அன்புள்ள ஐயா
சிலுவைராஜ் சரித்திரத்தின் மீது கவனம் ஈர்த்தமைக்கு நன்றி
ஒரு ஒடுக்கப்பட்ட இளைஞனின் தன் வரலாறு. 1950 இல் பிறந்த சுதந்திர இந்தியாவின் குழந்தை சாதிக்கொடுமைகளால் மதத்தில் ஆறுதல் தேடி, மதத்துக்குள்ளும் புகுந்துவிட்ட சாதியால் ஓட்டப் படும் கதை
உள்ளுறையாக வாழ்வு முழுவதும் ஒரு விளையாட்டுத் துடுக்குத் தனத்தால் தன்னைப் போர்த்துக் கொள்கிறான் சிலுவை. அவனது பாட்டி ராக்கம்மா பொறுமையுடன் தாங்கிக் கொள்வதன் மூலம் இழிவைக் கடந்து செல்கிறாள். பாறையைப் போன்ற பொறுமை (நமது சாதி அதுதானடா சிலுவ? இதுக்குப் போயி குதிக்கிறயே?). சிலுவையின் தந்தை ராணுவப் பணிமூலம் வேறு ஒரு உலகத்திற்குள் நுழைந்து விடுகிறார். தாய் தெருச் சண்டை மூலமும் சிலுவையைத் தந்தையிடம் கோள்சொல்வதன் மூலமும் விடுதலை அடைகிறாள். சிலுவை சிற்றுயிர்களை வதைப்பதன் மூலம் அடிபட்ட ஆளுமையை சமன் செய்து கொள்கிறான். இதில் ஆக்கபூர்வமானவள் பாட்டி. தலைமுறைகளை வளர்த்தெடுப்பவள். இன்ங்களை அழியாமல் காப்பவள்
அவமானங்களைப் பகடி செய்து கொண்டே செல்லும் சிலுவை, இறுதியில் மாவோயிசத்தின் எல்லைக் கோட்டில் வந்து நிற்கிறான். பின் தனக்கே உரிய இயல்பால் அதையும் கடக்கிறான்.
அப்பாவின் பெயரில் (சாதி) வால் இல்லாமல், RC தெரு என்ற அடையாளமே சாதியைக் காட்டிக் கொடுக்க, தனது சாதியை உரத்த குரலில் முழங்கி , புதுப்பட்டியிலிருந்து பிய்த்துக் கொண்டு உயர்படிப்பு முடிக்கும் சிலுவை, படிப்பு முடிந்து, அதே ஊருக்குள் அமிழ்த்தப் படுகிறான். கடைசியில் இந்துவாக மீண்டும் மாறி, மதுரை ஆதினத்திடம் தன் பெயரை தெரிவுசெய்கையில் கணாத தத்துவத்தை அளித்தவர் பெயர் தான் வேண்டும் என்று ‘ஞானத்தை அவுத்து வுட்டு’ அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறார்
அறிவைத்தேடும் ஒரு மாணவனுக்கு நமது பள்ளி, கல்லூரிகளில் கிடைக்கும் சரக்கைப் பற்றிய கதை என்றும் கூறலாம். சிற்றுயிர்களை கொன்று, பிய்த்து, ஆய்ந்து தின்பதை பொழுதுபோக்காகக் கொண்ட சிலுவைக்கு விலங்கியல் எளிதாக வருகிறது. எல்லாக் காலங்களிலும் கணக்கு வாத்தியார்களில் புரிய வைக்கும் திறன் அரிதாகவே இருந்திருக்கிறது அறிந்து கொள்ள முடியாமையால் வரும் துன்பம் வேறு உலகைச் சார்ந்தது. அறிவியல் பார்வையை இலக்கியத்தில் புகுத்தி, எந்த பெருநூலையும் வகை பிரித்து தொகுத்துக் கொண்டு தேர்வில் விளாசி விடும் சிலுவை கற்றல் முறையில் புதுமையைக் கொண்டு வருகிறார்
முழுக்கதையிலும் நையாண்டி அடிநீரோட்டமாக ஒழுகிவருகிறது. கிறிஸ்துமஸ் பாட்டில் சுயமாய் வரிகளைப் புகுத்தும் சிறுவன், MGR போல வெள்ளைபாண்ட், சட்டை போட்டு செருப்பு போடவேண்டும் என்று தெரியாமல் வரும் இளைஞன், ஏழாம் வகுப்பில், நீளமான கரங்களுடன் (அடிப்பதற்குத் தான்) வரவேற்கும் கணக்கு வாத்தியார், போன்றவர்கள் ஒவ்வொரு தெருவிலும் சந்திக்கும் தவிர்க்கமுடியாத பாத்திரங்கள். Algebra is a cobra என்ற பொது விதி கண்டடையப் படுகிறது. ஆங்கில எழுத்துக்களை திடீரென கணக்கில் கொண்டு வந்தால் மிரளாமல் என்ன செய்வது?
