‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-59

bowதேரிலேறிக்கொண்டதும் சஞ்சயன் விழித்துக்கொண்டான். “போர்முனைக்கு செல்லட்டும்! தேரை அர்ஜுனர் முன் நிறுத்துக!” என்றான். தேரோட்டி திரும்பி நோக்கியபின் புரவிகளை அதட்டினான். திருதராஷ்டிரர் “மூடா, நீ என்னருகே இருக்கிறாய்!” என்றார். “ஆம், நான் இங்கிருக்கிறேன்!” என்று அவன் சொன்னான். “ஆனால் நான் போர்க்களத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அங்கே போர் இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது!” திருதராஷ்டிரர் “அந்திமுரசு ஒலித்துவிட்டது. நாம் திரும்பிக்கொண்டிருக்கிறோம்” என்றார். “இல்லை, அங்கே போர் நிகழ்கிறது… நான் இதோ பார்க்கிறேன்!” என்றான் சஞ்சயன்.

“தேவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். ஒளிரும் வைரமுடி அணிந்தவர்கள். வைரமென இமையா விழி ஒளிர்பவர்கள். அவர்களின் பற்களும் நகங்களும் வைரங்கள்போல் மின்னிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் கொண்டிருக்கும் படைக்கலங்களை பார்க்கிறேன். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம். அவற்றை நான் எங்கெங்கோ கண்டிருக்கிறேன். இது மேழி அல்லவா? ஆம், அது துரட்டி. அது அரிவாள், அது கத்தி. இன்னொன்று அகப்பை. இன்னொன்று சட்டுவம். அது துடுப்பு… நாம் இங்கு புழங்கும் அத்தனை பொருட்களையும் அவர்கள் படைக்கலங்களாக ஏந்தியிருக்கிறார்கள்.”

“கிண்ணங்கள், சருவங்கள், கலங்கள், யானங்கள், குண்டான்கள். எத்தனை வகையான படைக்கருவிகள்! அவர்களின் முகங்கள் ஒன்றுபோலிருக்கின்றன. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றம் கொண்டவர்களாகவும் தோன்றுகிறார்கள். அரசே, அவர்களை நான் முன்னரே நோக்கியிருக்கிறேன். ஒவ்வொருவரையும் முன்னரே அறிவேனா என்ன? அவர்களில் ஒருவர் என் தந்தை. அவர் முகம் மணலில் பொற்குண்டு என மின்னி விழிமாயமோ என மறைந்தது. அவர்கள் எவரெவருடையவோ முன்னோர்கள். ஓவியங்களில் கண்ட முனிவர்கள். அது பிரதீபரா? அப்பாலிருப்பவர் ஹஸ்தியா? அதற்கப்பால் யயாதி. அருகே பரதன். அவர்கள் அனைவரும் அவ்வடிவில் அங்கிருக்கிறார்களா? அவர்களிலிருந்து எழுந்து அங்கே சென்றார்களா?”

“தேவர்கள் அணிவகுக்கும் இப்போர்க்களத்திற்கு முடிவே இல்லை. கந்தர்வர்களை காண்கிறேன். அவர்கள் இசைக்கருவிகளையே போர்க்கருவிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நூற்றெட்டு நரம்புள்ள பேரியாழ் நூற்றெட்டு அம்புகளை தொடுக்கும் நூற்றெட்டு நாண்கள் இழுத்துக்கட்டப்பட்ட வில்லென ஆனதென்ன? வேய்குழல்கள் வேல்கள். வீணைகள் விற்கள். கொம்புகள், முழவுகள், முரசுகள், துந்துபிகள், சங்குகள், மணிகள் அனைத்துமே கொலைப்படைகளென மாறிவிட்டிருக்கின்றன. விழிகள் மலர்ந்த யட்சர்கள். பறக்கும் கின்னரர்கள். ஒன்றுநூறென எண்ணியதுமே பெருகும் கிம்புருடர்கள். ஒவ்வொருவரும் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொடுங்காற்றில் பொடித்துகள்கள் என அவர்களனைவரும் பறந்தலைந்து கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். போராலான ஒரு பெருங்கடற்பரப்பு. போராலான பெருஞ்சுழி!”

