இன்றைய ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எட்டுமணிக்கெல்லாம் படுக்கையை விட்டு என்னை அப்புறப்படுத்தியிருந்தது. இளமஞ்சள் நிறத்தில் மெல்பேர்ன் வானத்தில் கதகதப்பான வெயில் வெளியே சீவித்துக்கொண்டிருந்ததை ஜன்னாலால் பார்த்தபோது சாதுவான பொறாமை துளிர்த்தது. கூடவே அரை அவுன்ஸ் அச்சமும் வந்தது. இன்னும் ஓரிரு மணி நேரத்திலோ இல்லை சில நிமிடங்களிலோகூட இந்த மஞ்சள் கரைந்து மழையாகலாம். இந்த நீல வானம் இருண்டு கறுப்பாகலாம். சீக்கிரம் அருந்திக்கொண்டால்தான் உண்டு என்று உடற்பயிற்சிக்காக கிளம்பி வெளியில் வந்தேன்.
அப்போதுதான், மகரந்த துணிக்கைள் காற்றிலே பயணம் செய்யத்தொடங்கியிருக்கும் காலம் இது என்பது ஞாபகத்தில் வந்தது. எனக்கு அது புரிவதற்கு முன்னரே எனது மூக்கிற்கு புரிந்துகொண்டது. மணிக்கு கிட்டத்தட்ட 150 முதல் 200 கிலோ மீற்றர் வேகத்தில் நான்கைந்து தும்மல்கள் வெளியேறி முன்வீட்டில் கட்டாமல் வெளியில் மேய்ந்துகொண்டிருந்த நாயை வம்புக்கிழுந்திருந்தன. (சாதாரணமாக, ஆரோக்கிய மனிதன் ஒருவனின் தும்மலின் வேகம் மணிக்கும் 100 கிலோமீற்றர் என்கிறது விஞ்ஞானம்) பூந்தோட்டத்தில் புல்லு வெட்டிக்கொண்டிருந்த வெள்ளைக்கார பெண், தான் வளர்க்கும் நாயிலும் பார்க்க கேவலமாக ஒலியெழுப்பும் ஜீவன் ஒன்று முன்வீட்டில் இரண்டுகாலில் நடந்துபோவதை விநோதமாக பார்த்தார். உடனேயே வீட்டிற்குள் வந்துவிட்டேன்.
வழக்கம்போல உடற்பயிற்சிக்கூடத்துக்கே சென்றுவிடலாம் என்று காரை எடுத்துக்கொண்டு அங்கு சென்றால் வெளி வெயிலையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏகப்பட்டவர்களால் அது நிரம்பி வழிந்ததுகொண்டிருந்து. உடற்பயிற்சியின் மூலம் இன்னமும் அதிக ஆண்டுகள் உயிர்வாழலாம் என்ற பேராசையுடைய பலர் அங்கு மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தாங்கள் உடற்பயிற்சி செய்வதை சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காக வந்திருந்தார்கள். அவர்கள் மிகவேகமாக அங்கிருந்த உபகரணங்களின் மீது ஏறி நின்று படுத்துக்கிடந்தெல்லாம் படங்களை எடுத்துக்கொண்டு, கார்ச்சாவியை சுழற்றிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
எல்லா விநோதங்களையும் கடந்து சென்று நான் நடைவண்டியில் ஏறினேன். வழக்கமான பாடல் பட்டியலை போனில் தட்டிக்கொண்டு போகும்போதுதான், ஜெயமோகனது டால்ஸ்டாய் நினைவுப்பேருரை ஞாபகத்துக்கு வந்தது. முகநூல் பக்கமாக போய் உலாத்தி Shrutitv Che நண்பர்கள் பகிர்ந்துவிட்டார்களா என்று பார்த்தேன். அதற்குள், சுமந்திரனின் சமஷ்டி தொடர்பான காணொலி, தோழர் Vythehi Narendran அவர்கள் ஐ.பி.ஸியில் ஆய்ந்திருக்கும் “ஆழி சூழ் உலகு” வாசிப்பு அனுபவ பகிர்வு போன்றவையும் கண்ணில் பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, தந்தி டி.விக்கு இந்தியாவில் வைத்து மகிந்த கொடுத்த பேட்டிகூட பார்க்கவேண்டியதாக துரித்தியது.
எல்லாவற்றையும் பின்தள்ளிக்கொண்டு ஜெயமோகனிடம் போனேன். ஒரு மணித்தியாலாம் நான்கு நிமிடங்கள். கேட்டு முடியும்போது எத்தனை கலோரி எரிந்திருக்கும் என்று கணக்கிட்டுப்பார்த்தேன். டால்ட்ஸ்டாய் இறந்தும் வரம் கொடுப்பவராக மனதுக்குப்பட்டார். ஆரம்பித்தேன்.
