‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-60

பகுதி ஒன்பது : வானவன்

bowகோசல மன்னன் பிருஹத்பலன் தன் குடிலின் வாயிலில் இடையில் இரு கைகளையும் வைத்து தலைகுனிந்து தனக்குள் ஒற்றைச் சொற்களை முனகியபடி குறுநடையிட்டு சுற்றி வந்தான். அவனது நிலையழிவை நோக்கியபடி அப்பால் தலைக்கவசத்தை ஏந்தியபடி ஏவலன் நின்றிருந்தான். பிருஹத்பலன் நின்று திரும்பிப்பார்த்து “வந்துவிட்டார்களா?” என்றான். “அரசே!” என்று அவன் கேட்டான். “அறிவிலி! அவர்கள் எங்கே?” என்றான். வெற்று விழிகளுடன் ஏவலன் “அரசே!” என்று மீண்டும் சொன்னான். “மூடர்கள்! மூடர்கள்!” என்று தன் தொடையை தட்டியபடி அவன் மீண்டும் சுற்றி வந்தான்.

மீண்டும் நின்று “எங்கிருக்கிறார்கள்?” என்றான். “அரசே!” என்றான் ஏவலன். “வங்க மன்னர் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் இங்கு வருவதாக சொல்லியிருந்தார்கள்” என்றான் பிருஹத்பலன். “அதைப்பற்றிய செய்தி ஏதும் இன்னும் சொல்லப்படவில்லை, அரசே” என்றான் ஏவலன். “பிறகு நீ இங்கு என்ன செய்கிறாய்? அதை கீழே வை, நீர்க்குடம் சுமந்த கன்னிபோல. அறிவிலி!” என்றபின் பிருஹத்பலன் சென்று பீடத்தில் அமர்ந்தான். தன் இரு கைகளையும் விரல் கோத்து மடியில் வைத்து தலையை அசைத்தபடி “என்ன நிகழ்கிறது என்றே தெரியவில்லை” என்றான். பற்களைக் கடித்து எட்டித் துப்பி “எங்கும் புழுதி… குருதியுலர்ந்த புழுதி” என்றான்.

ஏவலன் “தேர் வருகிறது, அரசே” என்றான். “அது எனக்கும் கேட்கும். விலகு” என்று உரத்த குரலில் சொல்லி கைவீசினான் பிருஹத்பலன். ஏவலன் தலைவணங்கி சற்றே பின்னடைந்து நின்றான். ஒற்றைப்புரவித் தேர் வந்து நிற்க அதிலிருந்து சமுத்ரசேனரும் இளையோன் சந்திரசேனரும் இறங்கி பிருஹத்பலனை நோக்கி வந்தனர். பிருஹத்பலன் அமர்க என்று கைகாட்டினான். சமுத்திரசேனர் அமர்வதற்குள்ளாகவே “நாம் என்ன செய்யப்போகிறோம்? அவைக்குச் சென்று பேசவிருக்கிறோமா?” என்றார். “அதைப்பற்றி முடிவெடுக்கத்தான் உங்களை வரச்சொன்னேன்” என்றான் பிருஹத்பலன். சந்திரசேனர் “நாம் மட்டும் முடிவெடுத்தென்ன பயன்? மாளவரும் கூர்ஜரரும் இன்னும் வரவில்லை. குறைந்தது அவர்களாவது நம்முடன் இருந்தாகவேண்டும். பிற சிறு அரசர்களைப்பற்றி நாம் கவலை கொள்ளவேண்டியதில்லை” என்றார்.

“முதலில் நாம் அறுதி முடிவெடுப்போம். அதை நாம் பேசுவோம். நமது முடிவை அவர்களுக்கு தெரிவிப்போம்” என்றான் பிருஹத்பலன். “கூர்ஜரனைப்பற்றி நீங்கள் என்னிடம் சொல்ல வேண்டியதில்லை. நாளுக்கொரு பேச்சு பேசும் வீணன்” என்றார் சமுத்ரசேனர். “இங்குள்ள ஷத்ரியர்கள் அனைவருமே நாளுக்கொரு பேச்சு பேசுபவர்கள்தான். எவருக்கும் தனித்து நிற்கும் ஆற்றல் இல்லை. ஏற்கெனவே படையும் செல்வமும் கொண்டு சேர்ந்து நிற்கும் பெருங்குழுவுடன் நிற்பதே அவர்கள் விரும்புவது. அந்தப் பெருங்குழு எது என்று எப்போதும் முடிவெடுக்க முடிவதில்லை. ஏனென்றால் அது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆகவே அந்திப்பறவைகளைப்போல மரங்களிலிருந்து மரங்களுக்குப் பறந்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று பிருஹத்பலன் சொன்னான். “எவருமே உறுதியாக இல்லை” என்று சமுத்ரசேனர் முனகிக்கொண்டார். “எவரிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எச்சொற்களும் பிழையாகிவிடும் என்னும் அச்சமே எழுகிறது.”

