’நானும்’ இயக்கம்- மேலும் கடிதங்கள்.

me

 

‘நானும்’ இயக்கம், எல்லைகள்

தருண் தேஜ்பால்களும் பெண்களும்

’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா?

அன்புள்ள ஜெயமோகன்,
ஆம். நீங்கள் சொல்வது போல இன்றுள்ள சூழலில் பெண் பாலியல் ரீதியாக ‘மாட்டேன்’ என்று சொல்லும் உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல உடல்கவர்ச்சியின்றி ஆண்-பெண் உறவுகள் இருக்க முடியாது. நாம் ஐரோப்பிய வாழ்க்கைமுறையை நோக்கி நகர்ந்தாலும் ஒரு அமெரிக்கனைப் போலவோ ஐரோப்பியனைப் போலவோ டேட்டிங்கிற்கு இந்திய ஆண் அழைப்பதில்லை. மேலும் டேட்டிங் என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒருவித வசீகரச் செயல்பாடு. ஆண் தனக்குப் பிடித்த பெண்ணை வசீகரித்துத் தன்னை அவளுக்குப் பிடித்தவனாக ஆக்கும் முயற்சி. அதில் வெற்றி பெற்றால் அவ்வுறவு தொடரும். அவள் பெரிதாக விருப்பம் கொள்ளவில்லையெனில் அந்தச் சந்திப்புடன் முடிந்துவிடும். அத்தகைய வழக்கம் இங்கே முற்றிலும் பிறழ்ந்து வெறும் பாலியல் உறவு சார்ந்த செயல்பாடென மாறிவிட்டது. ஆனால் இங்கே திருமணமானவளோ ஆகாதவளோ அதுபற்றிய கவலைகள் ஏதுமின்றித் தன்னை முற்போக்கானவனாகவும் சுதந்திரமானவனாகவும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவனாகவும் காட்டிக்கொண்டு பாலியல் அழைப்பு விடுக்கின்றனர். அது கண்டிப்பாக டேட்டிங்கில் வராது.

 

 

இதே கருத்தியலைப் பெண்ணியவாதிகள் வேறுவிதமாக பாலியல் சுதந்திரமென முன்வைத்தனர். ஆண்கள் வெறும் பாலியல் தேவைக்கு மட்டுமானவர்கள், இந்தக்காலத்தில் அதற்கும் கருவிகள் வந்துவிட்டன என்பது மாதிரியான பெண்ணியக் கருத்துகள் பேசப்பட்டபோது ஆண்களுக்கு இவ்வகையான கொந்தளிப்பு உருவானது. ஏனெனில் ஆணோ- பெண்ணோ வெறும் உடல் இச்சைக்காக பயன்படுவதை இருபாலருமே விரும்புவதில்லை. நான் பெண்கள் பேசும் பாலியல் சுதந்திரத்தையும் ஒரு சிறுபிள்ளைத்தனமான கூற்றெனக் கருதுகின்றேன். அதாவது வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணுக்குப் பாலியல் உச்சங்கள் மட்டுமே லட்சியமாக இருப்பது என்பது வேடிக்கையான ஒன்று. அவளுக்குப் பிறவேலைகளோ பணிகளோ இருக்காதா? அறிவுத்தளத்தில் அவளுக்கான இடம் என்ன? மனிதர்களைப் பொறுத்தவரை வாழ்நாளில் காதலும் காமமும் ஒரு பகுதி மட்டுமே. அதை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்க்கையைச் செலுத்த இயலாது. வெறும் பாலியல் உச்சங்களுக்காக மட்டும் புரட்சி செய்வதென்பது பாலின பலவீனமென நினைக்கின்றேன்.

