காரூஷநாட்டு அரசர் க்ஷேமதூர்த்தி போர்க்களத்தில் தன் படைகளை குவிப்பதில் முழுவிசையுடன் ஈடுபட்டிருந்தார். “காரூஷர் குவிக! காரூஷர் கொடிக்கீழ் அமைக!” என்று அவருடைய ஆணையை முழவுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. காரூஷர்களின் தேள்முத்திரை பொறிக்கப்பட்ட கொடி அசைந்துகொண்டிருந்தது. காரூஷநாட்டு வீரர்கள் கவசங்கள் வெயிலில் ஒளிவிட ஒருவரோடொருவர் முட்டித்ததும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்து மாளவப் படை முன்னெழ உந்தியது. படைமுகப்பில் கூர்ஜரர்கள் அபிமன்யூவின் அம்புபட்டு விழுந்துகொண்டிருந்தார்கள். “நிரைகொள்க! அணிகலையாதமைக!” என அவர் ஆணையிட்டார்.
அவருக்கு எதிரே சாத்யகி வில்லுடன் நின்று போரிட அவனுக்குத் துணையாக விராடர்களின் விசைவில்லவர் அரைநிலா வடிவில் நின்றிருந்தார்கள். “எதிர்கொண்டு நில்லுங்கள்… பின்னடையாதீர்கள்” என ஆணையிட்டு அவர் காரூஷநாட்டு தேர்வில்லவரை முன்னணிக்கு அனுப்பியபடி தேரில் நின்றிருந்தார். கவசமணிந்த இரண்டு யானைகள் அவருக்குக் காவலென முன்னால் நின்றிருந்தன. அவற்றின் எடைமிக்க இரும்புக்கேடயங்களின் மேல் அம்புகள் வந்து விழும் ஒலி எல்லைக்காவல் அன்னையின் ஆலயத்தின் நூற்றுக்கணக்கான சிறிய மணிகள் ஒலிப்பதுபோல கேட்டுக்கொண்டிருந்தது.
அவரால் அந்த மணியோசையில் இருந்து உளம் விலக்கவே இயலவில்லை. அது காரூஷத்தின் தெற்கெல்லையில் விந்தியமலை மடிந்து மடிந்துயரும் அலைகளின் முதல் வளைவிலமைந்த பத்ரையன்னையின் ஆலயத்தின் முன் நின்றிருக்கும் உணர்வை அவருள் நிலைநிறுத்திக்கொண்டிருந்தது. போருக்கு எழுவதற்கு முன்பு அவரும் அவருடைய குலமும் அங்கே சென்று அன்னைக்கு குருதிபலி அளித்து பூசனைசெய்து மீண்டனர். அப்போது அவர் மைந்தர்கள் ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும் உடனிருந்தார்கள். “அன்னையே, உனக்கு நிறைவு! அன்னையே, உனக்கு விண்நிறைவு! அன்னையே, உன் மைந்தருக்கு வெற்றி!” என்று சொல்லி பூசகர் குருதித் தாலத்தை கொண்டுவந்து நீட்டினார். அதைத் தொட்டு நெற்றியிலிட்டுக்கொண்டார்கள்.
திரும்பும்போது அவர் ஒருசொல்லும் உரைக்கவில்லை. அவருடைய தேரிலேயே மைந்தர்களும் ஏறிக்கொண்டிருந்தனர். அவர்கள் இளமையிலேயே பத்ரையன்னையின் கதையை அறிந்திருந்தார்கள். அவர்கள் பிறப்பதற்கு முன்னரே நிகழ்ந்தது. சேதிநாட்டரசன் சிசுபாலனுக்கு அணுக்கமானவர்களாக அன்று காரூஷநாட்டினர் இருந்தனர். மகதத்தின் பேரரசன் ஜராசந்தனின் தென்னெல்லைக் காவலர்கள் என அவர்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. ஜராசந்தனின் ஆதரவால் அவர்களின் சிற்றூர் வளர்ந்து நகராயிற்று. கோட்டையும் அங்காடியும் கொண்டு தலைநகராகி சூழ்ந்திருந்த ஊர்களை வென்று இணைத்து நாடென்று மாறியது. ஜராசந்தனின் தோழன் என்பதனால் சிசுபாலனுக்கும் அவர்கள் கட்டுப்பட்டிருந்தனர்.
அவர்களின் குலம் வடக்கே கங்கைக்கரையில் எங்கிருந்தோ கிளம்பியது. அங்கம், வங்கம், கலிங்கம், சுங்கம், பௌண்டரம் என்னும் ஐந்து நாடுகளின் அரசர்களின் குருதியை அளித்த விழியிலா வைதிகரான தீர்க்கதமஸின் குருதியில் பிறந்தவர்கள் அவர்கள் என்பது அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட வரலாறு. தீர்க்கதமஸ் அவருடைய முதல் மனைவி பிரத்தோஷியின் மைந்தரால் கங்கையில் ஒழுக்கப்பட்டு மகாபலர் என்னும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த வாலி என்னும் அரசனால் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு அவர் அக்காட்டில் உறவுகொண்ட ஏழு வேடர்குலங்களில் ஒன்றிலிருந்து உருவானது அவருடைய அரசகுலம்.
