கடைசி முகலாயன்: ஒரு மதிப்புரை

the_Last_Mughal,_The_Fall_of_a_Dynasty,_Delhi_1857

கடைசி மொகலாயன் –  வில்லியம் டேல்ரிம்பிள் –  தமிழில் இரா செந்தில்  –  எதிர் வெளியீடு

மூலத்தை படிப்பது போன்ற உணர்வைத் தரும் மொழிபெயர்ப்பு. நீளமான வாக்கியங்கள்  தில்குஷ் (மன மகிழ்ச்சி) தரும் ஒரு மொகலாய மாம்பழத்தோட்ட்த்தில் இருக்கும் இனிமையைத்தருகின்றன. ஆயினும் rechristine என்ற சொல்லை மறு கிறிஸ்துவமயமாக்கல் என்று தான் பெயர்க்க வேண்டுமா என்று தெரியவில்லை (மறுபெயரிடல் என்றிருக்கலாம்). ஈனர்கள் , மாயாதீதமான என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. இரண்டாவது Mystic இன் மொழியக்கம். முதல் சொல்லுக்கு இணையான மூலத்தில் உள்ள சொல்லைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு காவியத்தின் சமநிலை மற்றும் அமைதியுடன் அயராத உழைப்புடன் சேர்க்கப்பட்ட மொகலாய, பிரிட்டிஷ் கடிதங்கள், ஆவணங்கள், கோப்புகள், உளவுச்சீட்டுகள், அக்பார் , கெஜட்போன்ற செய்தித்தாள்கள், இவற்றின் மறு தொகுப்பு, மூலம் பிரம்மாண்டமான ஒரு உண்மை வரலாறு மெதுவாக எழுந்து வருகிறது. காலம் – இடத்தால் விலகி இருந்து கொடுமையான நடுநிலையுடன் செய்திகளும் உண்மைத் தகவல்களும் அடுக்கப் படுவதில், முதலில் அது எழுவது தெரிவதில்லை. பின்னர் அறிகிறோம் நாம் அமர்ந்துள்ளது நிலம் அல்ல, ஒரு நகரும்பெரும் மிருகம் என்று.

“நள்ளிரவில் சுதந்திரத்தி” ல் நேப்பியர் மற்றும் காலின்ஸ் மவுன்ட்பேட்டனை நாயகனாக்கி வழமையான அழுக்கு இந்தியா மற்றும் அரசர்களின் மீதான எள்ளலால் நிறைத்தது போலஅல்லாமல் இந்தியாவை இரண்டாம் தாயகமாகவே கொண்டுள்ள டேல்ரிம்பிள் பரிவுடனும் மனிதத்துவத்துடனும் பிரிட்டிஷ் குற்ற உணர்ச்சியுடன் முன்வைத்துள்ள வரலாறு . நம்மைச்சுற்றிஇவ்வளவு ஆவணங்கள் இருப்பதை ஏன் இத்தனை ஆண்டுகளாக எவருமே கண்டுகொள்ளவில்லை என்று ஆதங்கப்படுகிறார்.

அடையாள அழிப்பு

துவக்கம் அந்த தவிர்க்க முடியாத வரலாற்று நாயகனின் முடிவுடன் காட்டப்படுகிறது. 1862 நவம்பர் மாதத்தில் ஒரு நாள் அடையாளம் மிச்சமின்றி ரங்கூன் சிறையருகே புதைக்கப்படும்முன்னாள் மொகலாய பேரரசர் பகதூர் ஷா ஜாபர் தைமூர் வம்சாவளியின் இறுதிப் புள்ளி; பாபர் துவங்கி வைத்ததை முடித்து வைத்த கடைசி மொகலாய மன்னர். அவருடைய சூபி தத்துவமார்க்கம், கஜல்கள் பாடும் திறம், கவிஞர்களை அதரித்தல் (புகழ்பெற்ற கவிஞர் காலிப், தன் நண்பரும் பேர்ரசரின் மூத்த மகனுமாகிய மிர்சா அபுபக்கர் விஷம் வைத்து கொல்லப்பட்டபின்,தனக்கு மாம்பழம் வாங்குவதற்காக கிடைத்து வந்த மாதம் பத்து ரூபாய் பற்றி கவலைப்படுகிறார்) , மென்கலைகளுக்கு ஆதரவு, தோட்டங்கள் மாம்பழங்கள் மீதான பற்று, 16 மகன்கள்,விருப்பத்திற்குரிய மனைவியாகிய ஜீனத் மஹல் மீதான பற்றினால் அவர்களின் மகனாகிய (அரசரின் 15ஆவது மகன்) மிர்ஸா ஜாவன் பக்த் ஐ வாரிசாக அறிவித்து அதை ஏற்றுக்கொள்ளகேன்னிங் பிரபுவிடம் கெஞ்சிக் கடிதங்கள் எழுதுவது என்று ஒரு கலைத்துப் போட்ட அல்லது குறுக்கி வெட்டுத்தோற்றத்தின் கண்ணாமூச்சியாக நம்மை ஆக்கிரமிக்கிறது புத்தகம்.

