இழைபிரிக்கப்பட்ட வானவில்

Rhia Janta-Cooper
Rhia Janta-Cooper

இனிய ஜெயம்

இந்த மனிதர் எப்போதெல்லாம்  நீயூஸ் பேப்பரை விட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க துவங்குகிறாரோ ,அப்போதெல்லாம் அவருக்குள்ளிருக்கும் கவிஞன் , அவர் அப்போது மிதந்து கொண்டிருக்கும் காகித கப்பலை விட்டு ,அப்படியே உயர்த்தி மேகத்தில் ஏற்றி விடுகிறார் .

விமான ஜன்னல் வழியே ,இந்த புவிக்கு தொடர்பே அற்ற ஒரு விண் பறவை போல கீழ் நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் மனுஷ்ய புத்தரன் முகம் மீது இப்போது  எழும் பித்தை ,காதலை அவருக்கு எந்த சொல் வழியாகவும் என்னால் உணர்த்தி விட முடியாது .

வான வில்லின் வர்ணம் போர்த்திய மனிதர்கள் …அதை கனவு காணும் அக் கணம் ,அந்த வான வில் தான் வாழ வேண்டிய விண்ணில் இருந்து உடைந்து விழுந்த ஒன்று என்ற துயரும் அதனுடன் இணையும் போது ….என்ன சொல்ல கடவுளற்றவனின் பக்திக் கவிதை எனும் உங்களது கவித்துவமான வரையறை மிக மிக சரியானது .

உள்ளே எங்கோ துளி கசப்பு உறையாமல் ,வெளியே ததும்பும் கசப்பு எதையும் உணர முடியாது .என்னுள் நலுங்கும் துளி கசப்பை ,தித்திப்பாக இக் கணம் மாற்றி மாயம் காட்டுகிறது இக் கவிதை .

manushyaputhiran_5

நான் ஒரு வானவில்லிற்கு மேலே இருந்தேன்

நகரத்திற்கு மேலே
ஒரு வானவில் நீண்டு படர்ந்திருந்ததை
விமானத்தின் ஜன்னலோர இருக்கையிருந்து
கண்டேன்
பணிப்பெண்ணின் புன்முறுவலைவிடவும்
ஆயிரம் வண்ணங்கள் கூடியிருந்தது
அந்த வானவில்

நான் அப்போது
வானவில்லிற்கு
மிக உயரத்தில் இருந்தேன்
எனது நகரத்தில் மேல்
ஒரு கொடிபோல
எந்தப் பிடிமானமும் அற்றுப் படர்ந்திருந்தது
அந்த வானவில்

வானவில்லை
எப்போதும் அண்ணாந்து பார்த்தபடி
அதைப் பின்தொடர்ந்து சென்றவனுக்கு
ஒரு வானவில்லை குனிந்து பார்ப்பது
எல்லையற்ற திகைப்பைத் தருகிறது

எனது நகரத்தின்மேல்
அந்த வானவில்
முறிந்து விழுந்தால்
நாங்கள் அனைவரும் எத்தனை
வண்ணமுடையவர்களாகிவிடுவோம்
என்று ஒரு கணம் நினையாமல் இல்லை

இந்த விமானம் சற்று தாழப்பறந்தால்
அந்த வானவில்லை
ஒரே ஒருமுறை தொட்டுவிடலாம்
என்று அவ்வளவு நம்பினேன்
அவ்வளவு முழுமையாக
அவ்வளவு தன்னம்பிக்கையுடன்
அந்த வானவில்லைக் கண்டேன்

என் வாழ்வில் நான் அப்படிக் கண்ட
இதோ அண்மையில்தான் இருக்கிறது என்று நினைத்த
அன்பின் வேறு சில வானவில்களும் இருந்தன
இதோ இந்த விமானம் கடந்து செல்வதைவிட
வேகமாக அவற்றை நான் கடந்து சென்றேன்.

மனுஷ்ய புத்ரன்

*

அன்புள்ள சீனு

நல்ல கவிதைதான், கிட்டத்தட்ட. இக்கவிதையில் குறைவதென்ன என்று எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேனே. கவிஞர்கள் இருவகையான சிக்கல்களில் அகப்பட்டுக்கொள்வதுண்டு, விதிவிலக்கான நல்ல கவிஞர்களே இல்லை.

ஒன்று , ஒரு குறிப்பிட்ட காலம் முழுக்க ஒரே உணர்வுநிலையில் இருப்பது. இதை அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. நிலவுகண்டால் நரி ஊளையிடும், அதை நரியால் கட்டுப்படுத்தமுடியாது. ஒரே உளநிலை நாட்கணக்கில் சிலரில் ஆண்டுக்கணக்கில் நீடிக்கிறது. அது ஒரு மனநோய் போல அவர்களைப் பீடிக்கிறது. உண்மையில் அதை சில மாத்திரைகளால் எளிதில்  ‘குணப்படுத்தி’விடமுடியும்.  ஆனால் நாம் கவிதைக்காக சிலரை பலிகொடுத்தே ஆகவேண்டும்.