அல்ஜிப்ரா, கால்குலஸ் போன்ற பாடங்களில் அறிமுகம் செய்யும் நாள் மிக முக்கியம். ஆசிரியர் புரிதல் உள்ளவராகவும், அன்றாடவாழ்வின் நிகழ்வுகள் மூலம் எடுத்துச் சொல்பவராகவும் இருத்தல் வேண்டும். முதல் நிலையில் புரிதல் இன்றி மேலே செல்லும்போது மறுதுவக்கம் கேட்கும் உரிமை மாணவர்க்கு இருக்கவேண்டும். கணிதமும் கவிதையும் flash இல்லாமல் வராது என்றால் விலக்கம் அதிகமாகி விடும்.
பேராசிரியர்கள் செய்யக்கூடாதவை என்ற பட்டியல் ஆசிரியர்களுக்கான அடிப்படை வழிகாட்டியாகும்
அடித்து திருத்தும் தந்தையைப் புரிந்து கொள்ள முடிகிறது. மறத்திற்கும் அன்பு சால்பு. RC தெருவில் இருந்து ஒரு குடும்பமாயினும் மீள வேண்டும் என்ற கனவு தன் ராணுவ வேலை மூலமும் தன் மகன் மூலமும் மெய்யாக வேண்டும் அவருக்கு. ஆனால் சிறு வயதிலேயே விலகி விட்ட சிலுவை தந்தையுடன் ஒட்டவே இல்லை.
மிகச்சிக்கலான முடிச்சு சிலுவையின் தாயுடன் அவன் கழிக்கும் நாட்கள். 600 ரூபாய் கடன் வாங்கி மதுரையில் கல்லூரியில் சேர அளிக்கும் தாய். கணவனின் தாக்குதலில்இருந்து தன்னைக் காத்துக்கொள்ள சிலுவையை சிலுவையேற்றுகிறாளோ என்ற ஐயம் எழுகிறது. பல்கலையில் முதல் 12 பேர்களில் தேர்ச்சி பெறும்போது பெரிது உவந்திருப்பாள். தந்தையிடம் அடி வாங்கித்தந்தபோதும் அடித்த பின் அவள் எதிர்வினை நம் கற்பனைக்கு விடப்படுகிறது. அவள் நிலையில் எந்த தாயும் செய்திருக்கக் கூடியதே.
துயரங்கள் தொடர்ந்த போதும் சிலுவையின் எழுச்சி ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் அடையாளமாகிறது. இந்திய சமூகம் குற்ற உணர்வு, வெட்கத்துடன் தலைவணங்கி முன்னிற்க நிற்கவேண்டிய நூல்.
சரித்திரத்தின் அடுத்த பகுதி விளையாட்டுணர்வு குன்றாமல், வெம்பிப் பழுத்து முதிர்ச்சியடைந்த, புத்தமதத்தின் தத்துவத்தில் தோய்ந்த சிலுவையைக் காட்டலாம். அதுவே அவன் ஜகத்தை மன்னித்துவிட்டதன் அடையாளம்.
அன்புடன்
ஆர் ராகவேந்திரன்