அவர்கள் நிலம் தேடி தண்டகாரண்யம் வந்தனர். அங்கே காடழித்து நிலம்கொண்டு அவர்கள் அமைத்த அரசுகளுக்கு அரக்கர்களும் நிஷாதர்களுமே எதிரிகளாக இருந்தனர். அவர்களுடன் போரிட்டு இழந்து இழந்து கிளைவெட்டப்பட்ட மரம் குறுகியமைவதுபோல் அவர்கள் மலைச்சரிவில் சிற்றோடைக்கரையில் அமைந்திருந்த காரூஷவதி என்னும் ஊரில் ஒண்டியிருந்தனர். ஜராசந்தனின் உதவியுடன் அரக்கர்களையும் நிஷாதர்களையும் வென்றதும் காரூஷநாட்டு தேள்கொடியை மாளவத்தின் எல்லைவரை கொண்டுசென்று நாட்டினார் க்ஷேமதூர்த்தியின் முதற்றாதை வாகர். அண்டைநாடுகளனைத்தும் அவர்களை அஞ்சின. சூழ்ந்திருந்த காடுகளின் நடுவே அமைந்த சந்தை என்பதனால் வணிகம் செழித்து வரிச்செல்வம் பெருகியது. ஆகவே மகதத்திற்கு திறைகொடுத்தும் கருவூலம் நிறைந்திருந்தது.
வாகரின் அரசி சூக்திதேவி காரூஷகுடிகளில் ஒன்றாகிய சீர்ஷர்களில் பிறந்தவள். நெடுங்காலமாகவே தங்கள் குலங்களுக்குள் பெண்கொள்வதே காரூஷர்களின் வழக்கம். பிற ஷத்ரிய அரசர்களிடம் பெண்கோரும் திறனிருக்கவில்லை. அரசரல்லா குடிகளிடம் பெண்கொண்டால் குடிநிலை அழியும் என அஞ்சினர். வாகர் தன் மைந்தன் தந்தவக்ரனுக்கு விசால நாட்டு அரசர் சமுத்ரசேனரின் மகள் பத்ரையை மணமுடிக்க விரும்பினார். விசால அரசு தீர்க்கதமஸின் குருதியிலெழுந்த ஷத்ரியகுடிகளில் ஒன்று என்று அங்கம், வங்கம், கலிங்கம், சுங்கம், பௌண்ட்ரம் என்னும் ஐந்து நாடுகளும் அவையேற்பு அளித்திருந்தன. கங்கையின் துணையாறான பீதவாகினியின் கரையில் அமைந்த அவர்களின் சிறுநகர் வைசாலியில் வணிகர்களின் படகுகள் நின்று செல்வதனால் நீர் வணிகம் என்றுமிருந்தது. மகத ஜராசந்தனின் வரிகொள்நிலையாக அவர்கள் மாறினார்கள். ஜராசந்தனின் மைந்தர்களில் ஒருவனுக்கு மகளை அளித்து மணவுறவு பெற்று மெல்ல செல்வமும் படைவல்லமையும் பெறத் தொடங்கியிருந்தார்கள்.
காரூஷநாட்டின் மணத்தூதை சமுத்ரசேனர் முதலில் விரும்பவில்லை. இளவரசி பத்ரை அழகி என்றும் ஆற்றல்கொண்டவள் என்றும் அறியப்பட்டிருந்தாள். அங்கம், வங்கம் உட்பட ஐந்து பெரிய நாடுகளில் ஏதேனும் ஒன்றின் அரசனுக்கு பட்டத்தரசியாக தன் மகளை அனுப்ப அவர் விழைந்தார். அந்த ஐந்து நாடுகளின் பட்டத்து இளவசர்களுக்கும் அவர்களுக்குள்ளேயே மகள்கொண்டு மணம்நிகழ்ந்தமையால் இரண்டாம்நிலை அரசியென அவளை அளிக்கலாமென எண்ணினார். அப்போதுதான் சேதிநாட்டிலிருந்து தமகோஷரின் மணக்கோரிக்கை வந்தது. பத்ரையை சிசுபாலனுக்கு மணமுடித்து அளிக்கவேண்டும் என்றும் அவள் சேதியின் பட்டத்தரசியாவாள் என்றும் அவர் சொன்னார். ஆனால் சேதியின் மணவுறவை வைசாலியின் குடித்தலைவர்கள் விரும்பவில்லை.