மீண்டும் அவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. விழிகள் மேலே செருகிக்கொள்ள கைகால்கள் இழுத்து அதிர்ந்தன. வாயிலிருந்து நுரைவழிந்து கன்னத்தில் ஒழுகியது. அவனுடைய மூச்சு புறாவின் ஓசையென ஒலித்தது. பின்னர் விழிப்புகொண்டு “ஆ!” என்றான். “நான் பீஷ்மரை காண்கிறேன்” என்றான். “என்ன காண்கிறாய்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “அவர் களத்தில் நின்றிருக்கிறார். தன் குழலை நீண்ட தோல்நாடாவால் கட்டி தோளிலிட்டிருக்கிறார். குருதி வழிந்து உலர்ந்த தாடி திரிகளாக தொங்குகிறது. சீற்றம்கொண்டவராக அவர் போரிட்டுக்கொண்டிருக்கிறார். அஸ்மாகர்களும் குனிந்தர்களும் அவரைச் சூழ்ந்து எதிர்க்கின்றனர். குனிந்த மன்னர் அமோக்ஃபூதியின் இளையவர்களாகிய அஹோபாகுவும் விஸ்வமித்ரனும் அவர் அம்பால் வீழ்ந்தனர். அமோக்ஃபூதி அலறியபடி அவர் முன் வருகிறார். அவரை சிகராஸ்திரம் என்னும் அம்பால் பீஷ்மர் வீழ்த்தினார்.

பீஷ்மரின் வில்லில் இருந்து அனைத்துவகையான அம்புகளும் எழுந்து செல்கின்றன. பறவைக்குலங்களால் மூடப்பட்ட வான் போலிருக்கிறது அந்தப் படைவெளி. நீண்ட தண்டுகொண்ட தண்டசக்ரம் என்னும் கணைகள் சென்று அறைந்து நிலைகொள்பவை. பிளந்து செல்பவை இந்திரசக்ரம் என்னும் அம்புகள். வஜ்ரம் என்னும் கணை விம்மிச்சுடர்ந்து சென்று துளைப்பது. ஐஷீகம் சிட்டுபோன்றது. விழியறியாது வந்து விழிகொத்தி தாழ்வது. காலபாசம் அம்புடன் இணைந்த நீள்சரடு கொண்டது. தைத்தவற்றை இழுத்து எடுக்க உதவுவது. பினாகாஸ்திரம் நெளிந்தது. நெஞ்சுள் நுழைந்தால் திரும்ப இழுத்தெடுக்க இயலாதது. கிரௌஞ்சபாணம் சிறகுகள் விரித்து மெல்ல பறந்து எழுந்து விசைகொண்டு இறங்குவது. பிரதனாஸ்திரம் பம்பரம்போல் சுழல்வது. வாருணாஸ்திரம் அலையலையென துள்ளிச்செல்வது.

அரசே, அம்புகளையே நோக்குகிறேன். அவற்றுக்கு மானுடர் ஒரு பொருட்டே அல்லவோ என ஐயுறுகிறேன். காலபாசம் தைத்ததுமே சுழற்று அங்கே சுற்றிக்கொள்கிறது. பிரம்மபாசம் அரக்குடன் இணைந்தது. தைத்த இடத்தில் உருகி இறங்குகிறது. சிகராஸ்திரம் செங்குத்தாக பீறிட்டு மேலெழுந்து அங்கே திசைதெரிந்து சரிந்திறங்குவது. பெருமுழக்கமிட்டுச் செல்கிறது கங்காளாஸ்திரம். தன் எடையாலேயே சென்றறைந்து உடைக்கிறது முசலாஸ்திரம். மண்டையோடுகளை உடைக்கும் கபாலாஸ்திரம். வளைந்த முனைகொண்ட கங்கணாஸ்திரம். சென்றபின் இலக்கைத்தேடி வழிவளைந்தும் சென்றெய்தும் மானவாஸ்திரம். நரம்புகளை அறைந்து நினைவழியச் செய்யும் மோஹாஸ்திரம். வந்தது அறியாமல் வந்து தைக்கும் சௌம்யாஸ்திரம். புலிப்பல்லென இரட்டை வளைமுனைகொண்ட தம்ஷ்ட்ராஸ்திரம். வெடித்து ஒளிவிட்டுச் செல்லும் தைஜப்பிரபாஸ்திரம்.

அம்புகள் இப்போரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அம்பிலும் எழுந்து செல்லும் தெய்வங்களை காண்கிறேன். அவற்றுக்கு ஒவ்வொரு வடிவம். விழிமணிமட்டுமே கொண்டவை. நகங்களைப் போன்றவை. பற்களைப் போன்றவை. சிட்டுக்களின் அலகு போன்றவை. யானைத்தந்தம் போன்றவை. அத்தெய்வங்கள் அங்கே களியாட்டமிடுகின்றன. அரசே, ஒவ்வொரு உயிரின் வடிவிலும் அங்கே தெய்வங்கள் உள்ளன. யானைகளைப் போன்ற சிறுபூச்சிகள். சிறு பூச்சிகள் போன்ற யானைகள். பறக்கும் மீன்கள். செதில் வால் சொடுக்கிச் சீறும் களிறுகள். நாமறிந்த ஒவ்வொன்றும் பிறிதொன்றாகி நின்றுள்ளன அங்கே.

