போர் தொடங்கியதுமே அது செல்லும் திசை குறித்த உள்ளுணர்வொன்று உருவாவதை விந்தன் முன்னரே கண்டிருந்தான். முதல்நாள் முரசொலியுடன் கௌரவப் படைகள் எழுந்துசென்று பாண்டவப் படைகளை அறைந்தபோது அன்று அருங்கொலை நிகழப்போகிறது என்று அவன் அகம் படபடப்புடன் உணர்ந்தது. அன்று மற்றவர்கள் போரெனும் உணர்வே அற்றவர்கள்போல, ஒரு திருவிழாவின் தொடக்கமென்பதுபோல நகையாட்டும் களிச்சொற்களும் கூச்சல்களுமாக கிளர்ச்சி கொண்டிருந்தனர். போர் தொடங்கிய இரண்டு நாழிகைக்குள்ளாகவே பீஷ்மர் எதிரணியின் இளவரசர்களை கொன்றுகுவித்து முன்சென்ற செய்திகள் வரவரத்தான் ஒவ்வொருவரும் போரென்றால் என்னவென்ற உணர்வை அடைந்தனர்.
பாரதவர்ஷத்தில் அதுவரை அத்தகைய போர்கள் நிகழ்ந்ததில்லை. நெடுங்காலமாகவே உரிமைப்போர்கள் நாற்களத்திலோ சேவற்களத்திலோ சாவேற்றப்படையினர் பொருதும் களரியிலோ தீர்க்கப்பட்டன. நிலம்கொள் போர்கள் படைகள் எழுந்துவரும்போதே அளவும் விசையும் கணித்து அடியறவும் கப்பமுமாக முடிக்கப்பட்டன. கொலைக்களம் அரிதாகவே நிகழ்ந்தது. ஷத்ரியர்களுக்கும் மலைக்குடிகளுக்குமான போர்களில் அரசர்கள் களமிறங்குதல் வழக்கமில்லை. இளவரசர்களை போருக்கு அழைத்துவந்தவர்கள் அதனூடாக அவர்கள் புகழ்பெறுவார்கள் என்றும் போருக்குப் பின் நிகழும் நிலம்பகுப்பில் இளவரசர்களுக்கு குரலிருக்கும் என்றும் எண்ணினர். அவர்கள் தளிருதிரும் கொடுங்காற்றிலென போரில் களம்படுவார்கள் என்று எண்ணியிருக்கவில்லை. போர்க்களத்தில் அவன் கண்ட ஷத்ரிய முகங்களெல்லாம் அச்சத்தில் வெளுத்து சொல்லிழந்திருந்தன. அன்று மாலை பாடிவீடு திரும்பும்போது பெரும்பாலானவர்கள் தலைதாழ்த்தியிருந்தனர்.
அன்றும் அந்த முதல்நாளின் படபடப்பு அவனுக்கு ஏற்பட்டது. அது ஏன் என அவனுக்கு புரியவில்லை. அவன் கைதூக்கி அனுவிந்தனிடம் “முன்னணிக்கு செல்லவேண்டாம். நமது படைகள் முன்செல்லட்டும். இன்றுடன் நம்வரை இப்போர் முடிகிறது” என்றான். அவன் கையசைவில் எழுந்த சொற்களை அனுவிந்தன் விழி கொள்ளவில்லை. தன் புரவிவீரர்களை முன்னால் செலுத்தி அதற்குப் பின்னால் தேரில் படைமுகம் நோக்கி சென்றான். அவன் உவகையுடன் இருப்பதாகவும் அவன் உடல் உள்ளிருந்து எழும் கொப்பளிப்பால் நிலையழிந்திருப்பதாகவும் தோன்றியது. அவனிடம் மேலும் ஏதோ சொல்ல விந்தன் எண்ணினான். ஆனால் அவன் மேலும் அப்பால் சென்றுவிட்டிருந்தான். முழவொலியினூடாகவே இனிமேல் சொல்லாட முடியும்.
காதுவரை நாண் இழுத்து அம்புகளை செலுத்தியபடி விந்தன் படைமுகம் நோக்கி சென்றான். பல்லாயிரக்கணக்கான நாகங்கள் முத்தமிட்டு முத்தமிட்டு பின்னிப்பிணைந்து காதல்கொள்வதுபோல என்று ஓர் உளச்சித்திரம் உருவானது. இப்பரப்பு ஏன் நீர்போலிருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் ஏற்படும் ஐயம் எழுந்தது. மிகப் பெரியவை நீரென்றே நிலைகொள்ளவியலும் போலும். மலைமேல் நின்றிருக்கையில் சூழ விரியும் நிலமும் நீர்வெளியென்றே அலைகொள்கிறது. உயிர்களின் பெருவெளி. ஒவ்வொன்றும் பிறிதை கொல்லும் பொருட்டு வெறிகொண்டிருக்கிறது. இப்பொதுநோக்கில் தெரியும் இது கொள்ளும் இந்தக் கொந்தளிப்பு தன்னை தான் கொன்றுகொள்வதற்கு.
