திருதராஷ்டிரர் சங்குலனால் ஒரு துணிப்பாவையென கையாளப்படுவதை பார்த்தபடி சஞ்சயன் வாசலில் நின்றிருந்தான். நீராடி முடித்த அவன் உடல் காலைக்காற்றால் உலரத்தொடங்கிவிட்டிருந்தது. ஆனால் நாட்கணக்காக நன்கு துயிலாத அவன் உடல் தளர்வை உணர்ந்தது. வாயில் கசப்பு எஞ்சியிருக்க கைகளை நெஞ்சில் கட்டிக்கொண்டு காத்திருந்தான். அப்பால் திருதராஷ்டிரருக்கான தேர் ஒருங்கி நின்றிருந்தது. அவர் தாடை அசைய வெறும்வாயை மெல்வதுபோல் அசைத்தபடி தலையை உருட்டிக்கொண்டிருந்தார். அவ்வப்போது மெல்லிய முனகலோசை அவரிடமிருந்து எழுந்தது. அந்த ஓசை சஞ்சயனை உளமுருகச் செய்தது. அவர் அடிக்கடி முனகுவதுண்டு, ஆனால் அது ஆணையிடுவதுபோலவோ வினவுவதுபோலவோ அரிதாக எதையேனும் ஏற்பதுபோலவோ ஒலிக்கும். அப்போது துயிலின் கனவுகண்டு முனகும் குழவி என ஒலித்தது. அவ்வப்போது தாளமுடியா வலியில் நைந்த உடல்கொண்ட நோயாளனுடைய குரல் என கேட்டது.
சங்குலன் திருதராஷ்டிரரைத் தூக்கிநிறுத்தி கைபற்றி வெளியே கொண்டுவந்து தேரிலேற்றினான். சஞ்சயன் சங்குலனிடம் தலையசைத்துவிட்டு தேரிலேறிக்கொண்டான். திருதராஷ்டிரர் தேர்த்தட்டில் சாய்ந்து அமர்ந்து “ம்” என்றார். தேர் கிளம்பியதும் சஞ்சயன் பெருமூச்சுவிட்டான். தேரை வேறெங்காவது கொண்டுசெல்லலாமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அல்லது பிறிதொரு போரை சொல்லிவிடலாமா? அவ்வெண்ணத்திலிருந்த அறிவின்மையால் அவனே சலிப்புடன் புன்னகை செய்துகொண்டான். இக்கட்டுகளில் எப்போதும் குழந்தைபோல மீள்வழி நோக்குவதே அவன் வழக்கம். அத்தனை மானுடரும் அப்படித்தானா? இக்கட்டுகளில் இருந்து மீள்வதைப்பற்றி பெரிதும் எண்ணியதெல்லாம் இளமையில்தானே?
வழியெங்கும் திருதராஷ்டிரர் பேசாமல் அரைத்துயிலில் என அமர்ந்திருந்தார். வழக்கமாக அவருக்குள் கனவும் நனவுமென கலந்து பெருகியிருக்கும் ஒரு போரைப்பற்றி சொல்லிக்கொண்டே வருவார். சென்ற மூன்று நாட்களாகவே ஆழ்ந்த அமைதிக்குள் சென்றுகொண்டிருந்தார். நோக்குமாடத்தில் ஏற திருதராஷ்டிரர் பெரிதும் வருத்தமுற்றார். மூச்சிரைத்தபடி ஒவ்வொரு படியிலாக நின்று மெல்ல மெல்ல மேலேறினார். மேலும் படிகளிருப்பதை அவர் உணரவில்லை. படிகள் முடிந்ததையும் உணரவில்லை. இருக்கையிலமர்ந்ததும் “சொல்” என்றார். “அரசே, இன்னும் பொழுது விடியவில்லை” என்றான் சஞ்சயன். “ஆம்” என அவர் சொன்னார்.