அரசே, நான் பீஷ்மரைச் சூழ்ந்து பேருருக்கொண்டு நின்றிருக்கும் அறுவரை காண்கிறேன். வலக்கையில் கதாயுதமும் இடக்கையில் தாமரையும் கொண்ட தரன். ஒருவிரல் சுட்ட மறுவிரல் வளைந்து ஆமென்று அடங்க நின்றிருக்கும் துருவன். அமுதகலம் ஏந்திய சோமன். விசிறியும் வில்லும் ஏந்திய அனிலன். எரிதழல் எழுந்த வலக்கையும் முப்புரி வேல் கொண்ட இடங்கையுமாக அனலன். அலையடிக்கும் பாசக்கயிறும் வேலும் கொண்ட ஆபன். அவர்கள் அவரை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். விளையாடும் சிற்றுயிரை குனிந்து பார்க்கும் பேருருவர்கள்போல. அவர்களின் முகத்திலிருக்கும் அந்த இரக்கம் எதன்பொருட்டு?

அரசே, பீஷ்மருக்கு இருபுறமும் இருவர் நின்றிருக்கிறார்கள். அவர் வலக்கையென ஆகி இயங்கிக்கொண்டிருப்பவன் பிரத்யூஷன். செந்நிற ஒளிகொண்டவன். இடக்கையென அமைந்திருப்பவன் பிரபாசன். இளநீல நிறத்தில் மின்னுபவன். பீஷ்மர் என நின்று அப்போரை நிகழ்த்துபவர்கள் அவர்களிருவருமே. காண்டீபம் நாணொலிக்க, சங்கூதியபடி பீஷ்மரை எதிர்கொள்ள வருகிறார் பாரதர். அவருடைய தேருக்குமேல் என எழுந்து நின்றுள்ளது வெண்முகில்களிறு. அதில் மின்னல் சொடுக்கும் படைக்கலத்துடன் அமர்ந்திருப்பவன் இந்திரன், இடியோசையுடன் மின்னொளியுடன் காற்று கிழிபட திசைகள் வெடிபட அவர்களின் போர் நிகழ்ந்துகொண்டிருப்பதை காண்கிறேன்.

சஞ்சயன் விசும்பியழுதான். கைகளை விரித்து “நான் காண்பதென்ன? இந்தப் போரை நான் ஏன் காண்கிறேன்? இதிலிருந்து நான் எவ்வண்ணம் விடுபடுவேன்?” என்றான். திருதராஷ்டிரர் “மூடா, அங்கே என் மைந்தர் செய்துகொண்டிருப்பதென்ன என்று சொல்!” என்றார். “அங்கே கரிய இருளின் திவலைகள்போல் வௌவால்களும் காகங்களும் என வடிவுகொண்டு பாதாளதெய்வங்கள் காற்றில் சுழன்று சிறகடிக்கும் ஓரிடத்தில் போரிட்டுக்கொண்டிருக்கிறார் துரியோதன மாமன்னர். அவருடைய உடல் கரிய ஒளிகொண்டிருக்கிறது. அவருடைய தேர்ச்சகடங்களை கைகளால் தாங்கியிருக்கின்றன நரிவடிவுகொண்ட இரண்டு பூதங்கள். அவருடைய தேரின்மேல் கொடியெனப் பறக்கிறது காகபூதம். அவருடைய அம்புகளை பற்றிக்கொண்டு பறந்து சென்று எதிரியின்மேல் அறைகின்றன கூருகிர்பறவைகள்.”

பாண்டவர்களின் தரப்பிலிருந்து பெரிய உழலைத்தடிகளையும் கொக்கிக்கயிறுகளையும் சுழற்றியபடி போர்க்குரலெழுப்பிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள் வேகவான், மகாரௌத்ரன், வித்யுத்ஜிஹ்வன், பிரமாதி என்னும் நான்கு அரக்கர்கள். தென்கிழக்கே விந்தியனின் சரிவில் விண்ணிலிருந்த தொல்லரக்கர் நகரமான மாகிஷ்மதி உடைந்து மண்ணில் சிதறிய துண்டுகளில் ஒன்றான கூர்மாவதி என்னும் நகரை ஆள்பவர்கள் அவர்கள். ஹிரண்யாக்‌ஷனின் குருதி எஞ்சிய தொல்லரக்கர் குடியினர். ஓங்கிய கரிய உடலும், ஒளிரும் பற்களும், சிப்பிபோல் விழிகளும், முழங்கும் முழவுக்குரலும் கொண்டவர்கள்.