 

 

இன்று இந்த #metoo விமர்சனங்களுக்குள்ளாவதற்கும் பெண்கள் சொல்கிற பாலியல் அத்துமீறல் அனுபவங்களை ஆண்கள் எள்ளல் செய்வதற்கும் முக்கிய காரணம் பெண்ணியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வெறும் பாலியல் சுதந்திரம், கலவி உச்சம் போன்ற தேவையற்ற கருத்தியல்களை மட்டும் பெண்ணிய பாடத்திட்டமாக வரைந்துகொண்டு பேசியதாகும். பாலியல் சுதந்திரமும் ஐரோப்பிய மனநிலையிலிருந்து இருந்து இங்கே கடத்திவரப்பட்டதுதான். இவற்றையெல்லாம் பார்க்கும்போது நாம் மாற்றுக் கலாச்சாரப் பழக்கவழக்கங்களை தவறாகப் பயன்படுத்துகின்றோம் அல்லது நம்முடைய இந்திய மனநிலைக்கு அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தெரியவில்லை என்று கருதுகின்றேன்.

 

 

இந்தியச் சூழலில் இருக்கின்ற பெண்ணியவாதிகள் இனிமேலாவது பாலியல் சுரண்டல்கள் குறித்து ஓர் தெளிவான வரையறை ஒன்றினை உருவாக்கி #metooவின் பக்கம் நிற்கவேண்டும். இல்லையேல் பாலியல் அத்துமீறல் செயல்பாடுகள் பாலியல் சுதந்திரம் மாதிரியான அரைகுறை கருத்தியல்களால் பூசிமெழுகப்படும். ஆண்கள் தம்மைக் காத்துக்கொள்ள “நீங்களே இதைத்தானே பேசினீர்கள், இன்றென்ன பத்தினித்தனம்” போன்ற கேள்விகளை வீசக்கூடும்.  இப்போதே அப்படியான விமர்சனங்கள்தான் #metoo குறித்து எழுகின்றன. எனவே இங்கே முதலில் பாலியல் விழிப்புணர்வு அத்தியாவசியமானது.
வெண்பா

 

 

அன்புள்ள வெண்பா,

 

இங்கே பேசப்படும்  ‘முகநூல்’ பெண்ணியம் மீது எனக்கு எந்த மதிப்பும் இல்லை. அது முகநூலில் உள்ள வேறு கருத்துநிலைபாடுகளைப்போல வெறுமே ஒரு போலி அடையாளத்துக்காக உருவாக்கப்படும் கூச்சல். இந்த கூச்சல்களை ஊடகங்கள் கவனிப்பதுதான் தமிழகத்தின் மிகப்பெரிய சாபம். தமிழ்ப் பெண்ணெழுத்தாளர்கள், பெண்கவிஞர்கள் வெறுமே ‘ஆக்டிவிஸ்ட்’ என்று முகநூல் புஃபைலில் போட்டுக்கொள்பவர்கள். அது அவர்களுக்கு தமிழகத்துக்கு வெளியே ஓர் அடையாளத்தை அளிக்கிறது. அவர்களுக்கும் பெண்ணியம் என்பது பாலியலை எழுதுவது மட்டுமே.திராவிடப்பெண்ணியம் என்பது வெறும் பம்மாத்து. அந்தக்கட்சிகளே அடிப்படையில் ஆணாதிக்கத்தன்மை கொண்டவை.

 

உண்மையான பெண்ணியம் இங்குள்ள இடதுசாரிக் கட்சிகளின் பெண்களமைப்புகளால் முன்வைக்கப்படுவது மட்டுமே. இன்று தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், பிரச்சினைக்குள்ளானவர்கள் நம்பிக்கையுடன் சென்று நிற்கத்தக்க ஒரே இடம் அவர்கள்தான். தமிழகத்தில் பெண்கள் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கு முன்னின்றவர்களும் அவர்களே. அது அவர்களின் தொழிற்சங்கப்பின்னணியிலிருந்து வந்த தெளிவும் பயிற்சியும் மூலம் உருவாவது. ஊடகங்கள் அவர்களையே பெண்ணியர்களாக முன்னிறுத்தவேண்டும்

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

மிடூ விஷயம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். என் கேள்வி. இது நம் பண்பாட்டையே கொச்சைப்படுத்துவதாக மாறிவிடவில்லையா? இங்கே எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இதைமட்டுமே ஊடகங்கள் பேசிக்கொண்டிருப்பது ஏன்?