“அரசே, இன்றைய படைசூழ்கையை பீஷ்மர் ஆமைவடிவில் அமைத்திருக்கிறார்” என்று சஞ்சயன் சொல்லத் தொடங்கினான். “ஆமையின் வலுவான ஓடு என நம் படைகளின் வெளிச்சூழ்கை அமைந்துள்ளது. வலுவான ஷத்ரியப் படையால் மூன்று அடுக்குகளாக ஆமையோடு அமைக்கப்பட்டுள்ளது. கோசலர், காம்போஜர், திரிகர்த்தர், மாளவர், சால்வர், சைந்தவர், சௌவீரர் என பெரிய அரசுகளின் படைகள் முதல்நிரை. ஆந்திரர், ஆபிசாரர், அம்பஸ்தர், அஸ்வாடகர், அஜநேயர், ஆபிரர், அரட்டர், ஆரிவேகர், கர்ணப்பிரவர்ணர், கிதவர், குந்தலர், குலூதர், கசுத்ரகர், காசர், கோவாசனர், சிச்சிலர், சீனர், சுச்சுபர், துஷாரர், துண்டிகேரர் என்னும் படையினர் அடுத்த அடுக்கு. தார்விகர், தசமேயர், நாராயர், பஞ்சநதர், பல்லவர், பானிபத்ரகர், பாரதகர், புளிந்தர், பிரஸ்தலர், மாகிஷ்மதர், முண்டர், மேகலர், லலித்தர், வங்கர், வனாயர், வசாதியர், வடாதனர், விக்ரமர், விகுஞ்சர், வேனிகர், சூரர், சுரசேனர், சம்ஸ்தானர், சிங்களர், சுரஸ்திரர், ஹம்சமார்கர் எனும் படையினர் மூன்றாம் அடுக்கு. ஆமையோட்டுக்குள் நின்றிருக்கின்றனர் நம் படையின் மாவீரர்கள்” என்றான் சஞ்சயன்.
“எதிரியின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கம் கொண்டது இச்சூழ்கை. எதிரிப்படையை ஊடுருவிக் கடந்து சென்று போரிடும் நோக்கம் இன்று இல்லை என எண்ணுகிறேன்” என்றான் சஞ்சயன். “ஆமையின் தலை என பீஷ்மபிதாமகர் நின்றிருக்கிறார். தேவையென்றால் மட்டுமே அவர் ஓட்டுக்குள் இருந்து வெளியே தலைநீட்டுவார். ஆமையின் கால்களென கிருபரும் துரோணரும் அஸ்வத்தாமரும் ஜயத்ரதரும் நின்றிருக்கிறார்கள். ஆமையின் வயிற்றுக்குள் கௌரவர்கள் நிலைகொள்கிறார்கள். அவர்களுக்குத் துணையென சல்யர் நிற்கிறார். ஆமைச்சூழ்கை முற்றமைந்த பின்னர் அதை நோக்குகையில் எவ்வகையிலும் உட்புக வழியில்லாமல் வாயில்கள் மூடப்பட்ட கோட்டை என தோன்றுகிறது” என சஞ்சயன் தொடர்ந்தான்.
“எதிர்ப்பக்கம் பாண்டவர்கள் வகுத்திருப்பது சிருங்காடகம் என்னும் சூழ்கை. இது தொல்நூல்களில் கோட்டையை எதிரிப்படை தாக்குமென்றால் அவர்களை உள்ளே வரவிட்டு அழிப்பதற்குரியதென்று சொல்லப்படுகிறது. அதை அமைத்திருப்பது ஆமையை எதிர்கொள்வதற்கு அவர்கள் கொண்டுள்ள வழிமுறை. ஆமை அந்த நாற்கர வழிகளில் எதற்குள் புகுந்தாலும் சூழப்பட்டுவிடும். அதை வெளியேறவிடாமல் நெடுநேரம் நிறுத்திவைத்தார்கள் என்றால் போருக்கென நம்மவர் எழுந்தேயாகவேண்டும். அப்போது மீண்டும் இதுவரை நிகழ்ந்த போர்களே நிகழுமென்று தோன்றுகிறது.” திருதராஷ்டிரர் “ம்” என்றார். இருமுவதுபோல அது ஒலித்தது.
அரசே, இரு படைகளும் பொழுதெழுவதற்காக காத்திருக்கின்றன. நின்றிருக்கும் படைகளை பார்க்கையில் அவை ஒரு விழவுக்கே ஒருங்கியிருக்கின்றன என்று தோன்றுவது பெருவிந்தை. அவர்களனைவருக்கும் தெரியும், அப்போர்நாள் முடிகையில் பெரும்பாலானவர்கள் திரும்பப்போவதில்லை என்று. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அங்கு வந்துசேர விருப்பமும் இருந்திருக்காது. ஆனால் அங்கு வந்த பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் போர்தொடங்கும் தருணத்திற்காக காத்திருக்கின்றனர். யானைகள் உடலை அசைத்து பொறுமையிழக்கின்றன. புரவிகளின் தலைகள் குலைக்கப்படுகையில் பிடரிமயிர் அலையெழுகிறது. அவர்களின் உள்ளங்களிலிருக்கும் பொறுமையின்மையை உடல்களும், உடலமைந்த படைக்கலங்களும், அவர்கள் ஊரும் தேர்களும் மெல்லிய அசைவுகளாக வெளிக்காட்டுகின்றன. அவ்வசைவுகள் இணைந்த சிற்றலைகள் அத்தனை பெரிய வெளியை நிறைக்கையில் நான் காண்பது நீரெனத் ததும்பும் பரப்பை.
