காடு அமேசானில் வாங்க
காடு வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் கிண்டில் வாங்கி முதலில் வாசித்த நூல் காடு. வாசித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. வாசித்து முடித்த உடன் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் சொற்கள் கிட்டவில்லை. மனதில் முழுக்க காடு நிறைந்து இருந்தது. இன்று தெளிவாக கதை மனதில் இருக்கிறது, எதோ வகையில் நான் முதன் முதலாக சுயமாக எழுதுகிறேன். இதற்கு முன் சில கேள்விகளை உங்களிடம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறேன். பதில் வந்ததில்லை(முக்கியத்துவம் இல்லை என்னவோ நேரம் இல்லை என்னவோ கொள்கிறேன்). காடு நாவலில் நுழையும் போது சிறு தடை இருந்தது, காரணம் நான் காடு கண்டதில்லை. நான் காணாமல் அறிந்த காடு அபாயமானது. அனால் நாவலை வாசிக்க தொடங்கி 3 அத்தியங்களுக்குள் காட்டில் நுழைந்து விட்டேன். கிரிதரன் குடிலை விட்டு காட்டில் நுழையும் போது உடன் நானும் காட்டில் நுழைய முடிந்தது. காடு இன்னும் என்னுள் பசுமையாக இருக்கிறது, எப்போது வேண்டுமானாலும் உள்ளே சென்று விட முடியும். அதற்க்கு முக்கிய காரணம் காட்டின் சிறப்பான வர்ணனை, மற்றும் மலை தெய்வங்கள். நான் வாசிக்கும் முதல் ஜெயமோகன் நாவல் இது, இதற்க்கு முன் உங்கள் சிறுகதைகள் மட்டுமே வாசித்திருக்கிறேன். நான் வாசித்த பிற நாவல்கள் எதுவும் இப்படி என் மனதில் இத்தனை நாள் பசுமையாக இருந்ததில்லை. அந்த வகையில் காடு நாவல் எனக்கு முதல் இலக்கிய தரிசனம் என்று சொல்லலாம்.
கிரிதரன்:
கிரிதரன் தான் என்னை காட்டிற்குள் அழைத்து சென்றான் பிறகு பலர் வழியே பயணிதாலும் கிரிதரன் தான் எனக்கு காடு காண்பித்தவன். அவன் முதன் முதலில் காட்டில் நுழையும் போதே காடு அவனுக்கு பெரும்துயர் என்னும் பேரின்பத்தை அளிக்கிறது. காட்டின் வழியே உயிர்பயதுடன் ஓடும்போதே அவன் அடர் காட்டின் அழகை அனுபவிக்கிறான். பின்னர் அவன் காடு செல்லும் ஒவ்வொரு நாளும் காட்டை தரிசிக்கிறான். துர்நாற்றம், வாசனை, மலம், பூ, பழங்கள், பாம்புகள், பறவைகள், விலங்குகள்… என அவன் தரிசனம் நீள்கிறது. ஒவ்வொரு நாளும் காடு அவனுக்கு புதிய தரிசனத்தை அளிக்கிறது. அதன் உச்சம் நீலியின் தரிசனம். காதல் கொள்கிறான், அவள் மீது பயமும் அதை மீறிய காதலுடன் அவளை கண்டடைகிறான். நீலியை மீண்டும் காண அவன் நடந்து ரகிசிய விசாரணை மிக சுவாரஸ்யமானது. பின்பு நீலி இவன் காதலை புரிந்து கொள்வதும் காதல் கொள்வதும் கிரிதரன் வாழ்வின் உச்சகட்ட மகிழ்ச்சி. நீலியுடன் கிட்டத்தட்ட தினமும் சந்திக்கிறான், பெரும்பாலும் எதுவுமே பேசவில்லை அதிகமும் நான் போகணும், நான் மலயத்தி போன்ற சில சொற்களையே மீண்டும் மீண்டும் சொல்கிறாள். ஆனால் அத்தருணம் தரும் இன்பம் மட்டுமே அவனை மீண்டும் , மாமாவின் எச்சரிக்கையும் மீறி