அப்போதுதான், அவர் வலப்பக்கமாக அருகிலிருந்த நடைவண்டியில் வந்து ஏறினார். அவரை நிச்சயமாக எனக்குத்தெரியும். ஆனால், என்னை ஏனோ அவரால் இனம் கண்டுகொள்ளமுடியவில்லை. நேரில் பேசியதோ பழகியதோ கிடையாது. இப்போதுதான் முதன் முதலான நேரில் காண்கிறேன். அவர் என்னை முகநூலில் முதன் முதலாக நட்பழைப்பு விடுத்து இணைத்திருந்தார். ஏற்றுக்கொள்வதற்கு முதல் அவரது முகநூல் பக்கத்துக்கு போய் பார்ததேன். நன்றாக இறுக்கிக்கட்டியிருந்த பெல்ட்டினுள் தொப்பையை இழுத்து செருகியிருந்தார். அந்தப்படத்தை எடுக்கும் அக்கணத்தில் நிச்சயமாக மிகச்சிரமப்படும் அவர் மூச்சை அடக்கியிருந்திருப்பார். அப்பேற்பட்ட தியாகத்தில் விளைந்த அந்தப்படமும் அவரது நட்பழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது.
ஆனால், இன்று நேரில் கண்டபோது இறுக்கிவைத்திருந்த அந்தத்தொப்பை சுதந்திரமாக அலையவிடப்பட்டிருந்தது. அவருக்கு நிச்சயம் அறுபது வயதுக்கு மேலிருக்கும் என்பதை உடம்பின் சகல அம்ஸங்களும் வெளிப்பெயர்ந்திருந்தன.
இப்போது அவர் ஓடத்தொடங்கியிருந்தார். நான் எப்போதும் அரை மணி நேரம் நடந்த பின்னர்தான் ஓடுவதற்கு ஆரம்பிப்பது வழக்கம். ஆனால், அவர் எடுத்த எடுப்பிலேயே ஓடத்தொடங்கியது எனக்கு சற்று ஆச்சரியாகமாக இருந்தது. அவர் தனது காதுகளில் மாட்டியிருந்த திரிகளின் வழி பாடல் கேட்டபடிதான் ஓடிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் ஓடுகின்ற வேகத்தை வைத்து பார்க்கும்போது அவர் கேட்கின்ற பாடல் இளையராஜாவிடனுடைய பாடலாக இருக்கும்என்றுகூட நம்பிக்கையை அளிக்கவில்லை. அவ்வளவுக்கு மித வேகத்தில் அலைந்தார். அவரது தொப்பை அதைவிட மிக மெதுவாக ஏறி இறங்கியது. அப்போதுதான், அவர் என்னை சற்றுத்திரும்பி பார்த்தார். நான் அவரைப்பார்ப்பது தெரியாமலிருப்பதற்காக, அவருக்கு அப்பால் ஓடிக்கொண்டிருந்த பெண்ணை எட்டிப்பார்த்தேன். அவரது தொப்பையைவிட பெரிய மார்பகங்களோடு அந்தப்பெண் பயங்கர வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தார். வெள்ளைக்கார பெண்மணி என்ற காரணத்தினால் அவர் அனிருத் பாடல் எதையோ கேட்டுக்கொண்டுதான் ஓடிக்கொண்டிருக்கிறார் என்ற முடிவுக்கு என்னால் வரமுடியவில்லை. அவர் மிகவும் வியர்த்துப்போயிருந்தார்.
காதுக்குள் ஜெயமோகன் “நீ மகிழ்ச்சியாகவும் உயர் விழுமியங்களையும் பேணுபவனாக இருப்பதற்கு சுய ஒழுக்கம் தேவை என்று டால்ஸ்டாய் சொன்னார்” – என்றார். சட்டொன்று முன்னே பார்த்துக்கொண்டு நடந்தேன்.
அப்போதுதான். எனக்கு இடப்பக்கத்தில் – எனக்கு மிக அருகாமையில் – மெல்பேர்ன் மஞ்சள் வெயிலே ஆறடி உயரத்தில் நடைவண்டியில் நடந்துகொண்டிருந்ததை பார்த்தேன். ஓரக்கண்ணில் தெரிந்த அந்த மித ஊஷ்ணத்தை உணர்ந்து திரும்பிப்பார்த்தபோது, அவளும் அதே கணத்தில் என்னை பார்த்துக்கொண்டதாலோ என்னவோ அவளை நிலவுக்கு வர்ணித்துக்கொள்ள முடியவில்லை. அவள் நிச்சயம் சூரியன்தான். அந்தப்பார்வை மஞ்சள் வெயிலேதான்.
