இந்நாட்களில்…

reboot23

இரண்டு நாட்களுக்கு முன் அஜிதன் கூப்பிட்டிருந்தான். “என்னப்பா பண்றே?” என்றான். “வெண்முரசு” என்றேன். “இண்டநெட் பக்கம் போயிராதே. மொட்டை வசை, அவதூறு, கிண்டல். நேரிலே சிக்கினா விஷம் வச்சே கொன்னிருவாங்க. அவ்ளவு வெறுப்பு” என்றான். “ஓ” என்றேன். “எதுக்கு இவ்ளவு வெறுக்கிறாங்க?” என்றான். “இது ஒரு சின்ன வட்டம்தான். பெரும்பாலும் சின்ன எழுத்தாளர்கள். சினிமா சான்ஸ் தேடுறவங்க. அவங்களுக்கு இது ஒரு பத்துநாள் கொண்டாட்டம்” என்றேன்.

“என்ன சார் இது, மொத்த தமிழ் சினிமாவும் நீங்க இலக்கியத்திலே உருவாக்கியிருக்கிற கதையுலகுக்கு நூத்துலே ஒண்ணு வராது. சர்க்காருக்கு கதையும் நீங்க கிடையாது, எங்கியும் அந்தப்பேச்சு இல்ல. ஆனா நீங்களே கதைய திருடிட்ட மாதிரி ஒரு கும்பல் இண்டர்நெட்டுலே  திரிச்சுப்பேசிக் கூச்சலிடுது” என்றார் வாசக நண்பர்.  “செய்யட்டும்… அதன் வழியா அவங்களும் இருக்காங்கன்னு அவங்களுக்கே காட்டிக்கிடறாங்க” என்றேன்

கிட்டத்தட்ட தீய நோய்களை மனித உருவாக ஆக்கி எரித்துக்கொண்டாடும் மனநிலை. கவனத்துக்கு வந்த பல விஷயங்களை எண்ணிச் சிரித்து மகிழ்ந்தேன் நாற்பத்தைந்து நாள் குடித்துக் கூத்தாடிவிட்டு கதை எழுதியதாகச் சொல்கிறேன் என ஓர் உடன்பிறப்பு ஆணித்தரமாக ஐயப்படுகிறார். இன்னொரு பெரியாரியப் பிழம்பு வெண்முரசு  ஒரு திருட்டுக்கதை என கண்டுபிடித்துவிட்டார்! ஆம், மகாபாரதத்தில் இருந்து திருடியது. ஏராளமான சான்றுகளை வேறு அளிக்கிறார். அந்த வசைகளில் இந்துத்துவ, சாதியக் கோஷ்டிகளும் [பல்வேறு புனைபெயர்களுடன்] பிறருடன் கைகோத்துக்கொண்டு ஈடுபட்டு கொண்டாடுகின்றன..

உண்மையில் இந்த வசைகள் எனக்கு நன்மையையே செய்கின்றன. இத்தகைய வசைகளின் அலை முன்னரும் வந்துள்ளது. அதிலுள்ள மிதமிஞ்சிய மூர்க்கம், எந்த நியாயத்துக்கும் கட்டுப்படாத வெறி ஒரு சாராரை மகிழச்செய்யும். ஆனால் அடிப்படை நியாயவுணர்ச்சி கொண்ட சிலர் அதில் ஒவ்வாமை கொள்வார்கள். அவர்களே என்னை தேடிவருபவர்கள். ஒவ்வொரு வசைமழைக்குப்பின்னரும் எனக்கு புதிய வாசகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே உண்மையில் வாசகர்கள், மற்றவர்கள் எப்போதும் எதையும் வாசிக்கப்போவதில்லை.

இந்த வசைகளையே பாருங்கள். மேலே சொன்ன மொக்கைகள் எவரும் என்னையோ என் எழுத்தையோ கேள்விப்பட்டதுகூட இல்லை. வேறுசிலருக்கு ஒற்றைவரிகள் தெரியும். அப்படி ஒருசில லட்சங்களுக்கு என் பெயரை கொண்டுசென்று சேர்த்துவிட்டார்கள். அவர்களில் ஒரு பத்தாயிரம்பேர் ’யார்ரா இந்தாள்?” என என்னை படிக்க வருவார்கள். அவர்களில் ஒரு இரண்டாயிரம்பேர் வாசகர்களாக நீடிப்பார்கள். ஐநூறுபேர் நல்ல வாசகர்களாக ஆவார்கள். அடுத்த விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்து நின்றிருப்பார்கள்.