அது பெரும்பாலும் சோர்வு அல்லது காதலின் தவிப்பு. அவர்களின் புறவயமான உலகம் அந்த உணர்ச்சிக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கிறது. அனைத்தும் அவ்வண்ணமே தோற்றமளிக்கின்றன. பொருட்களெல்லாம் அந்தப்பொருள் மட்டுமே கொண்டவையாகின்றன. அவற்றில் கூர்மையான வெளிப்பாடு கொண்ட கவிதைகளும் இருக்கும் திரும்பத்திரும்ப ஒரேவகையாக வெளிப்படும் கவிதைகளும் இருக்கும்.

இன்னொன்று, ஒரு கருவில் மாட்டிக்கொள்வது. இது பெரும்பாலும் தான் எழுதுவதை ஒட்டுமொத்தமாக தானே பார்த்தால் கவிஞருக்கே தெரியவருவதுதான். ஆனால் கவிஞர்கள் அதை பெரும்பாலும் செய்வதில்லை. அந்தக்கரு அவருக்குச் சொல்லித்தீராததாக இருக்கலாம். ஆனால் பலசமயம் புதிய திறப்புகளின் மேல் அது வந்து மூடிக்கொண்டு அமர்ந்துவிடும். இக்கவிதையில் நிகழ்ந்திருப்பது அதுவே.

உறவின் முறிவும் பிரிவும் மனுஷ்யபுத்திரனால் மீளமீள எழுதப்படும் கதைக்கருக்கள். அவருடைய சமகாலக் கவிதைகளில் கணிசமானவை அத்தகையவை. அவருடைய வாசகர்களில் பெருவாரியானவர்களுக்கு அந்தக் கரு பழக்கமானதாகவும், அவர்களின் சொந்தவாழ்க்கையுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. ஆகவே கவிதையை பற்றுவதற்கான ‘பிடி’ ஆக அது செயல்படுகிறது. அவை உடனடியான எதிர்வினையைப் பெறுகின்றன. ஆகவே அவர் உள்ளமும் அதை எளிதாக நாடுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது

அந்த வானவில் அவரே சொல்வதுபோல ‘எந்தப்பிடிமானமும்’ அற்றது. எப்போதும் மேலே நின்றிருப்பது. அன்று கீழே நின்றுள்ளது. அந்த வானவில் பற்றிய ஒவ்வொரு வரியும் வெவ்வேறு நுண்ணிய வெளிப்பாடுகளை நோக்கித் திறக்கின்றன. நகரத்தின் அனைவரையும் வண்ணமயமாக்கிவிடும் வானவில். என்றும் மேலே நின்றிருப்பது, அன்று காலடியில் நின்றுள்ளது. ஆயினும் அது தொடுவதற்கரியது. அது அப்படி எந்தப்பிடிமானமும் அற்றதாக, தொடுவதற்கரியதாக கவிதைக்குள் நின்றிருக்கையிலேயே அது கவித்துவப்படிமம்

ஆனால் கவிஞர் கடைசி வரியில் வானவில்லை சுருட்டி தன் வழக்கமான பைக்குள் போட்டுவிடுகிறார்.

வானில்

என் வாழ்வில் நான் அப்படிக் கண்ட
இதோ அண்மையில்தான் இருக்கிறது என்று நினைத்த
அன்பின் வேறு சில வானவில்களும் இருந்தன

அது அன்பின் வானவில் என்கிறார். அவருடைய வழக்கமான கவிதைமுடிவு. வழக்கமான உணர்வு. அங்கே கவிதை அன்றாடத்தை வந்து தொடுகிறது. எந்த மர்மம் அதை கவிதையாக ஆக்குகிறதோ அதை இழக்கிறது.மனுஷ்யபுத்திரன் கண்ட வானவில்லை விட வாசகன் இக்கவிதையில் காணத்தக்க வானவில் மிகப்பிரம்மாண்டமானது

Unweaving the Rainbow என்ற பிரபலமான விவாதம் நினைவுக்கு வருகிறது. பதினெட்டாம்நூற்றாண்டின் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்கள் நடுவே நிகழ்ந்தது. இயற்கையின் மர்மங்களை அறிவியல் புரியவிழ்த்து இல்லாமலாக்கிவிடுகிறதா என்னும் விவாதம் அது. கவிதை வானவிற்களை அர்த்தப்படுத்திக்கொள்வது அல்ல, அர்த்தங்களிலிருந்து மேலும் அகற்றிச் செல்வது என்றுதான் நான் நினைக்கிறேன். நம் தலைக்குமேல் நாம் கொள்ளச் சாத்தியமான ஆயிரம் வண்ணங்கள் ஒரு நிகழா வாய்ப்பாக நின்றுகொண்டிருக்கட்டுமே.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54