நூறுநாற்காலிகள் -கடிதங்கள்

nu

 நூறுநாற்காலிகள் வாங்க

அன்புள்ள ஜெ,

 

நான் என்னோட வீட்டுக்கு போற வரைக்கும் அழக்கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா,வாசல் வரதுக்குள்ள அழுதிட்டேன். உங்களோட ரெண்டு மூணு சிறுகதை தொகுப்பு படிச்சு இருக்கேன். ஆனா, இந்த ‘அறம்’ தொகுப்புல மட்டும் ஒவ்வொரு கதை படிக்கும் போது எனக்கு ஒவ்வொரு திறப்புகள் கிடைக்குது. என்னால தாங்கவே முடியாத சந்தோசத்தை கொடுத்ததும் இந்தக் கதைகள் தான். என்னால சுமக்கவே முடியாத சோகத்தை கொடுத்ததும் இந்தக் கதைகள் தான்.

 

இன்னைக்கு ‘நூறு நாற்காலிகள்’ கதை படிச்சேன். படிக்க படிக்க ஒரு பாய்ண்டுக்கு மேல, இந்தக் கதையை யாருமே எழுதல தன்னால

உருவான சுயம்பு அப்படின்னு ஒரு யோசனை வர ஆரம்பிச்சுருச்சு. படிச்சு முடிச்சதும் ஒரு 102கிலோ கேள்விக்குறியா மட்டும் தான் என்னை உணர முடிஞ்சது.

 

‘வணங்கான்’ கதை படிச்சுட்டு சந்தோசத்துல மிதந்த நான், இன்னைக்கு இந்தக் கதை படிச்சிட்டு ஹேங் ஆயிட்டேன். அந்தப் போதையில தான் எழுதிட்டு இருக்கேன்.

 

அதுல வந்த நாடரும் அடக்கு முறைக்கு உள்ளானவர் தான். ஆனா, ‘கப்பா’வுக்கு தனக்கு நடக்கிறது கொடுமைன்னு கூட தெரியாத அளவுக்கு பழகிப்போய் இருக்காங்க. நாற்காலியே கொடுக்க மாட்டேனு சொல்லி இட ஒதுக்கீட்டை நிறுத்தனும்னு சொல்ற கூட்டம் இந்தக் கதையைப் படிக்கணும், அப்போ தான் அவங்களுக்கு தெரியும் இதுவரைக்கும் அந்தக் கூட்டம் ஒடுக்கப்பட்டவனுக்கு ஒன்னும் சிம்மாசனத்தைக் கொடுத்தரல, அதை கெட்டியா பிடிச்சுகிட்டு ஒரு பழைய மர நாற்காலியை கொடுத்து வைச்சுட்டு,” பாரு நாங்க நியாயமா நடந்துட்டோம்னு” பொய் சொல்றாங்க.

 

அந்த மர நாற்காலியில உக்கார்ந்துட்டு அவனால சிம்மாசனத்தைக் கேள்வி கேக்க முடியாது. அப்படி அவன் சண்டை போடணும்னு நினைச்சாலும் இன்னொரு மர நாற்காலியை மோத விட்டு வேடிக்கை பாக்குறாங்க.

 

கப்பாவோட அம்மா என் கண்ணுக்கு பைத்தியமாவோ தப்பவோ தெரியல.

எந்த மாயையிலயும் சிக்காத உயிரா தான் தெரியுது.

நல்லா காய்ச்சி அடிச்ச இரும்ப திடிர்னு தண்ணில வைச்சா, கொஞ்ச நேரத்துல உடைஞ்சு போற மாதிரி தான் அவளும்.

 

அந்த அம்மாவுக்கு அதிகாரங்கிறது பயத்தையும் தாண்டி ஒரு அருவருப்பா தான் தெரியுது. அவளுக்கு சட்டை அதிகாரம், வெள்ளை தோல் அதிகாரம், கூரை அதிகாரம், நாற்காலியும் அதிகாரம். எல்லாத்தையும் அவ அருவருக்கறா.

 

அந்தப் பையன் இன்னைக்கு படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போற முதல் தலைமுறை தலித்தோட பிரதிநிதி. ஒடுக்கப்பட்டவங்களுக்கு உள்ளேயே இருக்கிற உட்சாதி பிரிவுகள் அதோட அடக்கு முறை. இது எல்லாமே பேசப்பட வேண்டியது, சரி செய்யப் பட வேண்டியது.

 

தனக்கு மேல ஒருத்தன் தன்னை நசுக்கறான்னு நினைச்சா எப்பவோ ஒழிஞ்சுருக்கும். எல்லோரும் தான் நசுக்க ஒருத்தன் இருக்கானு நினைக்கிறதுனால தான் இன்னும் ஒழியாம இருக்கு.

 

மர நாற்காலிக்கு வந்தவன், தரையில இருக்கறவனோட குரலா இருக்கணும். அவன் சிம்மாசனத்துக்கு போகணும்.

 

இன்னும் நூறு நாற்காலிகள் தேவை.

 

இப்படிக்கு,

சபரி.

(கோவை)

 

 

அன்புள்ள ஜெ

 

நூறுநாற்காலிகள் கதையை ஒரு தனிவெளியீடாக இன்றுதான் வாசித்தேன். எனக்கு அதன் சமூகச் செய்தியைவிடவும் அதிலிருந்த தனிமனித துக்கம்தான் மிகப்பெரிதாகப் பட்டது. நாம் என்னதான் பெரிதாக வளர்ந்தாலும் நம் இளமைப்பருவ வடுக்களிலிருந்து எளிதில் வெளியே செல்ல முடிவதில்லை. அது நம்மை கொத்திப்பிடுங்கிக்கொண்டே இருக்கிறது. அந்நிலையில் எங்கே சென்றாலும் என்ன அடைவது என்ற கேள்விதான் எழுகிறது. நல்ல இளமைப்பருவம் அடைவது நல்ல முகமும் நல்ல செல்வமும் அடைவதுபோல ஒரு கொடுப்பினைதான். நான் இதையெல்லாம் என் வாழ்க்கையை வைத்தே எண்ணிக்கொள்கிறேன்

 

எஸ். மகேந்திரன்

முந்தைய கட்டுரைநெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைமீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்