“உறுதியாக இருந்த இருவர் அவந்தியின் விந்தரும் அனுவிந்தரும்” என்று பிருஹத்பலன் முனகினான். “நேற்று நமது சொல்லாடல் எவ்வகையிலோ எவரையோ சென்று சேர்ந்திருக்கிறது. ஒருவேளை…” என்று நிறுத்திய சமுத்ரசேனர் “ஒருவேளை நான் சொல்வது பிழையாக இருக்கலாம். ஆனால் இங்கிருந்தே பாண்டவர்களுக்கு செய்தி போயிருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன்” என்றார். பிருஹத்பலன் “இங்கிருந்தென்றால்?” என்றான் விழிசுருங்கி. சமுத்ரசேனர் “கௌரவர்களிடமிருந்து… துரியோதனர் அவையிலிருந்து. நாம் போரிலிருந்து விலகுவதைப்பற்றி முடிவெடுத்ததனால் எவருக்கு இடர்? கௌரவ மன்னர் துரியோதனருக்கு. ஆனால் நேற்று நிகழ்ந்தது என்ன? நமது அரசர்கள் கொத்து கொத்தாக கொன்று வீழ்த்தப்பட்டனர். என்ன நிகழ்ந்திருக்கிறது என்று எண்ணிப்பார்க்கையில் ஐயங்கள் பெருகுகின்றன. வேண்டுமென்றே நம்மை படைமுகப்புக்கு அனுப்பினார்களா?” என்றார்.

பிருஹத்பலன் “நம்மை எவரும் படைமுகப்புக்கு அனுப்பவில்லை. நாம் அனைவருமே பின்னணியில்தான் நின்றோம். படை நேற்று குழம்பியதில் ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டோம். அம்புகள் பட்டு செத்துக்குவிந்தோம்” என்றான். “ஆம், அதைத்தான் சொல்கிறேன். நாம் திட்டமிட்டு படைகளுக்குப் பின்னால் நின்றிருந்தோம். ஆயினும் தொலையம்புகள் வானிலிருந்து பருந்துகள்போல வந்து நம் மீது இறங்கின. நாம் அவ்வாறு அகன்று நின்றிருப்போம் என அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஷத்ரியர் நின்றிருக்கும் இடம் முழுக்கவே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது” என்றார். “அச்சம் அறிவின்மையாகிறது” என பிருஹத்பலன் கைவீசி அதை தவிர்த்தான்.

“நம்மை குறிவைத்து தாக்கினார்கள் என்பதில் ஐயமே இல்லை. நேற்றும் முன்னாளுமாக ஷத்ரியர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல். இனி இப்போர் முடிந்தால்கூட பாரதவர்ஷத்தில் ஷத்ரிய வல்லமை பெரிதும் எஞ்சியிருக்காது” என்றார் சந்திரசேனர். இகழ்ச்சியுடன் “துரியோதனர் ஷத்ரியர் அல்லவா?” என்று பிருஹத்பலன் கேட்டான். “அவனை யார் ஷத்ரியன் என்றது? அவனது குருதி என்ன? மூதாதையரால் ஒதுக்கப்பட்ட துர்வசுவின் குலம். காட்டுப்பெண்டிரின் கருக்களில் எழுந்தவர்கள். பாலைவன வேட்டுவக் குடிகள் என்றன்றி எவர் அவர்களை பொருட்படுத்துகிறார்கள்? துளிநீர் தேடி தவமிருக்கும் பாலைவன ஓநாய் வழி வந்தவர்கள். பாரதவர்ஷத்தை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்கா இப்போருக்கு எழுந்தோம்?” என்றார் சந்திரசேனர்.