அவர்களின் நகரம் மாளவ மன்னரின் எல்லைக்குட்பட்டது என்று மாளவப்படை பன்னிருமுறை அவர்களின் மேல் படைகொண்டு சென்றது. பன்னிருமுறை அவர்களின் காடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பன்னிருமுறை அவர்களின் குடிகள் முற்றழிந்தனர். வெந்த மைந்தருடன் கருகிய துணைவியருடன் அவர்கள் மேலும் மேலும் உள்காடுகளுக்குள் சென்றனர். அவர்களை மேலும் மேலுமென துரத்திவந்தது மாளவத்தின் படை. எரியுண்ட காட்டில் புகைசூழ்ந்த குகைக்குள் ஒடுங்கியிருந்த அவர்களின் தந்தை ஹிரண்யநபஸ் தன் நான்கு மைந்தரை நெஞ்சோடணைத்து போரிட்டு இறக்கும் நல்லூழ் அமைக உங்களுக்கு என்று வாழ்த்தி விழுந்துமறைந்தார்.

நான்கு உடன்பிறந்தாரும் தங்கள் குடிகளை சேர்த்துக்கட்டினர். மாளவத்தின் படைகள் எழுவதுவரை காத்திருக்கலாகாது என்று அவர்கள் அறிந்துகொண்டனர். மாளவத்தின் படைகளை கூர்நோக்க மலைமுடிகளில் பன்னிரு நோக்குமண்டபங்களை அமைத்தனர். மாளவப் படை ஐந்து விரல்களாகப் பிரிந்து நின்றிருப்பது என்றும் ஐந்தும் இணைந்து கையென்றாகும்போதே படையெடுப்பு நிகழ்கிறது என்றும் கண்டுகொண்டார்கள். அதன்பின் அவர்கள் இணைந்து வந்த மாளவப் படையை ஒருமுறைகூட எதிர்கொள்ளவில்லை. படை விலகிப்பிரிந்ததுமே மலைகளிலிருந்து இறங்கி அவர்களை தாக்கினர். படைகளின் ஊற்றுகளை அழித்தனர். களஞ்சியங்களை எரித்தனர். காவல்மாடங்களை சிதைத்தனர்.

அஞ்சிப் பின்னடைந்த மாளவம் அதன்பின் அரக்கர்நிலத்தை கைவிட்டது. தங்கள் தொல்நகரை அவர்கள் மீட்டமைத்தனர். துவாரகையுடன் வணிகப்பாதையை அமைத்துக்கொண்டனர். அவர்களின் நதிக்கரையில் படகுகளில் பொருட்களுடன் வணிகர்கள் வந்திறங்கலாயினர். துவாரகையின் அரசரை அவர்கள் தங்கள் குடித்தலைவர் என்றே எண்ணலாயினர். சம்பராசுரரும் பாணாசுரரும் அவருக்கு குருதியுறவினரானபோது அவர்களின் குருதிச்சரடிலமைந்த அவர்களும் உறவினரானார்கள். அரசே, அவர்கள் பாணாசுரரின் மைந்தர் சக்ரர் தலைமைதாங்கும் பதினேழாம் படைப்பிரிவில் எட்டாம் படையாக நின்று களம்கண்டனர்.

நால்வரும் துரியோதனரை சூழ்ந்துகொண்டு தாக்கினர். துரியோதனரின் பின்புலத்தை துச்சாதனர் காத்தார். அம்புகளால் அவர் அரக்கர்களின் தேர்களை உடைத்தார். வேகவானின் கழுத்தை அறுத்துச்சென்றது ஒரு வாளி. தன்னை அணுகிய அந்தக் கணையை இரு காகங்கள் ஏந்திவருவதைக் கண்டு அவன் அலறினான். அவ்வலறலை இரண்டாகப் பிளந்தது கூர்முனை. எஞ்சிய அலறலுடன் இருந்தது துண்டுண்ட தலை. அவன் அலறலைக்கண்டு ஓடியணைந்த மகாரௌத்ரன் பன்னிரு துதிக்கைகள் கொண்ட பெருங்களிறு ஒன்றின்மேலேறி பறந்துவரும் துரியோதனரை கண்டான். வெறிகொண்டு கதைசுழற்றியபடி அவரை அணுகினான்.

அவனுடைய எட்டு குடித்தெய்வங்கள் அவனை தங்கள் கைகளில் ஏந்தியிருந்தன. குளிகன், மாதன், மதங்கன், சம்பன், சம்புகன், சாமன், காமன், கதம்பன் என்னும் அத்தெய்வங்கள் யானைபோல் கொம்புகளும் துதிக்கைகளும் வௌவால்களின் சிறகுகளும் கொண்டவை. உறுமிச்சிரிக்கும் பற்கள்கொண்ட நாகங்கள் மேல் ஊர்பவை. கதையுடன் கதைகள் மோதிக்கொண்டன. தெய்வங்கள் தெய்வங்களுடன் போரிட்டன. உறுமிக்கூவின. அறைந்தன, கிழித்தன, மோதிச்சிதறிப் பின்னடைந்து மீண்டும் வெறிகொண்டு எழுந்தன. துரியோதனரின் கதையின் அறைகொண்டு நெஞ்சுபிளந்து மகாரௌத்ரன் மண்ணில் விழுந்தான்.

