தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் இந்தியத் தத்துவ இயல்

debi

அன்புள்ள ஐயா

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில், உரையாடலின்போது “அத்வைத வேதாந்தத்தை உலகஅளவில் எடுத்துச் சொல்ல தகுந்த அறிஞர்கள் இல்லை” என்று சொன்னீர்கள். “நீங்கள் அப்பணியைச் செய்யலாமா?” என்றதற்கு“நான் அடிப்படையில் இலக்கியவாதி” என்றீர்கள். இருப்பினும் தங்கள் தளம் மதம்-ஆன்மிகம்- இறையியலுக்கு நல்லஅறிவுவளங்களைக் கொண்டுள்ளது.

‘philosophy’ க்கு இணையான தமிழ்ச்சொல் தத்துவம் என்றே கூகுள் சொல்கிறது. தத்வமஸி என்னும் உபநிடத மகாவாக்கியத்தை இந்த அறிவுத்துறைக்கே பெயராக வைக்கும் அளவிற்கு இந்திய சிந்தனையில் அத்வைத வேதாந்தம் இடம் பிடித்திருக்கிறது. மெய்யியல் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கலாம்.

தங்கள் தத்துவ நூல் பரிந்துரைகளில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் இந்தியத் தத்துவ இயல் –ஓர் எளிய அறிமுகம் அவற்றில் ஒன்று. (அலைகள் வெளியீட்டகம் சென்னை)தோழர் வி என் ராகவன் மொழிபெயர்த்துள்ளார். டி ஞானையா சரிபார்த்து அணிந்துரை அளித்துள்ளார்.   நூல் குறித்த சிலஎண்ணங்களும் ஐயங்களும்:

நூல் இடது சாரியின் பார்வையில்  “இந்திய மரபில் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லை “  என்று நிரூபிக்கமுனைகிறது. பொருள் முதல் வாதம் (லோகாயதம்) மட்டுமே பகுத்தறிவு சார்ந்த சிந்தனைக்கு வழிவகுத்து விட்டிருக்கும்என்று முடிவு செய்கிறது. லோகாயதம் 2000 ஆண்டுகள் முன் நன்றாக வளர்ந்திருக்கிறது; இந்தியா பொருள்முதல்வாதத்திற்கு இடம் அளித்திருப்பதை கொண்டாடுகிறது

கருத்து முதல்வாதத்தின் படி எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட்து எதுவுமில்லை. அறிவை உருவாக்கும் பொருள் என்பதுஅறிவின்சிறுதுளியே. அதாவது ஒரு கருத்து தான். நாம் பார்க்கும்  பல பொருள் வடிவங்கள் அறிவின் வடிவங்களே. மனதிற்குஅப்பாற்பட்ட பொருட்கள் அல்ல. உதாரணங்கள் காட்டுவதில் “குயவனின் பானையும் நெசவாளியின் தறியும் – இந்தத் தொழில் நுட்பத்தைத் தான் பயன்படுத்திவந்துள்ளனர் இது தான் நமது தத்துவார்த்த எல்லைகள் “ என்கிறார் ஆசிரியர். உதாரணங்கள் எளிமையாகவும் அவை சுட்டும்உட்பொருள்கள் ஆழமாகவும் இருத்தல் போதும் என்று தோன்றுகிறது.

கணாதரின் வைசேஷிக தத்துவம்  அணுக்கொள்கை எனப் படுகிறது. இதற்காக அணுகுண்டு சோதனையில் நம்மவர்கள்தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது மிகை. ஆயினும் பருப் பொருட்களின் பகுதிப் பொருட்கள், பரு – பகுதி இவற்றின் உறவுகுறித்த சிந்தனை குறித்து திருப்தி கொள்ளலாம்.

சொற்கள் வளர்ந்து வாதங்களாகி வான்முட்டி நின்ற காடுகளில் பூர்வ பக்ஷம் என்ற உத்தி – எதிர்த் தரப்பை முழுவதும்ஆய்ந்து விளக்கி, பின் மறுப்பது ஜனநாயகமான தர்க்க வளர்ச்சியையும் அறிவுசார் அணுகுமுறையையும் குறிக்கிறது.

நையாண்டிக்கும் குறைவில்லை. கணாதரை ‘அணுக்களை உண்பவர்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.பொருள் முதல்வாதிகள் மட்டுமே மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பது நூல் ஆசிரியர் கூற்று. சிந்தித்தால் ஒன்றுநம்பிக்கைகள் எல்லாமே மூட்த்தனம் அல்லது மூடநம்பிக்கைகள் என்று எதுவுமில்லை என்று தோன்றுகிறது. ஜெ அவர்கள்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் கோணத்தில் புராணங்களைப் புரிந்து கொள்வது – பூர்வகுடிகளின் ஆழ்மனம் – மரணத்தைஉள்வாங்கிக்கொள்ள சடங்குகள் உருவாவது – என்ற  நிலைப்பாடு இடது சாரி தத்துவ வாதிகளுக்கு ஒப்புவதில்லை.