பாண்டவப் படையின் மூன்றாவது சந்திப்புமுனையில் நின்றிருக்கிறார்கள் இளைய யாதவரும் பாரதரும். அந்தப் பெரும்படைநிரப்பில் அவர்கள் இருவர் மட்டிலுமே சலிப்பற்றவர்களாக தென்படுகிறார்கள். ஆம், நான் ஒவ்வொருவரையாக பார்க்கிறேன். யுதிஷ்டிரர் சலிப்புற்று தலைதொய்ந்து தாடியை நீவிக்கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து சலிப்பு நகுலருக்கும் சகதேவருக்கும் படர்ந்திருக்கிறது. பீமசேனர் அவரடைந்த சலிப்பை சினமென்று மாற்றி உடலெங்கும் பரவவிட்டிருக்கிறார். திருஷ்டத்யும்னரின் பதற்றத்திற்கு அடியிலும் சாத்யகியின் இறுக்கத்திற்குள்ளும் இருப்பது சலிப்பேதான். அது போர்மேல் கொண்ட சலிப்பல்ல, போரெனக் கூர்கொண்ட வாழ்க்கையின்மேல் கொண்ட சலிப்பு. இப்பால் பீஷ்மரிடம் எப்போதுமிருக்கும் கசப்பு நிறைந்த சலிப்பு இன்று கனிந்து காம்பு முதிர்ந்துவிட்டிருக்கிறது. துரோணரும் கிருபரும் சலிப்பு கொண்டிருப்பது தாங்கள் அதுகாறும் பயின்ற கலையின் மெய்யான பொருள் என்ன என்று அறிந்து. உங்கள் மைந்தர் துரியோதனர் கொண்ட சலிப்பு இறப்பின் பேருரு கண்டவர்களுக்குரியது. சலிப்பின் பெருவெளியில் சலிப்பேயற்ற இரு முகங்களை காண்கிறேன். விளையாட்டுப்பிள்ளைகளுக்குரிய விழிகள். ஒன்றில் இளநகை உள்ளது. இன்னொன்றில் இலக்கடைய எழுபவனுக்குரிய கூர் மின்னுகிறது. சலிப்பில்லாதவர்களே இறுதியில் வெல்கிறார்கள். ஐயம்கொள்ளவேண்டியதில்லை, இறுதிவெற்றி அவர்களுக்கே.
புலரிமுரசுகள் முழங்கத்தொடங்கிவிட்டன. ஓசையை விழியால் அறிவதெப்படி என இப்படையை நோக்கினால் புரிந்துகொள்ளலாம். இரு பக்கமிருந்தும் வீசும் இரு காற்றுகளில் இரு திரைச்சீலைகள் நெளிந்து புடைத்து முன்சென்று உரசித் தழுவிக்கொள்வதுபோல் படைகள் முயங்கிக்கொண்டன. போர் தொடங்கிவிட்டது. ஆமை தன் கால்களை ஓட்டுக்குள் எடுத்து வைத்து சீராக முன்னகர்கிறது. நால்வழிப் பாதை விரிந்து இருபுறமும் அரண் என அமைந்து அதை உள்ளே விடுகிறது. ஆமை தயங்காமல் உள்ளே சென்றுகொண்டிருக்கிறது. ஆமையின் இருபுறங்களையும் சூழ்ந்துகொண்டபின் பாண்டவப் படையின் அம்புகள் அதன்மேல் பொழியத்தொடங்குகின்றன.
நான் காண்பது ஆமையோட்டு வளையத்தை கடக்க முயலும் பேரம்புகளை. அவற்றை கேடயக்காப்பால் தடுக்கிறது ஆமை. நன்கு நுழைந்த பின்னர் ஆமை தன்னை வலமிடமாக திருப்பி நாற்கைச் சூழ்கையின் சுவர்களை உடைக்க முயல்கிறது. ஆமையோட்டின் அடிப்பகுதியே பாதுகாப்பற்றது. ஆமையை உப்பக்கம் காணச்செய்யவே எவ்வேட்டை விலங்கும் முயலும். ஆமையின் தலை வெளியே வருகிறது. ஆமையின் வலப்பக்க மூலையில் அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் இணைந்து தாக்குகிறார்கள். ஆமையின் இடப்பக்கத்தை சாத்யகியும் திருஷ்டத்யும்னரும் தாக்குகிறார்கள். ஆமையின் முன்கால்களை பீமனும் சர்வதரும் சுதசோமரும் தாக்குகிறார்கள். ஆமையைச் சூழ்ந்து அதன் பின்னங்கால்களை தாக்குகிறார்கள் கிராதர்கள். ஆமை தன்னை தரையோடு பதியவைத்துக்கொண்டு அவர்களைச் சுழற்றி அகற்ற முயல்கிறது.
