சொல்சூழவையிலிருந்து வெளியே வந்ததும் கூர்ஜர மன்னர் சக்ரதனுஸ் பிருஹத்பலனை அணுகி மெல்லிய குரலில் “நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார். பிருஹத்பலன் “நாம் கோழைகள். நம்முள் ஒற்றுமையில்லை. அந்த நெறியிழந்த அந்தணனும் திருட்டுஷத்ரியனாகிய அவன் மைந்தனும் எங்களை தாக்கினால் பிற ஷத்ரியர்கள் வெறுமனே நோக்கியிருப்பீர்கள். உங்களுக்கு எங்கள் மண்ணை பங்கிட்டு அளிப்பதாக அவர்கள் சொன்னார்களென்றால் உடனிருந்து எங்களை கொல்லவும் செய்வீர்கள்” என்றான். “உங்கள் அச்சத்துக்கும் மடமைக்கும் பரிசு இறப்புதான்… உங்கள் குலங்கள் இந்தப் பாழ்நிலத்தில் முற்றழியும். அது ஒன்றே நிகழவிருக்கிறது.”
அவன் சென்றதை நோக்கிவிட்டு சக்ரதனுஸ் திரும்பி பிற அரசர்களை நோக்கினார். அவன் பேசியதை எவரும் கேட்கவில்லை என உறுதிசெய்தபடி அவர் முற்றத்திலிறங்கி தன் படைநோக்கி சென்றார். அங்கே அவருக்காக காத்து நின்றிருந்த மாளவ மன்னர் இந்திரசேனர் “நாம் இன்றைய படைசூழ்கையில் நமது பங்களிப்பைப் பற்றி பேசவேண்டியுள்ளது. நாம் அஞ்சிவிட்டோம் என எவரும் எண்ணவேண்டியதில்லை. இன்றைய படைசூழ்கை அரிதானது. எனவே இன்று நமக்கே வெற்றி என உறுதியாகத் தோன்றுகிறது” என்றார். சக்ரதனுஸ் “நமக்கான ஆணைகளை அவர்களே பிறப்பித்துவிட்டிருக்கிறார்கள். நாம் செய்வதற்கொன்றுமில்லை. சென்று தலைகொடுப்பதை தவிர” என்றபின் தன் தேரிலேறிக்கொண்டார்.
தன் பாடிவீட்டுக்கு வந்தபோது அங்கே அவருக்காக கவசங்களுடனும் படைக்கலங்களுடனும் வீரர்கள் காத்திருப்பதை கண்டார். அவர் அமர்ந்துகொண்டதும் அவர்கள் அவருக்கு அவற்றை அணிவிக்கலாயினர். அகிபீனா உருளைகள் வந்ததும் அவற்றில் ஒன்றை எடுத்து வாயிலிட்டுக்கொண்டார். இன்னும் சிலவற்றை எடுத்து தோல்கச்சையில் கட்டிக்கொண்டு எழுந்தார். தன் வாளை அவர்கள் நீட்டியபோது அதை வாங்கி சற்றுநேரம் கூர்ந்து நோக்கினார். பின்னர் பெருமூச்சுடன் அதை இடையிலணிந்தபடி தேர் நோக்கி சென்றார்.
நிலத்தில் விழுந்து நைந்த பெரிய துணித்திரைபோல கௌரவப் படை அவருக்கு பட்டது. ஆங்காங்கே அதன் அணிவகுப்பு உடைந்திருந்தது. படைகளின் இழப்புகளுக்கேற்ப அவற்றை இணைத்து இணைத்து ஒன்றாக்கிக்கொண்டே இருந்தமையால் குலங்களும் குடிகளும் கலந்து அடையாளங்களில்லாத பெருந்திரள் எனத் தெரிந்தது. அவருடைய தேர் சென்றுகொண்டிருக்கையில் திடீரென்று படைகளுக்குள் இருந்து ஒரு குரல் ஒலித்தது. “அரசே, ஒன்று கேளுங்கள்!” அவர் தேரை நிறுத்தும்படி பாகனிடம் கையசைத்தார். அவ்வாறு கூவிய வீரனை எவரோ அடக்கிவிட்டனர் என்று தெரிந்தது. அவர் தேரை திருப்பி அருகே சென்றார். “என்ன? என்ன குரல் கேட்டது இப்போது?” என்றார்.
