர்களுக்கு அந்த அறைகூவலை பீமசேனர் அளித்திருந்தார் என்று இப்போது தெரிகிறது. போர்முகப்பில் யானைகள் வந்ததுமே அவற்றை அச்சுறுத்தும் பொருட்டு நாற்புறமிருந்தும் அம்புகளை அவற்றின் மேல் எய்தனர். அம்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி நெருப்புப் பொறி எழச் செய்தனர். கேடயப்பரப்புகளைத் திருப்பி அவற்றின் விழிகளில் மின்னடித்தனர். அவற்றின் செவிகளில் விந்தையான பேரொலிகள் கேட்கும்படி முழவுகள் முழக்கினர். அஞ்சி நிலையழிந்து அவை துதிக்கை தூக்கியதும் பிறையம்புகளால் அவற்றின் துதிக்கைகளை வெட்டினர். வலிகொண்டு கட்டற்றுச் சுழன்ற யானைகளிலிருந்து தப்பும் பொருட்டு நமது படைகள் அகன்றுவிலக அந்த இடைவெளியில் அவர்கள் தங்கள் தண்டேந்திய யானைகளைக்கொண்டு பிளவு உருவாக்கி உட்புகுந்தனர்” என சந்திரஹாசன் தொடர்ந்தான்.

“நேற்று மட்டும் நமது நூற்றுப்பன்னிரண்டு களிறுகள் புண்பட்டுள்ளன. ஆனால் களத்தில் முற்றிலும் தன்னொழுங்குடன் ஒருகணமும் நிலையழியாது நின்று போரிட்டது அஸ்தினபுரியால் அளிக்கப்பட்ட யானையான அஸ்வத்தாமன் மட்டும்தான்” என்றான். “இளமையிலேயே புண்பட்டமையால் உளநிலை பிறழ்ந்த யானை என்றுதானே அதைப்பற்றி சொல்வார்கள்? அது அஸ்தினபுரியின் கொடை என்பதனால்தான் நாம் அதை கொல்லவில்லை” என்றார் இந்திரசேனர். “ஆம், அதற்கு விழி ஒருமையும் இல்லை. ஆகவே அனைத்தைக் கண்டும் மிரண்டு பூசலிடுவதே அதன் இயல்பு. நமது கொட்டிலில் அதை ஒரு பெரும் தொல்லையென்றே இதுகாறும் கருதி வந்தோம். எந்தப் போரிலும் முதலில் களப்பலியாவது அதுவாகவே இருக்குமென்று பயிற்றுநர் கூறினர்.”

“அதன் பொருட்டே முதல் நாள் போரில் அதை களமுகப்புக்கு கொண்டு சென்றோம். ஆனால் கவசங்கள் அணிந்து களமுகப்புக்குச் சென்றதுமே அது பிறிதொன்றென மாறிவிட்டது. அமைதியும் சூழ்ச்சியும் கொண்டதாக ஆயிற்று. களத்தில் அது நின்றிருப்பதையே எதிரிகள் உணராதபடி ஓசையும் அசைவுமின்றி சென்றது. எதிர்பாரா தருணத்தில் தேர்களை அறைந்து தூக்கி அடித்தது. புரவிகளை மிதித்து கூழாக்கியது. ஆணையின்றி தானாகவே தண்டுகளை ஏந்திச்சென்று எதிர்முகப்பை உடைத்தது. தன் கவசமணிந்த உடல் மட்டுமே எதிரியின் அம்புக்கு தெரியவேண்டுமென்று எண்ணி இயங்கியது. இந்த எட்டு நாள் போரில் ஒற்றை அம்பைக்கூட அது தன் உடலில் வாங்கியதில்லை. பயிற்றுநிலையில் ஒவ்வொரு சொல்லையும் கற்றுக்கொண்டு மானுடருக்கு நிகரான மதிக்கூர்மையுடன் இலங்கிய யானைகள் அனைத்துமே களத்தில் அஞ்சி வெகுண்டு அம்புகள் முன் அடி பணிந்தன” என்றான் சந்திரஹாசன்.