பீடிகைஇல்லாத வாக்கியங்களில் பெரும் நிகழ்வு சொல்லப்பட்டு விடுவதால் மிக கவனமான வாசிப்பும் சில இடங்களில் திரும்ப வருவதும் தேவைப்படுகிறது பேரரசரை புதைத்த பின் உடனடியாக புல்வளரவும் உடல் சிதையவும் (சுண்னாம்பு சேர்த்து) ஏற்பாடு செய்யும் பிரிட்டீஷ் அரசு மதச்சடங்குகள் எதையும் அனுமதிக்காமல் அடையாளம்எதுவும் மிச்சமின்றி இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது

மத மோதல்

பாதிரியார் ஜென்னிங்ஸ் தன் பரிவாரங்களுடனும் ஆன்ம அறுவடைக்கான திட்டங்களுடனும் வந்து இறங்குகிறார். கும்ப மேளாவில் லட்சக்கணக்கில் குவியும் மக்களை மதமாற்றம் செய்யஆற்றங்கரையில் கலக்கிறார். பெரிய வெற்றி கிடைக்கவில்லை. கிறிஸ்தவ மத த்தை இங்கிலாந்து காப்பதால் ஒரு பேரரசு கடவுளால் வழங்கப் பட்டுள்ளது. என்று உறுதியாக நம்புகிறார். கல்கத்தா பிஷப் ஹெபர், காட்டுமிராண்டி தன் குருட்டுத்தனத்தால் மரத்திற்கும் கல்லுக்கும் முன்னால் மண்டியிடுகிறான். என்று தன் ஸ்தோத்திரப் பாடலில் குறிப்பிட்ட தொனி பரவலாகஇருந்தது .

இந்தியத்தின் மீதான வெறுப்பும் தங்கள் இங்கிலாந்தின் உயர்வாழ்க்கை மறுக்கப்பட்டதால் உண்டான எரிச்சலும் சேர்ந்து பிரிட்டிஷ் அதிகாரிகளை இயக்கி உள்ளது. உடனே நினைவில் வருவது “ஊமைச்செந்நாய் “ இந்த தன்னாட்டில் புறக்கணிக்கப்பட்டு, அடிமை கொண்ட காலனி தேசத்தில் வெறியாட்டமிடும் வெள்ளை அதிகாரி மனநிலையை காட்டுகிறது மெக்காலேயின் உறவினரான ராணுவ அதிகாரி “ ஒரு நல்ல ஐரோப்பிய நூலகத்தின் ஒரே ஒரு அலமாரி இந்திய மற்றும் அரேபியாவின் மொத்த மண்சார்ந்த இலக்கியத்திற்கும் சம்மானது”என்று பதிவு செய்கிறார். கேன்னிங் பிரபு பிரிட்டனில் அமைச்சரவையில் இடம் கிடைக்காத்தால் சமாதானம் செய்யப்பட்டு கவர்னர் ஜெனரலாக இங்கே அனுப்பப் படுகிறார். கவர்னர் பதவிஅன்றும் இன்றும் சமாதானப் படுத்தும் கருவி போல

William_Dalrymple_2014

கிறிஸ்துவ இஸ்லாம் கலப்பு

ஒரு புறம் கடும் பிற மத வெறுப்பு கொண்டோரிடையே குறைந்த எண்ணிக்கையிலான நல்லிணக்க வாதிகளையும் காண்கிறோம். வெள்ளை மொகலாயர்கள் என்னும் ஆசிரியரின் பிறிதொரு நூலில் வேறோரு காட்சி காணக்கிடைக்கிறது. பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய, மொகலாய மன்னர் மற்றும் மக்களுடன்இரண்டறக் கலந்து உடை, பழக்கங்களை பின்பற்ற துவங்கி பிபிக்களுடன் வாழ்ந்து, மசுதிகளையும் கோவில்களையும் கட்டிக் கொடுத்து ஒரு கலப்பு வெள்ளையின மொகலாயர்களைஉருவாக்கி உள்ளனர் ஆயினும் பின்னர் வந்த தூய வெள்ளை வாதம் இதை தகர்த்து விட்டதால் ஜேம்ஸ் ஜஹாங்கிர் போன்ற பெயரகள் அரிதாகி விட்டன

