‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54

பகுதி எட்டு கதிரோன்

bowசஞ்சயன் கஜபதத்தில் அமைந்த திருதராஷ்டிரரின் குடிலுக்குள் நுழைந்து உள்ளே மூங்கில் தட்டியாலான மஞ்சத்தில் துயில்கொண்டிருந்த திருதராஷ்டிரரை அணுகி “பேரரசே!” என்று தாழ்ந்த குரலில் அழைத்தான். சிற்றொலிகளையே அறிவது அவர் செவி என அவன் அறிந்திருந்தான். திருதராஷ்டிரர் முனகி “ஆம், கிளம்ப வேண்டியதுதான்” என்றார். “புலரி அணுகுகிறது, பேரரசே” என்று சஞ்சயன் சொன்னான். “பெரும்போர்!” என்று அவர் சொன்னார். “முற்றழிவு!” கைகளை அசைத்து தாடை நடுங்க “போரெனில் வெறும் குருதி! வேறொன்றுமல்ல!” என்றபடி விழித்துக்கொண்டார். “யார்?” என்றார். “நான் சஞ்சயன்… பொழுதணைகிறது, அரசே!”

அவர் கையூன்றி எழுந்தமர்ந்தார். “இனி இப்போரை என்னால் நோக்கி இருக்க இயலாது. திரும்பிச்சென்று குடிலில் ஒடுங்கி துயின்றாலொழிய என் சித்தம் நிலை மீளாது” என்றார். “போதும்… இன்றோடு போதும். நாளை நாம் இங்கே மீளவேண்டியதில்லை…” அவர் சொல்வதென்ன என்று சஞ்சயன் அறிந்திருந்தான். அவர் ஒவ்வொருநாளும் கனவில் பிறிதொரு போரை நோக்கிக்கொண்டிருந்தார். தெய்வங்களும் மாய்ந்தோரும் கனவுருக்களும் கலந்து போரிடும் போர் அது. ஒவ்வொருநாளும் அவனுடன் தேரில் காட்சிமாடம் நோக்கி செல்கையில் அவர் அந்தப் போரைப்பற்றியே சொன்னார். “விண்ணிலிருக்கும் வெள்ளங்களின் ஒரு திவலையே மண்ணில் மாமழை என பெய்கிறது என்பார்கள். இப்போரும் ஒரு துளித்தெறிப்பு மட்டுமே…”

அவர் சொல்வதென்ன என்று அவன் தன் முழுக் கற்பனையாலும் உய்த்துணர முயல்வதுண்டு. அவனால் விழிக்காட்சியாக அதை விரித்துக்கொள்ள இயலவில்லை. சொல்லில் இருந்து காட்சிகளை எழுப்பும் அவன் திறன் அவரிடம் தோற்றது. அவருடைய சொற்களுக்கும் காட்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கவில்லை. அவர் கண்ட காட்சிகளனைத்துமே சொற்களிலிருந்து உருவானவை. அவை மீண்டும் சொற்களாகும்போது எப்படி முற்றிலும் பிறிதொன்றாக அமைகின்றன? அவை அவருக்குள் சென்று எப்படி உருமாறுகின்றன? அவன் விந்தையான நிலமொன்றின் பொருளிலா வடிவம்கொண்ட கூழாங்கற்களை என அச்சொற்களை அளைந்துகொண்டே உடன்சென்றான்.