இப்போது ஜெயமோகன் “ஆன்ம விடுதலை என்பது மேலான ஒழுக்கத்தின் மூலம்தான் சாத்தியம்” – என்றார். எரிச்சலாக இருந்தது. “உனது நிறைவும் மீட்பும் இங்கேதான் இருக்கிறது என்கிறார் டால்ஸ்டாய் என்கிறார்” – என்று தனக்கு துணையாக டால்ஸ்டாயை எனக்கு முன்னால் கொண்டு வந்து மிரட்டுவதுபோலவே இருந்தது.
அவள் இப்போது நடைவண்டியின் வேகத்தை அதிகரித்துவிட்டு ஓடத்தொடங்கியிருந்தாள். அவள் கேட்டுக்கொண்டிருப்பது இன்னமும் இசையமைத்து இவ்வுலகத்தின் எந்தக்காதுகளுக்கும் ஒலிக்கவிடப்படாத ஒரு சங்கீதமாக இருக்கவேண்டும். அவ்வளவு மிருதுவாக அந்த இசைக்கேற்றவாறு ஓடிக்கொண்டிருந்தாள். அந்த அதிர்வின் அயலில் நான் நடந்து சென்றுகொண்டிருந்த காரணத்தில்தானோ என்னவோ, இரண்டு நிமிடங்களின் பின்னர் என்னை உணர்ந்துகொண்ட சமயத்தில் உலகத்திலேயே முதன் முதலாக ஜெயமோகனின் இலக்கியப்பேச்சைக்கேட்டு ஓடிக்கொண்டிந்த முயல் ஜென்மமாக என்னை கண்டுகொண்டேன்.
என்ன பெரிய ஆன்ம விடுதலை? ஜெயமோகனையும் டால்ஸ்டாயையும் திட்டிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தபோது, பியரின் கதாபாத்திரம் தொடர்பாக ஜெயமோகன் சொல்லத்தொடங்கியருந்தார். அவன் போருக்கு போன கதையை சொன்னார்.
“ஒவ்வொரு நாளும் பல மைல் கணக்கில் நடந்து சென்று போருக்காக தயார் செய்யும் போர்வீரர்களோடு பயணம் செய்யும் பியருக்கு இரவில் ஒரு துண்டு இறைச்சி கொடுக்கப்படும். அதனை உண்டுவிட்டு உறங்குவதுதான் வேலை. காலையில் மீண்டும் நடை. நாள் முழுவதும் நடந்து களைத்த உடலுக்கு கிடைக்கும் அந்த இறைச்சித்துண்டும் இரவுத்தூக்கமும் அவனுக்கு இணையற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது. அந்த மனநிறைவுக்கு அப்பால் வாழ்வில் எந்த மகிழ்ச்சிக்குமான தேவை இல்லை என்பதுபோல அவன் உணர்கிறான். அப்படியானால், வாழ்க்கையின் சாரம் இதுதான். மனநிறைவும் மகிழ்ச்சியும் இதுதான் என்ற முடிவுக்கு அவன் வருகிறான்” – என்று சொன்னார்.
அப்போது அவள் தனது ஓட்டத்தை மெதுவாக்கியிருந்தாள். பஞ்சுபோன்ற துவாயை எடுத்து நெஞ்சைத்துடைத்து கழுத்தின் வழியாக களனி போல ஓடியிருந்த வியர்வையாற்றுக்கு ஒத்தடம் கொடுத்துக்கொண்டாள். அந்தத்துவாய்கூட ரோஜ கலரிலிருந்தது.
இப்போது எனக்கு பின்புறமாக நடந்து சென்று வலப்பக்கமாக வந்தாள்.
“Lets go to the next session Appa”
“ச்சே…எவ்வளவு அழகான அந்த மனிதனை இவ்வளவு நேரமாக ரசிக்காமல் விட்டுவிட்டேனே”
அப்போது ஜெயமோகன் தனது பேச்சின் கடைசிக்கு வந்திருந்தார். “டால்ஸ்டாய் இரண்டு வகையானவர். முதல் வகையானவர் ஒரு குரு. அவரைத்தான் காந்தி பெற்றுக்கொண்டார். இரண்டாவது வகையானவர் கதை சொல்லி. அவர்தான் வாழ்க்கையை சொல்கிறார். அதில் இறங்கி நாங்கள் வாழ்ந்துவிடமுடியும்” – என்று சொல்லி முடித்துக்கொண்டார்.
வெளியே இப்போது மேகங்கள் கறுக்கத்தொடங்கியிருந்தன.
– தெய்வீகன்