எழுத்தாளர் முகங்கள்

devi

விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்

அன்புள்ள ஜெ.

நலம் தானே. தங்களது இணையக் கட்டுரைகளில் படங்களின் அளவு கட்டுரை அளவிற்கு ஒவ்வாததாக, மிகவும் பெரிதாக இருக்கிறது. There is no symmetry.. எழுத்தாளர்களின் படங்கள் உங்கள் இணையக் கட்டுரைகளில் வருவது நல்ல விஷயம் தான். இது உங்களது இணைய பக்கம் தான். படங்கள் எந்த அளவில் போடுவதற்கும் உங்களுக்கு முழு  உரிமை இருக்கிறது தான். ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும், தீபாவளி விற்பனையை முன்னிட்டு, சரவணா ஸ்டோர்ஸ் தம்பியின் முகத்தை க்ளோசப்பில் மிகப் பிரம்மாண்டமாய், நாளிதழிலும், தொலைக்காட்சியிலும் தொடர்ந்து பார்த்து மிரண்டு போய் இருக்கும் எங்கள் மீது சிறிது அளி கூருங்கள்.

நன்றியுடன்,

சுந்தரம் செல்லப்பா

saravana

அன்புள்ள சுந்தரம் செல்லப்பா

எழுத்தாளர்களின் மிரண்ட தோற்றம் உங்களை ஏன் அச்சுறுத்துகிறது என்று புரியவில்லை. மாற்றிவிட்டேன், சரிதானே? பெரும்பாலான படங்கள் அந்தப்படங்களின் பிக்ஸெல் அளவுக்கு ஏற்ப வடிவம் கொண்டு தெரிந்தன. அவற்றைச் சரிசெய்ய தெரியவில்லை. ஆகவே படங்களையே சிறிதாக்கிவிட்டேன். ஆனால் நாளை இலக்கியப்பொன்னுலகம் அமைகையில் எழுத்தாளர்களுக்கு அண்ணாசாலையில் கட்அவுட் உருவாகுமே , அப்போது என்ன சொல்வீர்கள்?

நான் சொல்புதிது நடத்திய நாட்களில் எழுத்தாளர்களின் படங்களை அட்டையில்போட்டோம். சொல்புதிது பெரிய இதழ். ஆகவே அட்டை மிகப்பெரியது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அப்படி எழுத்தாளர்களின் படங்களைப் போடுவதில் ‘அடக்கமின்மை’ ஒன்று உள்ளது என்றார். ‘அமெரிக்காவில் போடுகிறார்களே” என்றேன். “அது அமெரிக்கா” என்று பதில் சொன்னார்

“வணிக எழுத்தாளர்களுக்கு போஸ்டர் அடிக்கிறார்கள் என்றால் அது வணிகம். இங்கே எழுத்தாளன் அல்ல, எழுத்தே முன்வைக்கப்பட வேண்டும்’ என சுரா வாதிட்டார். “வாசகன் எழுத்தாளனின் முகத்தை கண்முன் பார்த்தபடித்தான் வாசிக்கிறான். அவனுக்குள் ஒரு முகம் இருந்தாகவேண்டும். ஆகவே படங்கள் தேவை. எழுத்தாளர்களுக்கு நூற்றுக்கணக்கில் படங்கள் வெளியாகவேண்டும். முன்னோடிகள் சிலையாக வடிக்கப்படவேண்டும். பால்ஸாக்குக்கும் ஜாய்ஸுக்கும் மேதைகளான சிற்பிகளால் சிலை வடிக்கப்படலாமென்றால் ஏன் புதுமைப்பித்தனுக்குச் சிலை வடிக்கப்படக்கூடாது ?” என்றேன்

கோணங்கியும் எழுத்தாளர்களின் அட்டைபற்றி கடுமையான கருத்து சொன்னார். ஆனால் மிக விரைவிலேயே அது சிற்றிதழ் ‘டிரெண்ட்’ ஆகியது  சுந்தர ராமசாமியே அட்டைகளில் தோன்றினார். கோணங்கியே படங்களுக்கு போஸ்’ கொடுத்தார்.

சும்மா நினைத்துக்கொண்டேன், அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-56
அடுத்த கட்டுரைவீணை தனம்மாள்