நம் அச்சமும் அவர்களின் அச்சமும்

ste
ஸ்டீஃபன் கிங்

தோற்கடிக்கப்பட்ட அறிவுத்தரப்பு

அன்புள்ள ஜெ,
“பேயை அஞ்சுவது ஏன்?” கட்டுரை படித்தேன். பல வருடங்களுக்கு முன், புகழ் பெற்ற திகில் கதை எழுத்தாளரான ஸ்டீபன் கிங்கின் புனைவல்லாத படைப்பான Danse Macabre  என்ற புத்தகத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது..

அதில் கிங் திகில் கதையமைப்புகளை வகைப்படுத்தி விரித்துரைக்கிறார். அருவருப்பால் வரும் பயம் (gross-out), புலப்படாத, பரிச்சயமில்லதன பற்றிய இயல்பான‌ எச்சரிக்கை உணர்வினால் வரும் அச்சம் (fear of the unknown),  சாவைப் பற்றிய பயம் எனப் பலவாறாகப் பிரித்து,ஒவ்வொன்றுக்கும் உதாரணமாக சில படைப்புகளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

ஒவ்வொரு கால கட்டத்தில் புகழ் பெற்றிருந்த திகில் படைப்புக்கள் அந்தக் கால கட்டத்தின் சராசரி மக்களது மனதில் குடி கொண்டிருந்த பொதுவான அச்சங்களை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பனவாக இருக்கும் என்கிறார்.

உதாரணமாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர்  அணு ஆயுதப் போராக உருமாறும் அபாயம் அமெரிக்க மக்களின் மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரத்தில் வேற்றுக் கிரகவாசிகள் நம் பூமி மேல் படையெடுத்து வரும் கதைகளும் திரைப்படங்களும் அங்கு பிரபலமாயிருந்தன. சிறப்பான எடுத்துக்காட்டாக‌,Jack Finney எழுதிய  Invasion of the Body Snatchers என்ற குறுநாவலைக் குறிப்பிடுகிறார்.  (இந்தக் குறுநாவலைப் பற்றி ஆல்பிரட் ஹிச்காக்கும்  Stories that scared even me என்ற தனது கதைத் தொகுப்பில் சிறப்பித்து எழுதியிருக்கிறார்.)

were
வேர்வுல்ஃப்

இந்தப் புத்தகத்தில் கிங் தன்னுடைய சில நாவல்களின் திகில் அம்சம் பற்றியும் பேசுகிறார். சமீபத்தில் ஹாலிவுட் திரைப்படமாக‌ வெளிவந்த‌ It என்கிற கதையில் வரும் பேய், ஒருவரின் ஆழ்மனதில் பதிந்துள்ள பயத்துக்கு உருக்கொடுக்கும் சக்தியுடையது.

அதற்கு நேர்மாறாக,  Needful Things என்கிற கதையில் வரும் சில்லறைப் பொருள் கடைக்காரனான‌ சாத்தான், ஆசை வைத்து கைக்கெட்டாமல் போன சின்னப் பொருட்களை இருப்பதாக ஜாலம் காட்டி, அவற்றை அடைய‌ ஆசைப்படும் ஊர் மக்களை சக ஜனங்களிடம் கொடுஞ்செயல்கள் புரியத்  தூண்டுகிறான்.

திகிலூட்டும் படம் என்று தெரிந்தும் அதைத் தேடிப் போய் காசு கொடுத்து நடுங்கிக் கொண்டே பார்க்கும் உந்துதலுக்கான‌ காரணமும் இப்புத்தகத்தில் ஆராயப்படுகிறது. அந்த பயத்தை எதிர்கொண்டு வெல்லும் (confront) ஒரு வழியாகவே அதை கிங் கொள்கிறார்.

டிராகுலாவை நினைத்து நித்தமும் இரவில் பயப்படும் ஒரு குழந்தை உள்ளமே, காலப்போக்கில், அதன் இதயத்தில் ஒரு கூரிய கட்டையைக் குத்தி அதைக் கொல்லும் உபாயத்தைக் கற்பனையில் கண்டுபிடித்திருக்கும் என்கிறார்.
அன்புடன்,

சுப்பிரமணியன்

ly
லைகன்

அன்புள்ள சுப்ரமணியன்,

அச்சம் என்பது எப்போதும் ஒன்றல்ல. இங்கே வரும் பிரபல பாணி திகில்கதைகளில் வரும் ‘பேய்த்தெய்வங்களை’ ஹாலிவுட்டுடன் ஒப்பிட்டால் இதைக் காணலாம். இவை அச்சமூட்டும்படி சித்தரிக்கப்படுபவை தெய்வங்கள், அல்லது தெய்வகணங்கள். ஒரு பிழையைச் சீர்செய்யவே அவை எழுகின்றன. தண்டிப்பதற்காகவே அவை பலிகொள்கின்றன. உதாரணமாக மாரியம்மன் நோய் அளிப்பவள், நோயே வடிவானவள், ஆனால் நலம்தருபவளும் அவளே.