பிருஹத்பலன் தலையை அசைத்தபடி “சரி, ஆளவேண்டிய ஷத்ரியர் எவர்? மாளவர்களா?” என்றான். “அவர்கள் அசுரர்கோன் ஹிரண்யரின் குருதி கொண்டவர்கள்” என்றார் சந்திரசேனர். “சரி, வேறு யார்?” என்றான் பிருஹத்பலன். சமுத்ரசேனர் பேசாமலிருந்தார். “நீங்களா?” என பிருஹத்பலன் கேட்டான். சமுத்ரசேனர் சீற்றத்துடன் “ஏன் நானாக இருந்தாலென்ன? வேதம் கனிந்த தீர்க்கதமஸின் குருதியில் எழுந்த குலம் நாங்கள்” என்றார். “உங்கள் குலமூதாதையான வாலி அரக்கர்குலம் என்பதல்லவா கூற்று?” என்றான் பிருஹத்பலன். “அதை நீங்கள் பேசவேண்டியதில்லை. கோசலகுலத்தின் வேரை நாங்கள் தோண்டி எடுக்க முடியும்…” பிருஹத்பலன் “எடுங்கள் பார்க்கலாம்” என்றான்.

சந்திரசேனர் “நாம் இப்போது இதை பேசவேண்டாம். நாம் குலப்பெருமை கிளத்த இங்கே அமரவில்லை” என்றார். “நாளுக்கொரு பேச்சு என நான் சொன்னது இதைத்தான்” என்றான் பிருஹத்பலன். சந்திரசேனர் சீற்றத்துடன் ஏதோ சொல்ல எழ அதை கையமர்த்தி பிருஹத்பலன் “இன்று நாம் பேசவேண்டியது வேறு. நம் குடிகளைப்பற்றி பேசுவோம். நாம் துரியோதனரிடம் இதைப்பற்றி பேசுவோம். இன்னும் இப்போர் தொடர்ந்தால் ஷத்ரியர் எவரும் எஞ்சப்போவதில்லை. ஷத்ரியரின் குலத்தை முற்றொழிப்பதற்காக நாம் இப்போருக்கு எழவில்லை. நமக்கு வேறு இலக்குகள் உள்ளன” என்றான். “ஆம், நாம் அழிந்துகொண்டிருப்பதை அவரிடம் சொல்வோம்” என்றார் சந்திரசேனர். “இறந்தவர்களின் நிரையை அவரே அறிவார். ஆனால் நாம் நமது சினத்தையும் துயரையும் சொல்லியாகவேண்டும்.”

சமுத்ரசேனர் “இப்போரிலிருந்து இனி எவ்வகையிலும் அவர் பின்னடைவார் என்று எனக்கு தோன்றவில்லை. ஒவ்வொரு நாளும் தன் உடன்பிறந்தாரை இழந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு இழப்புக்கும் மேலும் மேலும் வஞ்சினம் கொண்டவராக ஆகிறார். எண்ணி நோக்குகையில் இப்போது அவர் அமைதிப்பேச்சுக்கு சென்று அமர்ந்தால் தன் இறந்துபோன உடன்பிறந்தாரை கைவிடுகிறார் என்றே பொருளாகும். அதை அவரால் இயற்ற இயலாது” என்றார். சந்திரசேனர் அவரை திரும்பிப்பார்த்துவிட்டு “மூத்தவர் சொல்வதும் சரியென்றே தோன்றுகிறது. நாம் சொல்வதை அவர் செவிகொள்ளப் போவதில்லை” என்றார். “நம் சொற்களை போரை அஞ்சும் கோழையின் குரல் என அவர் கொள்ளவும்கூடும்.” சமுத்ரசேனர் “நாம் பிறிதொரு வலுவான சொற்கோவையை வைக்கவேண்டும். நாம் அழிவோம் என்பதற்காக போரொழியக் கோருகிறோம் என பொருள்வரக்கூடாது. அது பாரதவர்ஷத்தின் பொதுநலனுக்காகவும் வேதத்தின் வளர்ச்சிக்காகவுமே என ஒலிக்கவேண்டும்” என்றார்.

பிருஹத்பலன் எழுந்து தலையை அசைத்து “ஆம், ஆனால் எத்தனை எண்ணம் சூழ்ந்தாலும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. இக்களத்தில் நாம் மடிவோம் என்ற எண்ணம் மட்டுமே வலுவாக நிலைகொள்கிறது. நம்மை மெய்யாகவே துரத்துவது அந்த அச்சம் மட்டும்தானா?” என்றான். “உங்களிடம் நிமித்திகர்கள் என்ன சொன்னார்கள்?” என்று சமுத்ரசேனர் கேட்டார். “யார்?” என்று பிருஹத்பலன் சீற்றத்துடன் கேட்டான். “நிமித்திகர்கள். இங்கு வருவதற்கு முன் ஒவ்வொருவரும் நிமித்திகர்களை பார்த்துவிட்டுதான் வந்திருக்கிறோம். உங்களிடம் நிமித்திகர் சொன்னதென்ன?” என்றார் சமுத்ரசேனர். “உங்களிடம் சொன்னதென்ன?” என்று பிருஹத்பலன் கேட்டான்.