“வைசாலி என்னும் சிறுநகர் மட்டுமே கொண்ட நாம் இன்று அரசகுடி என அறியப்படுகிறோம் என்றால் நமது குருதித்தூய்மையால்தான். யாதவக்குருதி கொண்ட சேதியுடனான உறவு நம்மை நிலையிறக்கும். அதன்பின் ஷத்ரியர் நம் குடியில் மணம்கொள்ள மாட்டார்கள்” என்றனர். “சேதியுடன் மணவுறவை மறுத்துவிடுவோம். நம் அரசியை காரூஷர் கோருகிறார்கள். அவர்களுக்கே அவளை அளிப்போம். அங்கே அவள் பட்டத்தரசியாவாள். காரூஷநாட்டு இளவரசர் தந்தவக்ரர் திறன்மிக்கவர். மகதமன்னருக்கு அணுக்கமானவர். அவர் நாடு தெற்கே தண்டகாரண்யம் முழுக்க விரிந்தெழும் வாய்ப்பு கொண்டது. சிசுபாலருக்கும் அவர்கள் அணுக்கமானவர்கள். மகதமன்னரைக் கடந்து சிசுபாலரும் ஒன்றும் செய்யமுடியாது” என்று உரைத்தார்கள்.
ஆகவே சமுத்ரசேனர் தன் மகளை தந்தவக்ரருக்கு அளிக்க ஒப்புக்கொண்டு ஓலையளித்தார். சிசுபாலனுக்கு மணமறுப்பு ஓலை அளிக்கப்பட்டது. செய்தியறிந்த சிசுபாலன் பன்னிருபேர் மட்டுமே கொண்ட சிறிய படையுடன் விசாலநாட்டுக்கு கிளம்பினான். செல்லும்வழி முழுக்க காரூஷநாட்டு தேள்கொடியை அவர்கள் ஏந்தியிருந்தனர். ஆகவே வைசாலியின் எல்லையை கடப்பதுவரை அவர்களை வரவேற்கும் நிலையிலேயே விசாலநாட்டுப் படையினர் இருந்தார்கள். காரூஷநாட்டரசரின் தூதுக்குழுவாக வந்திருப்பதாகவே காவல்மாடங்களில் சிசுபாலன் சொன்னான். நகர்முகப்பை அடைந்ததும் அந்நகரை முற்றழித்துவிடுவதாக அறைகூவினான். பன்னிருவர் மட்டும் வந்து தன்னுடன் பொருதும்படி அவன் கோரவே வைசாலியின் படைத்தலைவன் பத்மசேனன் அவனை நகர்முகப்பில் எதிர்கொண்டான். அப்போரில் பத்மசேனனைக் கொன்று அரசி பத்ரையை சிசுபாலன் கவர்ந்துசென்று மணமுடித்தான்.
பத்ரையை மணப்பது பற்றிய கனவிலிருந்தார் தந்தவக்ரர். அவளை சிசுபாலன் கவர்ந்துசென்றதை அறிந்து சினம்கொண்டு படையுடன் சேதிமேல் எழ எண்ணினார். ஆனால் காரூஷம் அதற்கான படைத்தகுதி கொண்டது அல்ல என்று தந்தை விலக்கினார். மகதநாட்டுக்குச் சென்று ஜராசந்தனிடம் முறையிட்டனர். அவன் மணம் நிகழ்ந்துவிட்டமையால் மேலும் பேசுவதில் பொருளில்லை என அவர்களை திருப்பியனுப்பினான். நாடு திரும்பிய பின்னரும் தந்தவக்ரர் பத்ரை நினைவிலேயே இருந்தார். பித்தெழுந்தவராக காட்டில் அலைந்தார். தனித்திருந்து விழிகலுழ்ந்தார். கனவுகளில் அவளைக் கண்டு கதறியழுதார்.
நிமித்திகர் எழுவர் கூடி களம் வரைத்து அவருடைய நிலையை கணித்தறிந்தனர். பத்ரையின் கன்னியுடலில் குடிகொண்ட பத்ரை என்னும் அன்னை அவளிடமிருந்து விலகி காரூஷ நாட்டுக்கு வந்து அவள்மேல் பெருங்காதல் கொண்டிருந்த தந்தவக்ரரின் உடலில் கூடியிருப்பதாக சொன்னார்கள். பத்ரையன்னைக்கு நாட்டின் எல்லைக்காட்டில் எவருமறியாத ஒரு சிற்றாலயத்தை அமைத்தனர். அங்கே பத்ரையின் அதே வடிவில் கற்சிலை ஒன்று அமைக்கப்பட்டது. வேதம் ஓதி பீடத்தில் நிறுவப்பட்ட அன்னைக்கு மலரும் நீருமிட்டு வணங்கினர். பதினெட்டு நாட்கள் தன்னந்தனிமையில் பத்ரையன்னையின் முன் அவள் முகத்தை நோக்கியபடி உண்ணாமல் உறங்காமல் நோன்பிருந்த தந்தவக்ரர் எழுந்தபோது கன்னியன்னையிடமிருந்து மீண்டிருந்தார். அதன் பின்னரே அவர் மூக குடியின் நேத்ரையை மணந்து க்ஷேமதூர்த்தியை பெற்றார்.
