சேலத்தில் ஒரு நாள்

g

நாலைந்து நாட்களாகவே வீட்டில் ஒரு காய்ச்சல் சூழல். முதலில் அருண்மொழிக்குக் காய்ச்சல் வந்தது. உடுப்பி சென்று திரும்பிய கையோடு. உண்மையில் இந்த ‘வைரல் ஃபீவர்’ என்றும் ‘ஃப்ளு’ என்றும் இவர்கள் சொல்லும் நான்குநாள் காய்ச்சல் ஓர் இனிய அனுபவம். ஓய்வுநாட்கள் உள்ளவர்கள் தாங்களாகவே வலிய வரவழைத்து இன்புறலாம். இனிய உடல்தளர்வு, சுகமான கைகால்குடைச்சல், மாத்திரை போட்டுக்கொண்டு நாள்முழுக்க தூங்கலாம். இனிய ஆனால் விபரீதமான கனவுகள் காய்ச்சலின்போது மட்டுமே வரும்.

சைதன்யா டெல்லி மீளவேண்டும். ஆனால் விமானத்தை விட்டுவிட்டாள். நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரம் போக பற்பல கட்டப்படா பாலங்களைக் கடந்து மூன்று மணிநேரம் பயணம் செய்யவேண்டும். அன்று நான்குமணிநேரம் ஆகிவிட்டது, நடந்துபோகும் நேரம் கிட்டத்தட்ட அதுதான். மறுநாள் அவளுக்கும் காய்ச்சல். ஆகவே பயணத்தை நான்குநாள் ஒத்திப்போட்டாள். இன்னொரு மூலையில் அவளும் படுத்துவிட்டாள். கஞ்சி, தோசை என எளிய உணவு. இதை ஆரோக்கிய உணவு என்கிறார் கு.சிவராமன், வேறுவழியில்லையேல் சாப்பிடவேண்டியது

விடுதியில்
விடுதியில்

அதற்கு மறுநாள் எனக்கும் காய்ச்சல். உடலே ஒரு பக்கமாக தள்ளிக்கொண்டிருந்தது. அவ்வப்போது எங்கிருக்கிறோம் என்றே தெரியாத ஒரு மயக்கம். ஆனாலும் எழுதிக்கொண்டிருந்தேன். வெண்முரசை விடமுடியாது. வியாசரே வைரல்ஃபீவர் கொண்டு எழுதியதாகச் செய்தி- இல்லாமலா இருக்கும், தேடிப்பார்க்கவேண்டும். மொத்தத்தில் ஒரு மோனநிலை. நடுவே அருண்மொழிக்கு அவளுக்கு பன்றிக்காய்ச்சலோ என ஐயம்.டாக்டருக்கு ஐயமில்லை, ஆனால் வற்புறுத்தி சோதனை செய்து ஏமாற்றமடைந்தாள், பன்றிக்காய்ச்சல் இல்லை.

காய்ச்சல் ஓய்ந்தபின்னரும் உள்ளம் ஓய்ந்தே கிடந்தது. அதனிடையேதான் சேலம் உரை. நான் மட்டும்தான் உரை என்பதனால் ரத்துசெய்ய முடியாது. ஆகவே [27 -10-2018] மாலை ரயிலில் கிளம்பினேன். நேராக ஈரோட்டுக்கு மறுநாள் காலை ஐந்தரை மணிக்குச் சென்று இறங்கினேன். சந்திரசேகரன், அந்தியூர் மணி ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்கள். கிருஷ்ணன் டீக்கடையில் காத்திருந்தார். அங்கிருந்து நேரடியாகவே சேலம் கிளம்பிவிட்டோம்.கதிர்முருகன் வழியில் ஏறிக்கொண்டார். மிச்சபேர் ரயிலில் சேலம் வருவதாக ஏற்பாடுஇதழாளர் சந்திப்பு

இதழாளர் சந்திப்பு

எல்.ஆர்.என்.எக்ஸெலென்ஸி என்னும் விடுதியில் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள்.சேலம் தமிழ்ச்சங்கத்தின் அழைப்பு. எனக்கு அவ்வமைப்புடன் தொடர்பேதுமில்லை. அதன் தலைவர் சீனி.துரைசாமி அவர்கள் அழைத்தார்கள். அவருக்கு என் பாண்டிச்சேரி உரை பிடித்திருந்தது. பெரியவரின் அழைப்பு, ஆகவே ஒப்புக்கொண்டேன். ஓர் உரை என்றால் எனக்கு இரண்டுநாட்கள் இல்லாமலாகிவிடுகின்றன.