திகைப்புடன் அதை கேட்டபின் “போர் பிறிதொரு வாழ்க்கை. போரில் வெல்பவர்கள் இயல் வாழ்க்கையில் பொருந்துவதில்லை போலும்” என்றார் இந்திரசேனர். “அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நுண் வடிவில் தங்களுக்குள் ஆற்றி பழகிய போரை மீண்டும் நிகழ்த்துகையிலேயே அவர்கள் வெல்கிறார்கள்” என்றபின் தேரை செலுத்தும்படி பாகனிடம் ஆணையிட்டார்.

செல்லும் வழியெல்லாம் இந்திரசேனர் தன் படையினரை நோக்கிக்கொண்டிருந்தார். அவர்கள் துயிலில் நடப்பவர்கள் போலிருந்தனர். ஒவ்வொருவர் விழிகளும் ஒளியிழந்து இரு குழிகள் போலிருந்தன. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் இருப்பை பிறர் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. போரில் அணிவகுத்தெழுவதற்கு முன் படைவீரர்கள் சீர்நடையிட்டுச் செல்வதை பலமுறை அவர் பார்த்திருந்தார். அணிவகுப்பில் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளலாகாதென்பது நெறி. ஆனால் கழுத்தை இறுக்கி நோக்கை நேர்நிறுத்தி கை வீசி இரும்புப் பொறியென நடக்கையிலேயே அவர்கள் உதடுகள் மெல்ல அசைந்துகொண்டிருப்பதை பார்க்க இயலும். அருகிருப்பவர்களிடம் அவர்கள் சொல்லாடுகிறார்கள் என்பதை உணர முடியும்.

ஒருமுறை படைநடப்பை நோக்கி மேடையில் அமர்ந்திருக்கையில் அதரஸ்புடம் அறிந்த தன் அமைச்சரிடம் “அந்த ஏழாவது வீரன் சொல்வதென்ன? என்றார் இந்திரசேனர். அவர் நோக்கிவிட்டு “வேண்டாம், அரசே” என்றார். “சொல்க!” என்றார் இந்திரசேனர். “அவன் என்ன சொல்கிறான்?” அமைச்சர் “அவர்கள் வசைச்சொற்களை மட்டுமே சொல்வார்கள்” என்றார். “என்ன சொல்கிறான் என்று சொல்க!” என்று இந்திரசேனர் மீண்டும் கேட்டார். அமைச்சர் தயங்க உரத்த குரலில் “இது என் ஆணை!” என்றார். “அரசே, அதோ யானைகள் எடுத்துச்செல்லும் அந்தப் பெருந்தண்டு தங்கள் ஆண்குறி என்று கூறுகிறான்” என்றார் அமைச்சர். “அதற்கு அவன் என்ன மறுமொழி சொன்னான்?” என்று அவர் கேட்டார். “பெரிதுதான் ஆனால் எதிர்முனையில் வருவதும் இன்னொரு ஆண்குறி அல்லவா என்றான்.” இந்திரசேனர் “சொல்க!” என்றார். “அவர்கள் சிலம்பாடிக்கொள்ளட்டும் என்று இவன் மறுமொழி சொன்னான். இருவரும் உதடசையாமல் சிரித்துக்கொண்டார்கள்” என்றார் அமைச்சர்.

இந்திரசேனர் பெருமூச்சுவிட்டு உடல் தளர்த்தினார். அமைச்சர் “அதன்பொருட்டு அவர்கள் மேல் முனியவேண்டியதில்லை, அரசே. களத்தில் இவ்வண்ணம் இழிசொற்கள் சொல்லிக்கொள்வது அனைத்து வீரர்களுக்கும் வழக்கம்தான். அதன் வழியாக அவர்கள் இத்தருணத்தின் செயற்கையான இறுக்கத்தை தணித்துக்கொள்கிறார்கள். இக்கணத்தில் திளைக்கிறார்கள். இது ஓர் உச்சம். உச்சநிலைகளில் மனிதர்கள் இயல்பின்றி உணர்கிறார்கள், நகையாடியோ பித்தெடுத்து வெறியாடியோ தங்களை அவ்வுச்சத்துடன் பொருத்திக்கொள்ள முயல்கிறார்கள். இவர்களை இப்போது படைக்கலங்களை தூக்கிவீசி வெறிநடனமிட ஒப்புவீர்கள் எனில் அதை செய்வார்கள்” என்றார்.