பத்ரையில் வாழ்ந்த கன்னியை காரூஷநாட்டுக் காட்டுக்குள் ஆலயத்தில் நிறுவிவிட்டிருந்தமையால் பத்ரையிலிருந்து கன்னியழகுகள் அகன்றன. அவள் உடல்தளர்ந்து விழிமங்கி முதுமகளானாள் என்று காரூஷநாட்டுக் கதைகள் கூறின. அவளை சிசுபாலன் பின்னர் பொருட்படுத்தவில்லை. சேதிநாட்டின் பழைய அரண்மனை ஒன்றில் அவள் தனித்திருந்து நோயுற்று நலிந்து சொல்லவிந்து வெற்றுவிழிகொண்ட தசைப்பதுமை என்றானாள். இளைய யாதவரின் படையாழியால் சிசுபாலன் கொல்லப்பட்ட பின்னர் அவள் மீண்டும் உயிர்கொண்டு பிறிதொருத்தியானாள். உறுதியும் கசப்பும் கொண்ட அன்னைவடிவாக சேதியை ஆண்டாள்.
ஆனால் காரூஷநாட்டில் அவள் கன்னியென்றே அமைந்திருந்தாள். பத்ரையன்னைக்கு குருதிபலி அளித்து நீர்முழுக்காட்டப்பட்டது. அதன்பின் அவ்வாலயம் காரூஷநாட்டு அரசர்களின் குடித்தெய்வங்களில் ஒன்றென ஆயிற்று. தந்தவக்ரர் இறக்கையில் க்ஷேமதூர்த்தியை அருகழைத்து “நம் குடியன்னையின் பழி ஒன்று நம் கணக்கில் உள்ளது. என்றேனும் ஏதேனும் களத்தில் அன்னையின் வஞ்சம் எழும் என்று நிமித்திகர்கள் கூறினார்கள். அன்னை அதை எவ்வண்ணம் நிகர்த்த விழைகிறாள் என்று கேள். அவள் ஆணையே நம் குடியை வழிநடத்தவேண்டும்” என்றார். “போர் என ஒன்று நிகழுமென எண்ணுகிறீர்களா?” என்று க்ஷேமதூர்த்தி கேட்டார். “ஜராசந்தர் கொல்லப்பட்டதுமே ஒரு போர் நிகழுமென்பது உறுதியாகிவிட்டது. அது எப்போது எங்கு எவரெவர் நடுவே என்பதுதான் வினா. அது நிகழுமென்றால் அங்கே அன்னையின் வஞ்சமும் எழவேண்டும்” என்றார். அவர் முன் வாள்தொட்டு க்ஷேமதூர்த்தி ஆணையிட்டார்.
போரெழுவதை ஒவ்வொருநாளும் செய்திகளின் வழியாக அறிந்துகொண்டிருந்தார். போருக்கான அழைப்புகள் இருதரப்பிலிருந்தும் வரத்தொடங்கின. “நாம் எம்முடிவை எடுப்பது, தந்தையே? ஷத்ரியர்களாகிய நாம் வேதம் காக்கவே நின்றிருக்கவேண்டும் என குடிகள் எண்ணுகிறார்கள்” என்று மூத்தவனாகிய ஹஸ்திபதன் சொன்னான். “ஆம், ஆனால் நாம் அன்னையின் சொல்லை கோருவோம்” என்றார் க்ஷேமதூர்த்தி. ஆனால் ஏழு நாட்கள் அன்னைமுன் நோன்பிருந்தபோதும் அன்னை வெறியாட்டில் எழவில்லை. “அன்னைக்கு சொல் இல்லை என்றால் நாம் நம் குடியவையின் சொல்லையே ஏற்போம், தந்தையே” என்றான் ஹஸ்திபதன். “இப்போரில் ஷத்ரியர்களே வெல்வர். அஸ்தினபுரியின் படைவல்லமையும் அங்கிருக்கும் பெருவீரர்களின் திறனும் பாரதவர்ஷத்தை மும்முறை வெல்லற்குரியவை.” அவன் இளையோரும் அவ்வண்ணமே சொன்னார்கள்.
ஆனால் எட்டாம்நாள் பூசகனில் வெறியாட்டெழுந்து அன்னை ஆணையிட்டாள். “கௌரவர்களுடன் சேர்ந்துகொள்க, சிசுபாலனைக் கொன்ற இளைய யாதவர்மேல் குருதிவஞ்சம் தீர்த்து என்னை விண்ணேற்றுக!” காரூஷநாட்டினர் உவகை கொண்டனர். “அன்னையின் ஆணை. அவள் துணை நம்முடன் என்றுமிருக்கும். நாம் களவெற்றி கொள்வோம். போருக்குப் பின் நம் படைத்துணைக்கு ஈடாக பெருநிலம் பெறுவோம். காரூஷம் தென்னிலத்தின் பேரரசென அமைவதற்கு அன்னையின் அருள் அமைந்துள்ளது” என்றார் மூத்த குடித்தலைவரான சக்தர். பிற குடித்தலைவர்கள் தங்கள் வில்களையும் வாள்களையும் தலைக்குமேல் ஏந்தி ஆர்ப்பரித்தனர்.