முரணியக்கங்கள்

பகதூர் ஷாவின் அன்னை ஒரு இந்து. மன்னர் டெல்லியின் சுவர்களுக்கிடையே மூன்று மதங்களும் ஒத்திசைவுடன் வாழ்வதற்கு உழைக்கிறார். இந்த மெல்லிய நூலை அறுந்துபோகாமல் காப்பதால் மொகலாய மன்னர் வரிசையைக் காக்கலாம் என்று எண்ணுகிறார். சிப்பாய்கள் அரண்மனைக்குள் நுழைந்ததும் வேறு வழியின்றி கிளர்ச்சிக்கு அனுமதி தருகிறார். ஜிஹாதிகளின் இழுப்புக்கும் அவரது தாடி அலைபாய்கிறது.

அவரது அன்புக்குரிய மனைவி ஜீனத் அவர் அறியாமலேயே பிரிட்டிஷுக்கு உளவு சொல்ல, அரசவையின் ஹகிம் (குடும்ப மருத்துவர்) மன்னரை ஏமாற்றி, காட்டிக் கொடுத்து, ‘விசாரணையில் பொய்சாட்சி சொல்கிறார். விசாரணை செய்ய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உள்ள சட்ட உரிமையே கேள்விக்குரியதாகி உள்ளது. விசாரணை கம்பெனி ராணுவ முறையில் நடக்காமல் ஜனநாயக பிரிட்டிஷ் நீதிமுறைப்படி நடந்திருந்தால் மன்னர்க்கு எதிரான சாட்சியங்களும் ஆவணங்களும் பொய்ப்பிக்கப் பட்டிருக்கும் என்கிறார் ஆசிரியர்.

பிரிட்டிஷின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள், சீக்கிய, கூர்க்காப் படையினர் மற்றும் பத்தான் படையினர். பஞ்சாப் மன்னரின் ஆயுத உதவி. பகதூர் ஷாவின் அரசவையிலிருந்தே உளவு சொன்னவர்கள். பதவி, பணம், உயிர் வாழ்வதற்கான துரோகம், ஒரு ஆங்கிலேய போர்வீர்ர் (ஆங்கிலேயராக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய சர்ஜெண்ட் கார்டன் ) கிளர்ச்சிக் காரர்களுடன் சேர்ந்து கொண்டு, “என் ஆலோசனையை முதலிலேயே கேட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனாலும் உங்களுடனேயே வீழ்வேன் “ என்கிறார்.

ஒருங்கிணைப்பில்லாத, தங்களுக்குள் தலைமைப்போட்டி கொண்ட பல்வேறு ரெஜிமென்ட்கள் தாமாக போய் தோல்வியில் விழுந்தன. படைகளுக்கான உணவு கிடைக்காததால் பட்டினியும் தப்பி ஓடுதலும் நிகழ்ந்தன. கிளர்ச்சிப் படையினர் கண்ணில் பட்ட வெள்ளையரையெல்லாம் கொன்றழித்தனர், பெண்களும் குழந்தைகளும் விதிவிலக்கல்ல. முட்டியிலிருந்து ஷூ கழட்டப் படாமல் வெட்டி வீசப்ப்பட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் குழந்தையின் கால் மிகப் பெரிய படிமம் ஆகிறது. பின்னர் பழிக்கருவியாகி பல மடங்கு வன்மத்துடன் இந்தியர்களை (ஈனர்கள் என்றே பிரிட்டிஷ் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்) அழித்தொழிக்கிறது. குறுகிய தூரத்தில் சுடுதல் மற்றும் (மெதுவாக துடித்து சாவதற்காக) நீளம் குறுகிய கயிற்றில் தூக்கு, கண்ணில் படுபவர்களுக்கெல்லாம் கிடைக்கிறது. பெண்கள் கொல்லப்படக் கூடாது என்கிறது பிரிட்டிஷ் ஆவணம் ஆனால் இது பின்பற்றப் பட்டதா என்று தெரியவில்லை.