எஞ்சிய பெருங்கும்பல் நவம்பர் இறுதிக்குள் என்பெயரை மறந்து ‘ஜெயகுமாரோ எவனோ ஒருத்தன் என்னமோ சினிமாவிலே ஏதோ எழுதினான்ல, யார்ரா அவன் மச்சி?”  “ஆமாடா, சர்க்கார் படத்திலே பத்மஸ்ரீங்கிற குட்டிக்கும் இவனுக்கும் என்னமோ பிரச்சினைன்னு சொன்னாங்க” என்ற டெம்ப்ளேட்டில் உலவிக்கொண்டிருப்பார்கள். இதுதான் எப்போதும் நிகழ்கிறது.

இவ்வாறு எனக்கு வாசகர் பெருகுவதைக் கண்டபின் ஒவ்வொரு முறையும் ‘இனிமே பேசிப்பேசி இவருக்கு விளம்பரம் குடுக்கக்கூடாது’ என இவர்களே வஞ்சினம் கூறுவார்கள். ஆனால் அதைச்செய்யாமலிருக்க அவர்களால் இயலாது. ஏனென்றால் அவர்களுக்கு என வேறு அறிவுச் செயல்பாடு ஏதுமில்லை. ஆகவே இது நல்லதுதான்.

நான் வாயைத் திறந்திருக்கக் கூடாது என நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.. ஒற்றைவரியில் இருந்து முருகதாசும் உதவியாளர்களும் முடைந்து உருவாக்கிய கதையின்போது நான் உடனிருந்தேன். வசன எழுத்தாளராக என் பணியை ஆற்றினேன். நான் நேரில்கண்ட,  நன்கறிந்த ஒன்றை அதற்குரிய தருணத்தில் சொல்லாமலிருப்பது அறமல்ல என எனக்குப் பட்டது. அதிலும் அவர் சூழப்பட்டு தாக்கப்படுகையில், அவருடைய பேட்டியில் அவர் துயரத்துடன் கண்ணீர் மல்க அதைச் சொன்னதைக் கேட்டபின்னர், உடன்நிற்பதே என் கடமை என எண்ணினேன். அத்தகைய தருணங்களில் தந்திர மௌனம் என் இயல்பல்ல.

ஏற்கனவே லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து குறிப்பு எழுதியபோதும் என் நிலைபாடு இதுவே. இதன்பொருட்டு வசைபாடப்படுவேன் என தெரியும். அதைப்பற்றி எப்போதும் கவலைப்பட்டவன் அல்ல,  என் நண்பர்கள் விஷயங்களில் இதுவே என் நிலைபாடு. எந்நிலையிலும் எவ்விழப்பிலும் இறுதிவரை உடனிருப்பதே என் அறம்.இந்த ஐம்பத்தாறாண்டுகளில் அப்படித்தான் இருந்திருக்கிறேன்,  இனியும்  அப்படித்தான்.

நான் தொடக்கத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருந்ததையே கே.பாக்யராஜ் அவர்களும் இப்போது தொலைக்காட்சியில் சொல்கிறார் என கேள்விப்பட்டேன்.  சர்க்கார்- ஒரு கடிதம்.  சர்க்கார் கதைக்கும் வருண் என்பவரின் கதைக்கும் ஒற்றுமை என்பது கரு அளவிலேயே என்றும், முருகதாசுக்கு அது முன்னரே தெரியாது என்றும், கதைத்திருட்டு என்ற சொல்லுக்கே இடமில்லை என்றும் பாக்கியராஜ் சொல்கிறார்.இது எப்போதும் அப்படித்தான். சிலநாட்களுக்குப்பின் உண்மை வெளிவரும். ஆனால் காழ்ப்பாளர்களுக்கும் வம்பர்களுக்கும் அதில் அக்கறை இருப்பதில்லை. அப்படியே வேறுபேச்சுக்குப் போய்விடுவார்கள். இவர்கள் உருவாக்கிய நஞ்சு மட்டும் இணையத்தில் எஞ்சியிருக்கும்.

இவ்விஷயத்தில் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு பொதுவாகவே ஏதும் தெரியாது. குறிப்பாகச் சட்டம். சட்டப்படி கதைக்கருக்களுக்கு பதிவுரிமை கோரமுடியாது. நான் ’இரவு’ என ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். இரவில் மட்டுமே வாழும் மனிதர்களைப்பற்றிய கதை. இரவில் மட்டுமே வாழும் மனிதர்களைப்பற்றி இனி எவரும் எதுவும் எழுதக்கூடாது என அதற்குப் பொருளா என்ன? கூடங்குளம் அணுவுலை உடைந்து மக்கள் தப்பியோடுவதைப்பற்றி ஒரு கருவை எழுதி பதிவுசெய்துவிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். இனி அணுவுலை உடைவதைப்பற்றி என்னைக்கேட்காமல் எவருமே எதுவும் எழுதக்கூடாது என்று சொல்லமுடியுமா?