படைத்தலைவன் “ஒன்றுமில்லை, அரசே. நமது படைவீரன் ஒருவன் தவறுதலாக புரவியை அழைத்தான்” என்றான். அவனை கூர்ந்து நோக்கியபடி “எனக்கு செவி கேட்கும்” என்றார் சக்ரதனுஸ். “அரசே, அவன் பித்தன். போரில் உளம்பிறழ்ந்துவிட்டான்…” என்றான் படைத்தலைவன். “அவன் எவன்?” என்றார் சக்ரதனுஸ். அதற்குள் படைநிரைகளுக்குள் இருவரால் பற்றப்பட்டிருந்த ஓர் இளைஞன் உதறி எழுந்து “நான்! அழைத்தவன் நான்! அரசே, நான் தங்களிடம் சில சொற்கள் உரைக்க விழைகிறேன்” என்றான். “சொல்” என்றார் சக்ரதனுஸ். “என் பெயர் கௌமாரன். கூர்ஜரத்தின் தெற்கே சிந்துநிலத்தைச் சேர்ந்தவன். அரசே, இந்தப் போர் எதற்காக? எதன்பொருட்டு நாங்கள் இங்கே வந்து எங்கள் தோழர்களை அம்புகளுக்கு பலிகொடுக்கிறோம்?”
“நீ படைவீரன் என்பதனால்!” என்று சக்ரதனுஸ் சொன்னார். “ஆம், நான் இறக்க சித்தமானவன். ஷத்ரியனாகப் பிறந்தமையாலேயே இறந்தேயாகவேண்டுமென அறிந்துகொண்டவன். களம்படுதலை பெருமையாக எண்ணுபவன்” என்று அவன் சொன்னான். “நான் கேட்பது இந்தப் போரில் கூர்ஜரம் எதை அடையவிருக்கிறது என்று. எவருக்கெதிராக நாம் போரிட்டுக்கொண்டிருக்கிறோம்? நம் எதிரிகள் இருவர். யாதவர்களும் சைந்தவர்களும். இதோ இருவருமே நம்முடைய தோழர்களாக உடன் நின்றிருக்கிறார்கள். அங்கே படையெழுந்திருப்பவர்களுக்கும் நமக்கும் எந்தப் பூசலுமில்லை. நாம் எதன்பொருட்டு போரிட்டு சாகிறோம்?”
“படைவீரனிடம் அரசன் கொள்கைகளை விளக்கவேண்டியதில்லை” என்றார் சக்ரதனுஸ். “ஆம், ஆனால் தன் குடியிடம் மறுமொழி சொல்லியாகவேண்டும். நான் கேட்டுக்கொண்டிருப்பது எனது வினாக்களை அல்ல. என் குடியின் வினாக்களை. இங்குள்ள அத்தனை படைவீரர்களும் கேட்டுக்கொண்டிருப்பவற்றை” என்று கௌமாரன் சொன்னான். “எந்த அரசனும் குடியின் முன் படைவீரனும் காவலனுமே. என் வினாவின்பொருட்டு என்னை கொல்லலாம். ஆனால் என் குடியின் குரலாக நான் ஒலிக்கிறேன் என்பதை நீங்கள் மறுக்கவியலாது.”
சக்ரதனுஸ் அங்கே நின்றிருந்த தன் படைவீரர்களை நோக்கினார். பின்னர். “இது எனது படையின் வினாவா?” என்றார். அவர்கள் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தனர். “சொல்லுங்கள், இச்சொற்கள் உங்கள் அனைவரின் பொருட்டும் எழுந்தனவா?” அவர்களிடமிருந்து மறுமொழி வரவில்லை. “ஆமென்றே இந்தச் சொல்லின்மையை நான் எடுத்துக்கொள்கிறேன்” என்றார் சக்ரதனுஸ். “உங்கள் வினாவாக இச்சொல் திரண்டெழுந்துள்ளது என்றால் நான் மறுமொழி சொல்லியாகவேண்டும்” என்றார். பின்னர் கைகளைத் தூக்கி “அனைவரும் அறிக, எனக்கு ஒரு சொல்லும் கூறுவதற்கில்லை!” என்றார்.
நான் இப்போரில் கலந்துகொள்ள ஏன் முடிவெடுத்தேன்? எப்படி இப்படையுடன் வந்து சேர்ந்தேன்? எந்த வினாவுக்கும் என்னிடமே மறுமொழி இல்லை. சென்ற நூறாண்டுகளாகவே கூர்ஜரம் இந்நிலத்தின் எப்பூசல்களிலும் கலந்துகொண்டதில்லை. எந்தப் போரிலும் நாம் இறங்கியதுமில்லை. ஏனென்றால் பாரதவர்ஷத்தின் தொல்குடி ஷத்ரியர்கள் நம்மை சிறுகுடியென நடத்தினர். அவைகளில் சிற்றிடமே அளித்தனர். ஆகவே நாம் அவர்களையும் முழுமையாகவே புறக்கணித்தோம். நமக்கு அவர்களின் சாலைகளோ நீர்வழிகளோ தேவையில்லை. அவர்களின் வணிகத்தொடர்பு நமக்கில்லை. நாம் கடலையும் சிந்துவையும் நம்பி வாழ்பவர்கள். நமக்கு விரிந்தகல எல்லையில்லா நிலம் மேற்கே கிடக்கையில் அவர்களுக்கும் நமக்கும் எல்லைப்பூசல்களும் இல்லை.