“நான் சொல்வது உனக்கு புரிகிறதா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “அது பெரும்போர். அங்கே அத்தனை தெய்வங்களும் உள்ளன. மானுடர்களின் தெய்வங்கள் மட்டுமல்ல. வல்லூறுகளின், பருந்துகளின், கழுகுகளின் தெய்வங்கள். யானைகளின், களிறுகளின், புரவிகளின் தெய்வங்கள். வாள்களின், விற்களின், வேல்களின், அம்புகளின் தெய்வங்கள். திசைத்தேவர்கள், புடவிக்காவலர்கள், மறைந்துறையும் இருளுருக்கள், மாநாகங்கள். கந்தர்வர்கள், யட்சர்கள், கிம்புருடர்கள். காலமென்றும் இறப்பென்றும் நோயென்றும் வலியென்றும் விழிநீர் என்றும் ஆன தெய்வங்கள். ஆணென்றும் பெண்ணென்றும் உருகொண்டவை. ஆணும்பெண்ணும் அல்லாதானவை. அனைத்து தெய்வங்களும். அவை உச்சநிலையில் போர் புரிந்துகொண்டிருந்தன. புரிகிறதா? ஈடில்லா பெரும்போர்.”

அவர் திணறித்திணறி கைகளை விரித்து தொண்டைமுழை அசைய கூச்சலிட்டார். “அவை ஒன்றை பிறிது நிகர்செய்தன. இறப்பை மறுபிறப்பு. நோயை மீட்பு. வலியை இன்பம். நாகங்களை இடியின் தெய்வம் ஆண்டது. இடியை மழை மூடியது. எவரையும் எவரும் வென்று அழிக்கவியலாது என்பதனால் அப்போர் கணந்தோறும் முடிவில்லாமல் நிகழ்ந்தது. கணுவிடை குன்றாமல் கூடாமல். நோக்குக, இறப்பில்லை. வெற்றிதோல்வியும் இல்லை. கொள்வதும் கொடுப்பதும் இல்லை. ஆகவே அது வஞ்சம் மட்டுமே. பிறிதொன்றென உருமாற்றப்பட்ட வஞ்சங்களையே மானுடர் அறிவர். வஞ்சம் வஞ்சமென்றே நின்றிருப்பது தெய்வங்களிடம் மட்டுமே. மிகமிகக் கூரிய ஊசிமுனைபோன்ற வஞ்சம். அந்த அச்சத்தை நான் எப்படி உனக்கு விளக்குவேன்… சஞ்சயா, அந்த வஞ்சத்தைக் கண்டவனுக்கு இவ்வுலகில் அனைத்துமே இனிதென்றாகிவிடும். இங்குள்ள அனைத்துமே பொருள்கொண்டவை என தோன்றிவிடும்… ஆம்!”

போர் நிகழ்ந்த ஒவ்வொருநாளும் அவன் அவரை காட்சிமாடத்துக்கு அழைத்துச்சென்றான். காலையில் குடிலில் கண் விழித்து எழுந்து தேரிலேறி வந்து குருக்ஷேத்ரப் பெருங்களத்தை நோக்கி காட்சிமேடையில் அமரும் வரை அவரில் இருப்பவர் அஸ்தினபுரியின் பேரரசர். அன்றைய படைசூழ்கை என்ன என்பதை பறவை கொண்டுவந்து சேர்த்திருக்கும். தேரிலேறி அமர்ந்ததும்தான் அதை சஞ்சயன் சொல்வான். புருவம் சுளிக்க தலையைச் சுழற்றி “பருந்துச் சூழ்கையா? அதை பீஷ்மர் வகுத்துள்ளார் போலும். பிதாமகர் கூரலகென இருப்பதனால் மட்டுமே இது நல்ல சூழ்கை. பருந்துக்கு அலகு மட்டுமே படைக்கலம். அதன் கால்கள் நல்ல படைக்கலங்கள் அல்ல. தான் பற்றியதை அதனால் எளிதில் விட இயலாது. தாக்குவதும் அதே விசையில் பின்னெடுக்கக் கூடுவதுமான ஒன்றே சிறந்த படைக்கலம்” என்றார். “படி, படி அதை, மூடா!”