ஆமையின் தலை வெளியே வருகிறது. அக்கணமே எதிர்பார்த்து நின்றிருந்த இளைய யாதவர் தேரை பீஷ்மரை நோக்கி கொண்டுசென்றார். அர்ஜுனனுக்கும் பீஷ்மருக்குமான கூரோடு கூர் ஒக்கும் போர் தொடங்கிவிட்டது. ஆமையின் ஓட்டுவிளிம்பு உடைகிறது. அபிமன்யூ உள்ளே நுழைகிறார். அவர் நுழைந்த இடத்திலிருந்தவர்கள் கௌரவ மைந்தர். அவர்கள் ஏற்கெனவே அவரைக் கண்டு அஞ்சியிருந்தனர். அலறிக்கூவியபடி அவர்கள் பின்னடைய அபிமன்யூ வைக்கோலை எரித்தபடி நுழையும் அனல்துண்டு என உள்ளே செல்கிறார். கௌரவ மைந்தர்கள் பன்னிருவர் களம்பட்டனர். எஞ்சியவர்கள் அலறிக்கொண்டு தேர்களிலிருந்து பாய்ந்திறங்கினர். அவர்களை கிளையுலுக்கி கனியுதிரச் செய்வதுபோல் அவர் கொன்று வீழ்த்துகிறார். கொடிகளின் அசைவை நோக்குகிறேன். அரசே, நாற்பத்தெட்டு கௌரவ மைந்தர் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
ஒவ்வொருவரையாக நான் பார்க்கிறேன். இதோ ஒவ்வொருவரும் தங்கள் எதிரிகளுடன் கோத்துக்கொண்டிருக்கிறார்கள். போரில் அவர்கள் எப்படி இணையானவர்களை கண்டடைகிறார்கள் என்பது விந்தையே. அல்லது அதில் விந்தையென ஏதுமில்லை, அவர்கள் ஒருவரை ஒருவர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மட்டுமே பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரை நோக்குபவர் மற்றவரை நினைவுகூர்கிறார். ஆகவே அவரை எதிர்க்க இவரையே அமைக்கிறார். இரு கையின் விரல்களும் ஒன்றையொன்று அறிந்திருப்பதுபோல. அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுவிட்டார்களென்றால் பாதியை இழப்பார்களா? அல்லது பாதியைப் பெறுவார்களா? இவ்வுலகில் ஒவ்வொருவரும் பாதியளவே என்று கொள்ளலாகுமா?
அரசே, துரியோதனர் பீமசேனருடனும் துச்சாதனர் கடோத்கஜனுடனும் கதைப்போர் செய்கிறார்கள். சாத்யகியும் பூரிசிரவஸும் மீண்டும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டார்கள். திருஷ்டத்யும்னரை துரோணர் சந்தித்துவிட்டார். சகுனியை யுதிஷ்டிரரும் சல்யரை நகுலசகதேவர்களும் எதிர்கொண்டுவிட்டார்கள். அங்கே அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மிகச் சிறந்த அசைவுகளால், மிகக் கூரிய எண்ணங்களால், மிகச் செறிந்த வஞ்சத்தால், பேருருக்கொண்டு சூழ்ந்துள்ள ஊழால் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நான் பீமசேனரின் மெய்ப்புகொள்ளச்செய்யும் பெருங்களமாடலை நோக்கிக்கொண்டிருக்கிறேன். பாலையில் சருகுகளை அள்ளிச்சுழற்றும் சுழலிபோல் கதை சுற்றிவரும் பிராந்தம், நிலம்நடுங்கி நான்கு சுவர்களும் இடிந்துவிழுவதுபோன்ற ஆவிந்தம், பாறையிலறைந்து அலைநுரை எழுவதுபோன்ற உத்ப்ராந்தம், துறைமேடைக்குள் பேரலை புகுந்ததுபோன்ற ஆப்லுதம், ஏரிமதகு திறந்தெழும் நீர் என பிரஸ்ருதம், சீற்றம்கொண்ட எருதுபோன்ற ப்லுதம், முட்டித்தெறித்து இலக்கடையும் ஸம்பாதம், களிற்றுமத்தகம் என குனிந்துவரும் சமபாதம் என்னும் எட்டு கதைச்சுழற்சிகள். உங்கள் மைந்தரும் அணுவிடை குறைவுபடவில்லை. அவர் அறையுமிடத்தை முன்னரே அறிந்திருக்கிறார். அவர் எழும் சுவடுமுறையை தானும் எடுக்கிறார். அரிய போர்த்தருணங்களை தெய்வங்கள் கொண்டாடுகின்றன. ஏனென்றால் மானுடனின் உடலும் உள்ளமும் உச்சம்கொள்வது அப்போதே.