ஆயினும் இந்தப் போரின் நடுவே வந்து நின்றிருக்கிறேன். எவ்வண்ணம் அது நிகழ்ந்தது? நான் அறியாத ஏதோ விசை. ஒவ்வொருநாளுமென இங்குள்ள இப்பூசல் என்னை வந்தடைந்துகொண்டிருந்தது. என்னை அறியாமலேயே இவற்றில் நானும் உள்ளத்தால் பங்குகொண்டேன். இவர்களில் ஒருவனாக நடித்தேன். எனக்கு இளைய யாதவர் மேல் கசப்பிருந்தது. ஆகவே அவருக்கு எதிரியான திருதராஷ்டிரர் மைந்தருடன் என் அகம் அணுக்கம் கொண்டது. என்னையறியாமலேயே உள்ளே நுழைந்துகொண்டிருந்தேன். ஒருநாளும் இப்போரில் நாம் பங்குகொள்ளப் போவதில்லை என்றே எண்ணியிருந்தேன். ஈடுபடலாகாதென்ற உறுதியையே வைத்திருந்தேன்.
இளையோரே, தன்னைச் சூழ்ந்து நிகழ்வனவற்றுக்கு செவிகொடுப்பவன் உளம் கொடுக்கிறான். உளம்கொடுப்பவன் இறுதியில் உயிரும் கொடுக்க நேரும். அதுவே நிகழ்ந்தது. என்னுள் நிகழ்ந்த போரை வெளியே நிகழ்த்த விழைவுகொண்டேன். இந்தப் போர் உடனடியாக நிகழ்ந்திருந்தால் நான் முற்றாக விலகியிருக்கக்கூடும். இது நாளுக்குநாள் கணத்துக்குகணம் என அணுகிக்கொண்டிருந்தது. உள்ளத்தால் நூறுமுறை இப்போரை நிகழ்த்திக்கொண்டபின் இதை களத்தில் நிகழ்த்தாமல் ஒழிய என்னால் இயலவில்லை. உங்கள் அனைவரையும் போருக்கு இட்டுவந்துள்ளேன்.
இந்தப் போரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்குகள் இருந்தன. ஒவ்வொருவரையும் விழைவுகள் ஆண்டன. எனக்கு எந்த இலக்குமில்லை, எந்த விழைவுமில்லை. போருக்கென மட்டுமே போருக்கு வந்தவன் நான். இந்தப் போரில் இறப்பவர்கள் அனைவரும் எந்த நோக்கமும் இன்றி இறப்பவரே. இளையோரே, நாம் தோற்றால் மட்டும் வெறுமையை சென்றடையப் போவதில்லை, வென்றாலும் எஞ்சுவது அதுவே. இப்போரில் நம் பட்டத்து இளவரசன் மகிபாலன் கொல்லப்பட்டான். என் இளைய மைந்தன் உத்ஃபுதனையும் இழந்துள்ளேன். இனி இங்கே நான் எதை அடைந்தாலும் முற்றிழந்தவனாகவே உணர்வேன். நான் விழைவதென இனி ஒன்றும் இல்லை.
“நீங்கள் எண்ணுவதுபோல இப்போர் இன்று முற்றழிவை நோக்கி மட்டுமே செல்கிறது. வேறேதும் இதில் விளையப்போவதில்லை. இளையோரே, இங்கு படைகொண்டு வந்துள்ள எவரும் இங்கிருந்து மீள வாய்ப்பில்லை என்று உணர்க! நான் உங்களனைவரையும் இந்தக் கொல்சுழலில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறேன். இதிலிருந்து ஒரு அடிகூட பின் வைக்கவும் நமக்கு வழியில்லை” என்று கூர்ஜர சக்ரதனுஸ் சொன்னார். “ஒன்றுமட்டும் சொல்கிறேன், என் விழைவெனும் பிழைக்காக இந்தக் களத்தில் உயிர்கொடுப்பேன். திரும்பி உயிருடன் இங்கிருந்து சென்றால் இப்பிழையின் சுமையுடன் என்னால் வாழவியலாது என இரு நாட்களுக்குள் உணர்ந்துவிட்டேன்.”
“அரசே” என கைநீட்டி ஏதோ பேச எழுந்த படைத்தலைவனை நோக்கி கையமர்த்திவிட்டு சக்ரதனுஸ் சொன்னார் “ஆகவே, உங்களை ஊக்கப்படுத்தும் எதையும் என்னால் செய்ய முடியாது. உங்களுக்கு எதையும் வாக்களிக்கவியலாது. உங்களிடமும் என் மூதாதையரிடமும் தொல்தெய்வங்களிடமும் உரைக்க ஒரு சொல்லேனும் என்னிடமில்லை.” தலைக்குமேல் கைகூப்பியபின் சக்ரதனுஸ் சென்று தன் தேரை திருப்ப ஆணையிட்டார். அக்கணம் வெடித்தெழுந்ததுபோல “மாமன்னர் சக்ரதனுஸ் வெல்க! கூர்ஜரம் வெல்க! பெரும்பாலைகளின் நாடு வெல்க!” என அவர் படையினர் வாழ்த்துக்கூச்சலெழுப்பினர். அவர் நீள்மூச்சுடன் தன் தேர்த்தட்டில் சாய்ந்து அமர்ந்துகொண்டார்.