போருக்கான அரசர் சந்திப்புக்கு அழைப்பு வந்தபோது க்ஷேமதூர்த்தி தன் மூன்று மைந்தர்களுடன் அஸ்தினபுரிக்கு சென்றார். அங்கே அவையமர்ந்திருந்தபோது ஒன்றை உணர்ந்தார், கௌரவர்களின் படைக்கூட்டில் அவருடைய இடமென்பது மிகமிகச் சிறிது. அவருக்கு மிக இயல்பான ஷத்ரிய அவைமுறைமைகள் மட்டுமே செய்யப்பட்டன. நான்குமுறை அவர் பீஷ்மரிடம் பேசியபோதும் அவரை பீஷ்மர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. “இங்கே நம் படைகளுக்கு என்ன இடம்? இங்கு வந்திருப்பவர்கள் பேரரசர்கள். அவர்களின் படைகளும் முறையான பயிற்சிகொண்டவை. நிறைந்த கருவூலமே படையாகிறது. இவர்களின் படைக்கலங்களையும் தேர்களையும் புரவிகளையும் பார். நாம் இவர்கள்முன் காட்டுமானுடராகவே தெரிவோம்” என்றார் க்ஷேமதூர்த்தி. மைந்தர்கள் ஒன்றும் சொல்லவில்லை.
“இங்கே போருக்குப் பின் நிலப்பகுப்பு பற்றி அரசர்கள் பேசிக்கொள்கிறார்கள். அத்தனை நிலங்களும் பகுக்கப்பட்டுவிட்டன. நமக்கான நிலத்தைப்பற்றி ஒரு சொல் எடுக்க இடையில்லை” என்றான் சுரவீரன். மூஷிகாதன் “அதைவிடக் கீழ்மை. நேற்று மதுக்கூடத்தில் பேசுகையில் மாளவரும் அவந்திநாட்டு அரசர்களும் நம் நிலத்தையும் சேர்த்தே தங்கள் நாட்டைப்பற்றி பேசுகிறார்கள்” என்றான். க்ஷேமதூர்த்தி “ஆம், இந்தப் படைக்கூட்டில் மாளவ இந்திரசேனர் மிகப்பெரிய பங்காளி. அவந்தியின் விந்தரும் அனுவிந்தரும் அவ்வாறே. அவர்களிருக்கும் இடத்தில் நாம் குறுநிலமன்னர்களாகவே திகழமுடியும்” என்றார்.
குழம்பிய உள்ளத்துடன் அவர்கள் காரூஷநாட்டுக்கு மீண்டார்கள். முரசறைந்து படையறிவிப்பை வெளியிட்டு பதினெட்டு நாட்களாகியும் நாநூறுபேருக்குமேல் படைதிரளவில்லை. “ஆயிரம்பேரையாவது கொண்டுசெல்லாவிட்டால் நமக்கு எவ்வகையிலும் அங்கே மதிப்பில்லை” என்றார் க்ஷேமதூர்த்தி. அந்நாட்களில் அன்னைக்கு பலிபூசனை செய்துகொண்டிருக்கையில் பூசகனில் வெறியாட்டெழுந்த அன்னை “என் மைந்தரே, சென்று பாண்டவர்களுடன் சேர்ந்துகொள்க! என் மைந்தன் திருஷ்டகேது அங்கே படைக்கூட்டு கொண்டிருக்கிறான். அவனுக்கு துணைநில்லுங்கள்” என்று ஆணையிட்டாள். அன்னையின் ஆணை காரூஷர்களை குழப்பியது. சுரவீரனும் மூஷிகாதனும் “அன்னைசொல்லை தலைக்கொள்வோம். அவள் நமக்கு படைக்காப்பு” என்றனர்.
க்ஷேமதூர்த்தி இளவரசர்களுடன் உபப்பிலாவ்யத்திற்குச் சென்று அங்கே திருஷ்டகேதுவை கண்டார். அன்னையின் ஆணையை அறிவித்தபோது அவன் புன்னகை செய்து “ஆம், அன்னையின் சொல் தலைக்கொள்ளப்படவேண்டியதே” என்றான். பாண்டவ அவையில் க்ஷேமதூர்த்தி முன்னணியில் அமரச்செய்யப்பட்டார். அவையில் அவர் சொல் எப்போதும் ஒலித்தது. ஆனால் படையெழுச்சி தொடங்கியபோது க்ஷேமதூர்த்தி நிறைவின்மையை அடைந்தார். “இங்கே அசுரர்களும் நிஷாதர்களும் கிராதர்களுமே நிறைந்துள்ளனர். இப்படையில் நம் எல்லைக்குத் தெற்கே நம்முடன் நூறாண்டுகள் போரிட்ட ஏழு அசுரகுடியினர் இடம்பெற்றுள்ளனர். இப்போரில் இவர்கள் வென்றால் அதனால் நாம் ஆற்றலிழந்தவர்களாக ஆவோம்” என்றார்.