நாம் அச்சமூட்டும் அனைத்தையும் வணங்கி அணுக்கமானவையாக ஆக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை  கொண்டவர்கள் என்பதை இளமையில் நாம் கேட்ட பேய்க்கதைகளை நோக்கினால் புரிந்துகொள்ள முடியும். சமீபகாலமாக மேலைநாட்டு கதைகளை தழுவி உருவாக்கப்படும் பேய்க்கதைகளில்தான் தீங்கிழைக்கும் ‘கெட்ட’ ஆவிகள் பெருகியிருக்கின்றன. அவை மானுடர்களை அழிக்க முயல்கின்றன.

vam
வாம்பையர்

பேயை அல்லது கொடுந்தெய்வங்களை உலகமெங்கணும் ஒரே வகையில் பார்ப்பதில்லை. அதிலுள்ள அச்சம், ஒவ்வாமை கூட உலகமெங்கும் ஒன்று அல்ல.அவை வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை

ஹாலிவுட் சினிமாக்களில் வரும் ரத்தக்காட்டேரிகள் [vampire] , ஓநாய்தெய்வங்கள் [werewolf] போன்றவை அங்கே தோற்கடிக்கப்பட்ட பாகன் தெய்வங்கள்தான்.அந்த தோற்கடிக்கப்பட்ட தெய்வங்கள் மீதான ஒவ்வாமையும் அருவருப்பும் அச்சமும் அவற்றை பாதாளதேவர்களாக ஆக்கியது. நினைவின் ஆழத்திற்குத் தள்ளியது. அவை மண்ணின் ஆழத்திலிருந்து, நனவிலியில் இருந்து எழுந்து வந்தபடியே உள்ளன.  ஹாலிவுட் படங்களில் இவை எழும் காட்சிகள் எல்லாமே கனவுச்சாயையுடன் இருப்பதை, இவற்றின் உலகம் நனவிலியின் குறியீடாக தோன்றுவதைக் கவனிக்கலாம்.

இந்தியாவில் இந்துமதம் அழிந்து செமிட்டிக் மதம் நிலைகொண்டிருந்தால் அனுமன் குரங்குப்பேயாகவும் காளி ரத்தக்காட்டேரியாகவும் கதைகளில் இருந்திருப்பார்கள். சமீபத்தில் மோகன் சி லாசரஸ் பேசிய உரையைக் கேட்டிருப்பீர்கள். அதில் அவர் வெளிப்படையாகவே இந்து ஆலயங்கள் அனைத்தும் சாத்தானின் கோட்டைகள் என்பதைக் காணலாம். ஒவ்வொருநாளும் குமரிமாவட்டத்தில் எவரேனும் இதைச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.இன்றுகூட குமரிமாவட்ட கிறித்தவர்களுக்கு பிள்ளையார் அச்சமும் அருவருப்பும் ஊட்டும் ஒரு கொடுந்தெய்வமே.  என் நாலாம் வீட்டில் ஓராண்டுக்கு முன் பல பாதிரியார்கள் கூடி இரவெல்லாம் பிரார்த்தனை செய்தார்கள், அங்கே ஊடுருவியிருக்கும் பிள்ளையாரை ‘ஓட்டுவதற்காக’!

ஆப்ரிக்காவிலும் இந்தியாவிலும் கொடுந்தெய்வங்களே வழிபாட்டுத் தெய்வங்களுமாகவும் இருக்கின்றன. இவற்றை மேலைநாட்டு ஆய்வாளர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை. மாயாண்டிசாமி அல்லது முனியசாமி கொடுந்தெய்வமா என்றால் ஆம். அருளும்தெய்வமா என்றால் அதுவும் ஆம்தான். வழிபாடுகளில் நாட்டார்த்தெய்வங்கள் நீடிக்கும் சூழலிலேயே இதை நம்மால் காணமுடியும்.

ganeshநாட்டார் வழிபாடு இந்து மதத்துக்குள் பிரிக்கமுடியாதபடி ஊடுருவியிருக்கிறது. ஆகவேதான் காலபைரவன், சண்டிகை போன்ற தெய்வங்கள் இந்துவழிபாட்டு முறைக்குள் உள்ளன. நாட்டார் வழிபாட்டுமுறை முழுக்கமுழுக்க இந்துமதமேதான். ஆகவேதான் மாயாண்டிச்சாமிக்கு அவதாரநோக்கமும், சிவனுடைய அருளும் உள்ளது. அவருக்கான வழிபாட்டுமுறைமைகள் முழுக்கமுழுக்க சைவ மரபு சார்ந்தவையாக உள்ளன. துதிப்பாடல்களில் எல்லா வரிகளும் சைவ மரபைச்சேர்ந்தவையாக ஒலிக்கின்றன.