படைமுகப்பை அடைந்து தேர் நின்றபோது அவர் தன் பாகனிடம் “நான் சொன்னவற்றை கேட்டாயல்லவா?” என்றார். “ஆம், அரசே” என்று பாகன் சொன்னான். “நான் இன்று மீளப் போவதில்லை” என்றார். பாகன் “ஆம், நன்று” என்றான். “நான் களம்படவேண்டியது பார்த்தனின் கையால். அவருடைய அம்புகளே என் நெஞ்சிலிருக்கவேண்டும்.” பாகன் சில கணங்களுக்குப் பின் “ஆம்” என்றான். “நமது படைகள் உளம்தளர்ந்து பின்னடையுமென்றால் அது நன்று, பின்னடையும்தோறும் அவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பாகும். அவர்களில் எத்தனைபேர் எஞ்சினாலும் அது நம் குடிக்கு நலம்பயக்கும்” என்றார். பாகன் தலையசைத்தான்.
சக்ரதனுஸ் தொலைவில் தெரிந்த காவல்மாடத்தை நோக்கினார். அதன்மேல் புலரிமுரசு காத்திருந்தது. படைகள் போர்க்கணத்துக்காக அணுவணுவாக அகத்தே முன்னகர்ந்துகொண்டிருந்தன. நின்றிருக்கும் படையில் தெரியும் அந்த நுண்நகர்வு அவருக்கு விந்தையெனப்பட்டது. “இளைய பாண்டவர் எங்கிருக்கிறார் என்று சொல்லக்கூடுமா?” என்று சக்ரதனுஸ் கேட்டார். “மிக எளிதாக. அரசே, அவர் எங்கிருக்கிறாரோ அதற்கு நேர்மேலாக ஒரு செம்பருந்து வட்டமிடும். அவ்வட்டத்தின் அச்சே அவருடைய தேர்” என்றான் பாகன். “ஏன்?” என்று சக்ரதனுஸ் கேட்டார். “அது இந்திரன் என்கிறார்கள். தன் மைந்தனின் களமறம் காண வந்துள்ளானாம்” என்றான் பாகன்.
சக்ரதனுஸ் “நமது குடித்தெய்வம் இங்கு வந்துள்ளதா?” என்றார். “அனல்காற்றுகளின் தேவனாகிய விஸ்வம்பரன். அனைத்தையும் உண்ணும் ஃபுஜ்யு. பாலைமணலில் உறையும் பர்ஹிஸ். தேவர்களே, எங்குள்ளீர்கள்? என்னை சூழ்க! என் எருமைமறம் கண்டு மகிழ்க!” என்று சக்ரதனுஸ் சொன்னார். அக்கணம் காற்று ஒன்று புழுதியுடனும் எரிமணத்துடனும் வீசி அவர் ஆடைகளையும் கொடியையும் படபடக்கச் செய்தது. அவர் கைகூப்பி “அருள்க! என்மேல் கனிக!” என்றார்.
படையெழுந்து மோதிக்கொண்டபோது அவரும் அலையிலென முன்கொண்டுசெல்லப்பட்டார். இலக்கு நோக்கும் கண்களுக்கும் அம்புகளை தொடுக்கும் கைகளுக்கும் ஆணையிடும் உதடுகளுக்கும் நெளிந்தும் வளைந்தும் அம்புகளுக்கு ஒழியும் உடலுக்கும் அப்பால் அவர் மலைப்புடன் அந்தப் போரை பார்த்துக்கொண்டிருந்தார். பீஷ்மரை சூழ்ந்துகொண்டு பாண்டவர்களின் முதன்மை வில்லவர்கள் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பால் அர்ஜுனனை அஸ்வத்தாமா எதிர்த்தான். ஜயத்ரதனுக்கும் சாத்யகிக்கும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. “பீமசேனர்! பீமசேனர்!” என முரசுகள் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன.