ஆனால் மைந்தர்கள் அதை ஏற்கவில்லை. “நமக்கு இன்று இயல்பான துணை சேதிநாடுதான். இளைய யாதவர் வெல்லப்பட இயலாதவர் என்கிறார்கள். மெய்தான், அசுரரும் அரக்கரும் நிஷாதரும் கிராதருமே இங்கிருக்கிறார்கள். ஆனால் நம் அனைவருக்குமே பொது எதிரி மேற்கே மாளவமும் கிழக்கே விதர்ப்பமும் வடக்கே அவந்தியும்தான். அவர்கள் மூவரும் அங்கிருக்கிறார்கள். அவர்களை வென்று நாம் கொள்ளப்போகும் நிலம் நம்மனைவருக்குமே பொதுவானது” என்றான் ஹஸ்திபதன். சுரவீரனும் மூஷிகாதனும் “ஆம் தந்தையே, இங்கு நமக்குள்ள இடம் அங்கில்லை. அங்கே நம் எதிரிகளுடன் சேர்ந்தமரும் நிலைக்கு ஆளாவோம்” என்றார்கள்.
படைகள் உபப்பிலாவ்யத்திலிருந்து கிளம்பிய அன்று பாடிமுற்றத்தில் களம் அமைத்து பத்ரை அன்னைக்கு குருதிபலிகொடுத்து வணங்கினர். அன்னை வெறியாட்டெழுந்து “என் மைந்தரே, கௌரவர்களிடம் செல்க! அங்குள்ளது உங்கள் வெற்றி. என் மைந்தன் தந்தையின் குருதிக்கு வஞ்சமிழைத்தவன். இளைய யாதவரின் குருதிகொண்டு என்னை நிறைவுசெய்க! என் கொழுநரை விண்ணேற்றுக!” என்று ஆணையிட்டாள். க்ஷேமதூர்த்தி “அன்னையின் ஆணை இம்முறை தெளிவாகவே உள்ளது. நமக்கு இதை மீற உரிமையில்லை” என்றார். ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும் அதை மறுத்தனர். “இனி பின்னடைதலென்பது இல்லை. அன்னையின் ஆணையை நாம் காரூஷநாட்டுக்கு மீண்டபின் மீண்டுமொருமுறை உசாவலாம்” என்றனர்.
அவர்களுடன் க்ஷேமதூர்த்தி பூசலிட்டார். “நாம் இன்றே கிளம்பி அப்புறம் செல்வோம்… நம் நாட்டுக்கு நலன் பயப்பது அதுவே” என்றார். “தந்தையே, இங்கே நாம் வாள்தொட்டு ஆணையுரைத்திருக்கிறோம்” என்றான் ஹஸ்திபதன். “அறிவிலி… அங்கும் இங்குமாக அத்தனை அரசர்களும் நிலைமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே பாண்டவ அவையில் நம்முடன் இருந்தவர்கள்தான் கேகய மன்னர் திருஷ்டகேதுவும் திரிகர்த்தமன்னர் சுசர்மரும் துஷார மன்னர் வீரசேனரும் வத்சநாட்டரசர் சுவாங்கதரும். அவர்களெல்லாரும் அப்பக்கம் சென்றுவிட்டார்கள். அணிமாறுதல் அரசியல். நாம் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல, நம் குடிகளின் நலனை மட்டுமே கருத்தில்கொள்பவர்கள்” என்றார்.
“ஆம், ஆனால் அவர்களெல்லாரும் படைவஞ்சினம் எழுவதற்கு முன்னரே சென்றுவிட்டார்கள். நாம் இங்கு வாளேந்தி வஞ்சினம் உரைத்திருக்கிறோம்” என்றான் ஹஸ்திபதன். “என்னுடன் கிளம்புக! இது உங்கள் தந்தையின் சொல்” என அவர்களுக்கு ஆணையிட்டார். “எங்கள் மூதாதையருக்காக நாங்கள் நிலைகொள்கிறோம். தந்தையைவிட சொல் மேன்மைகொண்டது” என்றான் ஹஸ்திபதன். “இழிமகனே, என்னை எதிர்க்கிறாயா? என் சொல்லை மறுதலிக்கிறாயா?” என்றார் க்ஷேமதூர்த்தி. “ஆம் தந்தையே, வேறு வழியில்லை” என்றான் ஹஸ்திபதன். “சொல்லுங்கள், உங்களில் என்னுடன் எவர் வரப்போகிறீர்கள்?” என்று க்ஷேமதூர்த்தி கேட்டார். சுரவீரனும் மூஷிகாதனும் ஒன்றும் சொல்லவில்லை.
