பௌத்தம் கற்க…

20181013_192256

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

பெளத்தம் குறித்து சிறிய அளவிலேயே அறிந்திருந்தேன். அது பற்றி மிக விரிவாக கற்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். அதற்கான காலம் சமீபத்தில் கனிந்து வந்தது. கால அவகாசம் இருந்தால் ரயில் பயணமே பிடித்தமானது. சென்னையிலிருந்து 36 மணிநேர பயணம் முகல்சராய்க்கு.. மிக அடிப்படையான சில வசதிகளை மட்டுமே கொண்ட பெயர் மட்டும் மாற்றப்பட்ட(பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஜங்ஷன்) கைவிடப்பட்ட பேய் வீடு போல் தோற்றமளிக்கும் ரயில் நிலையம். அங்கிருந்து இரண்டரை மணிநேரம் வழக்கம் போல் தாமதமாக வந்த ரயிலில் கயா பயணம். பித்ரு பக்ஷ் இறுதி நாளுக்கு வந்திருந்தவர்களின் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு ஆட்டோ பிடித்து போத்கயா போய்ச் சேர்ந்தேன்.(சென்னை ஆட்டோக்களுக்கு பழகி விட்டவர்களுக்கு வேறு எங்கும் பிரச்சினைகள் கிடையாது தமிழ் நாடு அளவிற்கு எங்கும்  அடாவடித்தனம் இல்லை).

பெளத்தத்தில் விருப்பம் உள்ளவர்கள் புத்தமதம் குறித்து அறிய விரும்புபவர்களுக்கான பிரத்யேகமான கற்கும் இடம் இது. முன்பே நான் மஹாபோதி மந்திர் மற்றும் புத்தகயாவைச் சுற்றி உள்ள ஏராளமான கோயில்களுக்கும் மடாலயங்களுக்கும் போயிருந்ததால் இம்முறை ஆசிரமத்தை விட்டு வெளியேறுவதில்லை என முடிவு செய்திருந்தேன். தினசரி நிகழ்ச்சிகளிலும் அதற்கு இடமில்லை மேலும் அது பங்கேற்பாளர்களின் ஒற்றை நோக்கத்தையும் தடைப்படுத்தக் கூடியது.

ஒரு படைக்கும் கடவுள் இல்லை ஆன்மா இல்லை என்னும் அணுகுன்டுடன் தான்  கேஷே லா(geshe la- resident teacher) வகுப்பைத் தொடங்கினார். வந்திருந்தவர்கள் அனைவரும் கிறித்தவ-இந்து பிண்ணனியிலிருந்து வந்தவர்கள். திபெத்திய வஜ்ரயான மஹாயானம் ஏற்கனவே என் மனதிற்கு உகந்ததாக இருந்தது. வெறும் நம்பிக்கையை மட்டும் கோராமல் கற்றதை  ஆய்வுக்குட்படுத்தும் தன்மையை வலியுறுத்திச் சொன்னார். பெருவாரியான நம்பிக்கை என்னவென்றால் தேரவாத(ஹீனயானம்) மஹாயான பெளத்தம் புத்தரின் மறைவுக்குப் பிறகு தோன்றியதாகவே கருதப்படுகிறது. ஆனால்  தேர்ந்தெடுத்த ஒரு சில மிகச்சிறந்த சீடர்களிடம் மட்டும் புத்தர்(மஞ்சுஸ்ரீ அவலோகிதேஷ்வரா) பேசியதன் சூத்திரங்கள் தான் மஹாயானம். பின்னர் நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜூனர் அசங்கர் மற்றும் நாளந்தா ஆசிரியர்கள் காரண அறிவின் அடிப்படையில் புத்தரின் போதனைகளை முன்னெடுத்தனர்.

