தமிழ் வரலாற்று நாவல்களைப்பற்றி ஆர்வி அவரது இணையதளத்தில் எழுதியிருக்கிறார். நான்தான் வேலைமெனக்கெட்டு நிறைய படித்துவைத்திருக்கிறேன் என்றால் இவர் அதற்கும் மேலே. ஆனால் குற்றாலக்குறிஞ்சியை எல்லாம் அவர் வாசித்திருப்பது மன்னிக்கமுடியாதது.
ஆர்வியின் விவாதத்தில் நான் கவனித்தது என்னவென்றால் பெரும்பாலும் எல்லாவற்றையும் வாசித்து ரசிக்கக்கூடிய அவரே பெரும்பாலான வரலாற்றுநாவல்களை நிராகரிக்கிறார் என்பதுதான். அதற்கான காரணம் என்னவென்று யோசித்தேன்.
வரலாற்றுநாவல்கள் கல்கியால் தமிழில் ஆழமாக நிறுவப்பட்டன. கல்கியின் நாவல்கள் பெற்ற வெற்றி மேலும்மேலும் நாவலாசிரியர்களை உள்ளே கொண்டுவந்தது. ஒருகட்டத்தில் வார இதழ்களில் ஒரு வரலாற்றுத்தொடர்கதை கண்டிப்பாக இருக்கவேண்டுமென்ற நிலை உருவாகியது.
இந்த வார இதழ்களின் வாசகர்கள் இலக்கிய அறிமுகமற்றவர்கள். பொழுதுபோக்குக்காக மட்டுமே வாசிப்பவர்கள். பலர் உரிய மொழியறிமுகமும் இல்லாதவர்கள். கல்கி கிட்டத்தட்ட சிறுவர்நாவல்களின் மொழியில்தான் எழுதியிருக்கிறார்
அதைவிட இந்நாவல்களை வாசிப்பதற்கான ஒரு கலாச்சாரமனநிலை அன்று நிலவியது. சென்றகாலம் பற்றிய கனவு. தமிழியக்கங்களால் உருவாக்கப்பட்டு திராவிட இயக்கத்தால் மேலெடுக்கப்பட்டது. அந்த மனநிலைதான் இந்த எளிய புனைகதைகளில் ஒரு கனவுலகை உருவாக்கிக்கொள்ள தூண்டியது நம் சென்ற தலைமுறை வாசகர்களை
இன்று அந்த வகையான கனவுகள் இல்லை. நம் கலாச்சார மனம் வேறு வகையான உருவகங்களைப் பெற்று விட்டிருக்கிறது. வாசிப்பின் தரமும் மேலே சென்றிருக்கிறது. ஆகவே இன்று இக்கதைகள் வெறும் கதைகளாக மட்டுமே நிற்கின்றன. கரிகால்சோழனும் வேலுநாச்சியாரும் எல்லாம் கதைமாந்தர் மட்டுமே. கதையை அளவுகோலாக கொண்டு பார்க்கையில் பெரும்பாலான நாவல்கள் தோல்வியடைகின்றன