ஒருகணத்தில் போர் முடிய துரியோதனர் தன் தேரிலேறிக்கொண்ட கணம் பாய்ந்து அம்பால் அறைந்து சுநாபனின் தலையை கொய்தெறிந்தார் பீமசேனர். துரியோதனர் தேரில் நின்று தன்னை மறந்து “இளையோனே!” என்று கூச்சலிட்டார். ஷுரப்ரம் என்னும் அந்த அம்பு தோதகத்திப் பெருமரத்தை துண்டுகளாக்குவது என சூதர்களால் பாடப்படுவது. அந்த அம்பு மீண்டும் எழுந்து தன் இளையவராகிய குண்டாசியை நோக்கி எழ கதையை வீசி அவர் தேரை அறைந்து விலகச்செய்து அதிலிருந்து அவரை காத்தார். சீற்றம்கொண்டு முழக்கமிட்டபடி சித்ராயுதர், குந்ததாரர், பலவர்தனர், மகாதரர், அயோபாகு, பகுயாசி ஆகியோர் பீமனை சூழ்ந்துகொண்டார்கள். அவர்களின் அம்புகளை தன் அம்புகளாலும் இடக்கையிலேந்திய இரும்புச்சரடாலும் தடுத்தபடி பீமசேனர் போர்புரிந்தார். துரியோதனர் “மேலும் படைகள் செல்க! தம்பியர் அனைவரும் சூழ்ந்துகொள்க!” என்று கூவியபடி தன் வில்லில் நாணோசை எழுப்பியபடி பீமசேனரை தாக்கினார்.
ஆனால் பீமசேனரின் மைந்தர்களான சர்வதரும் சுதசோமரும் இருபுறத்திலிருந்தும் துரியோதனரை தாக்கினார்கள். அவர் அவர்களை எதிர்கொண்டபடி “தம்பியரை சூழ்ந்துகொள்க… தனியாக எவரும் முன்னெழ வேண்டியதில்லை” என்று கூவினார். அதற்குள் பீமசேனர் சித்ராயுதரின் தலையை அறுத்து வீழ்த்தினார். அவருடைய கூரிய அம்பு உளியின் வாய்விரிவையும் பெருந்தோளர்கள் மட்டுமே ஏந்தி எய்யத்தக்க எடையையும் கொண்டிருந்தது. அந்த வில் அவருடைய தொடையளவு பருத்தது. இரும்பாலானது. அதன் நாண் யானையின் துதிக்கையின் தோலை முறுக்கி செய்யப்பட்டிருந்தது. அரசே, அந்த அம்புகளின் எடையே விசையாகியது. விசையே கூராகியது. குந்ததாரரின் தேரின் மகுடம் உடைந்தது. அவர் தலைதாழ்த்துவதற்குள் உடல் நின்றிருக்க தலை பின்னால் தெறித்து மண்ணில் கிடந்தது.
ஒவ்வொரு கௌரவராக விழத்தொடங்கினர். துரியோதனர் தன் மைந்தரிடமிருந்து விடுபடுவதற்குள் முடிந்தவரை கௌரவரைக் கொன்றுமீள்வதே பீமசேனரின் எண்ணமென தெரிந்தது. பலவர்தனரை அவர் ஜாதுகாங்கம் என்னும் அம்பால் அறைந்தார். வௌவால்போல் சிறகுவிரித்து ஓசையின்றி வந்த அந்த அம்பை அவர் காண்பதற்குள் அது தலைகொய்து சென்றிருந்தது. புலிபோல் உறுமியணைந்த வியாஹ்ரபாணி என்னும் அம்பை கண்டு நடுங்கி வில்லை நழுவவிட்ட மகாதரரின் மார்புக்கவசத்தைப் பிளந்து நெஞ்சுகூட்டை உடைத்து உட்புகுந்தது வாளி. அயோபாகுவும் பகுயாசியும் பின்னடைந்தனர். ஆனால் அவர்களால் பீமசேனருடைய அம்புவளையத்திலிருந்து எளிதில் பின்னடைய முடியவில்லை. அவர்களின் விலாக்கவசங்களை உடைத்தது கட்கபக்ஷம் என்னும் பேரம்பு. குண்டசாயி வில்லை விட்டுவிட்டு இரு கைகளையும் தூக்கி கண்மூடி நின்றார். தன் முகத்தில் வழிந்த குருதியை துப்பிவிட்டு நாணிழுத்து அம்புதொடுத்து அவரை நெஞ்சுபிளந்து தேர்த்தட்டில் வீழ்த்தினார் பீமசேனர்.