அவனைச் சூழ்ந்து ஆர்ப்பரித்த அரக்கர்களின் குடித்தெய்வங்கள் எழுந்துசென்று வித்யுத்ஜிஹ்வனை தங்கள் கைகளில் தூக்கி வந்தன. அவனுக்குப் பின்னால் பாய்ந்துவந்த புரவியின்மேல் நின்றவனாக பிரமாதி வந்தான். துரியோதனர் பிரமாதியை ஒரே அம்பால் வீழ்த்தினார். வீழ்ந்தவர்களின் குருதியை குடித்தன நீண்ட கூரலகுகளும் பற்களும் கொண்ட பாதாளதெய்வங்கள். மண்ணின் சிறுதுளைகளிலிருந்து நண்டுக்குஞ்சுகளென அவர்கள் எழுந்தபடியே இருந்தனர். விழிகளோ செவிகளோ இல்லாத விடாய் மட்டுமேயான சிற்றுருவர்கள். குருதியுண்டு வீங்கிப்பருத்து பேருருக்கொண்டு எழுந்து நெஞ்சிலறைந்து வெறிக்குரலெழுப்பி கால்களை ஓங்கி அறைந்து உதைத்து மருப்பு சிலிர்த்தனர்.

துரியோதனரும் வித்யுத்ஜிஹ்வனும் போரிட்டுக்கொண்டார்கள். அந்தப் போருக்குச் சுற்றும் குருதிகுடிக்கும் தெய்வங்கள் நின்று கைவீசி கூச்சலிட்டன. நெஞ்சிலும் தொடையிலும் அறைந்துகொண்டு ஆடின. நிலத்தில் மிதித்தும் கைதூக்கி வானில் சுழற்றியும் ஆர்ப்பரித்தன. இருவரின் தெய்வங்களும் அவர்களின்மேல் மிதித்தேறி போரிட்டனர். துரியோதனர் வித்யுத்ஜிஹ்வனை அறைந்து வீழ்த்தினார். அக்கணமே பாய்ந்த தெய்வங்கள் அவனை அள்ளி எடுத்து குருதியருந்தலாயின. அந்த உடல்கள் குருதியிழக்க அவற்றிலிருந்து வெளிறிய வண்ணம் கொண்ட புகைவடிவென அவர்கள் எழுந்தனர். துயர்கொண்ட மலைத்த விழிகளால் அந்தப் போர்க்களத்தை நோக்கியபடி நின்றனர். அவர்களினூடாக கடந்துசென்றன கூரம்புகள். அவர்களை அறியாமல் முட்டித்ததும்பிக்கொண்டிருந்தன தெய்வங்கள்.

துரியோதனர் தன் இரு தோள்களிலும் மாறிமாறி அறைந்துகொண்டு ஆர்ப்பரித்தார். “வருக! வருக!” என்று அவர் எதிரிகளை கூவியழைத்தார். பௌரவமன்னர் சுதாசர் செந்நிறப்பிடரி பறக்கும் நான்குதலைப் புரவிகளின் வடிவிலமைந்த தன் தெய்வங்களால் களத்தில் பறந்தலைந்தார். அவரை அணுகிய துரியோதனர் அம்புகளால் அவர் தலையை கொய்தெறிந்தார். தண்டக நாட்டு அரசன் குமுதனையும் அவன் இளையோன் ஜீமுதனையும் நீள்வேல் கொண்டு வெட்டி வீழ்த்தினார். அவர்களின் தெய்வங்கள் ஊளையிட்டபடி அஞ்சிச் சிதறி ஓடின.

இடியோசை எழுப்பியபடி கடோத்கஜன் துரியோதனரை நோக்கி வந்தார். அரசே, அவர் மலைகளைப்போன்ற தோள்கள்கொண்ட பெருங்குரங்குகளின் வடிவிலமைந்த நூற்றெட்டு மலைத்தெய்வங்களால் காக்கப்பட்டார். அவர்கள் ஒருவர்மீது ஒருவர் தாவியேறி ஒருவரை ஒருவர் கடந்து ஒருவரையொருவர் எடுத்து வீசி பெருகி அணுகினர். பேரலைகளில் எழுந்துவரும் சிறுநாவாய்போல கடோத்கஜன் அவர்களில் திகழ்ந்தார். வரும் வழியிலேயே ஜயத்ரதரின் தேரை அறைந்து துண்டுகளாக தெறிக்கவிட்டார். தேரிலிருந்து இறுதிக்கணத்தில் ஜயத்ரதரை பறக்கும் கரடிபோல் தோன்றிய சிந்துநாட்டுக் குடித்தெய்வம் தூக்கி அகற்றியது. சல்யர் கலப்பை வடிவில் படைக்கலமேந்திய ஏழு தெய்வங்களால் கடோத்கஜனிடமிருந்து காக்கப்பட்டார்.