“காண்பதெல்லாம் பொய்; பிரம்மம் மெய்” என்ற அத்வைதக் கூற்றை தவறாக புரிந்து கொண்டு  திண்ணை வேதாந்தம், வீணர்வேதாந்தம் வளர்ந்து விட்டது உண்மை.  ஸ்வாமி விவேகானந்தர் வரையிலான ஆன்மிக தலைவர்கள் இதை சரியாக விளக்கிநூறு ஆண்டுகளுக்கு ஒரு தூய்மையாக்கல் நிகழ்ந்திருக்கிறது நூல் ஆசிரியரால் புரிந்து கொள்ளப்படவில்லை. நவீனநரம்பியல்,near death ஆய்வுகள் மற்றும் க்வாண்டம் இயற்பியல் முன்னேற்றங்களை மனதில் கொள்ளவேண்டும்.

மூளைபற்றிய தற்கால ஆய்வுகள் அதிக பட்சம் நினைவு, உணர்ச்சி பல்வேறு புலன்களுக்கான மூளை மையங்களைக் கண்டுபிடித்தல்,அவற்றில் உள்ள மின் –வேதியியல் மாற்றங்கள், செயற்கை மின் அதிர்வு மூலம் மூளையைக் குலுக்குதல் இவற்றைத்தாண்டிச் சென்றதாகத் தெரியவில்லை. நவீன அறிவியலுக்கு மனம் என்ற ஒன்று மூளைதாண்டித் தேவையே இல்லை. ‘நான்’என்ற உணர்வுக்கான மையம் கூட தெளிவாகவில்லை.

உறக்கத்திலிருந்து கனவு காணும் போது திடீரென எழுந்தால் வேகமாக கீழே ஒளிந்துகொள்ளும் ஆழ்மனத்தை சிலநேரங்களில் பிடித்து விடுகிறோம். ஆழுறக்கம்- கனவு –விழிப்புநிலை மூன்று நிலைகளுக்கும் பொதுவான ஒரு அடித்தளமாகஆன்மாவை பழைய சிந்தனையாளர்கள் hypothesise செய்திருக்கலாம். மாறும் ஒழுக்கில் மாறாத ஒன்றுக்கான தேடல்.நவீன இயற்பியல் கூட, தன்னுணர்வு சேரும்வரை பார்க்கப் படுபவை எல்லாம் சாத்திய அலைகளாகவே இருக்கின்றன என்றுகூறுகிறது. அத்வைதம் உலகம் மாயை என்கிறது.  சற்று இரக்க உணர்வுடன் நூல் ஆசிரியர் அத்வைத தாந்த்த்தைஅணுகியிருக்கலாம்.

நூலின் சில முடிவுகள்:

“காட்டுமிராண்டிகள் உணவைக்கூடப் புகழ்ந்து பாடினர்”. தரிசனங்கள் எல்லாம் மாயாஜாலங்களை மட்டுமே பரப்பின. கர்மாகொள்கை சுரண்டலுக்கான நியாயப் படுத்தல் மட்டுமே. அத்வைதத்தின் பாம்பு-கயிறு உதாரணத்தில் குறையுள்ள அறிவேவெளிப்படுகிறது. “

இந்தியப் பூர்வ குடிகளை ஒரே ஓரிடத்தில் புகழ்கிறார் ஆசிரியர். சைதன்யர்,கபிர், நானக் போன்றோர் நிலவுடைமைச்சுரண்டலுக்கு எதிரான போராளிகள் என்கிறார்.புத்தர் உபநிடதங்களுக்கு எதிராக கொள்கை வளர்த்து, முதன் முதலாக பொருள்முதல் வாதத்தை ஏற்படுத்துகிறார். எல்லாமேதொடர்ச்சியானது என்பது புத்தமதம் தத்துவத்திற்கு அளித்த பங்கு என்கிறார் ஆசிரியர். ஆலய விஞ்ஞானம் என்ற சொல்விஷ்ணுபுரத்தை நினைவுபடுத்தியது. (ஞான சபை விவாதங்களின் புராண, தத்துவ அடுக்குகளைப் புரிந்துகொள்ள வேண்டும்)தர்மம், அகிம்சையைப் பேசிய ஜைனத்தில் தத்துவம் என்று எதுவும் இல்லை என்கிறார். புத்தரின் சூன்ய வாதமும் அத்வைதவேதாந்திகளின் மாயாவாதமும் இணைவைக்கக் கூடியவை.

மொழிபெயர்ப்பாளர் பெரும் சவாலை நிறைவேற்றி இருக்கிறார். பழுதை (கயிறு) பழுது என்று பயின்று வந்திருப்பது அச்சுப்பழுதா ஆக்கப் பழுதா என்று புரியவில்லை.நூலின் மூலமும் நூலைக் கடந்தும்   இந்தியத் தத்துவ இயலின் கொடைகள் என்று புரிந்து கொள்வது:1 அழகிய கவிதையை மெய்யியல் ஆராய்ச்சியில் இணைத்தது – புல்லின் நுனியில் சென்ற கம்பளிப்புழு தன்னைச் சுருட்டிக்கொள்வது போல – மரணத்தின் பின் அவன் ஒருவன் ஆகிறான்.