“நாங்களிருவரும் இந்தக் களத்தில் மடிவோம் என்றுதான். இது பெருநகரங்களை சருகுகளென உள்ளிழுத்து ஆழ்த்திச்செல்லும் சுழி, இதிலிருந்து எவரும் தப்ப இயலாது என்றான் எங்கள் நிமித்திகன். பாரதவர்ஷத்தின் அரசர்களில் பெரும்பாலானவர்கள் இங்கு அழிவார்கள் என்றும் காட்டெரிக்குப் பின் புதிய முளைகள் எழுவதுபோல் வேறு அரசுகளும் புதிய நெறிகளும் இங்கே உருவாகும் என்றும் சொன்னான். அது அத்தனை பெரிதாக இருந்ததாலேயே அவனுடைய கற்பனை என்று எண்ணினோம். அவ்வாறு ஒருதுளியும் எஞ்சாது உள்சுழற்றி இழுக்கும் ஒரு பெரும்போர் நிகழ இயலுமென்றே அப்போது எண்ணவில்லை. இப்போது விழி முன் காண்கிறோம்.”

பிருஹத்பலன் “நான் அவனால் கொல்லப்படுவேன் என்றான் நிமித்திகன்” என்றான். தலைகுனிந்து நிலத்தை நோக்கியபடி “அதை தெளிவாகவே உரைத்தான். மேலும் கேட்டிருந்தால் எங்கே எவ்வண்ணம் என்றுகூட சொல்லியிருப்பான்” என்றான். சந்திரசேனர் “யாரால்?” என்றார். “அபிமன்யூவால்” என்று பிருஹத்பலன் சொன்னான். “அது நிகழக்கூடும்” என்றார் சமுத்ரசேனர். பிருஹத்பலன் திரும்பி நோக்கி “இக்களத்தில் கொல்பவனும் கொல்லப்படுபவனும் ஊழால் முன்னரே தொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று என் நிமித்திகன் சொன்னான். முற்பிறவிகளில் அவர்கள் ஆற்றியவற்றின் தொடர்ச்சியே இக்களத்தில் அவர்கள் எதிர்கொண்டு நின்றிருப்பது. இங்கிருந்து மேலும் ஒரு சரடு நீண்டு மறுபிறப்புகளுக்கு செல்கிறது. இது நாமறியா பெருஞ்சிலந்தி ஒன்று பின்னும் வலை” என்றான்.

சென்ற பிறவியில் நான் அவன் உடன்பிறந்தான். நான் அவனுக்கு மூத்தவன். கங்கைக்கரையில் சுஹர்ஷம் என்னும் சிறுநகரின் இளவரசர்களாக பிறந்தோம். நான் மூத்தவன் என்றாலும் எதிர்காலத்தில் அரசன் என அமர்ந்து ஆளும் ஊழ் அவனுக்கிருப்பதாக நிமித்திகர் சொன்னார்கள். அவன் என்னை கொல்லக்கூடும் என அச்சொற்களை நான் பொருள்கொண்டேன். அவன் என்னை கொல்வதை எண்ணி எண்ணி கொல்ல எண்ணுகிறான் என்றே நம்பலானேன். அவன் என்னை கொல்வதை கனவுகண்டேன். கனவிலெழுந்த அச்சமும் வஞ்சமும் நனவிலும் பெருகின. அவனை கொல்லாவிட்டால் அவன் கையால் இறப்பேன் என முடிவெடுத்தேன்.

அவனை நீராடும்பொருட்டு கங்கைக்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் இருவரும் கங்கையின் நீர்ப்பெருக்கில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடி காவலரிடமிருந்து மிக அகன்று சென்றோம். அங்கே அவன் தலையைப்பற்றி நீருள் ஆழ்த்தி அழுத்தி பிடித்துக்கொண்டேன். ஆனால் கரையிலிருந்த என் பெற்றோரிடம் நீரில் மூழ்கும் அவனை நான் காப்பாற்ற முயல்வதாக கூச்சலிட்டேன். படைவீரர் பாய்ந்து நீந்தி அணுகுவதற்குள் அவன் இறுதிமூச்சை விட்டிருந்தான். அவனுடைய இழப்பால் துயருற்றவனாக சிலநாள் நடித்தேன். நீர்க்கடனும் புலைச்சடங்குகளும் முடிந்த பின்னர் விடுதலை கொண்டேன். மைந்தன் இறப்பால் உளம்சோர்ந்து தந்தை படுக்கையில் விழுந்தார். அன்னையும் நோயுற்றாள். ஓராண்டில் அவர்கள் இருவரும் இறக்க நானே அரசன் ஆனேன்.