ஒருகணம் எதுவோ தோன்ற அவன் விழிதிருப்பிப் பார்த்தபோது விண்ணிலிருந்து பருந்துபோல் இறங்கிய நீள்அம்பொன்று அனுவிந்தனின் நெஞ்சில் பாய்ந்து கவசங்களை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மறுபுறம் முதுகில் நீண்டு அவனை தேர்த்தட்டுடன் அறைந்து நிறுத்துவதை கண்டான். கையிலிருந்து வில் கீழே விழ “இளையோனே!” என்று கதறினான். தன்னையறியாமலேயே தேரிலிருந்து இறங்கிவிட முயன்றான். தேர்ப்பாகன் “துயர் காட்டும் இடமல்ல இது, அரசே! அத்துயர் எஞ்சிய படைவீரர்களையும் உளம்தளரச் செய்து களத்தில் கொன்றழிக்கும்!” என்றான். “ஆம்” என தன்னை நிலைமீட்டு “செல்க!” என்றபின் முழந்தாளிட்டு தன் வில்லை எடுத்துக்கொண்டு தலைகுனிந்து தேர்த்தட்டிலேயே அமர்ந்திருந்தான்.
“இத்தனை எளிதா? இத்தனை பொருளற்றதா?” என்று அவன் உள்ளம் அரற்றிக்கொண்டிருந்தது. அனுவிந்தன் வீழ்ந்ததை அறிவிக்கும் முழவோசை எழுந்தது. அவந்தியின் வீரர்கள் தங்கள் படைக்கலங்களை தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்! அவந்தியின் அரசருக்கு விண்ணுலகு! அனுவிந்தருக்கு விண்ணுலகு! மாவீரருக்கு விண்ணுலகு! களம்பட்டவருக்கு விண்ணுலகு!” என்று கூவினர். விந்தன் திரும்பி இரு கைகளையும் வீசி “செல்க! நம் அரசரின் குருதிக்கு ஆயிரம் மடங்கு குருதி கொண்டு திரும்புவோம்! செல்க!” என்று கூவினான். தன் தொடையில் ஓங்கி அறைந்து “எழுக! குருதி கொண்டு மீள்க! வெல்க!” என்று கூவியபடி தேரை முன் செலுத்தினான். அவந்தியின் படைகள் இணைந்து கூர்வடிவு கொண்டு அலையாகி சென்று பாண்டவப் படைகளை மோதின.
அங்கிருந்து அர்ஜுனன் வில்சூடி தேரிலெழுந்தான். அவன் தோற்றத்தை தொலைவிலிருந்து நோக்கியதுமே ஒரு கணம் அவன் உள்ளம் நடுங்கியது. அனுவிந்தனை வீழ்த்திய அம்பு அவனுடையதுதான் என்பதை அவன் உணர்ந்தான். “செல்க! இளைய பாண்டவனை எதிர்கொள்க!” என்று தன் பாகனுக்கு ஆணையிட்டான். பாகன் ஒருகணம் தயங்கி “நாம் தனித்து நின்றிருக்க நேரும்!” என்றான். “செல்க!” என அவன் கூவினான். அவனுடைய தேர் பிற தேர்களை ஒதுக்கி அர்ஜுனனை நோக்கி சென்றது.
அதே பொழுதில் இருபுறத்திலிருந்தும் திரிகர்த்த நாட்டு அரசன் ஷேமங்கரனும் புளிந்த நாட்டு அரசன் சுகுமாரனும் அர்ஜுனனை எதிர்கொள்ள வந்தனர். “இணைந்து அம்புதொடுங்கள். இருபுறத்து அம்புகளும் ஒற்றைக்கணத்தில் சென்று தொடவேண்டும். அவனால் பகுக்கமுடியாத கணமென்று அது அமையவேண்டும். இவ்விழிமகன் நம் அம்புபட்டுத் தோற்று திரும்பவேண்டும். இன்றே இவன் ஆணவம் அழியவேண்டும்! இணைந்து நில்லுங்கள்!” என்றபடி அர்ஜுனனை நோக்கி அம்புகளை எய்துகொண்டே முன்னகர்ந்தான். தார்விக நாட்டரசன் சசாங்கனும் திரிகர்த்தத்தின் மூத்த அரசர் சத்யரதரும் களத்தில் வந்தார்கள். அவர்களின் முகங்களில் தெரிந்த திகைப்பைக் கண்டதும்தான் என்ன நிகழ்கிறதென விந்தன் புரிந்துகொண்டான். அவர்கள் அங்கே நேர்முன்னால் என அர்ஜுனனை எதிர்பார்க்கவில்லை. எதிர்கொண்டபின் உடனே களமொழியவும் விரும்பவில்லை.