சட்டம் எப்போதும் கதையின் வளர்ச்சி, திருப்பங்கள், நுண்செய்திகள் பற்றி மட்டுமே கருத்தில்கொள்ளும். அவை நேருக்குநேர் ஒன்றாக இருந்தால் மட்டுமே கதைத்திருட்டு எனக் கொள்ளும். அந்தக்கதை முறையாகக் காப்புரிமைப் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். அதை அந்த ஆசிரியரே உருவாக்கினார்  என்றும் வேறு எவரும் முன்னரே பதிவுசெய்யவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டபின்னரே சட்டப்படி காப்புரிமை கிடைக்கும். அதற்கான பல படிநிலைகள் உள்ளன. அத்துடன் அந்த கதை பொதுவெளியில் புழங்கவேண்டும் அல்லது அந்தக் கதையை குற்றம்சாட்டப்பட்டவர் வாசித்திருக்கிறார் என்பதை குற்றம்சாட்டுபவர்  சான்றுகளுடன் நீதிமன்றத்தில் நிறுவவேண்டும்.

ஆகவே பெரும்பாலான கதைக்கரு ஒற்றுமைகள் சட்டத்தின்முன் நிலைநிற்பதில்லை. ஒருவர் ஒரு கருவை இன்னொருவரிடம் நேரிடையாகச் சொல்லி, அவர் அதை அனுமதியில்லாமல் எடுத்துக்கொண்டால் மட்டுமே அதை அறத்தின் நோக்கில்கூட தவறு எனச் சொல்லமுடியும்.

அதேபோல இந்த ’மிடூ’ பிரச்சினை. அவற்றில் அவதூறு வழக்குகள் சரமாரியாக போடப்படுகின்றன.  அவதூறு வழக்கில் எப்போதுமே சொல்லப்பட்டது பொய்யா உண்மையா என்பது விவாதிக்கப்படுவதில்லை. அதைச் சொன்னவருக்கு அவதூறு நோக்கம் இருந்ததா, முன்பகையால் சொல்லப்பட்டதா என்று மட்டுமே பார்க்கப்படும். அதை நிரூபிக்கவேண்டியவர் வழக்கு தொடர்ந்தவர்தான். மோடிவ் தான் ஒரு செயலை குற்றம் ஆக்குகிறது என்பது சட்டத்தின் அடிப்படை. ஆகவேதான் லீனா மணிமேகலை அந்நிகழ்வை என்னிடம் முன்னரே சொன்னார் என்பது முக்கியமாகிறது. அதை நான் மறைக்கக்கூடாது, சொல்லியாகவேண்டும். அதுவே அறம்.

இப்படியிருந்தும் ஏன் சட்ட நடவடிக்கையை நாடுகிறார்கள்? சட்டச் செயல்பாட்டிலுள்ள தாமதம் மிகப்பெரிய ஆயுதம். அது பேரம்பேசும் ஆற்றலை அளிக்கிறது. தாமதத்தால் இழப்புகள் ஏற்படும் தரப்பு பணிந்தே ஆகவேண்டும். அதுவே வெற்றியாகக் கருதப்படுகிறது.

சினிமா சார்ந்த விஷயங்களில் இது மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடும். தமிழில் வெற்றிபெற்ற எல்லா படங்களின் மூலக்கதைகளையும் எவரேனும் உரிமைகோருவதைக் காணலாம் சுப்ரமண்யபுரம். மெட்ராஸ் போன்ற படங்களின் கதையுரிமை மேல் எழுந்த விவாதம் ஓர் உதாரணம். நான் தமிழில் பணியாற்றிய பாபநாசம் படத்தின் மூலக்கதையான த்ரிஷ்யத்தின் கதையுரிமை பற்றியே ஒரு வழக்கு நடந்தது. சமீபத்தில் வெளிவந்த அறம் என்னும் படத்தின் கதை தன்னுடைய ஆழம் என்னும் சிறுகதையுடன் நூறுசதவீதம் ஒத்துப்போவதாகக எழுத்தாளர் கலைச்செல்வி குற்றம்சாட்டினார்.என்ன முக்கியம் என்றால் அந்த இயக்குநர் மற்றவர்கள் மேல் தன் கருக்களை திருடிவிட்டதாகக் குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருபவர்.