சேலம் எனக்கு ஒருகாலத்தில் அணுக்கமான ஊர். எண்பதுகளில் தருமபுரியில் வேலைபார்த்த நான் தென்தமிழகத்திற்குள் நுழையவேண்டுமென்றால் சேலம்தான் ஒரே வழி. சேலம் புதிய பேருந்துநிலையத்தை குளத்தை தூர்த்து உருவாக்கிய காலகட்டம்.அன்று சேலம் ஆர்.குப்புசாமி, கணபதி சுப்ரமணியன், குவளைக்கண்ணன் என ஓர் இலக்கியச்சிறுகுழு அங்கிருந்தது. க.மோகனரங்கன் அருகே வையப்பமலையில் வேலைபார்த்தார். அந்தச் சந்திப்புக்கு வந்திருக்கிறேன். இன்னொரு குழு உண்டு, சேலம் தமிழ்நாடன் சார்ந்தது. அவருடன் எனக்கு அணுக்கமில்லை.

e

சேலம் மிகவும் மாறிவிட்டிருந்தது, எல்லா ஊர்களையும்போல.எந்தத்தெருவும் அடையாளம் தெரியவில்லை. சேலம் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரே முறை சென்றிருக்கிறேன். ஆனால் அந்த இடமும் நினைவில் நிற்கவில்லை. ஒருநாள் கூடுதலாகத் தங்கியிருக்கலாம். ஆனால் அருண்மொழியை தனியாக விட்டு வந்தது கொஞ்சம் குற்றவுணர்ச்சியை அளித்தது. சேலம் ஆர்.கே அவர்களையாவது பார்த்திருக்கலாமென எண்ணினேன். வாய்ப்பிருக்கவில்லை.

நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் அறை நிறைந்தது. என்னால் நிறையநேரம் பேசமுடியவில்லை. தொண்டை அடைத்திருந்தது. நெஞ்சும் கனமாக இருந்தது. காய்ச்சலின் களைப்பு பேசிக்கொண்டிருக்கையிலேயே சலித்து அப்படியே விட்டுவிடச் செய்தது. சாப்பிட்டுவிட்டுச் சற்றுநேரம் ஓய்வெடுத்துக்கொண்டேன். ஆனால் எந்நிலையிலும் நண்பர்களைச் சந்திப்பது ஒரு கொண்டாட்டம்தான். நண்பர் மொரப்பூர் [மூக்கனூர்ப்பட்டி] தங்கமணி வந்திருந்தார். இருபத்தைந்து ஆண்டுக்கால நண்பர்.

d

சேலம் தமிழ்ச்சங்கத்தில் ஒரு இதழாளர்ச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பொதுவாக இது எனக்கு உடன்பாடில்லை, நான் ஒத்துக்கொள்வதுமில்லை. ஏனென்றால் எழுத்தாளன் அப்படி ஒரு செய்தியாளர் சந்திப்பில் சுருக்கமாகச் சொல்லும்படியான கருத்துக்கள் கொண்டவன் அல்ல என்பது என் எண்ணம். இதழாளர்களும் பொதுவான பண்பாட்டுச் சூழல்சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும்தான் கருத்துக்களை கேட்டார்கள். நான் என் தளத்தில் வழக்கமாகச் சொல்லும் கருத்துக்கள்தான்.

ஆறரை மணிக்கு என் உரை. சேலம் தமிழ்ச்சங்கத் தலைவர் சீனி துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார். செயலர் வரத ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரை. செயற்குழு உறுப்பினர் சி. பன்னீர்செல்வம், துணைச்செயலர் எஸ்.டி சங்கரன் அவர்கள் முன்னிலை. கி.ராஜமோகன் அவர்கள் நன்றியுரை சொன்னார்கள்.

c

நான் தமிழிலக்கியத்தின் ஊடும்பாவும் என்னும் தலைப்பில் பேசினேன். தொல்தமிழிலக்கியம் முதல் இன்றுவரை தமிழிலக்கியத்தை ஊடும்பாவுமாக ஓடி உருவாக்கிவரும் அடிப்படையான சில பண்பாட்டுக்கூறுகளை, அவற்றின் இலக்கிய வெளிப்பாடுகளைப் பற்றிப் பேசினேன். ஒன்று, செவ்வியல்கூறு. அது தொகுக்கும்தன்மைகொண்டது. இன்னொன்று நாட்டார்கூறு. அது துளிகளாக விரியும் தன்மைகொண்டது. ஒன்றையொன்று மறுப்பவையும் நிரப்புபவையும் என அவற்றை வரையறைசெய்யலாம்.