அர்ஜுனன் முகம் கனவிலிருப்பதுபோல் இருந்தது. அதே கனவில் பிறிதொரு இடத்திலிருப்பதுபோல் இருந்தது அத்தேரை ஓட்டிய இளைய யாதவரின் முகம். இங்கு செத்துக்குவிபவர்களைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கவேயில்லை என்று தோன்றியது. அம்புகளைத் தொடுத்தபடி விந்தன் மேலும் மேலும் அணுகிச்சென்றான். அவன் எய்த அம்புகளை அர்ஜுனனின் அணுக்கப்படையினரின் அம்புகளே தடுத்து தெறிக்கச் செய்தன. வெறிகொண்டு கூவியபடி அவன் தொடுத்த நூறு அம்புகளில் ஒன்றே அர்ஜுனனின் தேர்த்தூணில் அறைந்து உதிர்ந்தது. அக்கணம் விந்தனின் தோளில் அம்பொன்று தைத்து தேர்த்தட்டில் முழங்கால் மடித்து விழுந்தான். அம்புகள் வந்து அவனைச் சூழ்ந்து தேர்த்தட்டில் பதிந்தன. அவன் கவசங்களின் மேல் பட்டு உதிர்ந்தன. முதுகுக்கவசத்தை உடைத்து ஒன்று உதிர்ந்தது.
“புரண்டு பின்னால் வருக! அரசே புரள்க!” என்று ஆவக்காவலன் கூவினான். அவன் உருண்டு பின்னடைய ஆவக்காவலன் எழுந்து அவனை அள்ளி பின்னாலிழுத்தான். இரும்புக்கேடயத்தால் அவனை மறைத்துக்கொண்டு அந்த அம்பைப் பிழுது அப்பால் எறிந்து அரக்குநனைத்த மரவுரியால் கட்டிட்டான். பாகன் தேரை பின்னாலிழுத்துச் செல்ல அர்ஜுனன் முன் செல்லும் வீரர்கள் அலறியபடி விழும் கூச்சல் கேட்டது. விந்தன் மீண்டும் கவசமணிந்து எழுந்தபோது அவன் தேருக்கு முன்னால் தார்விக நாட்டரசன் சசாங்கனும் திரிகர்த்தத்தின் மூதரசர் சத்யரதரும் தலையறுபட்டு தேர்த்தட்டில் கிடப்பதை கண்டான். அவர்களின் தேர்ப்பாகர்கள் உதிர்ந்திருந்தனர். அவர்களின் கவிழ்ந்த தேர்களே அவன் தேருக்கு மறைவாக அமைந்திருந்தன.
“செல்க! போர்முகப்புக்கு!” என்று அவன் பாகனிடம் சொன்னான். “அரசே, இனி திரும்புதலே நன்று. இளைய பாண்டவரை எதிர்கொள்ள நம்மால் இயலாது. நின்றுவிட்டீர்கள், புண்பட்டு மீண்டீர்கள். எவ்வகையிலும் தாழ்வில்லை” என்றான் பாகன். “எதிர்கொள்வோம்! இன்று அவன் கையால் இறக்கிறேன்! செல்க!” என்று அவன் கூவி காலால் தேர்த்தட்டை அறைந்தான். பாகன் “ஆம்” என்று தேரை முன்னெடுத்துச் சென்றான். “இழிமகனே… இன்று என் வஞ்சத்தை உனக்கு தெரிவிக்காமல் செல்வதில்லை!” என்று கூவியபடி அர்ஜுனனை நோக்கி அம்புகளை எய்துகொண்டே அவன் முன்சென்று நின்றான் விந்தன். “கொல் என்னை! கீழ்மகனே, கொல் என்னை!” என்று வெறியுடன் அம்புகளை செலுத்தினான்.
அவனுக்குச் சுற்றும் அம்புகள் தெறித்து வந்து தேர்த்தூண்களிலும் தேர்த்தட்டிலும் பதிந்து நின்று அதிர்ந்தன. பிறையம்பால் தேர்முகடு உடைந்து தெறித்தது. இன்னும் சிறுபொழுது. என் வாழ்வின் தருணமே இதுவென்றிருக்கலாம். இந்தச் சில கணங்களின் பொருட்டே நான் நினைவுகூரப்படலாம். இவ்வளவுதான் அப்பொழுதிடை. இதை அம்புகளாக எண்ணிவிட முடியும். எண்ணங்களாக அளந்துவிட முடியாது. எண்ணங்கள் காலத்தால் அளக்க இயலாதவை. என்ன செய்துகொண்டிருக்கிறேன்? இங்கு இத்தருணத்தில் என் இதுவரையிலான விழைவுகளும் வஞ்சங்களும் கனவுகளும் முற்றிலும் பொருளிழந்துவிட்டதை உணர்கிறேன். இக்கணத்தில் அம்பெடுத்து விடுவதும் வரும் அம்புக்கு உடல் ஒழிவதும் தவிர எதுவுமே பொருளுடையதாக இல்லை.