ஆனால் முடிசூடிய பின் என்னால் அவனை மறக்க இயலவில்லை. ஒவ்வொருநாளும் அவன் கனவிலெழுந்தான். என் மைந்தர்களில் இளையவன் அவனைப்போல தோற்றமளித்தமையால் அவனை நோக்குவதையே ஒழிந்தேன். அவனைப் பெற்ற அன்னையை சந்திப்பதை அதன் பின்னர் தவிர்த்தேன். அவனுக்காக எவருமறியாமல் பழிநிகர்க் கடன்கள் செய்தேன். நிமித்திகர்களை அழைத்து அவனை நிறைவுறுத்த என்ன செய்யவேண்டுமென கோரினேன். அவர்கள் என் நாளும் கோளும் கணித்து சென்ற பிறவியில் அவனும் நானும் அயோத்தியின் பெருவணிகன் ஒருவனுக்கு மைந்தர்களாக பிறந்திருந்தோம் என்றனர். தந்தையின் பொருளை விழைந்த அவன் நான் துயில்கையில் என் அறைக்குள் பாம்பொன்றை அனுப்பி என்னை நஞ்சூட்டிக் கொன்றான். என்னையே நினைத்திருந்து பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தான்.

நான் விண்புகாமல் அவனைச் சூழ்ந்து மூச்சுவடிவில் இருந்தேன். அவன் அளித்த அன்னத்தையும் நீரையும் ஏற்க மறுத்தேன். அவ்வஞ்சமே என்னை அடுத்த பிறவியில் அவனுக்கு உடன்பிறந்தானாகப் பிறந்து பழியீடு கொள்ளச்செய்தது என்றார்கள் நிமித்திகர்கள். இந்தச் சுழலை எப்படி கடப்பேன்? இது பிறவிபிறவியெனத் தொடரும் ஊசலாட்டம்தானா என நான் கேட்டேன். உங்களில் ஒருவர் வஞ்சம் ஒழிந்து பிறரை முற்றாக பொறுத்து கனியவேண்டும். வாழ்த்து சொல்லி மூச்சுலகிலிருந்து அகன்று விண்புகுந்து முன்னோர்களுடன் சென்றமையவேண்டும். அடுத்தவர் பிறிதொரு பிறவி எடுத்து தன் செயலுக்கு ஈடுசெய்து அங்கு வந்துசேர்வார். அதுவரை இந்த மாற்றாட்டம் தொடரும் என்றார் முதுநிமித்திகர். என் இளையோன் வஞ்சமொழியவேண்டும் என நான் விழிநீர் சிந்தி வேண்டிக்கொண்டேன். நோன்புகள் நோற்றேன். பூசனைகளும் கொடையும் இயற்றினேன்.

“அவன் வஞ்சமொழியவில்லை. அந்த வஞ்சமே அவனை அபிமன்யூவாக பிறப்பித்திருக்கிறது என்றனர் நிமித்திகர்” என்றான் பிருஹத்பலன். “இப்பிறவியில் அவன் என்னை கொல்வான். கொல்பவனும் கொல்லப்படுபவனும் ஒன்றே என்று உணர்ந்து, இங்கு எழுந்தவர்கள் எவரும் கொல்லப்படுவதே இல்லை எனத் தெளிந்து நான் இன்னுளத்துடன் விடைகொண்டேன் என்றால் வட்டச்சுழல் முழுமையடையும் என்றனர். நான் இதுநாள்வரை என் உள்ளத்தை அதன்பொருட்டு பழக்கிக்கொண்டிருந்தேன். எங்களுக்குள் இந்தப் பிறப்பில் எப்பூசலும் இல்லை. உளமறிய வஞ்சமென ஒருதுளியும் அவனிடமும் இல்லை. ஆகவே இங்கே நிகழும் இறப்பு மலருதிர்வென நிகழட்டும் என எண்ணினேன்.”

நான் அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் அவன் எவன் என்றும் இந்த ஊழாடலின் இயல்பென்ன என்றும் அறிவதற்கு முன்னரே அவனிடம் என் உள்ளம் படிந்துவிட்டது. ஏன் என்று அறியாமலேயே அவனைப்பற்றிய செய்திகளை தனித்து செவிகொண்டபடியே இருக்கிறேன். அவை அனைத்தையும் என் உள்ளம் நினைவில் தொகுத்துக்கொண்டிருக்கிறது. அவனை நான் நேரில் பார்த்ததில்லை. பார்த்திருக்கலாம், ஆனால் எதனாலோ பார்ப்பதை தவிர்த்தேன். அவனைப்பற்றிய என் உளச்சித்திரத்தை அனைவரிடமிருந்தும் காத்துக்கொண்டேன். அவனையும் என்னையும் ஊழ் முடிச்சிட்டிருக்கிறதோ என நான் ஐயுற்ற தருணம் எழுந்தது அவன் விராடரின் மகளை மணந்தபோது.