அன்றே அவர் தன் படைகளை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரியின் படைகளுடன் சென்று சேர்ந்துகொண்டார். காரூஷநாட்டுப் படைகளில் பெரும்பகுதியினர் அவருடன்தான் வந்தனர். ஏனென்றால் அரசருக்குரிய கணையாழியால் ஆணையிட அவரால் இயன்றது. அந்த ஓலைக்கு காரூஷநாட்டின் பதினாறு படைத்தலைவர்களும் கட்டுப்பட்டார்கள். அவர்கள் அஸ்தினபுரியின் படைகளை அடைந்தபோது அது குருக்ஷேத்ரம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. கௌரவ அவையில் அவரை வரவேற்ற சகுனி “மைந்தருக்கு எதிராக களம்நிற்கப் போகிறீர்கள்” என்று சொன்னார்.
அச்சொல்லின் உள்ளுறை புரியாமல் “அவர்கள் என் மைந்தர்கள் அல்ல. என் சொல்லை தட்டியதுமே என் எதிரிகளாகிவிட்டனர். நான் என் அன்னையின் ஆணையை ஏற்று இங்கே வந்தவன்” என்றார் க்ஷேமதூர்த்தி. துச்சாதனன் “ஆனால் இங்கிருந்து அங்கு செல்லவும் உங்கள் அன்னையல்லவா ஆணையிட்டாள்?” என்றான். அவையில் எழுந்த சிரிப்பின் ஒலி க்ஷேமதூர்த்தியை கூசச் செய்தது. வந்திருக்கலாகாதோ என்னும் எண்ணம் எழுந்தது. ஆனால் துரியோதனன் “எவ்வண்ணமாயினும் என்ன? நம்மை நாடி வந்துவிட்டார். அவையமர்க, காரூஷரே! நம் வெற்றியில் மைந்தரும் வந்து இணையட்டும்” என்றான். அவர் விழிநீர் வழிய “இந்தப் பெருந்தோள்களுக்காகவும் அகன்ற உள்ளத்துக்காகவும்தான் இங்கே வந்தேன்” என்றார்.
காரூஷத்தின் படைகள் களத்தை அடைந்துவிட்டதை க்ஷேமதூர்த்தி கண்டார். அவர்களை எதிரிலிருந்து வந்த திருஷ்டத்யும்னனின் படைகள் ஏவிய அம்புகள் அறைந்தறைந்து வீழ்த்தின. ஒவ்வொருவர் வீழும்போதும் க்ஷேமதூர்த்தியின் உடல் மெல்லிய அதிர்வை அடைந்தது. பின்னர் அத்திசையை பார்க்கவேண்டியதில்லை என்று நோக்கை விலக்கிக்கொண்டார். ஆனால் ஓசைகளினூடாக அதையே அறிந்துகொண்டிருந்தது அவருடைய உள்ளம். அவர் ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும் களம்பட்ட நாளை நினைத்துக்கொண்டார். மூன்றாம்நாள் போர்முடிந்து அவர் பாடிவீட்டுக்கு திரும்பும்போதுதான் படைத்தலைவன் சிருங்கதரன் அவர் அருகே வந்து அச்செய்தியை சொன்னான். முதலில் அதன் பொருள் அவர் உள்ளத்தை அடையவில்லை. அவன் மீண்டும் சொன்னான். “அரசே, நம் இளவரசர்கள் ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும் இன்று களத்தில் விழுந்தனர்.”
“யார்?” என்று க்ஷேமதூர்த்தி நடுங்கும் குரலில் கேட்டார். “யார்?” சிருங்கதரன் “நம் இளவரசர்கள் ஹஸ்திபதனும் சுரவீரனும் மூஷிகாதனும். துரியோதனரின் மைந்தர் லட்சுமணரால் கொல்லப்பட்டார்கள்.” அவர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். சிருங்கதரன் “நாம் அவர்களுக்குரிய கடன்களை செய்யவேண்டும். அவர்களின் உடல்களை கோரிப்பெறலாம்” என்றான். “வேண்டாம்!” என்று அவர் சொன்னார். “அரசே, அதற்கு வழியும் நெறியும் உள்ளது” என்று சிருங்கதரன் சொன்னான். “வேண்டியதில்லை. அவர்கள் நம் எதிரிகள்” என்றார் க்ஷேமதூர்த்தி. செல்க என கையசைத்துவிட்டு தன் தேரை கிளப்ப ஆணையிட்டார்.