“அபிமன்யூவால் சித்ரசேனன் கொல்லப்பட்டான்!” என்று முரசுகள் முழங்கின. சுதசோமனால் நடத்தப்பட்ட யானைப்படை போர்க்களத்தை நோக்கி வந்தது. அவற்றின் முன் பெரிய சகடங்கள் கொண்ட திறந்த வண்டிகளில் எடைமிக்க கல்லுருளைகள் கொண்டுவரப்பட்டன. பாகன்களால் ஆணையிடப்பட்ட யானைகள் அந்தக் கற்களைத் தூக்கி துதிசுழற்றி குறிபார்த்து வீசின. பேரெடையுடன் வந்து அறைந்த கற்குண்டுகளால் தேர்கள் உடைந்தன. யானைகள் மத்தகம் அறைபட்டு துதிக்கை சுழற்றி கூச்சலிட்டன. சக்ரதனுஸ் தன்னருகே நின்றிருந்த புரவிவில்லவன் ஒருவன் அதிலொரு கல்லால் அறைபட்டு நசுங்கித்தெறிப்பதை உணர்ந்தார்.
கற்குண்டுகள் விழுந்து உருவான இடைவெளியில் யானைகள் ஏந்திய தண்டுகள் வந்து மோதின. கண்ணுக்குத் தெரியாத யானை ஒன்றின் தந்தங்கள் அவை என சக்ரதனுஸ் எண்ணினார். துச்சாதனன் “நம் யானைகள் பின்னடையட்டும்… தண்டுகளை எதிர்கொள்ளாதொழிக தேர்கள்!” என்று கூவினான். கற்குண்டுகள் விழுந்து உருவான வெளியில் தண்டுகளுடன் நுழைந்த பாண்டவர்களின் யானைகள் அந்தத் தண்டுகளை அங்கேயே விட்டுவிட்டு துதிக்கை சுழற்றி பிளிறியபடி பாய்ந்தன. அவற்றின்மேல் பாய்ந்தேறி இருபுறமும் சுற்றப்பட்டிருந்த வலையில் உடல்தொடுத்துக்கொண்டு தொங்கிய வில்லவர்கள் நீளம்புகளால் தேர்வில்லவரை எதிர்த்தனர். யானைகள் அணுகியதும் அவர்கள் பாய்ந்திறங்கி யானைகளின் உடலில் நெடுக்காக கட்டப்பட்டிருந்த நீள்வேல்களை எடுத்துக்கொண்டு வில்லவர்களை குத்தித் தூக்கி அப்பாலிட்டனர்.
யானைமேல் ஏறி வந்த பீமன் நீண்ட சங்கிலியில் கட்டப்பட்ட ஈட்டிமுனைகள் கொண்ட இரும்புக்குண்டை தூக்கிச்சுழற்றி தேர்களை தாக்கினான். அவன் ஏறிவந்த வக்ரதந்தம் என்னும் முதிய பெருங்களிறுக்கு முன் பிற யானைகள் குழவிகளெனத் தெரிந்தன. வானிலிருந்து தாக்குபவன்போல பீமன் அவர்களை அறைந்து சிதறடித்தபடி வந்தான். துச்சாதனனின் தேர் உடைந்தது. துர்மதன் தன் தேரை இரும்புருளை அறைவதற்குள் கீழே குதித்தான். மத்தகம் உடைந்த இரு களிறுகள் பிளிறியபடி பின்னடைந்து தங்களைத்தாங்களே சுற்றிக்கொண்டன. ஒன்று தேர் ஒன்றை தூக்கிச் சுழற்றி அப்பால் வீசியது.
“பால்ஹிகர் எழுக! பால்ஹிகர் பீமனை எதிர்கொள்க!” என்று முரசுகள் கூவிக்கொண்டிருந்தன. பால்ஹிகரின் யானையாகிய அங்காரகன் மற்ற யானைகளுக்குமேல் எழுந்த மத்தகத்துடன் பிளிறியபடி வந்தது. அதன் ஓசையை கேட்டதும் அது தனக்கான அறைகூவல் என புரிந்துகொண்டு வக்ரதந்தம் மறு ஒலி எழுப்பியது. பால்ஹிகரும் பீமனும் தொங்குகதைகளால் மோதிக்கொண்டார்கள். பால்ஹிகரின் கதை பெரிதாகையால் அது சுழன்று வரும் தொலைவும் மிகுதியாக இருந்தது. ஆகவே அதை தவிர்த்து ஒழியவும் அது அணுகுவதற்குள் தன் இரும்புருளையால் அறையவும் பீமனால் இயன்றது.
அவ்விரு களிறுகளும் தனியாக தங்களுக்குள் போரிட்டன. மத்தங்களால் முட்டிக்கொண்டு பின்னடைந்து வால்சுழற்றி செவிவிடைத்து பிளிறி முன்னால் பாய்ந்து மீண்டும் முட்டின. பீமனின் உருளைபட்டு அங்காரகனின் நெற்றிக்கவசம் உடைந்தது. மீண்டுமொருமுறை அவனுடைய உருளை சென்றறைந்தபோது ஈட்டிமுனை அங்காரகனின் மருப்பில் பட்டு அது பிளிறியது. பால்ஹிகர் கூவியபடி எழுந்து நின்று விசையுடன் தன் கதையால் வக்ரதந்தத்தை அறைந்தார். அதன் மத்தகம் உடையும் ஓசையே கேட்பதுபோலிருந்தது. அது தன் துதிக்கையை சுழற்றியபோது அக்குழலிலிருந்து குருதி தெறித்தது. அலறியபடி அக்களிறு பக்கவாட்டில் சரிந்து விழ பீமன் அதிலிருந்து பாய்ந்து அப்பால் விலகினான். அங்காரகன் தள்ளாடியது. பால்ஹிகர் அதை பின்னடையச்செய்து கெளரவப் படைகளுக்குள் கொண்டுசென்றார்.