ஆகவே மேலைநாட்டு பேயுருவகங்கள், கொடுந்தெய்வ உருவகங்கள் ஆகியவற்றை இயல்பாக கீழைநாட்டு பேயுருவகங்களுடனும் கொடுந்தெய்வங்களுடனும் ஒப்பிட்டுவிடக்கூடாது. மேலைநாட்டு உருவகங்கள் செமிட்டிக் மதமான கிறித்தவத்தால் மறு ஆக்கம் செய்யப்பட்டவை. கிறித்தவ உளவியலின் ஆழத்திலிருந்து எழுபவை. அது தீர்க்கதரிசன மதம். ஆகவே கருப்பு வெள்ளை என திட்டவட்டமாகப் பிரித்து வைத்திருக்கிறது.கடுமையான ஒறுப்பையும் அச்சத்தையும் விளையவைத்திருக்கிறது.

உதாரணமாக, கிறித்தவ உளவியலில் ஆவி என்றாலே தீயதுதான். ஆனால் இந்திய உளவியலில் அவ்வாறல்ல. மூதாதையர் ஆவியை தெய்வமாக வழிபடும் வழக்கமும் அதற்கான உளவியலும் இங்கு உண்டு. குடும்பத்தில் ஒருவர் மேல் இறந்தவர்கள் ஆவியாக எழுவதை ஒரு நற்பேறென நினைத்து வழிபடுவது பல குடும்பங்களில் வழக்கம். அனேகமாக எல்லா குடிகளிலும் ஆவிகளுக்கு இல்லத்தில் ஓர் அறையில் சோறுபடைத்து வணங்கும் வழக்கம் [புரையில்வைப்பு என குமரிமாவட்டத்தில் சொல்வார்கள்] உண்டு. இங்கே ஆவிகள் பெரும்பாலும் நம்முடன் இருக்கும் நம்முடைய முன்னோர்களே. அவர்களை இயல்பாக எடுத்துக்கொள்வதும் நலம்நாடுபவர்களாக எண்ணிக்கொள்வதுமே நமது வழக்கம்.

hanuman_by_molee-d16bwwr
ஹனுமான், மோலீ வரைந்த ஓவியம்

அதேபோல தெய்வங்களின் உருவகங்கள் மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம். யக்‌ஷி, யக்‌ஷர் என்னும் தெய்வங்கள் மகாபாரதக் காலகட்டத்தில் தேவர்களுக்கு ஒரு படிகுறைவான தேவர்கள். யக்ஷி ஒருவகை வனதேவதை. தீங்கிழைக்காதவள். இசையுடன் தொடர்புடையவள். மலர்களில் வாழ்பவள். அவர்களின் எல்லைக்குள் அத்துமீறினால் மட்டுமே தண்டிப்பவள். அருள்புரிபவள். சமண மதத்தில் யக்‌ஷி கிட்டத்தட்ட தெய்வம். தீர்த்தங்காரர்களுக்குக் காவலாக அமைபவள். பக்தர்களின் வேண்டுதல்களுக்கு அருள்புரிபவள். கூஷ்மாண்டினி, பத்மாவதி, அம்பிகை போன்ற யக்‌ஷிகளுக்கு தனிக்கோயில்களே உண்டு.

சமணத்தின் வீட்சிக்குப்பின் யக்ஷி இந்து நாட்டார் மரபுக்குள் புதுவடிவு கொண்டது. தீயூழ் இறப்பு கொண்ட பெண்கள் யக்ஷிகளானார்கள். பழிவாங்கியபின் சிவனிடம் வரம் வாங்கி தெய்வங்களாக அமைந்தார்கள். நாட்டார் மரபிலிருந்த பெண்தெய்வங்கள் பெரும்பாலானவை யக்‌ஷிகளாக மாறின. வைதிக, சமண மரபில் இருந்தபோது யக்‌ஷிகளிடம் இல்லாதிருந்த பயங்கர அம்சம் இவர்களில் குடியேறியது.