சோங்-கா-பா(tsongkapa) திபெத்திய பௌத்தத்தின் கெலுக்(gelug) பள்ளியை நிறுவியவர். உலகப் புகழ்பெற்ற தலாய்லாமா இந்தப் பள்ளியைச் சேர்ந்தவர் தான். திபெத்திய எழுச்சியைக் (Tibetan uprising)குறித்து மிகச்சிறிய அளவில் பேசினார் வகுப்பெடுத்த கேஷேலா. அதில் ஒடுக்கும் நாட்டைக் குறித்த எந்த புகாரோ காழ்ப்போ இல்லை மாறாக காந்தி தலாய்லாமா வழியிலான அஹிம்சை முறையில் அது தொடர்கிறது என்றார். சொந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியவர்களின் வலியை புரிந்து கொள்வது கடினம். அவர் குரல் கம்மி அடைத்தது. கேஷேலாவிற்கு மிக அடிப்படையான சில ஆங்கில வார்த்தைகளே தெரியும். அவர் திபெத்திய மொழியில் பேசப் பேச ஒரு மொழிபெயர்பாளர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உணவு இடைவெளியின் போது எல்லோரும் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிடுவது வழக்கம். கேஷேலாவிடம் ஒரு பெண் அவர் சீனாவிற்கு போக விரும்புகிறாரா என கேட்டார் அதற்கு அவர் நான் ஏன் சீனாவிற்கு போக வேண்டும் திபெத்திற்கு தான் போக விரும்புகிறேன் என்றார். கூறிவிட்டு ஒரு அட்டகாசமான புன்னகையை வழங்கினார். அவருடன் இருக்கும் போதெல்லாம் நான் எந்த வித இறுக்கத்தையும் உணரவில்லை. அன்பையும் இரக்கத்தையும் வெறுமென போதிப்பவர்கள் மட்டும் அல்ல பெரும்பாலான திபெத்திய துறவிகளும் கன்யாஸ்த்ரீகளும். அங்கே பெண் துறவிகளும் கணிசமாக இருந்தனர். தலாய்லாமா அவர்களுக்கு மிகப்பெரிய inspiration ஆக விளங்குவது இதற்கான ஒரு அடிப்படையாக இருக்கிறது.
43878954_10156893348056474_7834485205099347968_o
ஞானப் புரிதல் அடைந்து ஏழு வாரங்கள் புத்தர் எதையும் பேசவில்லை. மெளனமாகவே இருந்தார். பிறகு வாரணாசிக்கு பயணம் செய்து அங்கே தன் முதல் உரையை நிகழ்த்தினார். இதுவே முதல் தர்மசக்கர பரிபாலனம் எனப்படுகிறது. புத்த தர்மத்தின் அடிப்படை இந்த நான்கு உன்னத உண்மைகள். இந்த அடிப்படை அனைத்து பெளத்தப் பிரிவுகளுக்கும் ஒன்று தான். பின்னர் இரண்டாம் தர்மசக்கர பரிபாலனம் ராஜ்கீரில்(ராஜகிருஹம்) நிகழ்ந்தது. அதுவே மஹாயான பவுத்த அடிப்படையான இதய சூத்திரம். மூன்றாம் தர்மசக்கர பரிபாலனம் அவரது இறப்பு (மஹாபரிநிர்வாணம்) அவரது 75 அல்லது 81ம் அகவையில் இது நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. திபெத்திய பௌத்தத்தின் முக்கியமான ஆசிரியர்களில் ஒருவரான நாகார்ஜுனர் ‘வெறுமை’ குறித்த போதனைக்குப் பெயர் பெற்றவர். ஆனால் இந்தச் சொல் (வெறுமை-emptiness)பலரையும் தொல்லைப் படுத்தியதைக் காண முடிந்தது.

ஆன்மா இல்லாமல் மறுபிறவி சாத்தியமா என்பது இன்னொரு கேள்வி. அதற்கு மிக விரிவாகவே கேஷேலா பதிலளித்தார். எல்லோரும் உள்ளார்ந்து தாங்கள் எதில் convince ஆகிறார்களோ அதையே விரும்புகிறார்கள்.

அங்கே வந்திருந்த வங்கப் பெண் ஒருவருக்கு இஸ்லாத்தின் மீது ஆர்வம். பௌத்தத்தின் கடவுள் இல்லை அவரை மிகவும் தொல்லைப்படுத்தியது.

கூகுல் புத்தகங்கள் வாயிலாகவும் அனைத்தையும் அறியலாம் தான் ஆனால் குருமுகமாக அறியும் போது அது கொடுக்கும் அனுபவம் வேறு. பல் வேறு வகையான சடங்குகளால் ஆனது திபெத்திய பௌத்த மதம். கேஷேலா வரும் போதும் போகும் போதும்  கண்டிப்பாக பங்கேற்பாளர்கள் எழுந்து நின்று வணக்கம் செலுத்த வேண்டும்… சிலருக்கு இது சங்கடமாகவே இருந்தது தெரிந்தது. ஆனால் எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை.. எப்போதும் நான் விரும்பும் மதிக்கும் ஒருவரின் காலைத் தொட்டு வணங்குவதில் எனக்கு எந்த கெளரவ குறைவோ சங்கடமோ ஏற்பட்டதில்லை. மிக வித்தியாசமாக அங்கே வந்திருந்த படித்த நவீன இந்தியர்களிடம் மட்டும் இந்த சங்கடம் இருந்ததை காண முடிந்தது.

பெளத்தம் குறித்து கற்க-அறிய விரும்புவோருக்கு அழகான அதற்கான சூழலைக் கொண்ட இடம். விரும்பும் நண்பர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். https://www.rootinstitute.ngo

சிவக்குமார்

சென்னை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11
அடுத்த கட்டுரைமனசிலாயோ?