வீணை தனம்மாள்

dhana

அன்புள்ள ஜெ.,

வீணை தனம்மாளைப் பற்றி கல்கி கூறுகிறார் “சங்கீத உலகில் எவ்வளவோ அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். சங்கீதப் பண்டிதர்கள் ரசிப்பதை நம் போன்ற பாமரர்கள் ரசிக்கமுடியாது. சிலருக்கு பல்லவி பிடிக்கும். சிலருக்கு ராக ஆலாபனம்தான் பிடிக்கும். வேறு சிலருக்கு துக்கடாக்களிலே ப்ரீதி. ஆனால், ஒரே ஓர் விஷயத்தில் மட்டும் சங்கீத உலகத்தில் கருத்து வேற்றுமை என்பதே கிடையாது. அது என்னவெனில் கர்நாடக இசையின் சிறப்பை பரிபூரணமாகக் காணவேண்டுமெனில் வீணை தனம்மாளிடம்தான் காணலாம் என்பதுதான். சங்கீதக் கருவிகளுள்ளே தலை சிறந்தது வீணை என்று சொல்லவேண்டியதில்லை.சங்கீத தேவதை பயிலக்கூடிய வாத்தியம் ஒன்று உண்டானால் அது வீணையாகத்தான் இருக்கவேண்டும். தனம்மாள் வீணை வசிக்கும்போதோ சங்கீத தேவதை நம் எதிரில் உட்கார்ந்து வாசிப்பது போலவே பிரமை கொள்கிறோம். ஆனால், தனம்மாள் பாடும்போது இந்தப் பிரமை நீங்கிவிடுகிறது எனலாம். வயது கொஞ்சமா? நஞ்சமா? அறுபதுக்கும் மேலல்லவா ஆகிறது. சாரீரத்தில் இனிமை போய் விட்டது. எனவே, வீணையின் இனிமையை மிகைப்படுத்திக்காட்ட அம்மாளின் சாரீரம் பகைப் புலனாகப் பயன்பட்டது என்றே சொல்லலாம். ஆனாலும், அவருடைய பாட்டு எத்தகைய பாட்டு! என்ன பிடிப்பு! என்ன அழுத்தம்! என்ன கமகம்! ஒருவருடைய இருதய உணர்ச்சி முழுவதும் பாட்டின் வழியாக வெளிப்படக் கூடுமானால், அது தனம்மாளின் பாட்டிலேதான். அம்மாளுக்கு இரண்டு கண்ணும் தெரியாது. ஆனால் அவர் பாடும்போது சிற்சில சமயம் அவர் கண்களிலிருந்து ஒரு அற்புத ஒளி வெளியாவதைக் காணலாம்”

இதே கருத்தை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையும் தன்னுடைய ‘சக்தி’ இதழ் கட்டுரையில்(இவர் பெயரில் வெளிவந்த ஒரே கட்டுரை) கூறுகிறார். அவருடைய புகழ்பெற்ற வானொலிப் பேட்டியிலும் இதே கருத்தைக் கூறிச் செல்கிறார்.

https://www.youtube.com/watch?v=T8H_GCH41sw

இந்த ஒலிப்பதிவில் பேட்டி எடுப்பவர் சற்றே ‘தொண தொண’ வென்று பேசுவதுபோல் இருந்தாலும் பேட்டியை  உயிருள்ளதாக்குகிறது. பேட்டி எடுக்கப்பட்ட காலம், வானொலிப்பேட்டி, கேட்பவர்கள் பாமரர்கள் என்பதை மனதில் கொண்டால் இவருடைய பங்களிப்பு வேறு பரிமாணத்தைக் கொடுக்கும்.

அவருடைய பாட்டி மற்றும் தாயார் அவரவர் காலங்களின் மிகச் சிறந்த விதவாம்சினிகள். ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் என்ற இரண்டு சங்கீத மூலவர்களின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களும் தனம்மாளுக்கு குருவாக அமைந்ததனால் அவருடைய பாடாந்தரம் யாரும் தொட முடியாத வேறு தளத்தில் இருந்ததில் ஆச்சரியமில்லை. காசிக்குப் பல முறை சென்று இதற்குச் சமமாக இந்துஸ்தானி இசையையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் காலத்தில் வாழ்ந்த திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்(வயலின்), சரப சாஸ்திரி(புல்லாங்குழல்), கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயர்(வாய்ப்பாட்டு) போன்ற சக கலைஞர்களின் பேரபிமானத்தைப் பெற்றவராக இருந்தார். இவருடன் இசை சம்பந்தமான தொடர்ந்த  உரையாடலில் இருந்தவர்  எழுத்தாளர் மாதவையா.

இந்தக் காணொளியில் பேராசிரியை  ரித்தா ராஜன்  வீணை தனம்மாளைப் பற்றிய வரலாறு மற்றும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவருடைய சங்கீத பரம்பரை, குரு பரம்பரை மற்றும் சிஷ்ய பரம்பரையைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார். சிலருக்கு சில வார்த்தைகளின் ஒலி மனதுக்கு மிகவும் பிடித்தமானதாக ஆகி விடுவதால் திரும்பத் திரும்ப உபயோகிக்கிறார்களா தெரியவில்லை.’ரெபெர்டோயெர்’ (Repertoire – பாடாந்தரம் – Specialised Stock of Songs சரியான உச்சரிப்பு ‘ரெபெட்வா ‘) என்கிற வார்த்தையை எத்தனை தடவை உபயோகிக்கிறார் பாருங்கள்.

மிகச் சிறந்த பேட்டி.

https://www.youtube.com/watch?v=FvRXFQIeW8I

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைஎழுத்தாளர் முகங்கள்
அடுத்த கட்டுரைநம் அச்சமும் அவர்களின் அச்சமும்