உரைமுடிந்ததும் நண்பர்களைச் சந்தித்தேன். பலர் பெங்களூரிலிருந்தெல்லாம்கூட வந்திருந்தார்கள். சேலம் வல்லபி வந்திருந்தார். அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். பத்து இருபதுக்கு எனக்கு ரயில். அறைக்குச் சென்று பையைத் தூக்கிக்கொண்டு காரில் ரயில்நிலையம் சென்றேன்.

a

[வல்லபியுடன்]

ஒரு நாள். இத்தகைய நாட்கள் மின்னல்போலக் கடந்துசென்றுவிடுகின்றன. இத்தகைய ஒரு குறிப்பினூடாக நாம் சில முகங்களை சில தருணங்களை காலத்தில் பதியவைக்கிறோம். மீண்டுமொருமுறை நோக்குகையில் இந்தப்புள்ளிகளால் இந்நாள் ஒளிகொண்டதாக ஆகிறது.

பொதுவாக இத்தகைய கூட்டங்கள் இலக்கியவாதிக்கு ஊக்கமளிப்பவை. அவன் தன் வாசகர்களை, நண்பர்களை நேருக்குநேர் சந்திக்கிறான். அவர்கள் எப்படி வெறியுடன் வாசிக்கிறார்கள் என நேரில் அறிகிறான். அந்த உணர்வு அளிக்கும் நம்பிக்கை சாதாரணமானது அல்ல. ஏனென்றால் இலக்கியச்சூழலில் இருந்து வரும் எதிர்வினைகள் பெரும்பாலும் பொய்யானவை. பலவகையான ஆணவச்சிக்கல்கள் போட்டிமனநிலைகளின் விளைவுகள். வாசகன் என்ற ஒருவன் கண்முன் நின்றிருப்பதே அவற்றை கடந்து செல்வதற்கான வழி

வல்லபியுடன்

[கூட்டத்துக்குப்பின்]

ஆனால் இதற்கு மறுபக்கமும் உள்ளது. ‘மேடைப்பேச்சில் விழுந்துவிட்டவர்கள்’ என சுந்தர ராமசாமி சிலரைச் சுட்டிக்காட்டுவார். அவர் காட்டிய மிகச்சிறந்த உதாரணம் பொன்னீலன். நான் ச.தமிழ்ச்செல்வனைச் சுட்டிக்காட்டுவேன். நாள்தோறும் மேடைப்பேச்சு, மாலைமரியாதைகள், வாழ்த்துரைகள், பாராட்டுகள் என்பது ஒருவகையான ‘நித்யகல்யாண’ நிலை. அதில் பழகிவிட்டால் அது இல்லாத நாள் வெறுமையாக, கைவிடப்பட்டதாக தோன்றும். அந்த போதைக்கு அடிமையாகும் எழுத்தாளன் எழுத்திலிருந்து அயன்மைப்படுவான். ஏனென்றால் இங்கே பேச்சு என்பது இரண்டு நீண்டபயணங்களால் ஆனது. இந்தியச்சூழலில் மிகமிகச் சலிப்பூட்டுவது அது எழுத்துக்குத் தேவையான ஓய்வான உளநிலைக்கு முற்றிலும் எதிரானது

ஆனால் உலகமெங்கும் எழுத்தாளர்கள் வாசகர்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. மேலைநாடுகளில் பதிப்பகங்கலே அதை ஏற்பாடு செய்கின்றன. இந்திய ஆங்கிலச்சூழலிலும் அது நடந்துகொண்டிருக்கிறது. அது ஒருவகையில் படைப்பாளி வாசகனுடனான உறவை உருவாக்கிக்கொள்ள தவிர்க்கமுடியாதது ஆகிறது. அதன் எல்லையை அவனேதான் முடிவுசெய்துகொள்ளவேண்டும், அவ்வளவுதான்.

முந்தைய கட்டுரைசுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்
அடுத்த கட்டுரைசர்கார்- இறுதியில்…