அவன் அதை முழுமையாக மீண்டும் படித்தான். “இன்னொரு முறை படி. ஒவ்வொரு சொல்லையும் நிறுத்தி நிறுத்தி படி.” ஒவ்வொரு எழுத்துமென அவருக்குள் ஓலை திறந்துகொண்டே சென்றது. அதிலிருந்து படைகளின் அமைப்பை விரிவாக தன்னுள் நிகழ்த்திக்கொண்டார். “பீஷ்மருக்கு இருபுறமும் பால்ஹிகர்களும் சைப்யர்களும் நிலைகொள்கிறார்கள். பருந்தின் கழுத்துச் சிறகுகள், மெய்யாக அவற்றால் பயனொன்றுமில்லை. ஆனால் சினங்கொள்கையில் பூடை விரித்து தலை பெருக்க அவை தேவை. பீஷ்மருக்கு முதுகெங்கும் விழிகள். அவருக்கு பின்காவலே தேவையில்லை. அவருடைய விசைக்கு நிகர்நின்று உடன்செல்லும் பின்படை தேவை. அங்குதான் நாம் தோற்கிறோம்… நாம் விசைமிக்க பருந்தால் இழுத்துச்செல்லப்படும் வெற்றுப்படை!”

கனைத்துக்கொண்டும் தன் தலையை தானே தட்டிக்கொண்டும் அவர் தொடர்ந்தார். “பருந்தின் கால்கள் என துரோணரும் கிருபரும்! நன்று! சிறகுகளென ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும். மறுபக்கம் என் மைந்தர்கள். இவ்வணி உண்மையில் நன்றல்ல. இருபுறமும் வில்லவர்கள் இணையாக இருக்கவேண்டும். என் மைந்தர்கள் வில்லவர்கள் அல்ல. ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் எப்போதும் படைகளின் இரு பக்கங்களிலுமாக இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்தால்தான் அபிமன்யூவையும் அர்ஜுனனையும் எதிர்கொள்ள முடிகிறது. ஆகவே நமக்கு வேறு வழியில்லை.” பெருமூச்சுவிட்டுக்கொண்டு “சூழ்கைகளால் உண்மையில் பெரும்பயனேதுமில்லை. படைவெற்றி வீரர்களால் அமைகிறது. அவர்கள் தனியர்கள்” என்றார்.

கைகளை மார்பில் கட்டிக்கொண்டு உடல் தழைத்து அமர்ந்து “நன்று, இந்தப் படைசூழ்கை என்ன செய்கிறது என்று பார்ப்போம். குறைந்த இழப்புகளுடன் அடைவதே மெய்யான வெற்றி. இழப்புகள் மிகுந்தோறும் வெற்றி பொருளிலாதாகிறது” என்றார். மேலும் பெருமூச்செறிந்து “இன்று இழப்பின்றி மீள்வதற்கான வழிகளை அவர்கள் காணவேண்டும். இழப்புகள் படைகளை உளச்சோர்வு அடையச்செய்கின்றன. எச்செயலும் அதன் பாதியில் பொருளற்றதாக தோன்றுமெனில் நம் ஊக்கம் குன்றிவிடுகிறது. போரின் பேரிடரே அது தொடங்கியதுமே பொருளற்றதென்று தோன்றத் தொடங்கிவிடும் என்பதுதான். எனினும் போர் தொடர்ந்து நிகழ்வது போரில் நாம் குருதிச்சுவை அறிவதனால். அதை வஞ்சத்தை கொண்டு பெருக்கிவிட்டிருப்பதனால். போரை மானுடர் நிகழ்த்துவதில்லை, தெய்வங்கள் தான் நிகழ்த்துகின்றன என்பார்கள். மானுடக்குருதியில் உறைகின்றன போருக்கான தெய்வங்கள்” என்றார்.