வங்கரே, விராடர் தன் மகளை எனக்கு அளிக்க எண்ணம் கொண்டிருந்தார் என அறிவீர்கள். அவளை நான் மணக்கக்கூடுமா என்று கோரி தூது வந்தது. ஆனால் மச்சர்குடியின் அரசமகளை அரசியாக்க என் அவையினர் ஏற்கவில்லை. என் பட்டத்தரசி காமரூபத்தின் அரசமகள். அவளை மீறி நான் எதையும் செய்ய இயலாது. ஆனால் தூதன் அதை அறிந்தவன்போல் என்னிடம் ஓர் பட்டுத்திரை ஓவியத்தை காட்டினான். அவளை கண்டதுமே நான் அவளை முன்னரே அறிந்திருப்பதாக உணர்ந்தேன். காதல்கொண்டவர்கள் எப்போதும் உணர்வது அது என அறிந்திருந்தேன். ஆண்கள் இளமையிலேயே அவர்களுக்கான பெண்ணுருவை அகத்திரையில் தீட்டிக்கொள்கிறார்கள். அப்பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறார்கள். கண்டடைந்ததும் முன்பறிந்தவள்போல் இருக்கிறாள் என எண்ணி வியக்கிறார்கள். ஆனால் இது அவ்வாறல்ல, என் உள்ளத்திலிருந்த பெண்ணே அல்ல அவள். ஆனால் அவள் விழிகள் என்னை நேர்நோக்கின. அவள் எப்படிபேசுவாள் என்றுகூட நான் அறிந்திருந்தேன்.

தூதன் சொன்னான், அவர்கள் மணத்தன்னேற்பு ஒன்றை ஒழுங்குசெய்வதாக. அதில் நான் அவளைக் கொண்டால் அதை என் குடிகள் எதிர்க்கவியலாது. மணத்தன்னேற்பு அரசகுடியினருக்கு தெய்வங்களால் ஆணையிடப்பட்டது. அதை நானும் ஏற்றேன். விராடநகரிக்கு நான் அவளை கவர்ந்துவரும்பொருட்டே சென்றேன். அப்போது அங்கே பாண்டவர்கள் கரந்துறைவதை அறிந்திருக்கவில்லை. அவளை அர்ஜுனன் கவர்ந்துசென்றதை அறிந்தபோது அதையும் முன்னரே அறிந்திருப்பதாக தோன்றியது ஏன் என்றே எண்ணிக்குழம்பிக்கொண்டிருந்தேன். இழப்புணர்வுடன் மதுவிலாடி அரண்மனையில் இருக்கையில் அவளை அபிமன்யூ மணம்புரிந்துகொண்டதாக செய்தி வந்தது. அபிமன்யூ என்னும் சொல்லால் துரட்டியால் குத்தப்பட்டதுபோல் எழுந்தமர்ந்தேன். அப்போதுதான் அவன் என்னுடன் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன்.

ஆகவே நிமித்திகர் நான் அபிமன்யூவால் கொல்லப்படலாம் என்று சொன்னபோது நான் திகைப்படையவில்லை. அவர்கள் அவன் பெயரை சொல்லக்கூடுமென எண்ணி காத்திருந்தேன். சொன்னதும் என் நரம்புகள் முறுக்கவிழ உடல் தளர்ந்தது. நான் ஒரு சொல்லும் கூறவில்லை. நிமித்திகர் கூற்றை என் அமைச்சர்கள் நம்பவில்லை. நான் அபிமன்யூவின் செய்திகளை கூர்ந்து கேட்பதை நிமித்திகர்கள் எவ்வண்ணமோ உய்த்தறிந்தே அதை சொன்னார்கள் என்றார் என் பேரமைச்சர். நிமித்திகர்கள் பெயர்களை ஒழுக்கென சொல்லிச் செல்கையில் அபிமன்யூவின் பெயர் ஒலித்ததும் என் விழி ஒளிகொண்டது. அவர்கள் அதை கூர்ந்துநோக்கிக்கொண்டிருந்தனர், அவர்களின் வழிமுறை அது என்றார் அமைச்சர்.