“அவர்களிடமிருந்து இயல்பான கீழ்மைதான் இவ்வண்ணம் வெளிவருகிறதா?” என்று இந்திரசேனர் கேட்டார். “இயல்பான ஒன்று வெளிவருகிறது. பெரும்பாலும் படைவீரர்கள் தங்கள் நெறிசார்ந்த நிலைகளை முற்றிழந்துவிடுவார்கள். அன்னையரையும் மூதன்னையரையும்கூட காமக்கீழ்மைச் சொற்களால் அவர்கள் வசை பாடிக்கொள்வதை பார்க்க இயலும். ஒரு சொல்லுக்கு ஊர்கள் தீப்பிடித்து எரியும் குலங்கள் உண்டு. ஆயிரம் தலைகளை உருட்டும் பற்றவைக்கும் சொற்களும் உண்டு. அவர்கள் எத்தயக்கமும் இன்றி இப்படைமுகப்பில் கூறுவார்கள். இங்கு எழுபவை வேறு தெய்வங்கள்.”

இந்திரசேனர் அந்தப் படைவீரர்கள் உதடுகளை நோக்கிக்கொண்டிருந்தார். அவை எதுவும் அசைவதாக தெரியவில்லை. அவர்கள் தங்களிலெழுந்த தெய்வங்களை இழந்துவிட்டிருக்கிறார்களா? ஒருகணம் குமட்டல் எழுந்து உடல் உலுக்கியது. பாகன் திரும்பி “அரசே!” என்றான். “ஒன்றுமில்லை, செல்க!” என்று இந்திரசேனர் கைகாட்டினார். “அரசே” என்று அவன் மீண்டும் சொன்னான். “செல்க!” என்று இந்திரசேனர் சொன்னார். அந்தப் படைகளை நோக்காமல் விழிமூடிக்கொண்டார். ஆனால் அவை இமைகளுக்குள் கொந்தளித்தன. மலத்தில் நெளியும் புழுக்கள்போல.

வெறும் தசைத்துண்டுகள். வெட்டி அரிந்து துண்டுகளென களத்தில் குவிக்கப்படப் போகின்றவை. முன்னரே இறந்துவிட்டவை. உள்ளூற அழுகத் தொடங்கியவை. முன்பு கலிங்கத்தில் இருந்து வந்த சூத்திர வைதிகர்களால் நிகழ்த்தப்பட்ட அதர்வ வேள்வியொன்றில் பன்னிரண்டாயிரத்து நூற்று எட்டு வெள்ளாடுகள் அவியாக்கப்பட்டன. எழுந்து தழல்விரித்த மாபெரும் வேள்விக்குளத்தில் ஒவ்வொரு ஆடாக தலையரிந்து தூக்கி வீசப்பட்டது. அவற்றின் ஊன்நெய் உண்டு எழுந்த தீ மேலும் மேலுமென ஊன் கேட்டது. அன்று கல்லரியணையில் அமர்ந்து நிரைவகுத்துச் சென்றுகொண்டிருந்த ஆடுகளை பார்த்துக்கொண்டிருந்தார். அடியிலாத பிலமொன்றுக்குள் ஒழுகிச்சென்று மறையும் ஓடைகள்போல. ஒவ்வொன்றும் அவற்றுக்கு முன்னால் நின்றவற்றை தலையால் முட்டி முன்செலுத்தியது. அந்தத் தழலுக்குள் சென்று மறைவதே ஊழென்பதுபோல். ஒரு கணமும் தயங்கியோ பொறுத்தோ நின்றிருக்க இயலாதென்பதுபோல்.