அவன் அவரை கைபற்றி அழைத்துச்சென்று மாடத்தின் மேல் ஏற்றினான். அங்கே பீதன் அவர்களுக்காக ஆடிகளை எடுத்து பொருத்திவிட்டு காத்திருந்தான். அவர்கள் வந்ததும் தலைவணங்கி விலகினான். அவர் தன் பீடத்தில் அமர்ந்து கைகளால் கைப்பிடியை தட்டிக்கொண்டு “அதே இடம்… அதே கோணம்” என்று தனக்குள் என சொல்லிக்கொண்டார். அவன் ஆடிகளை ஒன்றுடன் ஒன்று அமைத்து பொருத்திக்கொண்டிருக்க “என்ன செய்கிறாய், அறிவிலி? இன்னுமா அவ்வாடிகளை சீர்படுத்தவில்லை? ஒவ்வொரு நாளும் இதற்கென நீ எடுத்துக்கொள்ளும் பொழுது எவ்வளவு வீண் என்று அறிவாயா?” என்று நிலைகொள்ளாமல் கூச்சலிட்டார். “அரசே, இது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் மீள மீள பொருத்திக்கொள்ளவேண்டிய ஆடி. ஒவ்வொரு காட்சிக்கும் இதை நான் மாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

“ஒவ்வொரு காட்சிக்கும் உன் கண்களை மாற்றிக்கொண்டா இருக்கிறாய்? என்னிடம் விளையாடுகிறாயா?” என்று திருதராஷ்டிரர் கூவினார். “ஆம் அரசே, ஒவ்வொரு காட்சிக்கும் கண்கள் மாறுகின்றன. ஒருமுறை நாம் கண்ணால் பார்ப்பதை பிறிதொரு முறை கண்ணால் பார்ப்பதே இல்லை என்பார்கள். ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் எந்தத் தொடர்புமே இல்லை. அவற்றை ஒன்றிணைத்து தொடராக ஆக்கிக்கொள்வது நாம் அவற்றுக்கு அளிக்கும் பொருள்தான்” என்றான் சஞ்சயன். “நம் விழிகளை தெய்வங்கள் ஆள்கின்றன. அவை உருவாக்குகின்றன நாம் கொள்ளும் பொருட்களை.” அவர் சினம்கொள்வார் என அவன் அறிந்திருந்தான். எனவே புன்னகையுடன் அதை சொன்னான். அவன் கைகள் ஆடிகளை அணுவணுவாக விலக்கிக்கொண்டிருந்தன.

“தத்துவம் கேட்க நான் வரவில்லை. என்ன தெரிகிறதென்று மட்டும் சொல், அறிவிலி” என்று இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடிகளை அறைந்தபடி அவர் கூச்சலிட்டார். இரண்டு காட்சிகள் ஒன்றோடொன்று பொருந்துவதன் வழியாக உருவாகும் மேலும் தெளிவான இன்னொரு காட்சி. வலத்தையும் இடத்தையும் ஆளும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் அளித்துக்கொண்டவை. அவன் அவ்விந்தையில் ஆழ்ந்தவனாக ஆடிகளை மேலும் மேலும் பொருத்திக்கொண்டே இருந்தான். இரு நீர்த்துளிகள் தொலைவை அணுக்கமாக ஆக்குகின்றன. அணுக்கத்தை அள்ளி அகலே கொண்டுசெல்கின்றன. “நம் இரு விழிகளும் இரண்டு நீர்த்துளிகளே” என்றான் பீதன். “அவற்றை எப்போதேனும் தனியாக பார்த்திருக்கிறீர்களா?” நிலையற்றுத் ததும்பும் இரு நீர்த்துளிகள் தங்களுக்குள் இணைந்து இணைந்து உருவாக்கும் இப்பெருவெளி நிலையானதென்று தோன்றுவதன் விந்தை.