அது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் நான் அதை முழுதும் நம்பினேன். இல்லையேல் அவ்வண்ணமொரு ஈர்ப்பு எனக்கு அவன்மேல் தோன்ற வாய்ப்பில்லை. இக்களத்துக்கு வந்த பின்னரும் அவனை நேரில் பார்ப்பதை தவிர்த்தேன். முதல்நாள் போரில் அவன் இருக்கும் இடத்துக்கு மிக அப்பால் படையுடன் நின்றிருந்தேன். ஆனால் அவனை என் அகம் அறிந்துகொண்டிருந்தது. மிக விரைவிலேயே பாண்டவர்களின் குழூஉக்குறியில் அவன் பெயர் எப்படி முரசொலியாகும், கொடியசைவாகும் என புரிந்துகொண்டேன். அதன்பின் அவன் செய்வதனைத்தையும் கேட்டு அகவிழியால் நோக்கிக்கொண்டிருந்தேன். அவனுக்கு என்னை தெரியுமா என்று வியந்தேன். அவன் முன் சென்று நின்றால் அவன் என்னை நோக்கி திகைக்கக்கூடும். நாங்கள் விற்களை கீழே வீசிவிட்டு பாய்ந்து அணைத்துக்கொள்ளவும்கூடும்.

வங்கரே, நான் இன்றுவரை அபிமன்யூவை பார்க்கவில்லை. திட்டமிட்டே அதை தவிர்த்துக்கொண்டிருக்கிறேன். போர் முறுகும்தோறும் ஒன்று தோன்றலாயிற்று, இப்போரிலிருந்து அகன்றுசென்றால் ஊழியின் அந்த வளையத்திலிருந்து நான் முறித்துக்கொண்டு விலகக்கூடும். ஏனென்றால் இங்கே நான் உசாவிய ஒற்றர்கள் ஒன்று சொன்னார்கள், அபிமன்யூ இந்தக் களத்திலிருந்து உயிருடன் மீளப் போவதில்லை. அவன் மாவீரன் என்பதில் ஐயமில்லை. ஆனால் இப்போரில் அவன் களம்படுவான். ஒவ்வொருநாளும் அவன்மேல் வஞ்சம் பெருகிக்கொண்டிருக்கிறது. கௌரவ மைந்தர்களில் பெரும்பகுதியினரை அவன்தான் கொன்றிருக்கிறான். அவன் தந்தைக்கு இருக்கும் பெருங்காப்பென்பது இளைய யாதவரின் உளச்சூழ்கை. அது அவனுக்கில்லை. அவனுக்கும் தற்காப்பு குறித்த எவ்வெண்ணமும் இல்லை. அவன் இங்கே கௌரவர்களால் வீழ்த்தப்படுவான் என்றால், அதற்கு முன்னரே நாம் படையிலிருந்து விலகிவிட்டோம் என்றால் ஊழிலிருந்து தப்பிவிடமுடியும்.

“நான் விழைவது அதை மட்டுமே. ஆயிரம் கைகள் நீட்டி பற்றவரும் ஊழிலிருந்து விலகி மீண்டும் கோசலத்திற்கு சென்றுவிடுவதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான் பிருஹத்பலன். சமுத்ரசேனர் “இத்தகைய கதைகளுக்கு என்ன பொருள்? இப்பிறப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபிறப்பை பற்றி நமக்கு என்ன தெரியும்? தெரியாதவற்றை பற்றி பேசுவது ஷத்ரியனின் பணி அல்ல, அது சூதர்களின் உலகம்” என்றார். “ஆம், ஆனால் இப்போது அவன் கையால் நான் கொல்லப்பட விரும்பவில்லை” என்று பிருஹத்பலன் சொன்னான். “நான் அஞ்சுவது சாவை அல்ல. சாவுக்குப் பின்னரும் தொடரும் வஞ்சத்தின் தொடரை. இங்கே இச்சரடை அறுத்து விடுபட விழைகிறேன்.”

