அன்புள்ள ஜெயமோகன்,
புத்தகக் கண்காட்சியில் ‘உலோகம்’ வாசித்தேன். கிழக்கு கடை அருகிலேயே நின்று வாசித்து முடித்தேன். நீங்கள் இதுவரை இத்தனை வேகமான ஒரு நாவலை எழுதியதில்லை. வழக்கமாக ‘திரில்லர்’ நாவல்கள் தொடர்ச்சியாக சம்பவங்களை சொல்லிக்கொண்டே செல்லும். உலோகத்திலே மன ஓட்டங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் திரில் குறையவில்லை. என்ன காரணம் என்றால் நம்பகத்தன்மைதான். நாவல் முழுக்க உளவுத்துறையின் செயல்பாடுகளும் இயக்கங்களின் செயல்பாடுகளும் ஆச்சரியமூட்டும்படி ரொம்ப பர்ஃபக்டாக இருந்தன. அந்த காரணத்தால் மேலெமேலே என்று மனசு சென்றுகொண்டே இருந்தது. என் நண்பர்களுக்காக இன்னும் இரு காப்பி வாங்கிக்கொண்டேன். நீங்கள் அடிக்கடி இதைப்போல சில நாவல்களை எழுதலாம். இது ஒன்றும் உங்களுக்கு பெரிய விஷயம் அல்ல. இந்நாவல் இந்த ஜானருக்குள் ஒரு முக்கியமான இலக்கியம்தான். திரில்லர் ஸ்டைலில் நல்ல இலக்கியங்கள் ஆங்கிலத்திலே நிறையக்கிடைக்கின்றன. அவை அந்த ஃபார்மாட்டுக்குள் நின்றுகொண்டு மனித மனத்தைப்பற்றி ஆராய்ச்சிசெய்கின்றன. மனிதநிலைமைகளை காட்டுகின்றன. கொலைக்கும் துரத்தப்படுவதற்கும் எல்லாம் அதற்குரிய மனநிலைகள் உள்ளன. அவற்றை திரில்லரில்தான் நன்றாகச் சொல்ல முடியும். இது ஒரு நல்ல தொடக்கம். இதே போல கொஞ்சம் நல்ல நாவல்கள் வாசிக்கக் கிடைத்தால் மகிழ்ச்சி. ஆனால் தயவுசெய்து தொடர்கதைக்கு போய்விடாதீர்கள்.
சரவணன் அருணாச்சலம்
அன்புள்ள சரவணன்,
நன்றி.
உண்மையில் எல்லா வகையிலும் எழுதிப்பார்த்துவிடவேண்டும் என்ற உந்துதல் எனக்குண்டு. ஆகவேதான் பேய்க்கதைகள் அறிவியல்கதைகள் என எழுதினேன். இதுவும் அதே. இந்த கருவை இந்த வடிவிலேயே எழுதமுடியும். இது ஒரு மனிதனின் ஆன்ம வீழ்ச்சியின் கதைதான்
தொடர்கதை எழுதுவதாக இல்லை. சலித்துப்போன ஒரு வடிவம். அது இறந்தும் விட்டது
நன்றி
ஜெ
=================
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களது புத்தகப் பட்டியலில்(http://www.jeyamohan.in/?p=11233 ) “தனிக்குரல்” என்ற புத்தகம் விடுபட்டுள்ளது… இணையத்தில் வேறெங்கும் உங்களது முழுமையான புத்தகப் பட்டியல் உள்ளதா? நேரமிருந்தால் தெரிவிப்பீர்களா?
சமீபத்தில் “காடு” படித்தேன்.. இன்னும் வெளியே வர முடியவில்லை..!! :)
அன்புடன்,
வே. சதீஷ் குமார்
பெங்களூர்
—
Regards,
Satheesh
“Die Menschen stärken, die Sachen klären”.
தனிக்குரல் நூலாக வரவில்லை. அது என் உரைகளின் தொகுதி. தன்னுரை என்ற பேரில் உயிர்மை வெளியீடாக வந்தது
ஜெ
============================
வணக்கம்
இடதுசாரித்தரப்பின் முக்கியமான நூல்களில் ஒன்று இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடின் இந்திய சுதந்திரப்போராட்ட
வரலாறு. [பாரதி பதிப்பகம்] . இ.எம்.எஸ் தெளிவான நடைக்கும் திட்டவட்டமான கருத்துக்களும் புகழ்பெற்றவர்.
கேரள சுதந்திரப்போராட்ட வரலாறு, கேரள இலக்கிய வரலாறு, கேரளம் மலையாளிகளின் தாய்நாடு ஆகியவை
அவரது செவ்வியல் படைப்புகள். அவற்றில் ஒன்று இது
இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிப் பெயர்த்தவர் என் தாய் வழி தாத்தா .
நன்றி
அசோக்
============================
அன்புள்ள ஜெயமோகன்
கோவை அய்யாமுத்து சுயசரிதையை வெளியிட்டிருப்பது விடியல் பதிப்பகம். சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர்களின் கடை உள்ளது
பிரேம்குமார்
========================
அன்புள்ள ஜே,
புத்தகக் கண்காட்சியில் உலோகம் வாங்கி வாசித்தும் விட்டேன். அபாரமான வேகம். விற்பனையும் அதிவேகம் என்று சொன்னார்கள்இணையத்தில் வந்தபோது நீண்டநாவல் என்று நினைத்தேன். வாசிக்கவில்லை. இதில் எடிட் செய்திருக்கிறீகளா?
பழனிவேல்
அன்புள்ள பழனிவேல்
இல்லை. அச்சில் சின்னதாக தெரிகிறது
நன்றி
+===============
அன்புள்ள ஜெ.எம்,
புத்தகக் கண்காட்சியில் இன்றைய காந்தி, விஷ்ணுபுரம் வாங்கினேன். சங்கசித்திரங்கள் கவிதாபதிப்பகத்தில் இல்லை என்றார்கள்
குமார் கெ
அன்புள்ள குமார்
நன்றி
இன்றைய காந்தி விஷ்ணுபுரம் இரண்டும் இன்றோடு தீர்ந்துவிடும். சங்கசித்திரங்கள் தமிழினி வெளியீடாக அவர்களின் கடையில் கிடைக்கிறது. மலிவுப்பதிப்பு
ஜெ