2 உளவியலை அந்தக் கரணங்கள் (உள் கருவிகள்) மூலம் விளக்கியது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று பிரித்து உளவியல் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டது. இதை இப்படிப் புரிந்துகொள்கிறேன். மனம் – எண்ணங்களின் ஓட்டம்;சித்தம் – எண்ணங்களின் உறைநிலை. இதில் அலைகளை நிறுத்துவதே யோகம். புத்தி – ஆய்ந்து முடிவெடுக்கும் கருவி;அகங்காரம்- ‘நான்’ உணர்வு. நவின உளவியல் இவ்வளவு ஆழம் சென்றதாகத் தெரியவில்லை. மூளை ஆய்வைத்தாண்டவில்லை. Affective (உணர்வு நிலை), Cognitive (அறிவு சார் நிலை), Behaviour (புறச் செயல்பாட்டு நிலை) என்றே வகுக்கிறது.

சித்தத்தைப் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் ஏரியைக் கொண்டு அழகாக விளக்குகிறார்.

3 சாங்கியம்  கூறும் முக்குணங்களின் சமநிலை, அவற்றின் திரிபால் பிரபஞ்சத் தோற்றம், அவற்றை சமன் செய்யும்முயற்சிகள் தத்துவத்தில் பெரும் பாய்ச்சலாகும்.

4 இறுதி உண்மைக்கான தேடல், அதற்காக எதையும் துறப்பது பெரும் அறிவியக்க செயல்பாடு (ரைக்வன் என்ற நோயுற்றவண்டிக்காரனிடம் உபநிடத உண்மையைத் தெரிந்துகொள்ள ஜனஸ்ருதி என்னும் மன்னன் பொன்னையும் தன் மகளையும்தருகிறான்). ஒருவேளை  அந்த உண்மை இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை அல்லது வெளிப்படுத்தப் படவில்லை.ஆயினும் தேடல் உயர்ந்தது.

5 சரியாக புரியப்பட்ட கர்மா கொள்கை, செயல்முறை வேதாந்தத்தை வழங்கும். ( ‘நான் இன்று இருக்கும் தாழ்வான நிலைக்குநானே காரணம்; அதனால் எனது எதிர்காலத்தை நானே தீர்மானிப்பேன்’ ;  “துன்புறுத்துவது அவன் கர்மா என்றால் உதவுவது.எனது கர்மா”  மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சம் என்ற பரிணாம வாதம் (சாங்கியர்களுடையது) முக்கியக் கொள்கையாகிறது.

நிரந்தரமான ஊழிப்பொருள் (primordial matter?) எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது; ஓய்வதே இல்லை; ஒன்றிலிருந்துமற்றொன்று எப்போதுமே பரிணாம வளர்ச்சி அடைகிறது.

இந்தியத் தத்துவ இயலின் குறைகள் என்று நினைப்பது:

1 உச்ச அறிவு இயக்கமான உபநிடதங்களும் சடங்குகள், வர்ணபேதங்களில் இருந்து முழுவதும் வெளிவரவில்லை

2 அனைத்து வாதங்களும் ஆவணப் படுத்தாமையால் குழப்பத்திற்குக் காரணமாயின

3 அத்வைத உண்மை வ்யவஹாரிக (நடைமுறை) உண்மைக்குப் பொருந்த வேண்டாம் என்பதை (பின்னாளில் ராமகிருஷ்ணர்விளக்கியது போல) கொண்டு சேர்க்கவில்லை. (க்வாண்டம் இயற்பியலின் விதிகள் அணு உலகிற்கு மட்டுமே; நியுட்டன்விதிகள் நமது அன்றாட உலகிற்கு மட்டுமே என்பது போல)

நூலின் சார்பு நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஸ்வாமி விவேகானந்தர், சங்கரர் முதலிய அனைத்து ஆசிரியர்களுமேதங்கள் கொள்கைகளுக்காக உபநிடதங்களை திரித்துச் சொல்வதாகக் கூறுகிறார். சார்பற்ற, திரிபற்ற உண்மை அறிவு நாட்டம்நமக்கு கட உபநிடத நசிகேதஸ் மூலம் காட்டப்படுகிறது. மரணம் பற்றி அறிந்து கொள்ள மரணத்திடம் சென்று கேட்பது உச்சகற்பனை.

இந்திய மெய்யியலின் நிரந்தர பூர்வபக்ஷமான இடது சாரி அறிவுஜிவிகளில் மூன்றாவது முக்கிய ஆளுமையாகிய (ராகுல்சாங்கிருத்தியாயன், கோசாம்பிக்கு அடுத்து) தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா அவர்களை அறிமுகம் செய்ததற்கும் , இருபக்கவாதங்களையும் கவனிக்கும் அறிவியக்கத்தை தொடர்ந்து நடத்திவருவதற்கும் நன்றி.

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

கோவை

***

முந்தைய கட்டுரைபுத்துயிர்ப்பு -தினேஷ் ராஜேஸ்வரி
அடுத்த கட்டுரைதமிழகப்பொருளியல்- கடிதங்கள்