போரின் படைக்கலக் கொப்பளிப்புக்கு நடுவிலூடாக அவருடைய தேர் அர்ஜுனனை நாடி சென்றது. அர்ஜுனனை எதிர்கொள்ள முடியாமல் அஸ்வத்தாமன் பின்னடைந்துகொண்டிருந்தான். ஒன்றெனக் கிளம்பி சுழல்விசையால் நூறாக மாறும் மாயாதராஸ்திரத்தை அஸ்வத்தாமன் செலுத்தினான். தேரிலிருந்து உதிர்வதுபோல் இறங்கி அக்கணமே சுழன்றேறி அவற்றை ஒழிந்து அர்ஜுனன் எட்டுகோல் நீளமுள்ள பேரம்பால் அஸ்வத்தாமனின் தேர்மகுடத்தை உடைத்தான். திரைவிலகுவதுபோல் காட்டி சுழன்றுவரும் பிரசமானாஸ்திரத்தை அர்ஜுனன் ஏவ அஸ்வத்தாமன் அதை நிகரான மாதனாஸ்திரத்தால் செறுத்து சிதறடித்தான். குறிய தண்டும் தடித்த அலகும் கொண்ட சிசிராஸ்திரம் அறைந்த இடத்தை உடைத்து சில்லுகளாக்கியது. அது இன்னொரு சிசிராஸ்திரத்துடன் விண்ணில் முட்டிக்கொண்டபோது அனல்பொறி பறக்க அவை சிதறி விழுந்தன.
அஸ்வத்தாமனின் பின்வில்லவனாக சக்ரதனுஸ் சென்று சேர்ந்துகொண்டார். அவருடைய அம்புகள் பட்டு அர்ஜுனனை தொடர்ந்து வந்துகொண்டிருந்த வில்லவன் ஒருவன் தேர்த்தட்டில் விழுந்தான். அங்கே இன்னொருவன் பாய்ந்தேறி அம்பு தொடுக்க அவனை ஒழிந்து அருகே புரவியிலமர்ந்து வில்தொடுத்த ஒருவனை சக்ரதனுஸ் வீழ்த்தினார். அர்ஜுனன் அவரை பார்க்கவில்லை. அவன் விழிகள் அஸ்வத்தாமனின் விழிகளை மட்டுமே நோக்குவன போலிருந்தன. ஆனால் சக்ரதனுஸ் ஏவிய அம்புகள் அனைத்தையும் அர்ஜுனனுடைய உடல் இயல்பாக விலகி தவிர்த்தது. அவன் ஒளியாலானவன், பருப்பொருட்களால் தொடமுடியாதவன் என்று தோன்றியது.
அப்பால் பீமனால் அறையப்பட்ட யானைகள் கலைந்து பேரோசை எழுப்பின. அவற்றைக் கண்டு விலகிய படைகளால் ஓர் அலையெழுந்தது. அந்த அலையை அர்ஜுனனோ அவனுடன் போரிட்டுக்கொண்டிருந்தவர்களோ அறியவில்லை. அவ்வலையில் அவர்கள் எழுந்தமைய அவர்களை அது கடந்துசென்றது. அந்த யானைகள் அலறியபடி விலகிச்செல்ல மீண்டும் படைகள் ஒருங்கிணைந்தபோது பிறிதொரு அலை எழுந்து அவர்களை எழுந்தமையச் செய்தது. அவர்கள் சூழ நிகழ்ந்துகொண்டிருப்பது எதையும் அறியாதவர்களாக அம்புகளால் அறைந்துகொண்டிருந்தனர்.
“அரசே, நமது படையினர் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூர்ஜரத்தின் படைத்தலைவன் மணிகர்ணன் கூவினான். சக்ரதனுஸ் திரும்பி நோக்கியபோது படைமுகப்பில் கூர்ஜரர்களே நிறைந்திருப்பதை கண்டான். விழாவில் களியாட்டு கொள்பவர்களைப்போல அவர்கள் கூச்சலிட்டனர். வெறியுடன் ஒருவரை ஒருவர் உந்திக்கொண்டு போர்முகப்புக்கு சென்றனர். அவர்களுக்கு அப்பால் பாண்டவர்களின் படைவிளிம்பில் சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் அதிரும் வில்லுடன் நின்றிருந்தார்கள். அம்புகள் எழுந்து வந்து படிய கூர்ஜரப் படை பால்பொங்குதலில் குளிர்நீர் விழுந்ததுபோல் அடங்குவதை அவர் கண்டார். “பின்னடைக! கூர்ஜரர் பின்னடைக!” என்று அவர் ஆணையிட்டார்.