தேர் நின்றதும் அவர் எழுந்தார். தலை சுழன்று உடல் ஒருபக்கமாக சரிந்தது. தேர்த்தூணை பற்றியபோது அது சற்று அப்பால் இருந்தது. நிலை தடுமாறி விழப்போய் பற்றிக்கொண்டு நின்றார். வயிறு குமட்டி இருமுறை வாயுமிழ்ந்தார். “அரசே!” என்று பாகன் அழைத்தான். “நீர்!” என்று கைநீட்டினார். பாகன் அளித்த நீரை வாங்கி அருந்தியபோது வயிற்றில் கொதித்த அமிலம் குளிர்ந்து அடங்கியது. தேர் படைமுகப்பிற்கு வந்து நின்றது. மங்கிய விழிகளுடன் தொலைவில் தெரிந்த பாண்டவப் படையை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கும் படைவீரர்கள் அனைவரும் அந்நிலையில்தான் இருப்பார்கள் என்று தோன்றியது. நம்பிக்கை இழந்த, ஊக்கம் அழிந்த வெற்றுப்பிண்டங்கள். பொருளிலா செயலாக கொல்லவும் இறக்கவும் இங்கு வருகிறார்கள். கொல்வதும் இறப்பதும் நிகரே என்றான ஒரு வெளியில் அவர்கள் உடல்கள் முட்டி ததும்புகின்றன.

இந்தக் களத்தில் சற்றேனும் பொருளுணர்ந்தோன் எவன்? மிகத் தொலைவில் செம்பருந்து சுழல்வதை கண்டார். அங்கிருக்கிறான் அவன். அனைத்தும் அவனுக்குத் தெரியும் என்கின்றனர் சூதர். அதைப்பற்றி எத்தனையோ அவைகளில் எள்ளி நகையாடியதுண்டு. “சூதர்கள் போரை நிகழ்த்தினால் பாரதவர்ஷத்தில் ஒருநாளில் காலடியில் வீழ்த்தும் ஆற்றல் மிக்கவன் அவனே” என்று கேகய மன்னன் திருஷ்டகேது சொன்னபோது பிற ஷத்ரியர்கள் தொடையில் அறைந்து வெடித்து நகைத்தனர். மெய்யாகவே போரை சூதர்கள்தான் நிகழ்த்துகிறார்கள் போலும். இங்கு ஒவ்வொருவரும் ஏந்தி வந்திருக்கும் படைக்கலங்களைவிட பல மடங்கு ஆற்றல்கொண்டவை அவர்களின் சொற்கள். அவை எவற்றாலும் வெட்டுப்படாதவை. இவ்வுலகில் எதனாலும் எதிர்க்க இயலாதவை. என்றுமிருப்பவை.

புலரிப் போர்முரசு ஒலித்ததும் படைகள் எழுந்து சென்று ஒன்றையொன்று அறைந்து போர்புரியலாயின. போர்முகப்பு இரு தோல்பட்டைகள் இணைத்து தைத்த தையல்வடுபோல அங்கிருந்து தெரிந்தது. இரண்டையும் ஒன்றுடன் ஒன்று தைப்பவை எழுந்து சென்று அமையும் அம்புகள். அந்த விந்தையான கற்பனையால் மெல்லிய உளமலர்வு உண்டாக அவர் நோக்கிக்கொண்டிருந்தார். இரு படைகளும் மேலும் மேலும் அம்புகளால் இறுக்கி தைக்கப்பட்டன. அவை இருபுறமும் விரிந்து அகல முயலும்போது அந்த முட்சரடுகள் இழுபட்டு அதிர்வதாக, மேலும் மேலும் என எழுந்து தங்களை தைத்து இறுக்கிக்கொள்வதாக அவருக்குத் தோன்றியது. “செல்க!” என்று ஆணையிட்டு வில்லை எடுத்து பொருத்தி தன் முதல் அம்பை செலுத்தினார். அந்த அம்பு எவர் மேலும் படலாகாதென்றும் வீணாகி குருக்ஷேத்ர மண்ணில் சென்று பதியவேண்டும் என்றும் விழைந்தார்.