 

ராமச்சந்திரன்

 

அன்புள்ள ராம்

 

பொதுவாக எந்தச் சமூகமும் தன்னை பெரிதும் பிழையற்றதாகவே எண்ணிக்கொள்ள விரும்பும். அதாவது அதன் நெறிகள் சரியானவை, பிரச்சினை தனிமனிதர்களிடம்தான் என நம்பும். ஏனென்றால் அந்த நெறிகளை நம்பியே அவர்கள் வாழ்கிறார்கள். ஆகவே அதன் ஆதாரமான உளவியலமைப்பிலேயே ஒரு பிரச்சினை உள்ளது என சுட்டிக்காட்டுவது மிகக் கடினமானது. அதற்கு மிகப்பெரிய சமூக இயக்கம், கருத்தியல் பிரச்சாரம் தேவை. அதைத்தான்  ‘நானும்’ இயக்கம் உருவாக்குகிறது.

 

 

இத்தனை பெரிதாக, இத்தனை ஆவேசமாக, இத்தனை முழுமையாக இது நிகழாவிட்டால் நம் சமூகத்தை இது சென்றடையாது. ஆகவே இன்று ஊடகங்களில் இதற்குக் கிடைத்திருக்கும் கவனம் ஒரு நல்ல விஷயம் என்றே நினைக்கிறேன். இதைப்பற்றி ஒட்டுமொத்தச் சமூகமும் கவனிப்பதற்கு இது ஒன்றே வழி. இத்தகைய ஒரு பெரிய நோய் நம் சமூகத்தின் உள்ளுறுப்புகளில் சீழ்கட்டியிருக்கிறது என்பதை இப்படித்தான் காட்டமுடியும். ஒரு சாதாரண சினிமாவின் விளம்பரத்துக்கே இரண்டுவாரக்காலம் இதைவிட உச்சகட்ட ஊடக ஆக்ரமிப்பு தேவையாகிறது என்பதை கவனிக்கலாம். இன்றைய சூழலில் எந்த ஒரு ஊடக அலையும் சிலநாட்களுக்கே. அதன்பின் கவனம் திரும்பிவிடும். அதற்குள் முடிந்தவரை ஊடுருவல் நிகழ்ந்தாகவேண்டும்

 

 

இப்படி ஓர் ஊடகக் கவனம் உருவாகும்போது ஒரு சாரார் ‘அப்படியென்றால் அதை ஏன் கவனிக்கவில்லை?’ என்று பலவற்றைச் சுட்டிக்காட்டுவார்கள். அது இந்த இயக்கம் மீதான அசௌகரியத்தை வேறுவழிகளில் வெளிப்படுத்திக்கொள்வதுதான், இன்றைய சூழலில் எவரும் நானும் இயக்கத்துக்கு எதிரான நிலைபாடு எடுக்கமுடியாது. ஒரு முற்போக்கான விஷயத்தை எதிர்ப்பதற்கு மிகத் தந்திரமான வழி மேலும் முற்போக்கான ஒரு நிலைபாடு எடுத்து அதை வசைபாடுவதுதான். நிலைபாடுதானே, காசா பணமா? கேட்பதற்குச் சரிதானே என்றும் தோன்றும்.  அதற்குப்பின்னால் இருப்பது சில்லறை ஆணாதிக்கநோக்கு, சாதிய நோக்கு, கட்சிசார்பு போன்றவையாகவே இருக்கும்.