அவருடைய ஆணை காற்றில் முரசொலியாக எழுந்து அங்கே சூழ்ந்து அதிர்ந்தது. ஆனால் கூர்ஜரர்கள் எதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் பெருகிச்சென்று கற்பாறையில் தலையறைந்து செத்துக்குவியும் சிறுபறவைகள்போல அர்ஜுனனின் மைந்தரின் அம்புகளுக்கு இரையாகிக்கொண்டிருந்தார்கள். “அகன்று விரிவது ஒழிக! கூர்கொள்க! ஜயத்ரதருக்குப் பின்னால் நிலைகொள்க!” என அவர் தன் படைகளுக்கு ஆணையிட்டார். ஆனால் அவர்கள் மேலும் மேலும் களிவெறிகொண்டார்கள். பலர் நடனமாடுவதைக் கண்டு அவர் திகைத்தார். வாள்களையும் வேல்களையும் வானிலெறிந்து கூச்சலிட்டார்கள். நெஞ்சிலும் தொடையிலும் அறைந்து துள்ளித்துள்ளி எழுந்தார்கள். அருகே நின்றவன் நெஞ்சில் அம்புபட்டு சரிகையில், தலையறுந்து உடல் தள்ளாடி விழுகையில் அவன் குலத்தையும் பெயரையும் சொல்லி நகையாடினர்.
சக்ரதனுஸ் வில் தாழ்த்தி பின்னடைந்து அவர்களை பார்த்துக்கொண்டு நின்றார். அவர்களில் அப்போது எழுந்திருப்பது என்ன விசை என்று அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவர் முகங்களும் தெய்வக்கெட்டு ஆட்டத்தின்போது பூசகர் அணியும் மர முகமூடிகளைப்போல வெறிநகைப்பில் இளித்து தசை வலித்திருந்தன. அவர்களின் நடனம் படையில் அலையலையாக எழுந்தமைந்தது. படைத்தலைவன் “உயிர்கொடுப்பதற்கென்று எழுந்துவிட்டார்கள். இனி நாம் ஒன்றும் செய்வதற்கில்லை, அரசே!” என்றான். பின்னர் தலைவணங்கி தன் வேலை எடுத்துக்கொண்டு தானும் வெறிக்கூச்சலிட்டபடி படைமுகப்பு நோக்கி சென்றான்.
போர்முனையில் கூர்ஜரர்களால் பாண்டவப் படைக்கு பேரிழப்பு ஏற்பட்டதை காணமுடிந்தது. உயிரச்சமில்லாது வந்து வந்து அறைந்த கூர்ஜரர்களின் தாக்குதலால் சிதைந்து பரவிய பாண்டவப் படை வளைந்து தொய்ந்து பின்னடைந்து பல துண்டுகளாக உடைந்தது. அவர்களை கொன்றழித்தபடி ஊடுருவிச் சென்றுகொண்டே இருந்தனர் கூர்ஜரர். அவர்களுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்த முழவுகள் அமைதியாயின. போர்க்கூச்சல்களும் சாவொலிகளுமன்றி வேறெந்த ஓசையும் அங்கே எழவில்லை.
அபிமன்யூ எதையும் அறியாதவன்போல அம்புகளை தொடுத்துக்கொண்டே இருந்தான். சுழன்று விரிந்த தொகையம்புகள் கூட்டம் கூட்டமாக கூர்ஜரர்களை வீழ்த்தின. கொன்று கொன்று சலிக்காமல் போரிடுகையில் அவன் விளையாடும் சிறுவன் என தோன்றினான். அவன் இருபக்கங்களையும் காத்தனர் சுருதசேனனும் சுருதகீர்த்தியும். அவர்களின் அணுக்கப்படைகள் சிதறி விலகிய பின்னரும் அவர்கள் நிலைநகரவில்லை. அவர்கள் கூர்ஜரர்களால் சூழ்ந்துகொள்ளப்பட்டபோது இருபுறங்களிலும் இருந்து சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் வந்து சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் அபிமன்யூவிடம் பின்னடைய ஆணையிட்டபடியே கூர்ஜரர்களை கொன்றனர். அபிமன்யூ சொல்கேட்காத உளத்தொலைவிலெங்கோ இருந்தான்.