துரியோதனரின் அம்புகளிலிருந்து தப்பி சர்வதரும் சுதசோமரும் பின்னடைந்தபோது அவர் தன் தம்பியரை நோக்கி திரும்பினார். தன் குருதிதோய்ந்த வில்லைத் தூக்கி ஆட்டி பற்கள் காட்டி வெறியுடன் நகைத்து “அறத்திற்கு இனிது கொழுங்குருதி என்றுணர்க, தார்த்தராஷ்டிரனே!” என்று பீமசேனர் கூவினார். “நில்… ஆண்மையிருந்தால் நில், கீழ்மகனே!” என்று கூவியபடி துரியோதனர் நாணொலியுடன் பீமசேனரை தொடர முயன்றார். “இன்றைய கணக்கு இப்போது முடிகிறது… உன் குடியினர் நூற்றுவரையும் கொன்றொழித்தபின்னர் அக்கணக்கு முடியும்” என்று சொல்லி கூவிச்சிரித்தபடி பீமசேனர் தன் படைகளுக்குள் மறைந்தார்.
“விடாதீர்கள்… விடாதீர்கள் அந்தக் கீழ்மகனை!” என்று கூச்சலிட்டபடி அவரைத் தொடர துரியோதனர் முயன்றார். “அரசே, ஆமையோட்டுச்சூழ்கைக்கு அப்பால் செல்லவேண்டாம்… அங்கே தங்களுக்காக பொறி வைக்கப்பட்டுள்ளது” என்று துச்சாதனர் கூவினார். ஆனால் வெறிகொண்ட துரியோதனர் தன் வில்லில் நாணொலி எழுப்பியபடி மறுபக்கம் வெளிப்பட்டார். அங்கே காத்து நின்றிருந்த நிஷாத அரசர்கள் அவரை சூழ்ந்துகொண்டார்கள். கானனர்களாகிய சுக்ரனும் அவர் இளையோன் சூக்தனும் அவரை எதிர்த்தனர். தங்கள் குறிய ஆனால் விசைமிக்க அம்புகளால் அவர்கள் அவரை நிலையழியச் செய்தனர். விழிக்குச் சிக்கா விரைவுகொண்ட அந்த அம்புகளை எதிர்கொள்ள ஒரே வழி அவற்றை எய்பவரை மிக விரைவாக அணுகிச்சென்று கொல்வதுதான். துரியோதனர் எதிர்பாரா விரைவுடன் நீள்வேலை ஊன்றிப் பாய்ந்தெழுந்து சுக்ரரை அணுகி அவரை குத்தித் தூக்கி அப்பாலிட்டார். அந்தக் கணத்தின் விசைகண்டு திகைத்த சூக்தனை அதே வேலை உருவி எறிந்து வீழ்த்திவிட்டு தன் தேருக்கு மீண்டார்.
துரியோதனர் வெறிகொண்டிருந்தார். நிஷாத அரசர்கள் கொல்லப்பட்ட செய்தியை முரசுகள் அறிவிக்க திருஷ்டத்யும்னரும் சாத்யகியும் இருபுறங்களிலுமிருந்து அவரை நோக்கி வந்தனர். வீழ்ச்சிகாணும்போது வெறிகொள்ளும் இயல்புகொண்ட நிஷாதர்களும் கிராதர்களும் அவரை சூழ்ந்துகொண்டார்கள். அவர் உத்தரநிஷாத நாட்டு இளவரசர்களான தண்டகனையும் தாருகனையும் சுக்ரனையும் சுதீரனையும் வேலெய்து வீழ்த்தினார். அவர்களின் குருதியால் உடல் நனைந்தவராக களத்தில் நின்று வெறியாட்டமிட்டார்.
“அரசே, பின்னடைக! பின்னடைக!” என ஆமைக்குள்ளிருந்து முரசுகள் கோரிக்கொண்டிருந்தன. தமையனின் பின்நிலைக் காப்புக்காக துச்சலரும் துர்மதரும் துச்சாதனரும் வந்தனர். துர்மதர் கிராதகுலத்து சோமித்ரனையும் அக்ரனையும் கொன்றார். துச்சாதனரால் கிராத படைத்தலைவர்கள் உதகனும் சண்டனும் சக்ரனும் கொல்லப்பட்டார்கள். அரசே, அங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது என்ன செய்கிறோமென்றறியாமல் போர்வெறி கொண்டிருக்கும் துரியோதனரின் கொலையாடல். ஒருவேளை இளைய யாதவரே அவ்வனலை அணைக்கும் நீரென்று அந்த நிஷாதரையும் கிராதரையும் அனுப்பிக்கொண்டிருக்கிறாரோ என்னும் ஐயமே எழுகிறது. அசுரகுலத்து அரசர் ஹிரண்யகட்கர் அதோ துரியோதனரின் அம்புபட்டு சரிகிறார். அவருடைய ஏழு மைந்தர்கள் நெஞ்சிலும் விலாவிலும் அம்புகள் தைத்து நிற்க அலறிச் சரிகிறார்கள். கதையுடன் எழுந்த மச்சர்குலத்து அரசர் மகாகதரை நெஞ்சில் அறைந்து வீழ்த்துகிறார். அவருடைய கொலைவெறி கொல்லுந்தோறும் பெருகிவருகிறது.