இறப்பு காவியத்தலைவனை உருவாக்குகிறது என்கின்றன இலக்கணங்கள். பல தருணங்களில் அது அனைத்துப் பொருளையும் முற்றழித்துவிடுகிறது. தேனீக்கூட்டில் புகுந்த கருவண்டென சொற்களனைத்தையும் சிதறடித்துவிடுகிறது. அர்ஜுனனின் தேரில் ஏழு இடங்களில் அம்புகளால் அறைய அவனால் இயன்றது. எவரேனும் வருவார்களெனில் இன்னும் சில அம்புகளுக்கு உயிரோடிருப்பேன். எவரும் துணைவரவில்லையெனில் இக்களத்தில் வீழ்வேன். விண்ணுலகில் நின்று என் இளையோன் பதைக்கும் விழிகளுடன் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறான்.
எத்தனை நன்று அவனுடன் இத்தனை பிந்தியாவது உளம் கோத்துக்கொண்டது! அவ்வஞ்சத்துடன், ஐயங்களுடன், அச்சங்களுடன் இங்கு வந்து நின்றிருந்தேன் எனில் இத்தருணத்தில் நான் உணர்வதென்ன? என் வாழ்நாளில் இனிதென்றும், பொருளுடையதென்றும் நான் உணர்ந்தது அனுவிந்தனுடன் உளம் கோத்து வாழ்ந்த இறுதிச் சில ஆண்டுகள் மட்டுமே. இறுதி… ஆம், வேறென்ன! இக்களத்திலிருந்து நான் உயிருடன் மீள இயலாது. மீண்டால் வெற்றுடலாக, நிலையழிந்த ஊன்தடியாகவே எஞ்சவேண்டியிருக்கும். அனைத்து நெறிகளின்படியும் இக்களத்தில் நானும் வீழ்வதே முறை.
மேலும் மேலும் அம்புகளைத் தொடுத்தபடி அவன் அர்ஜுனனின் அம்பு வளையத்துக்குள் சென்றான். அவந்தியின் தேர் வீரர்கள் அனைவருமே கழுத்தறுபட்டு களத்தில் விழுந்து கிடந்தார்கள். நெஞ்சில் அறையப்பட்ட நீளம்புடன் அவனுக்கருகே தேரில் கிடந்த வில்லவன் வாயில் குருதிக்குமிழி கொப்பளிக்க உடல் இழுபட்டுக்கொண்டிருந்தான். வில்லவர் வீழ்ந்த தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி வழி தடுத்தன. அதுவே அர்ஜுனன் அவந்தியின் படைகளுக்குள் ஊடுருவுவதற்கும் தடையாக இருந்தது. “முன்செல்க! இவ்விடைவெளியினூடக முன்செல்க!” என்றான் விந்தன். “அரசே, இந்த தேர்களே நமக்கு காப்பு” என்றான் பாகன். “செல்க! செல்க!” என்று கூவினான் விந்தன்.
பாகன் இரு தேர்களின் இடைவெளியினூடாக தேரைச் செலுத்தி அர்ஜுனனை நோக்கி சென்றான். அர்ஜுனனை அவனுடைய ஏழு அம்புகள் சென்றடைந்தன. பின்னணியில் சகுனியின் முரசுகள் முழங்கின. “அர்ஜுனனை எதிர்கொள்க! ஷத்ரிய வீரர்கள் முன் வருக!” ஒருகணத்தில் அவன் விழிகள் திரும்பி விந்தனின் விழிகளை நோக்கின. விந்தனின் உடல் சிலிர்த்து காலம் அழிந்தது. இறப்பின் கணம்போலும் அது என அது கடந்த பின் உணர்ந்தான். வலப்புறத்திலிருந்து சங்கொலி எழுப்பியபடி ஜயத்ரதன் களத்திற்குள் புகுந்தான். அதே தருணத்தில் இடப்புறத்திலிருந்து அஸ்வத்தாமனும் அர்ஜுனன் முன் வந்தான். இருவரின் அம்புகளையும் அர்ஜுனன் எதிர்கொள்ள அதுநாள் வரை அக்களத்தில் இடைவிட்டு இடைவிட்டு நடந்துகொண்டிருந்த அப்போர் மீண்டும் தொடங்கியது. விந்தன் அவர்களின் வட்டத்திலிருந்து மெல்ல பின்னடைந்தான்.