“அறிவிலி, என்ன செய்கிறாய்? கீழ்மகனே! எழுந்தால் உன் மண்டையை அறைந்து உடைப்பேன்!” என திருதராஷ்டிரர் கூச்சலிட்டார். காலையொளி எழுந்துகொண்டிருந்தது. முகில்களின் விளிம்புகள் செஞ்சுடர் கொண்டிருந்தன. அப்பால் தெரிந்த குருக்ஷேத்ரப் படைப்பெருக்கில் பல்லாயிரம் ஒளித்துளிகள் என கூர்கள் அசைந்தன. கூர் என்பதன் பொருளே அவன் களத்தை நோக்கத் தொடங்கியதும் மாறிவிட்டிருந்தது. ஒவ்வொன்றும் தங்களுக்குள் உறையும் அறியமுடியா விசையொன்றை குவிப்பதே கூர். கூர்வனவற்றில் திகழ்கின்றது தெய்வங்கள் கொள்ளும் வெறி. அவனால் கூர்களை நோக்கவே முடியாதாயிற்று. கூர்கள் காத்திருக்கின்றன. அவை சென்றடைந்து கொன்று கடப்பவை எங்கோ எழுந்து வந்துகொண்டிருக்கின்றன. கூர்கொள்வதற்கு நெடும்பொழுது முன்னரே, பொருளென்றாவதற்கும் முன்னரே அவ்விசை அவற்றில் குடியேறிவிட்டிருக்கிறது போலும்.

ஆனால் அவனால் கூர்களை நோக்காமலிருக்கவும் இயல்வதில்லை. அறியாமலேயே அவன் விழிகள் கூர்களை நோக்கி சென்றன. விலங்குகளின் கொம்புகளில், பறவைகளின் அலகுகளில், முட்களில், கற்களில், கருவிகளில் எங்கும் கூர் திகழ்கிறது. இத்தனை கூர்களுக்கு நடுவிலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? அவ்வெண்ணமே அவன் தோலை கூசி அதிரச்செய்யும். கூர்முனையை நோக்கால் தொடும்போது எழும் மெய்ப்புகொள்ளுதல். விழிநீர் சுரக்க முதுகெலும்பு சொடுக்கிக்கொள்ளுதல். காலையில் நீராடச் சென்றபோது ஓடைக்கரையருகே மலர்ந்திருந்த சிறு பூ ஒன்றை பறித்தெடுத்தான். தண்டில் அது பூமுள் கொண்டிருந்தது. மிக மெல்ல அதை தன் விரலால் தொட்டு அந்த உச்சத்தை உணர்ந்தான். குளிர்முனைகொண்ட வேல் ஒன்று அடிவயிற்றில் இறங்கிச் செல்வதும் அதுவும் நிகரே.

“என்ன செய்கிறாய்? கீழ்மகனே!” என்று கைகளை உரக்க அறைந்துகொண்டபடி திருதராஷ்டிரர் எழுந்தார். “பொறுங்கள் அரசே… நான் ஆடித்துளிகளை இணைக்கிறேன்!” என்றான் சஞ்சயன். “இன்னும் என்ன செய்கிறாய்? அறிவிலி!” என்று கூவியபடி அவர் கையை ஓங்கினார். “எதற்காக முந்துகிறீர்கள்? மைந்தர் களம்படுவதைக் காணவா?” என்று அவன் கேட்டான். அவருடைய கை வானிலென நின்றது. இடக்காலும் வாயும் இழுபட்டு அதிர்ந்தன. விழப்போகிறவர்போல ஆடினார். சஞ்சயன் அவரை பிடிக்க முயலவில்லை. வலக்கையை எடையுடன் பீடத்தில் ஊன்றி சரிந்து மெல்ல அமர்ந்து யானைபோல் மூச்செறிந்தார். “கீழ்மகனே! கீழ்மகனே!” என முனகினார். பின்னர் தன் பெரிய கைகளை விரித்து அதில் முகத்தை அமைத்து மூடிக்கொண்டு குனிந்தார். அவர் தோள்கள் அதிர்ந்து குலுங்கின.