பாண்டவர் படையிலிருந்து “செறுத்து நில்லுங்கள்… கௌரவர்களை முன்னேறவிடாதீர்கள்!” என்று ஆணை எழுந்துகொண்டே இருந்தது. சர்வதரும் சுதசோமரும் இருபுறங்களில் இருந்தும் மீண்டும் தோன்றினர். அவர்களுடன் சுருதகீர்த்தியும் இணைந்துகொண்டார். கௌரவர்கள் அவர்களை எதிர்கொண்டனர். சர்வதரும் துச்சாதனரும் அம்புகளால் கோத்துக்கொண்டு விசையுடன் அணுகி கழைகளில் எழுந்து விண்ணில் கதைகளால் மோதிக்கொண்டார்கள். தேர்முகடுகள்மேல் பாய்ந்திறங்கி அங்கிருந்து வீழ்ந்த யானையொன்றின்மேல் நின்று அறைந்து சுழன்றெழுந்து அறைந்து பாய்ந்து எழுந்தமைந்து அறைந்து சுழன்றுவந்து அறைந்து போரிட்டனர். சுதசோமரும் துர்மதரும் மண்ணிலிறங்கி கதையால் பொருதினர்.
சுருதகீர்த்தியின் அம்புகள் துரியோதனரின் கவசங்களை பிளந்தன. அவர் அமையவோ கவசங்களை மாற்றிக்கொள்ளவோ முயலவில்லை. உயிரென்ற ஒன்றை மறந்துவிட்டவரென அவர் மேலும் மேலும் முன்னால் சென்றார். சுருதகீர்த்தி தன் அம்புகள் விசைகொள்ளும் தொலைவை ஈட்டும்பொருட்டு மேலும் பின்னடைந்து பின்னணி வீரர்களில் முட்டிக்கொண்டு நின்றிருக்க தேரிலிருந்து கழையிலெழுந்து வேலால் அவர் நெஞ்சை தாக்கினார். கவசம் உடைய அவர் அக்கணமே தேரிலிருந்து பாய்ந்து பின்னால் சென்று மறைந்தார். பெருங்குரல் எழுப்பியபடி அவர் திரும்பி சர்வதரை அறைந்தார். அவர் விலாக்கவசம் உடைந்தது. மூக்கில் குருதி வழிய அவர் தேர்த்தட்டில் விழ பாகன் தேரை பின்னெடுத்து கொண்டுசென்றான்.
கதையைச் சுழற்றியபடி தார்த்தராஷ்டிரர் போர்க்கூச்சலெழுப்பினார். சுதசோமர் தன் கதையை வீசிவிட்டு பாய்ந்து தேரொன்றிலேறி அதன் பின்பக்கம் பாய்ந்து அப்பால் செல்ல அந்தத் தேர் புரண்டது. அதன் புரவிகள் கனைத்தபடி நின்று சுழன்றன. அதற்குப் பின்னாலிருந்த தேரிலிருந்த பாகன் உரக்க கூச்சலிட்டு குதிரைகளை அறைந்தான். அத்தேரில் இருந்த சதானீகர் துரியோதனரை மிக அருகே கண்டதும் வில்லை கீழே போட்டுவிட்டு அச்சத்துடன் கூச்சலிட்டார். துச்சாதனர் பெருஞ்சினத்துடன் கூவியபடி கதைசுழற்றி சதானீகரை நோக்கி பாய பற்களைக் கடித்து “நில், மூடா!” என்றபடி தார்த்தராஷ்டிரர் துச்சாதனரின் விலாவில் அறைந்தார். நிலையழிந்து துச்சாதனர் தடுமாறி நிற்க சதானீகரை ஒருகணம் நோக்கியபின் தார்த்தராஷ்டிரர் திரும்பிச் சென்றார்.
தமையனின் எண்ணத்தை அறிந்தவர்களாக துச்சாதனரும் பிற கௌரவர்களும் அவரை விட்டுவிட்டு திரும்பிக்கொண்டார்கள். பாகன் சதானீகரின் தேரை இழுத்துத் திருப்பி தங்கள் படைக்குள் மூழ்கடித்துக்கொண்டான். கதையைச் சுழற்றியபடி நின்ற துரியோதனரை நோக்கி பீமசேனரும் சாத்யகியும் சங்குகளை ஊதியபடி வந்தனர். பின்னணிப்படை எழுந்துவந்து தார்த்தராஷ்டிரரையும் கௌரவர்களையும் உள்ளிழுத்துக்கொள்ள ஆமையின் ஓடு இறுக மூடிக்கொண்டது. மூடிய ஓட்டின்மேல் சாத்யகியும் பீமசேனரும் தொடுத்த அம்புகள் வந்து அறைந்தன. அப்பால் கொம்பூதியபடி ஆமையின் தலை அவர்களை நோக்கி திரும்பியது. ஆமை மெல்ல திரும்ப பீஷ்மர் அவர்களை நோக்கி வந்தார்.