எத்தனை முறை இவர்கள் தங்கள் அம்புகளின் ஆற்றலை நோக்கியபடி முற்றிலும் நிகர்நிலையில் நின்று இப்படி போரிட்டிருப்பார்கள் என்று விந்தன் வியந்தான். பாகன் அவன் எண்ணத்தை உணர்ந்தவன்போல் தேரை திருப்ப “வேண்டாம்!” என்றான். “இங்கே நில்… களத்திலேயே நில்!” பாகன் “அரசே!” என்றான். “இறப்பில்லாத வெறும்வெளியில் என்னால் நின்றிருக்கவியலாது!” என்றான் விந்தன். வெறிகொண்டவன்போல கூவி நகைத்து “எட்டு பக்கமும் கொல்ல வரும் அம்புகள் வேண்டும்… இல்லையேல் பித்தனாகிவிடுவேன்!” என்றான். பாகன் இரு கவிழ்ந்த தேர்களுக்குப் பின்னால் தேரை கொண்டுசென்றான்.
தேரில் நின்றபடி அவன் அர்ஜுனனை அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் எதிர்த்து நின்றதை மலைத்த விழிகளுடன் பார்த்தான். அம்புக்கு அம்பு நிற்கும் போர். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் உணரும் உச்ச தருணங்களை மட்டுமே தொடுத்து உருவாகிய காலம் என அத்தருணம். அவர்களின் போரை நோக்கிக்கொண்டிருந்தபோது அவன் ஒன்று உணர்ந்தான். அது வேறு விற்கலை. அவனும் பிற ஷத்ரியர்களும் இளமை முதலே கற்று கைகொள்வது வில்லெனும் தொழில். அங்கு நிகழ்ந்தது வில்லெனும் கலை. ஒரு துளியும் எஞ்சாது ஒரு துளியும் குறையா ஒத்திசைவே கலை. ஒருவரும் இறக்கவில்லையென்றால், ஓர் அம்பும் இலக்கடையவில்லை என்றால், போர் முற்றிலும் பொருளிழந்து கேலிக்குரியதாகிவிடும். அந்நிலையில் கலையோ மேலும் எழில் கொள்கிறது. அதன் உச்சமே அதுதான் என்பதுபோல.
அம்மூவர் உடலையும் எந்த அம்பும் சென்றடையவில்லை. ஒவ்வொரு அம்பையும் இணையான பிறிதொரு அம்பு விண்ணில் தெறித்து சிதறடித்தது. அவர்கள் வாழும் உலகம் வேறு. கந்தர்வர்களும் மானுடரும் ஒரே உலகில் ஒருவரை ஒருவர் அறியாதவர்களாக வாழ்கிறார்கள் என்று இளமையில் அவன் கேட்டிருந்தான். மணமும் ஒளியும் ஒரே காற்றில் திகழ்வதுபோல். அவர்கள் தங்களில் ஒருவரையே நோக்குகிறார்கள். பிறரை அறிவதே இல்லை. சிற்றுயிர்களை அரைத்து அழித்தபடி யானை நடந்து செல்வதைப்போல.
இங்கு கொல்லப்பட்டவர்களை விண்ணில் இவர்கள் சந்தித்தால் முகம் அறிந்திருக்கமாட்டார்கள். அவர்கள் இறந்து மீளும் அந்த விண் பிறிதொன்றாக இருக்கலாம். இவர்கள் செல்லும் விண்ணுலகல்ல அது. இவர்களின் உலகில் ராகவராமனும் கார்த்தவீரியனும் ராவண மகாபிரபுவும் விருத்திரனும் இருப்பார்கள். இந்திரனும் சூரியனும் அரியணை அமர்ந்திருப்பார்கள். இரு வேறு உலகங்களைப் படைத்து ஒன்று பிறிதிற்கு பலியென்று அமைத்து இவ்வுலகை யாத்திருக்கின்றன தெய்வங்கள்.
தேர் மிகவும் பின்னணிக்கு வந்துவிட்டிருந்தது. அவன் தேரை அணுகிய கூர்ஜர மன்னன் சக்ரதனுஸ் “ஷத்ரியர் நால்வர் கொல்லப்பட்டுவிட்டனர்” என்றான். “நால்வரா?” என்றான் விந்தன். “திரிகர்த்தன் ஷேமங்கரனும் புளிந்தன் சுகுமாரனும் கொல்லப்பட்டுவிட்டனர்!” அவன் பதற்றத்துடன் திரும்பி தன்னைச் சூழ்ந்திருந்த படைகளை நோக்கிவிட்டு “ஆயினும் இதுவரை ஷத்ரிய அரசர்கள் குறைவாகவே கொல்லப்பட்டிருக்கிறார்கள்!” என்றான். அதன் பொருள் புரியாத கூர்ஜர மன்னன் “ஆயினும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். படைமுகப்பிற்கு செல்லாமல் ஒழியவேண்டும். இன்று நாமனைவருமே எஞ்சி தார்த்தராஷ்டிரர்களிடம் பேசவேண்டியிருக்கிறது” என்றான்.