அவன் ஒரு வேலின் முனையை தெரிவுசெய்தான். அதன் கூர் நோக்கி ஆடிகளை இணைத்து பொருத்திக்கொண்டுசென்றான். அதன் விளிம்பின் எழுவளைவுக் கோடும் அது சென்று மடிந்த புள்ளியும் தெளிவாகத் தெரிந்தன. பின்னர் இன்னொரு ஆடியை அகற்றி அகற்றி விரித்தான். குருக்ஷேத்ரவெளி வண்ணங்களின் அலைகளெனத் தெரிந்தது. “அரசே, நமது படைகள் பாண்டவப் படைகளுக்கு முகம் கொடுத்து களத்தில் நின்றுள்ளன” என தொடங்கினான். “நமது படையின் பருந்துச் சூழ்கை முழுமையடைந்துள்ளது. பருந்தின் கூரிய செவ்வலகென பீஷ்மர் நின்றிருக்கிறார்” என்று அவன் சொல்லத்தொடங்குகையில் மெல்ல உடற்தசைகள் தளர்ந்து பெரிய தலை எடை மிகுந்ததுபோல் உடல் தழைய துயில்பவர்போல் மூச்சு ஒலி பெருக கனவிலாழ்ந்து திருதராஷ்டிரர் அமர்ந்திருந்தார்.

அவனுடைய சொற்களை சில சமயங்களில் அவர் கேட்கிறாரா என்றே அவன் ஐயம் கொள்வதுண்டு. ஆழ்துயிலுக்குச் சென்றுவிட்டார் போலும் என்று எண்ணவைக்கும் குறட்டை ஒலியும் அரிதாக கேட்கும். முதல்நாள் அவன் களநிகழ்வை சொல்கையில் அவரது குறட்டை ஒலியைக் கேட்டு அவன் சொல்லொழுக்கை நிறுத்தினான். அரை நாழிகைக்கு மேல் அவன் எதையும் சொல்லவில்லை. வெறுமனே போரை விழியாகி அமைந்து நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் அவர் சப்புக்கொட்டி அசைந்து கால்களை நீட்டியபோது மீண்டும் சொல்லத்தொடங்கினான். ஆனால் அன்று மாலை அவர் கள நிகழ்வுகளை கொந்தளிப்புடன் திருப்பிச் சொன்னபோது தான் சொல்லாமல் விட்டுவிட்ட அரைநாழிகைப் பொழுதிலும் அவர் களத்தை பார்த்திருப்பதை உணர்ந்து அவன் திடுக்கிட்டான்.

தன் சொற்களினூடாக அவர் உருவாக்கிக்கொள்ளும் களம் அவரது கனவில் மேலும் பல மடங்கு விரிவாகிறது என அவன் உணர்ந்தான். சொற்கள் வெறும் விதைகள். அவர் காணும் போர் அவன் அறிய முடியாத பிறிதொரு வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்நிகழ்விலும் அவரே பங்கெடுப்பவர்போல் திருதராஷ்டிரர் கொந்தளித்தார். கைகளால் ஓங்கி அறைந்துகொண்டார். சீற்றத்துடன் பீடத்தை பின்னால் தட்டிவிட்டு எழுந்தார். தன்னைத்தானே சுற்றிவந்து தன் தொடையிலும் தோள்களிலும் ஓங்கி அறைந்து கூச்சலிட்டார். போரிடுபவர்கள் தனக்கு மிக அருகே நிற்பவர்போல் “என்ன செய்கிறான் மூடன்! அறிவிலி! வெட்டு, இடைவெட்டு… விலகு. விலகு, மூடா… அது பிறையம்பு. அதன் ஓசையே தெரிவிக்கவில்லையா உனக்கு!” என்று கூச்சலிட்டார். “வீழ்ந்தான்… வீழ்ந்தான். அறிவிலிக்கு இறப்பே பரிசு… ஆம்!” என்று கைகளை அறைந்துகொண்டார்.