அவர் எண்ணியதுபோலவே அன்று போர் பொருளிலாப் படுகொலைகளாகவே நிகழ்ந்தது. அபிமன்யூ இருபுறமும் சுருதகீர்த்தியும் சதானீகனும் படைத்துணையாக வர, நாணொலி எழுப்பியபடி களத்திற்குள் வந்தான். அவனுடைய அம்புகள் பட்டு படைத்தலைவர்கள் ஒவ்வொருவராக சரிந்துகொண்டிருந்தனர். வீரர்கள் பலர் ஒருமுறை ஓரம்பை செலுத்துவதற்குள்ளாகவே தலையறுந்து விழுந்தனர். அவர்களில் பலர் முறையாக கவசங்கள் அணிந்திருக்கவில்லை என்பதை அவர் பார்த்தார். கைவீசி படைத்தலைவனை அருகே அழைத்தார். “என்ன நிகழ்கிறது? இங்கே நம் படைவீரர்கள் சாவதற்கு மட்டுமாக வந்துள்ளார்களா?” என்றார். சந்திரஹாசன் “அரசே, அவர்கள் போர்புரிகிறார்கள்” என்றான். “எங்கே போர்புரிகிறார்கள்? கவசங்களை முறையாக அணியாதவர்கள் போர்புரிந்து பயன் என்ன?” என்றார் இந்திரசேனர்.

“அரசே, கவசங்களால் பயனில்லை” என்றான் சந்திரஹாசன். “பின் எதனால் பயன்? சென்று தலைகொடுப்பதற்கு என்று எழுந்துவந்தார்கள் போலும், மூடர்கள்!” என்றபின் மேலும் சீற்றத்துடன் அவர் “செல்க!” என்று கைகாட்டினார். படைவீரர்கள் சிதறிக்கிடந்த களத்தில் அவருடைய தேர் ஏறி உலைந்து சென்றது. உடல்களின் மேல் தேர் செல்லும்போது ஏற்படும் உடற்சொடுக்கு அவருக்கு ஏற்பட்டது. விலா எலும்புகள் உடையும் ஓசை. அலறல்களும் முனகல்களும் காலடிக்குக் கீழே நிறைந்திருப்பதுபோல. முதல்நாள் போரில் அந்த ஒலிகளின் மெல்லதிர்வை தாள இயலாமல் இரு கைகளாலும் தலை பற்றி அவர் பீடத்தில் அமர்ந்தார். அன்று மாலை அவரிடம் முதிய படைத்தலைவர் சிம்மவக்த்ரர் “போரில் நாம் அதை அஞ்சலாகாது, அரசே. வீழ்ந்தவர்கள் மேலும் எழுந்து செல்பவர்கள் மட்டுமே வெற்றியை அடைய முடியும்” என்றார்.

“மனித உடல்கள்! அவை நம் குடிகளின் உடல்கள்!” என்று இந்திரசேனர் சொன்னார். “மெய்! ஆனால் அரசர்கள் எப்போதும் குடிகளின் உடல்களின் மீதே பயணம் செய்கிறார்கள். அவர்களை குபேரனின் கூறு என்கின்றன நூல்கள். குபேரன் மானுடனை ஊர்தியாகக் கொண்டவன்” என்றார் சிம்மவக்த்ரர். சீற்றத்துடன் எழுந்து “என்ன சொல்கிறீர்?” என்றார். “அரசே, மண்ணில் இன்றுவரை தோன்றிய அரசர்கள் எவரும் மானுடரை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. எண்ணும் கணமே அவர்கள் அரியணையிலிருந்து விலகத் தொடங்கிவிடுகிறார்கள்” என்றார் சிம்மவக்த்ரர்.

சில கணங்கள் அவரை நோக்கிவிட்டு “செல்க!” என்று கைகாட்டினார். அவர் சென்றதும் தன் குடிலுக்குள் விசைகொண்ட காலடிகளுடன் சுற்றினார். மீண்டும் அகிபீனா கொண்டுவரச் சொன்னார். மறுநாள் தேரில் ஏறி களம் வருகையில் வெறும் நிலத்திலேயே மனித உடல்கள் நிறைந்திருப்பதாகவும் ஒவ்வொரு முறையும் எலும்புகளும் உடற்பைகளும் உடையும் ஓசை கேட்பதாகவும் எண்ணி உடல் விதிர்த்தார். ஆனால் அன்று போரில் ஏதோ ஒரு கணத்தில் அவர் உடல் அதை ஏற்று மகிழத் தொடங்கியிருப்பதை கண்டார். எங்கோ ஒரு குருதி விரும்பும் தெய்வம் அமர்ந்து கீழே சதைந்தறையும் உடல்களைக்கண்டு நீள் செந்நா சுழற்றி உவகை கொண்டது. மேலும் மேலும் என்று தாவியது.