பொருளற்றதொரு சீற்றம் எழ “படைமுகம் செல்லாமல் போருக்கு வந்து நின்றிருப்பதைப்போன்ற இழிவு பிறிதொன்றில்லை. அவந்தியின் அரசர்களின் இயல்பு அதுவல்ல!” என்றான் விந்தன். கூர்ஜர சக்ரதனுஸ் திகைத்து “ஆம், செல்லவேண்டும். செல்லக்கூடாதென்றில்லை. அங்கே மறுபுறம் எளிய கிராதரும் நிஷாதரும் வந்து நின்றிருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்வோம். அர்ஜுனனையும் பீமனையும் திருஷ்டத்யும்னனையும் சாத்யகியையும் எதிர்கொள்வது நாம் இறப்பை நோக்கி செல்வதுதான்” என்றான். “நான் இறப்பதற்கே வந்திருக்கிறேன், இறப்பதற்கே செல்கிறேன்!” என்று கூவிய விந்தன் “தேரைச் செலுத்து… படைமுகப்பு நோக்கி செலுத்து!” என்று பாகனிடம் கூவினான்.
தேர் மீண்டும் படைமுகப்பு நோக்கி சென்றது. விந்தன் தேர்த்தட்டில் எழுந்து நின்று சூழ நோக்கினான். எதிர்முனையில் துருபதரும் அவர் மைந்தர்களும் பூரிசிரவஸுடன் போரிட்டுகொண்டிருந்தனர். சிகண்டியை துரோணர் எதிர்த்துப் போரிட்டார். மிக அப்பால் துரியோதனனும் தம்பியரும் கடோத்கஜனை எதிர்ப்பதை முரசுகள் அறிவித்தன. சக்ரதனுஸ் “நமது படைகள் அர்ஜுனனை நோக்கி செல்லட்டும். அவரை சூழ்ந்துகொள்ளட்டும். நாம் சென்று பாஞ்சாலனை தனிமைப்படுத்தி வெல்வோம்” என்றான். “ஆம், பாஞ்சாலனை வெல்வோம்!” என்று அவனுக்கு அப்பால் நின்ற சைப்யநாட்டு கோவாசனர் கூவினார். அபிசார மன்னர் சுபத்ரரும் அரேவாக மன்னர் சிம்மவக்த்ரரும் அவர்களுடன் எழுந்துசென்றனர்.
அவர்கள் போர்க்கூச்சலிட்டபடி செல்வதைக் கண்டு இகழ்ச்சியுடன் துப்பிய விந்தன் “இழிமக்கள். களத்திலும் நடிப்பவர்கள்!” என்றான். “செல்க… பாண்டவ மைந்தரின் முன்னால் சென்று தேரை நிறுத்துக!” என்றான். மறுசொல்லின்றி தேர்ப்பாகன் அவன் தேரை அர்ஜுனன் அஸ்வத்தாமனையும் ஜயத்ரதனையும் எதிர்த்துக்கொண்டிருந்த முனைக்கு கொண்டுசென்றான். அம்புகள் உரசி செம்பொறிகள் நிறைந்திருந்த காற்றினூடாக தலையைத் தாழ்த்தி ஊடுருவிச்சென்று வில்லை எடுத்து அம்புகளை தொடுத்தான். “இதோ… இந்தக் களம்தான். இந்த மண்ணில்தான்” என உள்ளூர கூவிக்கொண்டான்.
அவன் அம்புகள் எதையும் அவர்கள் மூவரும் அறியவில்லை. அர்ஜுனனின் அணுக்கவில்லவன் ஒருவனை விந்தன் வீழ்த்தினான். இன்னொருவனின் அம்பு வந்து அவன் தோள்கவசத்தை உடைத்தது. அவன் என்னை நோக்கவேண்டும். அந்த விழிகள்! அவை மானுடர்க்குரியவை அல்ல. பல்லாயிரமாண்டுகள் குருதிபலி கொண்டு பழகிய தெய்வம் பசிகொண்டெழுந்து நோக்கும் சீற்றம். மேலும் மேலுமென அவன் அம்புவட்டத்திற்குள் நுழைந்தான். அக்கணம் என்ன நிகழ்ந்ததென்றறியாமல் அப்போர் முடிந்தது. அஸ்வத்தாமனும் ஜயத்ரதனும் இரு பக்கங்களிலாக விலகியகல அர்ஜுனன் தன் பின்னணிப்படைக்குள் புதைந்து மறைந்தான். அவன் களத்தில் திகைத்து நின்று சூழ நோக்க அவனை சூழ்ந்துகொண்டது விராடர்களின் படை.