நாட்டார் தெய்வங்கள் தொடர்ந்து மையமரபால் உள்ளிழுக்கப்படுகின்றன. அவை இங்கே பிசாசுக்களோ பேய்களோ ஆக மாற்றப்படுவதில்லை. வழிபடுதெய்வங்களாக ஆக்கப்படுகின்றன. அவற்றின் அனைத்துப் பண்பாட்டுத்தனித்தன்மைகளும் அப்படியே நிலைநிறுத்தப்பட்டு அவை பெருந்தெய்வங்களுடன் இணைக்கப்படுகின்றன. பதினெட்டாம்படிக் கருப்பசாமி மையவழிபாட்டுக்குள் சென்று முந்நூறாண்டுகளாகின்றன, இன்றும் அவருடைய அனைத்துத் தனித்தன்மைகளும் அவ்வண்ணமே நீடிக்கின்றன

நரசிம்மம் மோலீ வரைந்தது
நரசிம்மம் மோலீ வரைந்தது

உண்மையில் நம்முடையது அச்சம் அல்ல, அது பிரமிப்பும் வியப்பும் கலந்த ஒரு நிலையழிவு. ஆங்கிலத்தில் awe என்று சொல்லப்படும் ஒரு பேருணர்வு. பிரபஞ்சத்தின் அறியமுடியா நிகழ்வுகளில் நம்மில் ஏற்படும் அகப்பதைப்பு. அப்படி எங்கெல்லாம் எவ்வடிவிலெல்லாம் அறியமுடியாமை வெளிப்படுகிறதோ அவையெல்லாம் தெய்வத்தன்மை கொண்டவையே என்பது நம் எண்ணம்

அய்யனார், முனியாண்டி, கருப்பசாமி என நம் மரபிலுள்ள அத்தனை தெய்வங்களையும் இப்படி விரிந்த வரலாற்றுப்புலத்தில் வைத்தே ஆராயவேண்டும். நமது அச்சம் வேறு அவர்களின் அச்சம் வேறு என்பதை நாம் அப்போது தெளிவுறக் காணலாம். நம் தீயூழ் என்னவென்றால் அப்படிப்பட்ட ஆய்வுகள் இங்கே நிகழ்வதே இல்லை என்பதுதான். இங்கே நிகழும் ஆய்வுகள் மேலைநாட்டு நாட்டாரியல் முன்மாதிரிகளை எந்தப்பரிசீலனையும் இல்லாமல் அப்படியே போட்டு செய்யப்படும் ஆய்வுகள். மேலைநாட்டு ஆய்வாளர்களின் முன்முடிவுகளை தங்கள் இறுதிமுடிவுகளாகச் சென்றடைபவை.அன்றாட அரசியலுக்கு ஏற்ப வரலாற்றையும் பண்பாட்டையும் முழுமையாகவே திரித்துச் சொல்பவை. கூலி எழுத்துக்கள்.

சமீபகாலமாக டிஜிட்டல் ஓவியங்களாக வரும் இந்து தெய்வங்களின் சித்தரிப்புகளில் கணிசமானவை அவற்றை கொடுந்தெய்வங்களாக, மேலைநாட்டு லைக்கன்கள் வாம்பயர்கள் போல சித்தரிப்பதைக் காணலாம். இவை பெரும்பாலும் மேலைநாட்டுக் காட்சியூடகங்களின் தேவைக்கேற்ப வரையப்படுபவை. இவற்றால் நம் மனம் மாறிவிடுவதில்லை, ஏனென்றால் நாம் பயங்கரத்தையும் அருளையும் ஒன்றின் இரு பகுதியாகப் பார்ப்பவர்கள். ஆனால் அவர்களின் நோக்கு என்ன என்று அவற்றில் தெரிகிறது.

இந்த உள்நோக்கம் கொண்ட ஆய்வுகளால் நம் மரபு முழுமையாகவே தவறாக விளக்கப்பட்டுவிடும் என்றால் எதிர்காலத்தில் நம் வழித்தோன்றல்கள் பெரும் மணற்குவியலை அகற்றியே தங்கள் பண்பாட்டை மீட்டெடுக்கவேண்டியிருக்கும். மீட்டெடுக்க முடியாமலேயேகூட போகலாம்.  மிகப்பெரிய அழிவு அது, அத்தகைய அழிவுக்குள்ளான பல சமூகங்கள் இன்று வரலாற்றில் வெறுமைகொண்டு நின்றுள்ளன.

மீண்டும் மீண்டும் இன்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டிய விஷயம் இது

ஜெ

முந்தைய கட்டுரைவீணை தனம்மாள்
அடுத்த கட்டுரைகதைக்கரு,கதை,திரைக்கதை-சர்க்கார் ஒரு கடிதம்