கடோத்கஜனும் துரியோதனரும் போரிட்டபோது குரங்குருக்களும் காகவடிவப் பூதர்களும் விண்ணில் மோதிக்கொண்டார்கள். முகில்களுக்கும் மலைகளுக்குமான போரென அதை காண்கிறேன். கடோத்கஜனின் உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் அமைந்த விலங்குகள் எழுந்து வந்தன. நெஞ்சிலிருந்து இரு மத்தகங்கள் எழுந்து யானைகளாயின. தொடைகளிலிருந்து இரு களிறுகள் எழுந்தன. கால்களிலிருந்து கரடிகள். அரசே, அவருடைய இரு கைகளும் விரைவுகொண்ட இரு சிறுத்தைகளாகி எழுந்தன. வளைந்து பதுங்கியும், விரிந்தும், சிலிர்த்தும், சீறியும் அவை தாக்கின. பத்து கைநகங்களும் பத்து கூரலகுகளாகி கழுகுகளாக மாறின. அவருடைய வயிற்றிலிருந்து செதில்நிரைகொண்ட உடலுடன் எழுந்தது முதலை.

பெருகிக்கொண்டே இருந்தார் துரியோதனர். நரிக்கூட்டங்களாகி ஊளையிட்டுச் சீறி வால்சுழற்றி பாய்ந்தார். காகங்களாகி, முகில்களாகி நிறைந்தார். கழுதைபோல் ஒலியெழுப்பின அக்காகங்கள். இடியோசை என உறுமின அந்த நரிகள். அவருடைய தோள்கள் பெருகுவதை காண்கிறேன். அரசே, மண்மறைந்த கௌரவர்கள் அனைவரும் கதையேந்திய கைகளுடன் வந்து அவர் உடலில் பொருந்தி கிளைக்கிறார்கள். அவர்களின் மைந்தர்களும் கதைகளுடன் எழுந்து விரிகிறார்கள். நூறுநூறு கைகள். நூறுநூறு கதைகள். அவர் ஒரு படையென கடோத்கஜனை தாக்கினார். அவரை எத்திசையிலிருந்தும் அறைந்தார். ஒருகணமும் பின்னடைய விடாமல் அறைந்தார்.

அவர் ஆற்றிய போரின் விசையால் அப்பகுதியில் பெருஞ்சுழி ஒன்றே காணக்கிடைத்தது. தெய்வங்களும் தேவர்களும் பேயுருக்களும் அரக்கர்களும் அசுரர்களும் மானுடரும் இணைந்துருவான அச்சுழியின் அடியில் நிகழ்வதென்ன என்று காணக்கூடவில்லை. கடோத்கஜனின் அறைகள் ஒவ்வொன்றையும் அவருடைய கதைகள் தடுத்தன. அள்ளி அப்பால் வீசப்பட்ட கடோத்கஜனை அவருடைய தெய்வங்கள் தூக்கிக்கொண்டு அப்பால் சென்றன. அவரை துரத்திச்சென்று கூச்சலிட்டு அறைகூவினார் துரியோதனர்.

அநூபநாட்டு அரசன் நீலன் அஸ்வத்தாமாவால் கொல்லப்பட்டார். மலைவிழுந்ததுபோல் அவர் உடல் மண்ணிலறைந்து விழுந்தது. அப்பால் பகதத்தரை சேதிநாட்டு வசுதானரும் தசார்ணநாட்டரசர் சுதர்மரும் எதிர்த்தனர். பகதத்தரை சூழ்ந்திருந்தனர் பிரக்ஜ்யோதிஷத்தின் குடித்தெய்வங்களாகிய மீனுருக்கொண்ட மத்ஸ்யன், நண்டுருக்கொண்ட கர்க்கடகன், முதலையுருக்கொண்ட மகரன், ஆமையுருக்கொண்ட கூர்மன் ஆகியோர். அவர்களை எதிர்கொண்ட தெய்வங்கள் முகங்களில் கொம்புகளும் விரிக்கும் சிறகுகளும் கொண்டவை. வெட்டுக்கிளிகளெனத் தாவி வந்து அவை போர்புரிந்தன.

