இன்று எனது நண்பன் இராணுவத்தில் இருந்து வந்திருந்தான். மாலையில் வெளியே கிளம்பி சிக்கன் ரைஸ் சாப்பிடுவது வழமை. அவனுடன் இன்னொரு நண்பனும் வந்திருந்தான். நாங்கள் மூவரும் சாப்பிட ஓட்டலில் உட்கார்ந்து கொண்டு இருந்தோம். அப்போது மூன்றாவது நண்பனின் தம்பியும் சாப்பிட வந்தான். வேலை செய்து விட்டு அலுத்து வந்திருந்தான்.
“வாடா இங்க!” என்று அழைத்தேன். சிரிப்புடன் வந்தமர்ந்தான். நால்வரும் சாப்பிட்டோம். நால்வருக்கும் சேர்த்து இராணுவ நண்பனே பணம் தந்தான். பிறகு மூன்றாவது நண்பனின் தம்பி செருப்பு வாங்க வேண்டும் என்று பிரிந்து விட்டான். நாங்கள் மூவரும் தனியாக ஊர் சுற்ற கிளம்பினோம்.
எனது வலது செருப்பில் இருக்கும் மூன்று இழைகளில் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்பாக பிய்ந்து விட்டது. புதிய செருப்பு வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை அண்ணா ஏதோ அவசரத்துக்கு என்னிடம் இருந்து வாங்கினான். திரும்ப தரவேயில்லை. எனக்கு மாதமாதம் பணம் தருவதே அவன்தான். அவனிடம் போய் இருநூறை கேட்க ஏதோ மாதிரி இருந்தது. ஆனால் இன்று நானும் ஒரு செருப்பு வாங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது பிய்ந்த செருப்பை யாருமே கண்டுக் கொள்ளவில்லை எனது மனதை தவிர.
இராணுவ நண்பன் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவன். மூன்றாம் நண்பன் டிப்ளமோ படித்து விட்டு இங்கு அருகில் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றுகிறான். நான் பொறியியல் படித்து விட்டு இலக்கியம் படித்து கொண்டு இருக்கிறேன்.
தற்செயலாக தங்களது ‘நான்கு வேடன்’ கடிதத்தை படித்தேன். அதில் எனக்கு பல விஷயங்கள் releate செய்தது. ” //இலக்கியத்துக்காக நீங்கள் தொழிலில் கவனம் செலுத்தவில்லை என்றால் காலப்போக்கில் உங்களுக்குத் தொழில்சிக்கல்கள் எழுந்து இலக்கியமும் கைவிட்டுப்போகும். இலக்கியத்துக்காகக் குடும்பத்தை உதாசீனம்செய்தால் காலப்போக்கில் குடும்பச்சிக்கல்களால் இலக்கியத்தை மறக்க வேண்டியிருக்கும்.//
இது சாதாரண வரிகளாக இருந்தாலும் இன்று ஆழமான அர்த்தத்தை அளித்தது. ஓஷோ சொல்வது போல திறந்து இருக்கும் போது அது வந்து நிறைந்து விடுமோ என்னமோ.
இதற்கு மேல் எழுதினால் அது மிகையுணர்ச்சி ஆகிவிடும். நன்றி மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
அன்புடன்
தினேஷ்.
***
அன்புள்ள ஜெ
உங்கள் வாசகர்கடிதங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அவற்றில் வாசகர்களாக எழுதிய பலர் இன்றைக்கு எழுத்தாளர்களாக மலர்ந்துள்ளனர் என்பது ஆச்சரியம் அளிக்கவில்லை
அவர்கள் எழுதும் கடிதங்கள் அனைத்துக்கும் பொதுவாக ஒரு அம்சம் உள்ளது. அவர்களெல்லாம் உலகியல்வாழ்க்கையை கண்டு பயப்படுகிறார்கள். அதைச் சரிவர நடத்திக்கொள்ள முடியாதவர்களாகவும் கனவுகள் காண்பவர்களாகவும் அதிலே வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த பாணியில் முப்பது கடிதங்களுக்குமேல் உங்கள் தளத்திலே காணப்படுகின்றன
அவர்கள் அனைவருக்கும் பிராக்டிகலாக நீங்கள் அளிப்பது ஒரே உபதேசத்தைத்தான். அது சொந்த வாழ்க்கையிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது. அதாவது லௌகீகத்தை உதாசீனம் செய்யாதீர்கள். லௌகீகத்திற்கு வாழ்க்கையில் ஒரு இடத்தை அளியுங்கள். அதில் மூழ்காதீர்கள். தேவையைக் குறைத்துக்கொண்டு பொழுதை ஈட்டி அதில் உங்கள் படைப்பூக்க நிலையை செயல்படுத்துங்கள்
மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். ஆனாலும் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒருவகையில் அக்கறையுடன் இதைச் சொல்லிக்கொண்டே இருக்க ஒருவர் இருப்பதே பெரியவிஷயம் என நினைக்கிறேன்
ராஜாராம்