 

 

இத்தகைய விஷயங்களுக்கு மெய்யாகவே எதிர்ப்பு வரும். குழப்பங்கள் உருவாகும். எந்தப் புதிய கருத்தியல்தாக்குதலும் விவாதத்தையே உருவாக்கும். விவாதத்தில் பதற்றப்படுபவர்கள் மாற்றத்தை எதிர்ப்பவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் குரல்களே ஓங்கி ஒலிக்கும். ஆனால் விவாதிக்கப்படுகிறது என்பதே மாற்றம் உருவாகத் தொடங்கிவிட்டது என்பதற்கான சான்றுதான். அவ்வகையில் நானும் இயக்கம் அதன் அடிப்படை வெற்றியை அடைந்துவிட்டது. அதன் முகப்பில் நிற்கும் பெண்கள் அனைவருக்கும் ரயா சர்க்கார் முதல் சின்மயி வரை முழுமையான ஆதரவை அளிப்பதே நம் கடமை

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ
இந்த இயக்கத்தில் குற்றம் சாட்டப்படுபவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் தாங்கள் குற்றம் எதுவும் செய்யவில்லை என்பதை அழுத்தமாகத் தெரிவிப்பதைவிட, குற்றம் சாட்டியவரை ஒழுக்கமற்றவராயும் அவர் சார்ந்திருக்கும் சாதியின் காரணமாகவே இவர்கள் இப்படி குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை நிரூபிக்கவுமே மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.  நானும் இயக்கத்தில் எழுப்பப்படும் குற்றசாட்டுகள் எல்லாம் இரண்டு தனி நபர்களிடையே ஏற்படும் தனிப்பட்டப் பிரச்சனையே. இருவரும் பிரபலங்களாயிருந்தால் தனி கவனம் செலுத்தப்படுவதிலும் தவறில்லை. ஆனால் மீடியாக்களில்  அள்வுகோலை மீறி இந்த பிரச்சனைகள் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் இது தவறான குற்றசாட்டு எனவே நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்வேன் என முடிவு செய்யலாம். குற்றம் சாட்டியவர் இது உண்மையான குற்ற சாட்டுத்தான் என்பதை நீதி மன்றத்தில் நிரூபிக்க முயற்சிக்கலாம். இருவருமே வழக்கு வேண்டாம் என்றும் முடிவு செய்துவிட்டால், குற்றம் சாட்டியவரும் அவரது குற்றசாட்டினை நம்புவர்களும் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து சற்றுத் தள்ளி நிற்கலாம் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எச்சரிக்கை செய்யலாம். குற்ற சாட்டினை நம்ப மறுப்பவர்கள் எப்பொழுதும் போல் அவருடன் தங்களது நட்பைத் தொடரலாம். இதைத் தவிர இதில் ஒன்றும் தீர்வு  இருப்பதாகத்தெரியவில்லை….
கொ.வை. அரங்கநாதன்

அன்புள்ள அரங்கநாதன்

 

இந்த இயக்கத்தைக் கூர்ந்து நோக்கும்போது தெரிவன சில சங்கடமூட்டுபவை.

 

அ. குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு கட்சியை, சாதியைச் சார்ந்தவர் என்றால் அதைச்சார்ந்தவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள், அல்லது அமைதி காக்கிறார்கள். எந்த முற்போக்கு பேசினாலும் அந்த எல்லையை கடக்க நம்மவர்களால் முடியவில்லை

 

ஆ. இதழாளர்களில் பெண்கள் மட்டுமே பெண்களை ஆதரிக்கிறார்கள். ஆண் இதழாளர்கள் பெரும்பாலும் ஆண்களாக மட்டுமே தங்களை முன்வைக்கிறார்கள். ஒப்புநோக்க ஆங்கில ஊடகங்களில் பெண் இதழாளர்கள் மிகுதி என்பதனால் அவர்கள் மட்டுமே பெண்களின் தரப்பை எழுதினார்கள்

 

இ.  குற்றம் சாட்டுபவர் பெண் என்றால் பொதுவாக அவர்களின் நடத்தை இழிவுசெய்யப்படுகிறது. பிராமணப்பெண் என்றால் கூடுதலாகச் சாதியும். வேறெந்த பெண்ணின் சாதியும் பேசப்படுவதில்லை.

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு கிண்டில் -சலுகை
அடுத்த கட்டுரைஇடஒதுக்கீடு ஒருகேள்வி