ஒவ்வொரு போர்வீரனுடனும் அவர் இருப்பதைப்போலிருந்தது. அவனுடைய பார்வை அர்ஜுனனும் பூரிசிரவஸும் போரிட்டுக்கொள்ளும் இடத்திலிருந்து சாத்யகியுடன் ஜயத்ரதன் மோதும் தருணம் வழியாக பீஷ்மரை அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் எதிர்க்கும் இடம் சென்று மீளும்போது அவருள் அந்தக் களங்களனைத்தும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருப்பதை கண்டான். ஆனால் ஒட்டுமொத்த களத்தையும் அவர் பார்த்துக்கொண்டுமிருந்தார். “சகுனி என்றொருவன் அங்கிருக்கிறானா இல்லையா? இப்போதே பறவையை அனுப்பு. அவன் இங்கு வரவேண்டும், அவன் நெஞ்சக்கூழை எடுக்கிறேன்!” என்று கூச்சலிட்டார். “அறிவிலிகள்! அறிவிலிகள்!” என்று அலறியபடி தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்துகொண்டார்.

“விழியிலாதவர் மட்டுமே இத்தனை விரிந்த நோக்கு கொண்டிருக்க முடியும்” என்று அவன் சங்குலனிடம் சொன்னான். சங்குலன் நோக்குள்ள விழிகளிலேயே நோக்கிலாமையை பயின்றவன். “ஒவ்வொரு துளியையும் முடிவிலாது விரிக்கக் கற்றவர்கள் அவர்கள் மட்டும்தான்.” அவன் விழிகளை நோக்கி சஞ்சயன் சொன்னான் “நோக்குபவற்றிலிருந்து காட்சியை முற்றகற்றி நீரும் அங்கே சென்றுகொண்டிருக்கிறீர், பேருருவரே.” சங்குலன் ஒரு சொல்லுக்கும் மாற்றுரைப்பதில்லை. “இப்போர் நிகழ்ந்துகொண்டிருப்பது இவருடைய உள்ளத்திற்குள். சங்குலரே, இது அங்கே நிகழத்தொடங்கி நெடுநாட்களாகின்றது என்றும் ஐயுறுகிறேன்.”

திருதராஷ்டிரர் பேரரருவி அறைந்துவிழும் மரம் போலிருந்தார். “நூறு தெய்வங்கள் வந்தெழுந்த வெறியாட்டன்!” என்று அவன் சங்குலனிடம் சொன்னான். “இவர் வாழ்ந்தது இத்தருணத்துக்காகவே. இது அளிப்பது எதுவாயினும் வாழ்வில் இழந்தவை அனைத்தையும் பெற்றுவிட்டார். ஆயிரம் பல்லாயிரம் முறை உலகிருந்து நிறைந்துவிட்டார். சங்குலரே, உச்சங்களிலிருந்து உச்சங்களுக்கெனச் செல்லும் கணம்நிறை பெருங்காலம் அவருடையது.” சங்குலன் தன் பெருந்தோள்கள் தொய்ந்திருக்க எடைமிக்க தலை தாழ்ந்து முகவாய் மார்பில் படிய அமர்ந்திருந்தான்.

சஞ்சயன் சற்றே அகிபீனா கொண்டிருந்தான். சிவந்த விழிகளுடன், ஈரம்கனிந்த உதடுகளில் புன்னகையுடன் அவன் சொன்னான் “பெருந்துயர். உயிருடன் விலங்குகளை உண்ணும் சில சின்னஞ்சிறு மீன்களுண்டு கடலில் என அறிந்துள்ளேன். பல்லாயிரம் மீன்களால் அவர் கொத்திப்பிடுங்கி கிழித்து உண்ணப்படுகிறார். துளியும் எஞ்சமாட்டார். ஆனால் பெரும்பட்டறிதல்கள் அனைத்துமே அவ்வகைப்பட்டவை அல்லவா? சிற்றறிதல்கள் அனைத்தும் இன்பங்கள். பேரறிதல்களோ கொடும்வலிகள். ஆம், அதை நான் அறிவேன். தவமென்பவை தற்கரைத்து அடையத்தக்கவை.” குடிலுக்குள் கிடந்த அவருடைய பேருடலை அவன் எட்டிப்பார்த்தான். “பேருடல், விழியின்மை. அவர் கொண்டுவந்த அனைத்தும் இங்கு இவ்வண்ணம் ஆகி நின்றிருப்பதற்காகவே போலும்.”