காட்டுக்குள் கொண்டு வருகிறது, நீலியே சிந்தையாகி வாழ்கிறான். இதனிடையே சாத்தன் அவனை காம ரூபத்தில் சீண்டி கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் உடல் பொருள் எங்கும் நீலியே இருக்கிறாள். அதனால் சாத்தன் அவனை ஆட்கொள்ள முடியவில்லை. நாவல் முழுக்க சாத்தான் வெவ்வேறு உருவெடுக்கிறான், குறிப்பாக கிரிதரனின் மாமா சாத்தானின் கை பிடியில் மாட்டி இறக்கிறார். கிரிதரனை நீலி சாத்தனிடம் இருந்து காப்பாற்றுகிறாள். அனால் எங்கோ ஒரு தருணத்தில் சாத்தானின் பிடியில் சிக்கி விட்டான் என்பதை நாவல் முழுக்க அவன் பின்கால துன்பங்கள் இடையிடையே சொல்லப்படுவதால் புரிகிறது. நாவலில் கிரிதரனின் இன்ப கடல் சொல்லும் போதே ஊடே அவன் துன்ப கடலும் காண்பிக்க படுகிறது. அதுவே நாவலின் சிறப்பு, நம் மனம் இன்பத்தில் திளைத்து கொண்டிருக்கும் போதே அதன் நேர் எதிர் காட்சியை தெளிவாக காட்டி கொண்டே நகர்கிறது. நாவல் முடிவில் கிரிதரன் சாத்தன் பிடியில் சிக்கும் காட்சி வருகிறது. மனது அங்கிருந்து மீண்டும் நாவல் ஊடக பயணிக்கிறது. மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என எத்தனை பயணித்தாலும் முடிவில்லா பாதை. முடிவில்லா அடர் காடு. ஒவ்வொரு பயணத்திலும் வெவேறு தரிசனம், நாவல் வாசித்து முடித்த பிறகே அதிக வாசிப்பு நிகழ்கிறது(நிகழ்ந்து கொண்டிருக்கிறது).
சற்று ஏறக்குறைய நடுவில் வெட்டப்பட்டு இரண்டு துண்டுகளையும் சேர்த்து கட்டி வைக்கப்பட்ட கரும்பு ஒன்றில் ஒரு கட்டெறும்பு அடிகரும்பு துண்டு, நுனிகரும்பு துண்டு என மாறி மாறி குழப்பத்துடன் கரும்பு தோல் மீது பயணித்து நடுவில் வெட்டப்பட்ட இடத்தில வந்து உண்மை அறிந்து உவகையில் பேருருவம் எடுத்து கரும்பு கட்டை உடைத்து நேராக பொருத்தி வைத்து மீண்டும் கட்டெறும்பு உருவம் எடுத்து கரும்பின் உள்நுழைந்து அடிகரும்பு நுனிகரும்பு என ஊடே அங்கும் இங்கும் பயணித்து சுவைக்கும் இன்பம், இந்நாவல் அளிக்கும் இன்பம்.
நீலி:
கறுப்பி, மலயத்தி, பேரழகி, தேவதை… நீலி. இந்நாவலில் கிடைக்கும் உச்சகட்ட தரிசனம் நீலி, காடே வீடாக வாழும் மலயத்தி. பெரும்பாலும் தனியே வாழ்கிறாள், தானே பாடுகிறாள், காட்டை மலை தெய்வங்களை தினமும் தரிசிக்கிறாள். உண்மையில் வாழ்கிறாள். தன் கூட்டில் இருக்கும் பொது தன்னை யாரோ கவினித்து கொண்டிருப்பதை உணர்கிறாள், கிரிதரனை சந்திக்கிறாள். துரத்துகிறாள்(வெறுப்பில்லை) அவன் போகமேட்டேன் என்கிறான், கொல்வதென்றால் கொல் என்று பயமும் காதலும் கலந்து கிரிதரன் சொல்கிறான். இரண்டும் நீலிக்கு புரிகிறது, அவனிடம் காதல் கொள்கிறாள். கிரித்ரனை சந்திக்கும் போதெல்லாம் தான் மலயத்தி என்னும் தன்னுணர்வு அவளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இவன் காடு விட்டு நாடு சென்று