இங்கே சினிமாக்களுக்கான கதைக்கருக்கள் மிகப்பொதுவானவை. பெரும்பாலும் அவை சமகாலச் செய்திகளில் இருந்து எடுக்கப்படுகின்றன. அவற்றை வெவ்வேறுபேர் வெவ்வேறு வடிவில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பலசமயம் கதைக்கருக்கள் திரும்பத்திரும்ப பல இடங்களில் சொல்லப்பட்டு அனைவருக்கும் தெரிந்தவையாக ஆகிவிடுகின்றன. பலரிடம் பலவடிவில் அவை வளர்கின்றன. நூல்வடிவில் வெளியான என் கதைகளில் இருந்து எத்தனை காட்சிகள் தமிழ் சினிமாக்களில் வந்துள்ளன என்பதை சினிமா பார்ப்பவர்கள் அறிவார்கள்.

எதையும் அறியாத ஊடகங்களுக்கும், வெறுப்பில்திளைக்கும் இணையவம்பர்களுக்கும் இரையூட்டுவதாகவே இந்த விவாதங்கள் அமையும். புகழ்பெற்றவர்கள் அவமதிக்கப்படுவார்கள். இனிமேல் வருங்காலத்தில் எந்த சினிமா வந்தாலும் பலர் அது என்னுடையது என சட்டத்தை நாடுவார்கள். அது சமாளிக்க முடியாத சிக்கலாக ஆகும். இன்று எழுந்துள்ள 96 படத்தின் உரிமைப்பிரச்சினையே உதாரணம். எல்லா பெரிய சினிமாக்களுக்கும் அவை வெளியாகும்போது இன்று பெரிய பஞ்சாயத்து நடக்கிறது, இனிமேல் கரு விஷயமும் இதேபோல பஞ்சாயத்தாக ஆகும்.

சரி,பிடிக்காதவரை வசைபாடி மகிழ, பழைய கணக்குகளைத் தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் அமைந்துவிட்டது. எனக்கு இதில் புதிதென ஏதுமில்லை. என் நண்பர்களுக்கும் இது ஒன்றும் புதியதல்ல. என் புதியவாசகர்களுக்கு மட்டும் குழப்பம் இருக்கும். அவர்களில் சிலர் இதில் எனக்கு அவப்பெயர் வருமோ என அஞ்சினர். நற்பெயர் எளிதில் உருவாவதில்லை. நெடுங்காலத்துச் செயல்பாட்டின் வழி உருவாவது அது. நான்குபேர் சொல்வதனால், ஒரு சில ஊடகங்கள் அவதூறுசெய்வதனால் எளிதில் போய்விடுமென்றால் அது உண்மையான நற்பெயருமல்ல. நான் யாரென என் வாசகர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு மட்டும் தெரிந்தால்போதும்

இத்தகைய ஒரு அவதூறு அல்லது வசை வருகையில் என் நேர்மைமேல் நம்பிக்கை கொண்டவர்களே என் நண்பர்களாக இருக்கமுடியும். அந்நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்களாகவே என் நட்பிலிருந்து முற்றாக விலகிச்செல்வதே அவர்களின் நேர்மைக்கான அடையாளமாக இருக்கும் என்றே நான் எண்ணுவேன். எவ்வகையிலும் அவர்களை எனக்கு அணுக்கமாக வைத்துக்கொள்ளமாட்டேன்.

இந்நாட்களில் வழக்கம்போல எந்த விவாதத்தையும் நான் கவனிக்கவில்லை. நேற்று நண்பர்கள் தொகுத்தளிக்க சிலவற்றை ஒரே வீச்சில் நோக்கி என்ன நிகழ்ந்தது என தெரிந்துகொண்டேன்.என் எழுத்துக்களில் ஈடுபட்டிருந்தேன். கூடவே விஷ்ணுபுரம் விழா அழைப்புகள், ஏற்பாடுகள். பெரிதும் துன்புறுத்திய செய்தி வடகரை வேலனின் இறப்பு. என் இருபது வயதுகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட அகவை கொண்டவர்கள் ஒருவர் இறந்த செய்தி வந்ததுமே தங்கள் வயதுடன் அதை ஒப்பிட்டுப்பார்ப்பதை கண்டு எரிச்சல் கொண்டிருக்கிறேன். அந்த இடத்தை நானும் வந்தடைந்திருக்கிறேன். வடகரைவேலனுக்கு எனது வயதுதான். இணையான வயதுகொண்டவர்களின் இறப்பு என்பது ஒரு நிகர்ச்சாவு. அதிலிருந்து வெளிவருவது எளிதல்ல. இந்த இனிய குளிர்மழைதான் காப்பாற்றுகிறது

சர்க்கார், இறுதியாக…
சர்கார்- இறுதியில்…
சர்க்கார் அரசியல்
சர்க்கார்- ஒரு கடிதம்
சர்க்கார், அவதூறுகளின் ஊற்று
சர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்
முந்தைய கட்டுரைதேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-58