இணக்கத்தின் இறுதிப் புள்ளி

ஜாபர் என்றால் வெற்றி என்று பொருள். தாய் ஒரு ராஜபுதனர். இவர் சூபி நம்பிக்கையும் இசைப்பாடல்களில் பற்றும் கொண்டவர். ஷா வலியுல்லா போன்றவர்கள் வலியுறுத்தும்வகாபிசத்தில் இருந்து மாறுபட்டவர். சோதிடம் மந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர். இஸ்லாமியர்கள் பசு வதைக்கு அனுமதிகேட்கும்போது கண்டிப்புடன் மறுத்தவர். காசியில் குளிப்பதை விரும்பிய காலிப் மற்றும் சாக் போன்ற உருதுக் கவிஞர்களின் புரவலர் பல மணிநேரம் கவிதை எழுதுபவர். ஹோலி நவராத்திரி கொண்டாடுபவர். ராம்லீலா பார்ப்பவர். அவர்கால டில்லிமதரசாக்கள் பெரும் கல்வி மையங்களாக் இருந்தன. அரபி, பாரசிகத்தில் உயர் கலையும் ஞானமும் போதிக்கப் பட்டன. ஆங்கிலம் மறுக்கப் பட்டிருந்தாலும்.

ஆனபோதும் அப்போதைய மதக் கொந்தளிப்பு சூழலில் மதம் அதிகாரப் போட்டியின் அடையாளமாகியது. “இரு நம்பிக்கைகளின் அடிப்படைவாதிகளும் ஒருவர் மற்றொருவருடைய முன்தீர்மான்ங்களையும் வெறுப்பையும் வலுப்படுத்திக் கொள்ளவே பரஸ்பரம் தேவைப்படுகிறார்கள் “

பெரிய இடத்துக் கொலைகள்

ஹகிம் என்னும் இஸ்லாமிய முறை மருத்துவர்கள் மூலம் கண்டே பிடிக்க முடியாத வகையில் மெதுநஞ்சு தரப்பட்டு தாமஸ் மெட்கால்ப், ஹென்றி எலியட் மற்றும் தாமேஸன்கொல்லப்பட்டுவிட்ட்தாக நம்ப்ப் பட்டிருக்கிறது. தன் மகனுக்கு எதிராக ஜீனத் பேகம், மூத்த மகனை வாரிசாக்க ஒப்புக் கொண்ட இந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை காலிசெய்திருக்க வேண்டும்.சிதைக்கப் பட்டுவிட்ட மாளிகைகளின் சுவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்

பிரிட்டிஷாரின் வாழ்க்கை

பிரிட்டிஷ் கனவான்களின் வாழ்வும் நுண்ணிய தகவல்களுடன் சொல்லப்பட்டுள்ளது. சூடு நிறைந்த டெல்லியை வெறுத்து சிம்லாவிலேயே தஞ்சம் புகும் கனவான்கள், செப் 26 அன்று தன்மாமியார் இறந்த தகவல் மனத்தில் ஒரு பெரும் வதைக்கும் நோயாக மாறி அந்த நாளை எதிர்கொண்டு வேறு சிந்தனை இன்றி தன் மரணாத்தை நோக்கி விரைந்து சென்று அடங்கும் இளம்தாயாகிய சார்லெட்டின் வாழ்வு இரண்டே பக்கங்களில் அசோக மித்திரன் சிறுகதை போன்ற அன்னியத்தன்மையுடம் சொல்லப் பட்டுள்ளது

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்து விட்ட் அதிகாரி பிரேசர் இங்கிலாந்திலேயே தங்கி விட்ட தன் மகனைப் பற்றி கவலைப்படுகிறார். தகவல் தொடர்பு அருகி விட்ட்தற்கு வருந்துகிறார் ஒருகட்டத்தில் இந்தியா வந்துள்ள தன் மகனை அடையாளம் காணாமலேயே கடந்து செல்கிறார். புரட்சி வரும் என்ற அனுமானமே இல்லாமல் சோம்பலுடம் இருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளை எச்சரிக்கும் தடயங்கள் வராமல் இல்லை. ஒரு நாள் காலையில் ஜுமா மசூதியில் ஈரான் சார்பில் வாள் பட த்துடன் புனிதப் போருக்கான எச்சரிக்கை ஒட்டப்பட்டுள்ளது. மிகவும் நயவஞ்சகத்துடன் அவத் பிரதேசத்தை பிரிட்டிஷ் இணைத்து விட்ட்து அதிர்ச்சியையும்கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது

last

முடிவிலா வெறுப்பு

வெண்முரசின் போர்க்களக் காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது இந்த வரலாறு. வரலாறு புனைவாகும் தருணம் கால ஓட்டத்தால் தன் உச்சத்தை அடைகிறது. நம்ப முடியாத்தன்மை, இக்கட்டில் மனித உயிர் மேற்கொள்ளும் பேரங்கள், இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இன, மத , நாம்- பிறர் முரண்கள் புனைவின் இடைவெளிகளை நிரப்புகின்றன. அரசருக்கெதிரான இறுதி விசாரணை ஒருதலைப்பட்சமாக நடத்தப் பட்ட போதும் குற்றவியல் நீதிமுறை சட்டமே இக் கால கட்டத்தில் தான் தெளிவு பெறுகிறது.

அம்பேத்கார் ஸ்மிருதிக்கு முன்னோடியான பிரிட்டிஷ் ஸ்மிருதி. அரசு வக்கிலின் வாதங்களில் பிரிட்டிஷுக்கு எதிரான இஸ்லாமிய அடிப்படை வாதம் மற்றும் சர்வ தேச சதி, ஈரான் – மெக்கா – டில்லி என நீளும் ஒரே ஆட்சிக் கனவு அப்பாவியான, பொக்கை விழுந்த 86 வயது பகதூர் ஷா மீது ஏற்றப் படுகின்றன. இருப்பினும் ஹட்சன் அரசரை சரணடைய வைக்குமுன் கொடுத்து விட்ட, பல பிரிட்டிஷ் அதிகாரிகள் கடுமையாக விமர்சித்த கொல்லாமை வாக்குறுதி நிறைவேற்றப் பட்டு, மன்னர் ரங்கூனுக்கு நாடு கட த்தப் பட்டு புரட்சி நடைபெற்ற ஐந்தரை ஆண்டுகள் கழித்து தொண்டை முடக்கு வாத த்தால் இறக்கும் வரை பிரிட்டிஷ் நீதிமுறை அவரை அக்கரையுடன் கவனித்துக் கொள்கிறது.

ஜெ அவர்கள் குறிப்பிடும் இரண்டு ஐரோப்பாக்கள் ( இன மேலாதிக்கம் x சமத்துவ லிபரல் தன்மை) கடந்து சென்று விடமுடியாத ஒன்று.

அந்த ரங்கூன் வீட்டுச் சிறைச் சுவர்களில் கரித்துண்டால் கவிதை எழுதிக்கொண்டிருந்த , பாதி நினைவு தப்பி விட்ட, பக்கிர் ஆகி மெக்கா செல்ல விரும்பிய அந்த கிழட்டு மாமன்னரின் கடைசி கால நினைவலைகள் யாரும் அறியாமல் ஐராவதி முகத்துவார அலைகளில் கலந்து விட்டன. பல வருடங்கள் கழித்து அவரது கல்லறை தோண்டப் பட்டு, ஆசி வழங்கும் குருவாக வைத்து வழிபடப் பட்டு, உச்சமாக ராஜிவ் காந்தி வழங்கிய அழகிய கம்பளத்தின் கீழே இந்த கஜல்கள் எழுதிய ,உலகின் மிகச்சிறந்த உருது கவிஞர்களையும் சித்திர எழுத்துக் கலைஞர்களையும் ஆதரித்த , அரவணைக்கும் இஸ்லாத்தின் வாரிசு உறங்குகிறார்,

சுவர் சூழ் டெல்லியிலிருந்து விரட்டப் பட்ட ஓர் அறிஞர் அனைத்து சொத்துக்களையும் விட்ட போதும், தன் குருவான ஸாக்கின் கஜல்கள் எழுதிய கட்டை மட்டும் எடுத்துச்செல்கிற அளவிற்கு கலை- இலக்கிய எழுச்சி கொண்ட நாட்டை ஆண்ட, வறுமையில் செம்மை கண்ட அக்பரின் மறு பிறவி போன்ற மாமன்னரின் கதை மதத்திற்காக ஓங்கும் வாள்களும் ராக்கெட் லான்சர்களும் தணிந்து சுருண்டு கொள்ள துணை நிற்க வேண்டும்.

முந்தைய கட்டுரைகவிதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெவ்வல்லியின் நாள்