பாடநூல்கள் -ஒரு கடிதம்

text

 

அன்புள்ள ஜெ,
 

ஈரோடு வாசிப்பு இயக்கத்தில் நவீன பாடத்திட்டம் குறித்த ஒரு உரையாடல் நிகழ்த்தலாம் என்ற கிருஷ்ணனின் எண்ணத்தின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தின் முக்கியமான துறைகளை பற்றிய  விவாதமும் ஒரு பாடத்தில் தேர்வும் நடத்தலாம் என்று தாவரவியலில் ஒருபாடமும் தேர்ந்தெடுக்கப்பட்டு 13-10-18 அன்று ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.கிருஷ்ணன் தேர்ந்தெடுத்த கேள்விகளுக்கு சிவா,பாபு, வழக்கறிஞர்கள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பிரகாஷ், இரட்டையர்களான மணவாளன் மற்றும் பாரி ஆகியோருடன் நானும் இணைந்து பதிலளித்தோம்.

 

 

பின்னர் நடந்த பாடத்திட்டம் குறித்த விவாதங்கள் இன்றைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக எண்ணுவதால் தங்களுடைய கருத்தையும் அறிந்து கொள்ள வேண்டியே இக்கடிதத்தை எழுதுகிறேன்.பாடத்திட்டத்தை பார்க்க உங்கள் நேரம் ஒத்துழைக்காது என்ற போதிலும் இவ்விமர்சனங்களை அடிப்படையாக கொண்டேணும் பதிலளிக்குமாறு கேட்கிறேன்.

 

 

1.பாடத்திட்டமானது முதல் பார்வையில் நன்றாக இருப்பதாக காணப்படுகின்றது.ஆனால் பாடங்களைப்பற்றி இணையத்தில் தேடியபோது இணையத்தில் விக்கிப்பீடியா ஆங்கிலத்தில் உள்ளவற்றை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து பாடப்புத்தகம் அச்சிடப்பட்டது போல் உள்ளது.எழுத முயலாமல் இணையத்தில் உள்ளவற்றை வெட்டி,நகலெடுத்து இணைக்கும்  இரண்டாம் நிலை அறிவியக்கம் தான் தற்போது  உள்ளது.இரண்டாம் நிலை அறிவு கொண்டவர்களை தன் அறிவியக்கமாக கொள்ளும் மனிதர்களைக் கொண்ட நாடு இது என்ற நைபாலின் கருத்தை இது மெய்ப்பிக்கின்றது.

 

 

2.பாடத்திட்டமானது தங்களுடைய ‌வெள்ளிநிலம் நாவலைப் போன்ற வடிவில் அதிகப்படியான தொடர்புச்செய்திகளை கொண்டதாக உள்ளது.மாணவர்களுக்கு  அறிதலின் பொருட்டன்றி போட்டித்தேர்வுகளின் பொருட்டும், சுவாரசியமாக தோன்றும் பொருட்டும்  பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது சரியான பாதைதானா?.

 

 

3.வரலாற்று பாடத்தை நோக்கும்போது நம் வரலாற்றை விட மூன்று மடங்கு உலக வரலாறு உள்ளது.உலக வரலாற்றை சுருக்கமாகச் கூறி அதனால் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களை கூறியிருந்தால் அது இயல்பானது என்று சொல்லலாம். அவ்வாறு இன்றி முழுமையாக உலக வரலாறு மட்டுமே  உள்ளது.அது இன்றும் தொடரும் மேலை நாட்டு அறிவியக்கத்தின் அடிமை மனப்பான்மை இங்கு இன்றும் தொடர்வதன் நிலைக்கான எடுத்துக்காட்டு.
இவைகளை பற்றிய உங்கள் கருத்தினை நேரமிருப்பின்  தெரிவிக்கவும்.
 

இப்படிக்கு
அந்தியூர் மணி

 

அன்புள்ள மணி

 

பாடத்திட்டம் பற்றி பயிற்றியலில் ஏதேனும் ஈடுபாடு கொண்டவர்கள்தான் சொல்லவேண்டும். என்னால் ஒரு பாடநூலை, எந்த பொருள்சார்ந்ததாக இருந்தாலும், வாசித்தே பார்க்கமுடியாது. படிக்கும் காலத்திலேயே பாடநூல்கள் மேல் கடுமையான ஒவ்வாமை இருந்தது

 

ஆகவே பாடப்புத்தகம் என்ற பேச்சுக்கே என் மூளைக்குள் இடமில்லை

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-63
அடுத்த கட்டுரைதமிழகப் பொருளியல் -கடிதம்