பிணறாயி

pinaray

கேரள முதல்வர் பிணறாயி விஜயனின் பெயரை வைத்து இங்கே சிலர் முகநூலில் களமாடிவருகிறார்கள் என்கிறார் ஆய்வாளர் நா.கணேசன். பிணறாயி என்பதை பிணத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள். பிணறாயி என்பதன் பொருள்தேடி அவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

கேரளத்தில் கண்ணூரிலிருந்து 20 கிமி தொலைவில் தலைசேரிக்கு அருகில் உள்ள சிறிய ஊர் பிணறாயி. கேரள முதல்வர் விஜயன் அங்கே பிறந்தார். ஆகவே பிணறாயி விஜயன் என அழைக்கப்படுகிறார். அவருடைய தந்தை முண்டயில் கோரன் ஒரு தென்னை ஏறும் தொழிலாளர். தாய் கல்யாணி. 1945 மேய் 24ல் பிணறாயி விஜயன் பிறந்தார். குமாரன் நாணு என இரண்டு உடன்பிறந்தவர்கள் விஜயனுக்கு உண்டு. தலைச்சேரி செயிண்ட் ஜோஸஃப்ஸ் பள்ளியின் ஆசிரியையான ஒஞ்சியம் கண்ணூக்கரை வீட்டில் கமலா அவருடைய மனைவி. விவேக், கிரண் என இரு மகன்கள். வீணா என ஒரு மகள்.

பிணறாயி என்ற பெயரின் அமைப்பைப் புரிந்துகொள்ள கண்ணூரின் ஊர்ப்பெயர்களைன் அமைப்பைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆயி என முடியும் ஏராளமான ஊர்பெயர்கள் அங்கே உண்டு. கல்லாயி, மாடாயி, நெல்லாயி போன்ற பல பெயர்கள். [வத்ஸன் கல்லாயி என்னும் விமர்சகரும் தாஹா மாடாயி என்னும் கவிஞரும் அங்குண்டு. இருவருமே மார்க்ஸியர்கள். கல்பற்றா நாராயணன் வேடிக்கையாகச் சொன்னதுபோல மார்க்ஸியத்தால் வத்ஸன் கல்லாய் மாறினார். தாஹா மாடாய் மாறினார்]

kallay

கல்லாயிப் புழ கண்ணூரின் அழகான சிற்றாறுகளில் ஒன்று. அழகிய சிலபாடல்கள் சினிமாவிலுண்டு. கல்லாயி புழையொரு மணவாட்டி  கடலின்றே புன்னார மணவாட்டி. பதினாறு திகஞ்ஞிட்டும் கல்யாணம் கழிஞ்ஞிட்டும் பாவாட மாறாத பெண்குட்டி    [ கல்லாயி ஆறு ஒரு மணப்பெண். கடலின் அருமை மனைவி. பதினாறு வயதானபின்னரும் திருமணம் ஆனபின்னரும் பாவாடை மாறாத பெண் ] , பதிநாலாம் நிலாவுதிச்சது மானத்தோ கல்லாயி கடவத்தோ? [பதினான்காம் நிலவு உதித்தது வானத்திலா கல்லாயி படித்துறையிலா?] அவை கண்ணூரின் பாடலாசிரியரான யூஸஃப் அலி கேச்சேரி எழுதியவை.

ஆயி என முடியும் பெயர்கள் பெரும்பாலானவை ஆற்றங்கரைப் படகுத்துறை அல்லது படித்துறைகளுக்குரியவை. அவையே பின்னர் ஊர்ப்பெயர்களாயின.பிணர் என்பது செந்தணக்கு என்றும் அழைக்கப்படும் ஒரு மரம். நீர்க்கரைகளில் வளர்வது. சிவந்த மலர்கள்கொண்டது.

piNar

ஆகவே பிணறாயி என்பது பிணர் மரத்தடியின் படகுத்துறை என்ற பொருள் கொண்டிருக்கவே வாய்ப்பு மிகுதி. நா. கணேசனின் ஊகம் சரியானதுதான்

நா. கணேசனின் கட்டுரை

பதிநாலாம் நிலாவுதிச்சது மானத்தோ கல்லாயி கடவத்தோ
பனிநீரின் பூ விரிஞ்ஞது முற்றத்தோ கண்ணாடி கவிளத்தோ?

கல்லாயி புழையொரு மணவாட்டி
கடலின்றே புன்னார மணவாட்டி.
பதினாறு திகஞ்ஞிட்டும் கல்யாணம் கழிஞ்ஞிட்டும்
பாவாட மாறாத பெண்குட்டி

முந்தைய கட்டுரைமீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-55