துரியோதனரை பீமசேனர் தன் காற்றுப்படை சூழவந்து தாக்கினார். அவருடைய கைகள் வீசுவதற்கேற்ப நாற்பத்தொன்பது காற்றுகளில் ஒன்று வந்து அமைந்தது. அறைகையில் எருமைத்தலைகொண்ட மகிஷாசன் வந்தமைகிறான். தேர்த்தூண்களைப் பிழுது எறிகையில் பன்னிரு கைகள் கொண்ட ஸ்வத்வாசன். கதைசுழற்றி வரும் நெஞ்சில் யானைப்பாறைபோன்ற ஹஸ்தின். உறுமி கைவிரித்து விரிந்தெழுகையில் நூறுகைகள் கொண்ட விஸ்வதேவன். சீற்றத்துடன் கால்களை உதைத்து பாய்கையில் ருத்ரன். நெஞ்சை நோக்கி கதைவீசி அணுகும்போது செந்தழல்போல் முடிகொண்ட யுவனன். அரசே, நாற்பத்தேழு காற்றுகள் கடந்துசெல்லும் மலையுச்சியின் ஒற்றைமரம் போன்று களம்நின்றாடுகிறார் பீமசேனர்.

துரியோதனரும் பீமசேனரும் இணையொடு இணையென நின்று பொருதிய அப்போரில் விண்ணில் இடியெழுந்தது. ஒவ்வொரு அறைக்கும் தெய்வங்கள் கூக்குரலிட்டன. தொடைகளை அறைந்துகொண்டும் கைகளை வீசி எழுந்து குதித்தும் ஒருவரை ஒருவர் கூச்சலிட்டு அழைத்து அறைகூவியும் களியாட்டமிட்டன. அவற்றின் ஆட்டத்தால் நிலம் மரவுரி விரிப்புபோல் நெளிபட்டது. நிலத்துக்கடியில் ஆழ்ந்த பொந்துவழிகளினூடாக பாதாளநாகங்கள் பிதுங்கி வெளியே வந்தன. துரியோதனர் பீமசேனரின் நெஞ்சக்கவசத்தை பிளந்தார். பிறிதொரு வீச்சில் அவர் தலைக்கவசத்தை உடைத்தார். மீண்டும் அறைய அவர் காற்றிலெழுந்தபோது பீமசேனர் அவர் விலாவிலறைந்தார். துரியோதனர் நிலையழிந்து பின்னால் சரிந்தார்.

அரசே, துரியோதனர் சென்ற சிலநாட்களாகவே நிலையழிந்திருக்கிறார். அவர் உடல் நூற்றுவரால் ஆனது. இழப்புகள் ஒவ்வொன்றும் அவருடலின் ஒரு தசையை ஆற்றலிழக்கச் செய்கின்றன. ஆகவே ஒவ்வொரு நாளும் அவருடைய நடை மாறுபடுகிறது. குரலும் கையசைவும் மாறுகின்றன. அவர் முகமேகூட நாளுக்கொன்று எனத் தெரிகிறது என்கிறார்கள். களத்தில் அவர் நிலைமீள்வதற்குள் பீமசேனர் அவரை அறையும்பொருட்டு கதையுடன் பாய்ந்தெழுந்தார். ஆனால் துச்சாதனரும் துச்சகரும் துச்சலரும் துர்மதரும் அவரை சூழ்ந்துகொண்டனர். கதையை ஊன்றியபடி துரியோதனர் எழுந்து நோக்கியபோது கௌரவர் நால்வருக்கும் பீமசேனருக்கும் உச்சப்போர் மூண்டுவிட்டதை கண்டார்.

அப்போது பொன்னுருகியதெனச் சிவந்த பெருங்களிற்றின் மீது மெல்ல மிதந்தவராக பால்ஹிகப் பிதாமகர் வருவதை அவர் கண்டார். அந்தப் படைக்களத்தில் ஒவ்வொன்றும் உச்சவிரைவில் கொப்பளித்து அலையடித்துக் கொண்டிருக்க அவர் மட்டும் மிகமிக மெல்ல அசைவதறியாது ஒழுகும் முகிலென வந்தார். அவருடைய கவசங்கள் அந்தியொளியில் மின்னிக்கொண்டிருந்தன. நான்கு கந்தர்வர்கள் வெண்முகில் சாமரங்களால் அவருக்கு விசிறிக்கொண்டிருந்தனர். சுடர்முடி சூடிய இந்திரவடிவான தேவன் ஒருவன் அவருக்குப் பின்னால் வெண்குடை ஏந்தியிருந்தான். யக்ஷர்களும் கின்னரர்களும் அவருக்கு இருபுறமும் மலர்மழை சொரிந்தனர். மலர்களாலான துந்துபிகளையும் எக்காளங்களையும் முழக்கினர்.