அம்புகளை தவிர்க்கும்பொருட்டு அம்புகளைத் தொடுத்தபடி அவன் பின்னடைந்தான். அஸ்வத்தாமன் அப்பால் சாத்யகியுடன் போரிலீடுபடுவதை முழவுகள் கூறின. ஜயத்ரதனும் திருஷ்டத்யும்னனும் வில்லிணை நிற்பதை அறிந்தான். அர்ஜுனன் எங்கே என அவன் செவிகள் துழாவின. மிக அப்பால் அர்ஜுனன் எழுந்ததை கூறின முழவுகள். “அங்கு செல்க… அங்கு செல்க… “ என்று அவன் கூவினான். அவன் சொல்வது புரியாமல் “அரசே!” என்றான் பாகன். “செல்க… அங்கே செல்க… இளைய பாண்டவரை தொடர்ந்து செல்க!” என்று அவன் கூவினான். “நான் துரத்திச் செல்கிறேன்! ஆம், நான் அவரை துரத்திச் செல்கிறேன். அதை முழவுகள் நமது படைகளுக்கு அறிவிக்கட்டும்!”
முழவுகள் முழங்கிக்கொண்டே இருந்தன. கௌரவப் படையின் முகப்பிலிருந்த கொப்பளிப்பே ஒரு பெரிய சுவரென்றாகி அப்பாலும் இப்பாலுமிருந்தவர்களை தடுத்தது. அங்கிருந்து எழுந்துகொண்டிருந்த கூச்சல்களே அர்ஜுனன் அங்கிருப்பதை காட்டியது. அவனுடைய தேர் அங்கே செல்வதற்குள்ளாகவே அர்ஜுனன் அங்கிருந்து தன் படைகளுக்கிடையே மூழ்கி மறைந்தான். கௌரவப் படை முழவொலிகளும் கொம்பொலிகளுமாக பின்னடைந்து குழம்பியது. ஆழத்தில் மடைத்திறப்பு இருக்கையில் மேலே தோன்றும் சுழி போலிருந்தது. அவன் அணுகியபோது காவலன் ஒருவன் “சாரஸ்வதரான உலூகரும் சால்வநாட்டு த்யுமந்தசேனரும் கொல்லப்பட்டார்கள்!” என்று கூவினான். தேரில் வந்த ஒருவன் “ஆஃபிரநாட்டின் உக்ரதர்சனர் களம்பட்டார்!” என்றான்.
அப்பால் அலறல்களுடன் முழவுகளும் கொம்புகளும் எழுந்தன. “அர்ஜுனர் அங்கே தோன்றியிருக்கிறார்… சுறா நீர் கிழித்தெழுந்து வருவதுபோல் வருகிறார்” என்று படைத்தலைவன் ஒருவன் கூவினான். “அங்கே செல்க! அங்கே செல்க!” என்று விந்தன் தேர்ப்பாகனிடம் ஆணையிட்டான். “அரசே, நாம் பக்கவாட்டில் நகரவியலாது… நமக்கு பொழுதிடையில்லை” என்றான் பாகன். “அவர் எப்படி செல்கிறார்? அதைப்போல செல்க…” என்று விந்தன் ஆணையிட்டான். அஞ்சிக்குழம்பி முட்டிக்கொந்தளித்த கௌரவப் படை அவர்களின் தேரை அலைக்கழியச் செய்தது. பாகன் சவுக்கால் புரவிகளை அறைந்துகொண்டே இருந்தான்.
வடக்கே கொம்புகள் அலறின. முழவுகள் பதற்றம் கொண்ட யானைகள்போல் ஓசையிட்டன. “அங்கே எழுந்திருக்கிறார்!” என்று ஒருவன் கூவினான். அவனருகே தேரில் விரைந்த விதேகநாட்டு நிமி “ஷத்ரியர்களை தேடித்தேடி கொல்கிறான். நம் திட்டம் அவனுக்கு தெரிந்திருக்கிறது” என்றார். “சௌராஷ்டிர ருஷார்திகரும் ஐந்து மைந்தர்களும் களம்பட்டனர்!” என்று அப்பால் ஒருவன் கூவினான். “செல்க! விரைந்து செல்க!” என்று விந்தன் பாகனை விசைகூட்ட நிமி “நாம் பின்னடைய வேண்டியதுதான்… பின்னடைவதொன்றே வழி!” என்றார். அவருடைய தேர் பின்னால் செல்ல விந்தனின் தேர் முன்னெழுந்தது.