அபிமன்யூவின் தேருக்கு முன் அவன் அம்புகளால் உருவான வெற்றிடம் இருந்தது. அதில் புலரியில் ஆற்றுப்பரப்பில் துள்ளியெழும் வெள்ளி மீன்கள்போல அம்புகள் பறந்துகொண்டிருந்தன. “அங்கு!” என்று அவர் தன் பாகனிடம் ஆணையிட்டார். பாகன் செலுத்த தேர் அபிமன்யூவின் முன் சென்று நின்றது. நாண் இழுத்து அம்பை அபிமன்யூவை நோக்கி செலுத்தினார். முதல் அம்பு இலக்கு தவறி எங்கோ சென்றது. வெறிகொண்டு மீண்டும் மீண்டும் அம்புகளால் அபிமன்யூவை அறைந்தார். ஒரு அம்பு அபிமன்யூவின் தேர்த்தட்டில் சென்று தைத்தபோது இதோ என்று உள்ளம் பொங்கி எழுந்தது. “செல்க! செல்க!” என்று மேலும் தேர்ப்பாகனை தூண்டி அம்புகளின் தொடுவளையத்திற்குள் சென்றார்.

அபிமன்யூவின் அம்புகள் அவர் கவசத்தை அறைந்தன. அவர் தோளிலைகள் உடைந்து தெறித்தன. அருகிருந்த தேர்த்தூண் முள்ளம்பன்றியின் உடலால் ஆனதுபோல் அம்புகளால் தைக்கப்பட்டு நின்றது. அம்புகளை நாணிழுத்து விசைகொண்டு செலுத்திக்கொண்டிருந்தபோத அபிமன்யூவின் கை விசையையும் உடல் நெளிவையும் கண்டு அவருள் அமர்ந்த ஒருவன் வியந்தான். யாரிவன்? போருக்கென்றே உடல்கொண்டு எழுந்தவன்போல! போரன்றி பிற அனைத்திலும் தோற்றுவிட்டவன் ஒருவனே இவ்வண்ணம் போரிட இயலும். போர்க்களத்தில் மட்டுமே தன் நிறைவை அடைகிறான் இவன். ஒருகணம் அவன் உளம் தளர்ந்தால் கையும் தளரும். ஆம், அவன் உளம் தளரும் ஒன்று உண்டு.

போரில் வஞ்சினங்கள் எதிரியை தளர்த்துவன. ஆனால் இக்களத்திலிருந்து எடுக்கும் வஞ்சினங்கள் எதுவும் இவனை தொடுவதில்லை. இக்களத்தில் இவனை வெல்ல எவராலும் இயலாது. இவன் தோற்ற களங்கள் எவை? ஒருகணத்தில் அவையில் வசைக்கவி பாடும் இளிவரல் கவிஞனொருவன் சொன்னதை நினைவுகூர்ந்தார். அக்கணம் மிகச் சரியாக அதை எடுத்தளிக்கும் தெய்வம் எது என வியந்தார். உரத்த குரலில் “இழிமகனே, இக்களத்தில் உன்னை கொன்றால் உன் குருதியில் ஒரு துளிகூட மண்ணில் எஞ்சாது. ஐயமிருந்தால் உன் கருசுமக்கும் துணைவியிடம் சென்று கேள்!” என்று உரக்க கூவினார்.

அத அபிமன்யூவின் விழிகளுக்கு சென்றிருக்குமா என்ற எண்ணம் எழுந்த கணமே அபிமன்யூவின் நோக்கு நடுங்குவதை, கையில் வில் தளர்வதை அவர் கண்டார். வஞ்சமும் வெறியும் எழ “சென்று கேள் உன் துணைவியிடம்! ஆம், சென்றுகேள் விராடத்து அரசியிடம்!” என கூவி நகைத்தபடி மேலும் அம்புகளை செலுத்தினார் அபிமன்யூவின் தோளிலைகள் உடைந்து தெறித்தன. விலாக்கவசம் உடைந்தது. அசைவற்ற உடலுடன் அக்கணமே இறக்கத் துணிந்தவன்போல அவன் அங்கே நின்றான். அவனுக்கு துணை வந்த சுருதகீர்த்தி தன் அம்புகளால் இந்திரசேனரை அறைந்தான்.