பால்ஹிகரின் கையில் பொற்சங்கிலி ஒன்றில் கட்டப்பட்ட மென்மையான மலர்போன்ற சாமரம் தொங்கியது. அதை சுழற்றிவீசியபடி அவர் அணுகினார். அந்தக் காற்றில் பறந்துகொண்டிருந்த தேவர்களின் பொன்னிறக் குழல்கள் அலைபாய்ந்தன. கந்தர்வர்களின் ஒளிவண்ண ஆடைகள் நெளிந்தமைந்தன. அது வருடிச்சென்ற தெய்வங்கள் மெய்ப்பு கொண்டு புன்னகைத்து அசைவழிந்து நின்றன.

அவரைப் பார்த்ததும் பீமசேனரை ஏந்தியிருந்த மாருதர்கள் அவரை அப்படியே விட்டுவிட்டு பின்னடைந்தார்கள். அவர் நிலத்திலுதிர்ந்து எழுந்தோடி அப்பால் சென்று நோக்கினார். துரியோதனரைச் சூழ்ந்திருந்த காருருவ தெய்வங்கள் புகையணைவதுபோல் கரைந்தழிந்தனர். அவர் வெற்றுக்கைகளுடன் திகைத்து நின்றார். பீமசேனர் தன் படைகளுக்குள் பாய்ந்து மறைய துரியோதனரை அவருடைய தம்பிகள் சூழ்ந்துகொண்டனர். அவர்களை அறியாதவர்போல தன் மெல்லிய சாமரத்தைச் சுழற்றியபடி அவர்களிருவருக்கும் நடுவே பால்ஹிகர் கடந்துசென்றார்.

அரசே, அதோ பீஷ்ம பிதாமகர் தன் கைகளென எழுந்த வசுக்களுடன் படைமுகம் நின்று பொருதிக்கொண்டிருக்கிறார். அவருடைய களத்தில் குருதிவெறிகொண்ட தெய்வங்கள் முட்டிமோதுகின்றன. உடலைவிடப் பெரிதாக நாக்குகொண்டவை. நாவுகளை சிறகுகளாக்கி பறக்கின்றன. நாவுகளை வால்களாக்கி அறைந்து பூசலிடுகின்றன. நாவுகளை கால்களாக்கி எழுந்து தாவுகின்றன. நாவுகளை பின்னிப்பிணைத்து வளைத்து எடுத்து அறைந்து போரிடுகின்றன. நாவுகளை ஊன்றி எழுந்து நின்றிருக்கின்றன.

பீஷ்மர் தன் எதிரே மிக அப்பால் ஒரு தேரை கண்டார். அது அந்திவெளிச்சத்தில் திரும்பிய மின்னல் அவர் விழிகளில் அடித்தது. அவர் கைகளால் முகம் மறைத்து மீண்டும் நோக்கியபோது அவரை நோக்கி வந்தது. வெள்ளியெனத் தெரிந்த இரும்புத்தேர் அணுகும்தோறும் பொன்னொளிகொண்டது. நெருங்கி வருந்தோறும் சிற்றுருவாகியது. களித்தேர் என்றாகி அவர் முன் வந்து நின்றது. அதில் ஆடையேதும் அணியாத சிறுகுழவி ஒன்று நெஞ்சில் ஐம்படைத்தாலியும் இடையில் கிண்கிணி நாணுமாய் கையில் அல்லிமலர்த்தண்டாலான வில்லுடன் நின்றிருந்தது. அவரை நோக்கி புன்னகைத்து “வருக!” என போருக்கு அழைத்தது. அதன் சிவந்த சிற்றுதடுகளுக்குள் மேலீறில் ஒரு பால்துளி என பல் தெரிந்தது. தெளிந்த விழிகளில் சிரிப்பு ஒளிகொண்டிருந்தது.

பீஷ்ம பிதாமகர் தன் வில்லைத் தாழ்த்தி தலைகவிழ்ந்தார். பின்னர் “திருப்புக! தேரை திருப்புக!” என ஆணையிட்டார். அரசே, அப்போது அவருடைய வலக்கையென விளங்கிய பிரத்யூஷன் என்னும் வசு துயருடன் விலகிச்செல்வதை கண்டேன். உயிரற்றதுபோல் வலக்கை சரிய வில் விழப்போயிற்று. அவர் பாய்ந்து அதைப்பற்றி நிறுத்தினார். பிரத்தியூடன் தன் உடன்பிறந்தார் அறுவருடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் துயர்நிறைந்த விழிகளுடன் பீஷ்ம பிதாமகரை குனிந்து நோக்கினர்.

முந்தைய கட்டுரைசெவ்வல்லியின் நாள்
அடுத்த கட்டுரைபுத்துயிர்ப்பு -தினேஷ் ராஜேஸ்வரி