ஆமை நாற்கை சூழ்கையின் நடுவே நின்று தன்னை தான் காத்து திரும்பிக் கொண்டிருந்தது. அரசே, இன்றைய ஆமைச்சூழ்கை எவ்வகையிலும் கௌரவர்களுக்கு துணைசெய்யவில்லை என்றே கொள்ளவேண்டும். இன்றும் கௌரவ மைந்தர் அறுபத்தெட்டுபேர் உயிர்துறந்துள்ளனர். கௌரவர்கள் எண்மர் கொல்லப்பட்டனர். பாண்டவர் தரப்பிலோ நிஷாதர்களுக்கும் கிராதர்களுக்கும் இன்று பேரிழப்பென தோன்றுகிறது. போர் தொடங்கி இன்னும் உச்சிப்பொழுதாகவில்லை. அந்திக்குள் எவரெவர் எங்கெங்கே கொல்லப்படுவார்கள் என்று சொல்ல இயலாது. அதை இப்போரை நின்று நடத்தும் தெய்வங்களே அறியும்.
சஞ்சயன் திருதராஷ்டிரரை நோக்கினான். அவருடைய இரு விழிகளிலிருந்தும் நீர்க்கோடுகள் வழிந்து முகத்திலிருந்து மார்பில் சொட்டிக்கொண்டிருந்தன. உதடுகள் பிதுங்கியிருக்க தொய்ந்த தோள்களுடன் அவர் அமர்ந்திருந்தார். மேலும் சொல்வதா என அவன் தயங்கினான். “ஜயத்ரதரை அர்ஜுனர் எதிர்க்கிறார். இளைய பாண்டவருக்கு எதிர்நிற்பதே தன் தகுதி என அவர் எண்ணுவதனால் நின்றிருக்கும் பொழுதை நீட்டிக்கவே முயல்கிறார். ஆகவே அம்புகளை ஒழிகிறார், அம்புகளால் அறைகிறார். ஆனால் அம்புகளின் விசைவட்டத்திற்குள் நுழைவதை முற்றாகத் தவிர்க்கிறார். போரென்றும் ஆட்டமென்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது அப்போர்.”
திருதராஷ்டிரர் மெல்ல கலைந்து எழுந்து “என்ன ஆயிற்று பாண்டவ மைந்தனுக்கு?” என்றார். “அரசே, இதோ சுருதகீர்த்தியும் சுதசோமரும் சர்வதரும் அபிமன்யூவும் இணைந்து ஆமையின் வலப்பக்க மூலையின் காப்புச்சூழ்கையை உடைத்து உட்புக முயல்கிறார்கள். யௌதேயரும் பிரதிவிந்தியரும் சுபலரின் மைந்தர்களுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் சஞ்சயன். “அவன், நகுலனின் மைந்தன்…” என்றார் திருதராஷ்டிரர். “அரசே, அவர் தப்பிவிட்டார்… பிரதிவிந்தியருக்குத் துணையாக நிர்மித்ரரும் சுருதசேனரும் நின்றிருக்கிறார்கள்” என்றான் சஞ்சயன். “மிக இளையோர்” என்றார் திருதராஷ்டிரர்.
சஞ்சயன் அவரை பார்த்தான். அவர் கையசைத்து மேலே சொல்லும்படி கைகாட்டினார். “அரசே, அதோ ஆமையின் ஓடு மீண்டும் உடைந்துவிட்டது. சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் அம்புகளைப் பொழிந்தபடி உள்ளே நுழைகிறார்கள். அங்கே காந்தாரத்தின் படைகள் சுபலரின் தலைமையில் நின்றிருக்கின்றன. அவர்கள் அச்சமும் வெறியுமாக கூச்சலிடுகிறார்கள்” என்று சஞ்சயன் சொல்லத் தொடங்கினான். திருதராஷ்டிரர் மீண்டும் விழிநீர் வழிய விசும்பத் தொடங்கினார். அவன் ஒருகணம் தயங்கி அவரை நோக்கிவிட்டு “சர்வதரும் சுதசோமரும் வந்து சேர்ந்துகொள்கிறார்கள். அவர்களை சுபலரின் மைந்தர் தலைமையில் காந்தாரப் படைகள் எதிர்க்கின்றன” என்று சொல்லத் தொடங்கினான்.