இக்கணத்தில் பிறை அம்பால் உயிர் துறந்தாலும் சரி, இவன் நெஞ்சில் ஒரு அம்பு தைத்தால் மட்டுமே என் வாழ்வு பொருள்படும் என்று இந்திரசேனரின் உள்ளம் எழுந்தது. நீளம்பை எடுத்து ஓங்கி இழுத்து அறைந்தார். அபிமன்யூவின் நெஞ்சக் கவசத்தை பிளந்து தைத்து அவனை தேர்த்தட்டில் வீழ்த்தியது அவர் அம்பு. சுருதசேனனும் சுருதகீர்த்தியும் இருபுறத்திலிருந்தும் வந்த அபிமன்யூவைக் காத்து மாளவரை எதிர்கொண்டனர். அபிமன்யூவின் தேர்ப்பாகன் தேரை இழுத்து அப்பால் கொண்டு சென்றான். சுருதகீர்த்தி வெறியும் விசையும் கொண்டிருந்தான். அம்பை இழுத்து ஓங்கி அறைந்தான். அதன் எக்காளத்தை இந்திரசேனர் கேட்டார். அதிலிருந்து தப்பும்பொருட்டு முழந்தாளிட்டு அமர்ந்தபோது பிறிதொரு அம்பால் அவர் தலைக்கவசத்தை உடைத்தான் சதானீகன்.

அம்புகள் நான்குபக்கமும் இருந்து சுழன்று வந்து அவர் தேரில் விழுந்தன. அருகே அவர் தன் படைத்தலைவர்கள் அலறிவீழ்வதை கண்டார். ஓர் அம்பு அவர் தோளை அறைய இன்னொரு அம்பு விலாக்கவசத்தை உடைக்க தேரிலிருந்து தூக்கிவீசப்பட்டு தரையில் விழுந்தார். தரையெங்கும் மண் தெரியாது பரவிக்கிடந்த வீரர்களின் உடல்களை அவர் பார்த்தார். மாளவர்கள், பாஞ்சாலர்கள், தசார்ணர்கள், மச்சர்கள், அரக்கர்கள், நிஷாதர்கள், காந்தாரர்கள். அதில் எந்த ஒழுங்கமைவும் இருக்கவில்லை. தலையை தூக்க அவர் முயன்றார். குருதி வழிந்து கவசங்களுக்குள் நிறைந்திருந்தது. தலை எடைகொண்டு நோக்கு அலையடித்தது.

முரசுத்தோல் மேல் நடமிடும் முழைக்கழிகள்போல புரவிக் குளம்புகள் மண்ணை அறைந்தறைந்து சென்றன. கால்கள் சேற்று வயலிலென மானுட உடல்களை மிதித்து நின்று துள்ளின. சகடங்கள் ஏறியிறங்கியும் மிதிபட்டும் அசைந்த உடல்கள் பிறிதொரு உயிர்கொண்டுவிட்டவைபோல் தோன்றின. மிதிபட்டுகொண்டே இருக்கும் அவ்வுடல்களின் பரப்பை அவர் பார்த்தார். அவற்றின்மேல் சிற்றலையில் படகுகள்போல் தேர்கள் ஏறி இறங்கிச் சென்றன. உடைந்த உடல்களிலிருந்து தேர்ச்சகடங்களில் குருதிச்சேறு தெறித்தது. குருதியைச் சுழற்றி பின்னால் தெறிக்கவிட்டபடி தேர்கள் சென்றன. உடல்கள் மேல் அம்புகள் விழுந்தன. அவற்றின் மேல் மீண்டும் வீரர்கள் விழுந்தனர். குருக்ஷேத்ரத்தில் அனைத்தும் வந்து விழுந்துகொண்டே இருந்தன. விழித்த கண்களுடன் அவர் அதை பார்த்துக்கொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைரயிலில்… [சிறுகதை]
அடுத்த கட்டுரைபாடநூல்கள் -ஒரு கடிதம்