விடுவான் என்னும் எண்ணமும் இருந்து கொண்டே இருக்கிறது. அத்தனையும் மீறி காதல் கொண்டு காதல் தருகிறாள். கிரிதரனுக்கு அவன் கண்டடையாத சில காட்டின் தரிசனங்களை காண செய்கிறாள். கிரிதரனை வர சொல்லிவிட்டு ஒளிந்து இருந்து அவன் தன் இருப்பை உணர்ந்து அவளை காண முடியாமல் தவிப்பதன் மூலம் இருவர் காதலும் பல்கி பெருகுவதை காண்கிறாள். பொன் வேண்டாம் என்று மறுக்கும் போதும், நான் மலயத்தி, நான் போகணும் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் போதும் காடு தான் அவள் வீடு என உணர்த்துகிறாள். நீலியின் மரணம் ஒரு விடுதலை, அவள் மனித உடலில் இருந்து விடுதலை அடைகிறாள், சொர்க்கத்திற்கு செல்கிறாள். மலயத்திக்கு காடன்றி வேறெங்கு சொர்க்கம். ஆனால் இப்போது மனித உடலின் தடைகள் இல்லை. அவள் ஓடி களைத்த மலையை, செல்ல முடியாத மலையை தண்ணீராக உருவெடுத்து சென்றடைய முடியும். மலர்களின் நறுமணத்தை கையில் எடுத்து நுகரவேண்டியதில்லை, காற்றென மாறி நறுமணமே தன்னுடலாக கொண்டு சுற்றி வர முடியும், கீறக்காதன் தன் கூட்டத்தை விட்டு பிரிந்து துயரப்படும் போது நம்மால் என்ன செய்ய முடியும் என்று சொல்லி அதன் துயரத்தில் பங்கு கொள்ளாமல் தவிர்க்க வேண்டியதில்லை, கீறக்காதன் உடன் அலைந்து திரிந்து அதன் துயரத்தில் பங்கு கொள்ள முடியும். அவள் மரணம் மூலம் விடுதலை பெற்றாள். கிரிதரன் நீலி மரண செய்தி கேட்டு அவளை தேடி அலையும் பொது அவன் முன் தோன்றாமல் அவனை கவனிக்காமல் காட்டில் அவளுக்கான கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறாள். ஆனால் அவள் அவனை காதலிக்கிறாள், அதனால் அவன் சாத்தான் பிடியில் சிக்க நேரம் நெருங்கும்போது உள்ளுணர்வு கொள்கிறாள் அவனை தேடி வருகிறாள், பேயுரு கொண்டு அவனை விரட்ட(காப்பாற்ற) முயற்சிக்கிறாள். கிரிதரன் சாத்தன் பிடியில் விழும்போது ஆக்ரோஷத்துடன் ஜன்னலை அறைகிறாள். சாத்தன் பிடியில் சிக்கி அவன் வாழ்க்கையில் பின் அனுபவிக்க போகும் துன்பத்தை முன்னரே காண்கிறாள், காப்பாற்ற முடியவில்லை என கவலை கொள்கிறாள். அவள் மலயத்தி நகர் வந்து அவன் படும் துன்பத்தை பார்த்திருக்க மாட்டாள், ஆனால் கடைசியில் கிரிதரன் அய்யரிடம் வந்து தன் துயர் சொல்லும் பொது அருகில் இருந்து அவனுக்காக இரக்க பட்டிருப்பாள். நீலி ஒரு வனதேவதை, அற்ப மானுடன் கையில் சிக்கமாட்டாள் என்பதே விதி. நீலி காற்றென, நீரென, மண்ணென, மரமென, விதையென…. காடெங்கும் வாழ்வாள்.
நான் இந்த கடிதத்தை எழுதி முடிப்பேன் என நினைக்கவில்லை, இரண்டு அல்லது மூன்று வரிகள் மேல் தாண்டாது என்றே எண்ணினேன். மனதில் இருந்து கொஞ்சம் சொற்கள் வந்தன, சிறிதளவேனும் எழுத முடிந்தது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. காடேனும் வாழ்வனுபவத்தை அளித்ததற்கு நன்றி.
இப்படிக்கு,
அருள், எர்ணாகுளம்.