கூர்ஜரப் படை முற்றழிவதை சக்ரதனுஸ் கண்டார். உதிரிகளாக எஞ்சியிருந்த தேர்வில்லவரும் பரிவில்லவரும் வேலர்களும் வீழ்ந்துகிடந்த உடன்படையினரின் உடல்களின்மேல் ஏறி மேலும் விசைகொண்டு முன்னகர்ந்து அம்புகள் பட்டு விழுந்தனர். இறுதியாக எஞ்சிய சிலர் உடல்களில் கால்தடுக்கி விழுந்தனர். எழுந்து வேலை ஓங்கியபடி சென்று களம்பட்டனர். தேரிலிருந்து இறுதி கூர்ஜரன் அம்புபட்டு நிலம்பட்டபோது அபிமன்யூ தன் வில்லை தாழ்த்தி தலையை அசைத்து முகத்தில் விழுந்த குழலை பின்னால் தள்ளினான். கடுமை தெரிந்த முகத்துடன் கைதூக்கி வெற்றிச்செய்தியை அறிவித்தான்.
ஆனால் பாண்டவப் படையிலிருந்து வெற்றிமுரசுகள் எழவில்லை. அபிமன்யூ சீற்றத்துடன் முரசுமேடையை ஏறிட்டு நோக்கி கைதூக்கி வசைபாடினான். பாண்டவப் படையினர் பின்னிருந்து மீண்டும் ஒருங்குகூடி நிரையாகி முன்னால் வந்தனர். அவர்களில் பெரும்பகுதியினர் களம்பட்டு கூர்ஜரர்களுடன் சேர்ந்து களத்தை நிறைத்திருந்தார்கள். சுருதகீர்த்தி தேரிலிருந்து பாய்ந்து புரவிமேல் ஏறிச்சென்று கைவீசி வெற்றிமுரசு ஒலிக்க ஆணையிட்டான். அப்போதும் முரசுமேடையிலிருந்தவர்கள் வாளாவிருந்தனர்.
சக்ரதனுஸை நோக்கி வந்த தசார்ணத்தின் படைத்தலைவன் சாஜன் “மாபெரும் தற்கொடை, அரசே! கூர்ஜரத்தின் வீரர்களில் ஒருவரும் எஞ்சவில்லை. ஒருவர்கூட ஓரடிகூட பின்னெடுக்கவில்லை” என்றான். சக்ரதனுஸ் வெறுமனே நோக்கி நின்றார். “அவர்கள் இருமடங்கு பாஞ்சாலர்களை பலிகொண்டனர்!” என்று அவன் மீண்டும் சொன்னான். “தற்கொடையான வீரர்களின்பொருட்டு மாவீரரை ஏத்தும் முந்நடை முரசொலி எழவேண்டும்! அதுவே மரபு” என்றான். அதற்குள் கௌரவப் படையினரிடமிருந்து முந்நடை முரசு ஒலிக்கத் தொடங்கியது. “மாவீரர் வெல்க! விண்புகுந்தோர் வாழ்க! கூர்ஜரர் வெல்க!” என்று கௌரவப் படையினர் வேல்களையும் வாள்களையும் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர்.
எதிர்பாராதபடி பாண்டவர்களின் முரசுமேடைகளில் இருந்தும் முந்நடை முரசொலி எழத் தொடங்கியது. பாண்டவப் படையினர் அதை எதிர்பாராமல் குழம்பி குரல்முழக்கமெழுப்பினர். “விண்புகுந்தோர் வெல்க! மாவீரர் வெல்க!” என்று பாண்டவர்களில் எங்கிருந்தோ குரல்கள் எழ அவர்களின் படையினரும் அம்முழக்கத்தை எழுப்பத் தொடங்கினர். அவ்விரு படைகளும் ஒன்றென ஆகி தெய்வமெழும் விழவில் வாழ்த்தொலிப்பவர்கள்போல கூச்சலிட்டனர். அவர்களின் தலைக்குமேல் முரசுகள் தெய்வத்தை நோக்கி என முழக்கமிட்டுக்கொண்டிருந்தன.
சக்ரதனுஸ் தன் கன்னங்களில் விழிநீர் வழிவதை உணர்ந்தார். கைதூக்கி தன் அணுக்கவில்லவரிடம் ஆணையிட்டபின் அர்ஜுனனை நோக்கி சென்றார். அஸ்வத்தாமன் வில்தாழ்த்தி பின்னடைந்த இடைவெளியில் புகுந்துகொண்டார். அவர் அம்புகள் எழுந்து அர்ஜுனனின் தேரை தாக்கின. ஓர் அம்பு தேரோட்டியின் நெஞ்சக்கவசத்தை அறைந்து உடைத்தது. இன்னொரு அம்பு அர்ஜுனனின் வலத்தோளில் பதிந்தது. அடுத்த கணம் எழுந்த பேரம்பால் அவர் உடல் தேருடன் சேர்த்து அறையப்பட்டது. இன்னொரு அம்பால் அவர் தலை வெட்டி வீழ்த்தப்பட்டது.