கோசலமன்னன் பிருஹத்பலனை வழியில் விந்தன் கண்டான். “ஷத்ரிய அரசர்கள் பின்னடைக… ஒருங்குதிரண்டு பின்னடைக!” என அவன் ஆணையிட்டுக்கொண்டிருந்தான். “மாகிஷ்மதியின் நீலரும் எட்டு மைந்தரும் கொல்லப்பட்டனர்” என்று முழவுகள் கூவின. விந்தன் அர்ஜுனனால் கலங்கி சுழித்துக்கொண்டிருந்த போர்முகப்புக்கு செல்வதற்குள் அவன் மீண்டும் மறைந்திருந்தான். “தெய்வங்களே! என்னை வைத்து விளையாடுகிறீர்கள் போலும்!” என்று அவன் தேரில் ஓங்கி உதைத்து கண்ணீருடன் கூச்சலிட்டான். “செல்க… அவரை பின்தொடர்க!” என்று பாகனின் தோளை மிதித்து ஆணையிட்டான்.
பின்னணியில் சகுனியின் ஆணை ஒலித்துக்கொண்டிருந்தது. “பிதாமகர் பீஷ்மர்! பிதாமகர் பீஷ்மர் அர்ஜுனனை தடைசெய்க! அர்ஜுனனை சூழ்ந்துகொள்ளட்டும் பிதாமகர்! ஷத்ரியர்கள் அவருக்கு பின்களமென அமைக!” அவனுடைய தேர் பின்னகர்ந்தபோது பீஷ்மரின் தேர் கொடிபறக்க பருந்துபோல் அணுகுவதை கண்டான். அதன் தட்டில் வில்லுடன் நின்ற பிதாமகர் கைகளை வீசி “என்னை தொடர்க! அர்ஜுனனைச் சூழ்ந்துகொள்ள வருக!” என ஆணையிட்டு அவனை கடந்துசென்றார். ஆனால் அவனை நோக்கி தேரில் வந்த பிருஹத்பலன் “ஷத்ரியகுலமே முற்றழிந்துகொண்டிருக்கிறது. இது இரு சாராரும் சேர்ந்து செய்யும் வஞ்சம்… நம்மை திட்டமிட்டு அழிக்கிறார்கள். பின்னடைவோம். நமது போர் முடிகிறது இதோ” என்று கூவினான்.
விந்தன் “பிதாமகரைத் தொடரும்படி ஆணை… அவர் அர்ஜுனனை வெல்லும்பொருட்டு செல்கிறார்!” என்றான். “அது அவர்களின் போர். நாம் இனியும் உயிர்கொடுக்க வேண்டியதில்லை” என்று பிருஹத்பலன் சொன்னான். “திரும்புக! ஷத்ரியர்கள் திரும்புக!” என கைவீசி ஆணையிட்டான். அவ்வோசை முழவுகளாக எழ வங்கத்தின் சமுத்ரசேனரும் சந்திரசேனரும் கேகயமன்னன் திருஷ்டகேதுவும் மாளவமன்னர் இந்திரசேனரும் தங்கள் தேர்களை திருப்பும்படி ஆணையிட்டார்கள்.
முன்னால் சென்ற பீஷ்மர் திரும்பி நோக்கியபோது தன் பின்படை ஒழிந்து கிடப்பதையும் ஷத்ரியர் பின்வாங்குவதையும் கண்டார். சீற்றத்துடன் வில்லை அவர்களுக்கு எதிராகத் தூக்கி அம்பெடுத்தார். பிருஹத்பலன் வில்லை கைவிட்டுவிட்டு தேர்த்தட்டில் கைதூக்கி நின்றான். பீஷ்மர் இழிசொல்லுடன் துப்பிவிட்டு தேரைத் திருப்பி அர்ஜுனனை துரத்திச்செல்லும்படி ஆணையிட்டார். அவருடைய தேர் மறைந்ததும் இந்திரசேனர் “செல்க… பின்னணிக்கு செல்க!” என ஆணையிட்டார். அவர்களின் தேர்கள் பின்னணிக்கு திரும்ப விந்தன் திகைத்து நின்றான். பின்னர் “பிதாமகரை தொடர்க!” என்று தன் பாகனுக்கு ஆணையிட்டான். ஆனால் அதற்குள் பூரிசிரவஸின் பால்ஹிகப் படையின் வில்லவர்கள் பீஷ்மருக்கு பின்காப்பென்றாகி அவரை முற்றாக மறைத்தனர்.
விந்தன் தன் தேரில் தளர்ந்தவனாக நின்றான். அவன் உள்ளம் வீண் சொற்களாக இருந்தது. “பின் திரும்புக” என பாகனுக்கு ஆணையிட்டான். “அரசே!” என்றான் பாகன். “பின்னணிக்கு செல்க… ஷத்ரிய அரசர்களுடன் சேர்ந்துகொள்க!” என்றான். அவனுடைய தேர் திரும்பியபோது இன்னொரு தேரில் முட்டி நின்றது. அக்கணம் விண்ணிலிருந்து செங்குத்தாக இறங்கிய நீளம்பு ஒன்று அவன் கழுத்தில் தைத்து மறுபக்கம் சென்று நின்றது. மூச்சு அறுபட்டு உடல் துள்ள அவன் தேர்த்தட்டில் விழுந்தான்.