சர்க்கார் அரசியல்

சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கைநிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது

சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ?” என்ற அடுத்த சந்தேகம். உடனே  “ரொம்ப புதிசா இருக்கோ? புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம்.  ஒரு நான்கு வெண்முரசு அளவுக்கு கதை விவாதிக்கப்பட்டிருக்கும். எங்கோ ஓரிடத்தில் இதிலுள்ள வேடிக்கையை நான் ரசிப்பதனால்தான் ஈடுபடவே முடிந்தது.

வணிகசினிமா என சாதாரணமாகச் சொல்கிறோம். அது லட்சக்கணக்கானவர்களின் ரசனைக்கும் நமக்கும் நடுவே ஒரு சமரசப்புள்ளியைக் கண்டடைவதுதான். அவர்களுக்குப் பிடித்ததைக் கொடுக்கவேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பதைக் கொடுக்கவேண்டும். ஆகவே எதுவும் பெரிதாகப் புதுமைசெய்ய முடியாது. ஆனால் கண்டிப்பாக கொஞ்சம் புதிதாகவும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ’அதேகதைதாண்டா மாப்ள’ என்று கடந்துசென்றுவிடுவார்கள்.  சினிமாக்களில் வரக்கூடியதாக இருக்கவேண்டும் ஆனால் முன்னர் அதேபோல வந்திருக்கவும்கூடாது. முழுக்கமுழுக்க ஒரு கதைத்தொழில்நுட்பம் அது. இந்த கம்பிமேல் நடையால்தான் இந்த அவஸ்தை

தொடங்கும்போது வெறும் ஒரு மெல்லிய ஒற்றைவரிதான் கையிருப்பு. ’சிவாஜிகணேசன் ஓட்டையே கள்ள ஓட்டு போட்டுட்டாங்கசார். அதான் நம்ம கதை!” .உண்மை என்னவென்றால் விவாதம் ஆரம்பித்த நான்காம் நாள் வரைக்கும்கூட  இந்த ஒரே வரிதான் கதை. ‘ஹீரொ வோட்ட கள்ளவோட்டா போட்டுடறாங்க சார்… அப்றம்? டேய் டீ சொல்ரா”. இது நகருமா ஊருக்கே போய்விடுவோமா என்ற நிலையில்தான் அடுத்த களநகர்வு ‘சார் நம்ம ஹீரோ ஒரு கார்ப்பரேட் சிஇஓ” .உடனே அது விஜய்க்கு சரியாகுமா என்ற விவாதம். அதன்பிறகுதான் படத்தின் முதல்காட்சியே. ‘புடிச்சிட்டோம் சார்… இப்டியே மொள்ளமா போயிடலாம்… டேய் டீ சொல்ரா!”

அந்த ஒருவரி கதை படம் ஆரம்பித்த நான்காம்நிமிடத்தில் வந்துவிடுகிறது. டிரெயிலரிலேயே வந்தும்விட்டது. எஞ்சியதெல்லாம் ‘சரி, இப்டீன்னா நம்மாள் என்னபண்ணுவார்?” என்று கோத்துக்கோத்து முடையப்பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் பலவடிவங்கள் யோசிக்கப்பட்டன. முருகதாஸே ஒன்றைச் சொல்லி எல்லாரும் ஆகா என்று சொல்லி மறுநாள் அவரே வந்து சரியாவராது என்று நிராகரிப்பார். ஒரு விஷயம் ‘ஒக்காரலை’ என்றால் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே.  ‘சார் நம்ம ஹீரோ ஓட்ட கள்ளவோட்டா போட்டிருரானுக…அப்றம்…?” மொத்தத் திரைக்கதையின் நான்கு வெவ்வேறுவடிவங்கள் இப்போதும் என் கைவசம் உள்ளன. சொல்லப்போனால் இன்னும் ஒரு சினிமாவை வசதியாக கைவசம் உள்ள காட்சிகளில் இருந்து எடுக்கலாம்.

அப்படியிருந்தும் இந்த விவாதம் ஏன்? சமகாலத்திலிருந்து செய்திகள், அரசியல்நிகழ்வுகள் வழியாக கருக்களை எடுப்பது முதல்காரணம். நமக்கு சமகாலநிகழ்வுகளே கைப்பிடி அளவுக்குத்தான். தமிழ்சினிமாவின் கதாநாயகன், கதாநாயகி, வில்லன்கள், சமூகப்பிரச்சினை, அடிதடித்தீர்வு என்ற ‘டெம்ப்ளேட்’ பெரும்பாலும் மாறாதது என்பது இரண்டாவது காரணம்.  அந்தச்சின்ன கருவை இந்த சட்டகத்துக்குள் சரியாக அடக்குவதுதான் இங்கே கதை என்பது.

மற்றபடி இதில் ஆயிரம் வணிகநோக்கங்கள்,பேரங்கள். இந்த கதைத்திருட்டு போன்ற செய்திகளை நாம் நம்ப விரும்புகிறோம், ஏனென்றால் இந்தச் செய்திகளிலேயே ஒரு வணிகசினிமா டெம்ப்ளேட் உள்ளது. ஏழைX பணக்காரன், எளியவன்X  வென்றவன் என்ற முடிச்சு. ’அடாடா ஏழை அசிஸ்டெண்ட் டைரக்டரோட கதைய சுட்டுட்டாண்டா” .நாம் எங்கே அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளது அதில். உண்மையில் இந்த ஒருவரியையே விஜயை வைத்து படமாக ஆக்கலாம். அதே டெம்ப்ளேட்டில்.

என்றாவது இந்த வேடிக்கையைப்பற்றி ஒரு நல்ல நாவலை எழுதிவிடுவேன் என நினைக்கிறேன்.

என் படங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49
அடுத்த கட்டுரைஉரைகள்-கடிதங்கள்