மறுநாள் சொல்சூழவை முடிந்து கிளம்புகையில் துரியோதனன் அவர் அருகே வந்து “போரின் நிகழ்வுகளை புரிந்துகொள்க, காரூஷரே! அதற்கப்பால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றான். அவர் “ஆம், அது ஊழ். வேறொன்றுமில்லை” என்றார். துரியோதனனுக்குப் பின்னால் நின்ற லட்சுமணன் அவர் அருகே வந்து “நான் தாங்கள் இங்கிருப்பதை எண்ணவில்லை, காரூஷரே. போரில் எவரென்று எண்ணமே எழுவதில்லை. அங்கிருப்போர் என் உடன்பிறந்தாரென்றாலும் உளம்கொள்வதில்லை” என்றான். “ஆம், போரில் எதிர்நிற்போர் எதிரிகளே” என்றார் க்ஷேமதூர்த்தி “நாம் வெல்வோம்… அதையே நான் இதில் காண்கிறேன்.”
அதன்பின் அவர் ஒருகணம்கூட அவர்களைப்பற்றி எண்ணவில்லை. இருமுறை சிருங்கதரன் அவர்களைப்பற்றி சொல்லத் தொடங்குகையில் கையமர்த்தி அவனைத் தடுத்தார். அவர்கள் தன் கனவிலெழக்கூடும் என எண்ணினார். ஒவ்வொருநாளும் படுப்பதற்கு முன் கனவில் அவர்களை காண்போம் என அச்சத்துடன் பின் எதிர்பார்ப்புடன் எண்ணிக்கொண்டார். அவர்கள் முழுமையாகவே மறைந்துவிட்டிருந்தார்கள். அப்போது களத்தில் ஏன் அவர்களின் நினைவு எழுந்தது என வியந்தார். என்றுமில்லாத அளவு களத்தில் காரூஷர் விழுந்துகொண்டிருந்தார்கள் என்பதனாலா?
“காரூஷர் பின்னடைக… அம்புகளின் தொடுஎல்லைககுப் பின்னால் யானைகளை அரணாக்கி நிலைகொள்க” என அவருடைய ஆணை ஒலித்தது. காரூஷப் படையினர் இழப்பை உணர்ந்துவிட்டிருந்தனர். இயல்பாகவே இணைந்துகொண்ட படைவீரர்கள் அல்ல அவர்கள். இயல்பாக படைக்கெழுந்தவர்கள் ஆயிரவர் மட்டுமே. எஞ்சியோர் வீட்டுக்கு இருவர் வந்தாகவேண்டுமென்னும் ஆணைக்கேற்ப படைக்கலம் எடுத்து கிளம்பியவர்கள். பெரும்பாலானவர்கள் காடுகளில் வேட்டையாடி தோலும் ஊனும் சேர்ப்பவர்கள். தேனெடுப்பவர்கள். போர் என்றால் என்னவென்று அவர்கள் முன்னர் அறிந்திருக்கவே வாய்ப்பில்லை.
அவர் முன் காரூஷநாட்டு வீரர்கள் இருவர் அம்புபட்டுச் சரிந்தனர். ஒருவன் அவர்களுக்கு அப்பால் நின்று நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் உடல் வலிப்புகொண்டதுபோல துள்ளியது. கண்ணுக்குத் தெரியா கையொன்றால் பற்றி முறுக்கப்பட்டதுபோல திருகிக்கொண்டது. அவன் நிலத்திலிருந்து சுண்டுபுழுவைப்போல துள்ளி துள்ளி எழுந்தான். உறுமியபடி பாய்ந்து விழுந்துகிடந்த நால்வரை ஒரே தாவலில் கடந்து அவரை நோக்கி வந்தான். அவன் பற்கள் கிட்டித்து, தாடை இறுகி, கைவிரல்கள் இழுபட்டு விறைத்திருந்தன. விலங்குபோல உறுமியபடி “நான் வந்துள்ளேன்! தந்தையே, நானே வந்துள்ளேன்!” என்றான்.
அவன் குரலை அவர் உடனே அடையாளம் கண்டுகொண்டார். ஹஸ்திபதனுக்கே உரிய குரலிழுப்பு. “நான் வந்துள்ளேன், தந்தையே! என்னுடன் இளையோரும் உள்ளனர்!” என்றான். “சொல்க!” என்றார் க்ஷேமதூர்த்தி “செல்க! இக்கணமே கௌரவர்களைத் துறந்து மறுபக்கம் செல்க! பாண்டவர்களுடன் சேர்ந்துகொள்க! ஆணை! ஆணை! ஆணை!” என்று அவன் கூச்சலிட்டான். உதைத்து தூக்கி வீசப்பட்டவனாக தெறித்து மல்லாந்து விழுந்தான். அவன் மேல் வானிலிருந்து இரு அம்புகள் வந்து தைத்து நின்றன. அவன் உடல் நெளிந்து பின் மெல்ல தளர்ந்தது. விழிகள் உருண்டு நிலைக்க வாய்திறந்து பற்கள் வெறித்துத் தெரிந்தன.