அவன் விழித்துக்கொண்டபோது உடலெங்கும் சருகுகள் பரவியிருந்தன. எழுந்து அமர்ந்தபோது அதுவரை அவன் பார்த்துக்கொண்டிருந்த கனவை எண்ணி திடுக்கிட்டான். ஆனால் அந்த முதற்கணத்துடன் அக்கனவு முழுமையாகவே கலைந்து நினைவிலிருந்து அகன்றுவிட்டது. அதை மீண்டும் சென்று தொட முயன்றான். பலமுறை துழாவியும் அது உருத் திரளவில்லை. சலித்து விலகி எழுந்து ஆடையிலிருந்த புழுதியை உதறிக்கொண்டு மூச்சை இழுத்துவிட்டான். விடிவெள்ளியை சற்றுநேரம் நோக்கியபின் திரும்பி திருதராஷ்டிரரின் குடிலை பார்த்தான். அங்கே வாயிலில் சங்குலன் கைகளை மார்பில் கட்டியபடி விழித்த நோக்குடன் அமர்ந்திருந்தான். அவன் விழிகள் இரவில், இருளில் மட்டுமே ஒளிகொள்பவை என்று தோன்றியது. சஞ்சயன் மலைச்சரிவில் சென்ற ஒற்றையடிப்பாதையில் மெல்ல இறங்கிச் சென்று நிழலுருவான புதர்ச்செறிவுகளுக்கு நடுவே சலசலப்பாக ஓடிக்கொண்டிருந்த சிற்றோடையை அடைந்தான்.

ஒவ்வொருநாளும் அவன் விழித்தெழுவதற்கு முன்னரே அவன் விழித்தெழுந்து அவரைச் சென்று எழுப்புவதாக ஒரு கனவை அவன் அடைந்தான். அக்கனவினாலேயே அவன் எழுப்பப்பட்டான். அக்கனவை எப்போதும் அவன் எண்ணி வியப்பதுண்டு. அவன் தேரில் கிளம்பவேண்டும் என்றால், அவையில் அமரவேண்டும் என்றால் தேரில் கிளம்பிவிட்டதாகவும், அவையில் அமர்ந்துவிட்டதாகவும் கனவு வந்துதான் அவனை எழுப்பியது. அவன் தன் உடலுக்குள் ஒரு கணம் முன்னரே சென்றுகொண்டிருந்தான். ஒரு கணம் முன்னரே மீண்டு வந்துவிட்டிருந்தான். அவன் பெருமூச்செறிந்தபடி மீண்டும் விடிவெள்ளியை நோக்கினான். காட்டிலிருந்து வந்த காற்றில் இலைகளின் நீராவி வெம்மை இருந்தது.

ஒரு வேம்புக்குச்சியை உடைத்து பல் துலக்கியபின் மெல்ல கால்வைத்து ஓடைக்குள் இறங்கினான். காலில் பட்ட நீர் இளவெம்மை கொண்டிருந்தது. குனிந்து நீரை அள்ளி வாயில் விட்டபோது அக்கனவு தெளிவாக, அப்போது நிகழ்வதென, மீண்டது. அவன் கண்களை மூடி அமர்ந்திருக்க திருதராஷ்டிரர் அவர் கண்ட பெரும் போர்க்களத்தை அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைஇழைபிரிக்கப்பட்ட வானவில்
அடுத்த கட்டுரைநெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு