சென்னையில்…

 

திரிச்சூரில் இருந்து நாகர்கோயிலுக்குச் சென்ற  மறுநாளே சென்னைக்கு வந்தேன். ஜனவரி ஒன்று காலை ஒன்பது மணிக்கு சென்னை சத்யம் திரையரங்க வளாககத்தில் சாந்தம் திரையரங்க அரங்கில் நான் கடவுள் படத்தின் இசை வெளியிட்டும் முன்னோடி விளம்பர வெளியீடும் நடந்தது. அதில் விருந்தினராக பங்கேற்றேன்.. வழக்கமான சினிமா விழா. அனைவரும் உற்சாகமாக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வது வழக்கம். ஒரு மங்கல நிகழ்ச்சி. அதிகாரபூர்வமாக படத்தில் விளம்பரங்களை தொடங்கிவைப்பது இதன் நோக்கம். படம் அனேகமாக ஜனவரி இறுதியில் , 29 என்கிறார்கள், வரக்கூடும்.

யூகிசேது தொகுத்துவழங்கிய நிகழ்ச்சியின் சுருக்கத்தை கலைஞர் தொலைக்காட்சியில் பலர் பார்த்திருக்கக் கூடும். யூகிசேது அவரது வழக்கமான நகைச்சுவைத்துணுக்குகளுடன் பேசினார். மேடையில் தமிழ்த்திரையுலகின் நட்சத்திரங்கள். ஆரியா பூஜா சூரியா, விக்ரம் போன்ற நடிகர்கள் மணிரத்தினம், பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் திரைவினொயோகஸ்தர்கள் பேசினார்கள். எல்லாரும் ரத்தினச்சுருக்கமாகப்பேச அனுமதிக்கப்பட்டார்கள். பாலுமகேந்திரா மட்டும் திரைப்படத்தில் பணியாற்றியவர்களைப்பற்றியும் எடுத்துச் சொன்னார். யூகிசேது எல்லார் பேரையும் சொல்லி வழக்கம்போல பாராட்டினார். நவீன இலக்கியம் என்றாலே ஜெயமோகன் தான் என்ற வகையில் அவர் சொன்னபோது இருவர் கைதட்டினார்கள். நான் மகிழ்ச்சி அடைய ஆரம்பிப்பதற்குள் ‘ஜெயமோகன் ஒழிக’ என்று அரங்கில் இருந்து ஒரு குரல் எழுந்தது.

அன்றுமாலை பாலாவைப்பார்த்துவிட்டு நானும் ஆர்தர் வில்சனும் எஸ்.ராமகிருஷ்ணன் வீட்டுக்குச்சென்றோம். பெருமுடாஸ் அணுந்துகொண்டு கணிப்பொறியில் அதி தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தார். அவரது வீட்டு வாசலில் இயக்க்நுஅர் சசி பேட்மின்டன் விளையாடிக்கொண்டிருந்தார். அவரது வீடு தரைத்தளத்தில்தான் . ராமகிருஷ்ணனின் பையன் உற்சாகமாக கம்ப்யூட்டரில் அவன் வரைந்த படங்களைக் காட்டி நானே வரைந்தது என்றான். அவரிடம் பேசிக்கொன்டிருந்துவிட்டு மூவருமாக கிளம்பி நண்பர் சுகா- சுரேஷ் கண்ணந் அலுவலகத்துக்குச் சென்றோம். நள்ளிரவு வரைபேசிவிட்டு திரும்பிவந்தேன்.

தொடர்ச்சியாக சென்னையில். நண்பர்களைச் சந்திப்பது. தொலைக்காட்சிகளில் ‘இந்தப்படம் எப்டீன்னாக்கா’  என்று ஆரம்பித்து விளம்பர வாசகங்களை ஒப்பிப்பது என்று பரபரப்பாக இருந்தேன். நான் இதுவரை தொலைக்காட்சிகளில் தலைகாட்டியதில்லை. அந்த ஊடகம் மேல் அப்படி ஒரு கசப்பு உண்டு. மேலும் அதன் வழியாக ஒன்றும் வாசகர்கள் வரமாட்டார்கள் என்ற எண்ணம். எனக்குத்தெரிந்து தொலைக்காட்சி ஊடகங்களில் பேட்டி கொடுக்காத ஒரே எழுத்தாளன் நான் தான்

ஆனால் இப்போது வேறு வழியில்லை. இது இந்த தொழிலின் கட்டாயங்களில் ஒன்று. பாலாவைக்கூப்பிட்டுச் சொன்னேன் ‘ஒபாலா மேலே ஒரு லட்சம் அனுப்பி வைங்க…பொய்யெல்லாம் சொல்லியிருக்கேன், உங்க கூட வேலைபாக்கிறது சந்தோஷமா இருந்ததுன்னு” என்றேன்.. ”நீங்க நல்லா எழுதியிருக்கிறதா நானும் சொல்லியிருக்கேன்ல” என்றார். நேற்று மாலை சுகுமாரன் அழைத்து குமுதம் இணைய தளத்தில் ஒரு பேட்டி கொடுக்கச்சொன்னார். வாசகரக்ள் நேரில் அழைத்து கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்படி கேட்டுக்கொன்டார். ஒருமணிநேர உரையாடல். ஏழுட்டெ நல்ல கேள்விகள் வந்தன,

சென்னையில் இருந்தால் நண்பர்களைச் சந்திப்பதிலேயே நேரம் சென்றுவிடும். இப்போது என் மடிக்கணினி பழுதாகிவிட்டதனால் எழுதவும் முடிவதில்லை. ஆகவே மின்னஞ்சல்களை பலநாட்களாகவே பார்க்கவில்லை. நண்பர் கெ.பி.வினோத்தின் வீட்டுக்கு வந்தபோது மின்னஞ்சல் பார்த்துவிட்டு இதைஎ ழுதுகிறேன்

முந்தைய கட்டுரைதிலீப்குமாருக்கு விருது
அடுத்த கட்டுரைசாங்கிய யோகம் (60 – 72) : அலையறியா கடல்