“எப்படி எவர் சொல்லெடுத்தாலும் இங்கு போரைப்பற்றி பேசுவதனைத்தும் இந்த அச்சத்திலிருந்துதான். நாம் எவரும் எஞ்சப்போவதில்லை” என்றார் சமுத்ரசேனர். “நேற்று நிகழ்ந்ததென்ன? மீண்டும் ஒரு கொலைவெறியாடல். இறந்த மன்னர்களின் பெயர்களை நேற்று படைத்தலைவன் பட்டியலிட்டான். ஒவ்வொரு பெயரும் என் நெஞ்சை அறுத்தது. அவர்களின் முகங்களும் சொற்களும் செரிக்காத உணவென உள்ளே புளித்துக் கொப்பளித்தன. இனி அந்த நாடுகளெல்லாம் என்ன ஆகும்?” சந்திரசேனர் “எந்த அறிவின்மையால் நாம் பட்டத்து இளவரசர்களை கொண்டுவந்து இந்தக் களத்தில் நிறுத்தினோம்?” என்றார். சமுத்ரசேனர் “பட்டத்து இளவரசர்களை களம் நிறுத்தாமல் இருந்தால் நம்மால் வென்ற நிலத்தில் எப்பங்கும் கோர இயலாது. ஒருவேளை நாம் இக்களத்தில் மறைந்தால் நமது பட்டத்து இளவரசர்கள் ஷத்ரியப் படைக்கூட்டிலிருந்து முற்றிலும் அகன்றுவிடுவார்கள்” என்றார்.

“ஆம், அதுதான் நமது கணிப்பு. ஆனால் இப்படி குலம் முழுமையும் அழியுமென்று அப்போது எண்ணியிருக்கவில்லை” என்றார் சந்திரசேனர். “அதைப்பற்றி இப்போது என்ன? நாம் என்ன செய்யவிருக்கிறோம்?” என்றார் சமுத்ரசேனர். “அனைத்து ஷத்ரியர்களையும் இன்று துரியோதனர் அவையில் எழுந்து பேசச் சொல்லலாம். அது ஒன்றே செய்வதற்குரியது” என்று பிருஹத்பலன் சொன்னான். “அமைதிக்கு அவர் ஒப்பமாட்டார்” என்று மீண்டும் சமுத்ரசேனர் சொன்னார். “ஒப்பமாட்டார். ஆனால் ஷத்ரியர்கள் மேலும் உயிர்கொடுக்க சித்தமாக மாட்டோம் என்று அவரிடம் சொல்லியாகவேண்டும். முழுப் போரையும் இனி அவரே தன் தோளில் நிகழ்த்தட்டும். நாம் படைவல்லமையை மட்டும் அளிப்போம். அரசர்கள் முற்றிலும் பின்னணியில்தான் நிற்கவேண்டும்.”

“நேற்றும் முன்னாளும் முற்றிலும் பின்னணியில்தான் இருந்தோம். பின்னணியில் இருப்பவர்களை கொல்வதற்கும் அவர்களிடம் படைக்கலங்கள் இருக்கின்றன” என்றார் சமுத்ரசேனர். பிருஹத்பலன் எண்ணியிராதபடி உளம் சோர்ந்து “என்ன பொருள் இவற்றுக்கெல்லாம் என்றே புரியவில்லை. முற்றிலும் வீண் பேச்சு” என்றான். “இன்று அவையில் என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம். நமது எதிர்ப்பையேனும் பதிவு செய்வோம். இப்போரை இவ்வாறே முன்னெடுத்தால் இது எங்கு சென்று சேரும் என்று துரியோதனர் எண்ணவில்லை என்றாலும் பீஷ்மரும் துரோணரும் கிருபரும் சல்யரும் எண்ணட்டும். அவர்கள் இப்போர் தொடங்குவதற்கு முன் துரியோதனருக்கு அளித்த சொல்லுறுதிகள் என்னாயிற்று? அரணென கௌரவ குலத்தை காத்து நிற்பேன் என்று சொன்ன பீஷ்மரின் கண் முன்னால் கௌரவர்கள் ஒவ்வொரு நாளும் இறந்து உதிர்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்று சமுத்ரசேனர் சொன்னார்.

“ஆம், அவர்களை நோக்கி நாம் பேசுவோம். ஒருவேளை ஆயிரத்தில் ஒரு பங்கு நல்லூழ் இருந்தால் துரியோதனர் நம் சொற்களை செவி கொள்ளக்கூடும்” என்று பிருஹத்பலன் சொன்னான். எழுந்தபோது தலைசுழன்றவன்போல நிலையழிந்து மீண்டும் அமர்ந்துகொண்டான். “என்ன?” என்றார் சமுத்ரசேனர். “தலைசுழல்கிறது. விழித்திருக்கையிலேயே கனவு வந்து சூழ்கிறது” என்றான் பிருஹத்பலன். “என்ன கனவு?” என்றார் சமுத்ரசேனர். “ஒரு தாமரை. அதற்குள் இரண்டு புழுக்கள்… என்ன என்று புரியவில்லை” என்றான் பிருஹத்பலன்.

முந்தைய கட்டுரைஒரு தத்தளிப்பு, கடிதங்களும் பதிலும்
அடுத்த கட்டுரைசட்டநாதன் பற்றி ஜிஃப்ரி ஹஸன்