மேகமலைக்கு மீண்டும்

இருவருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. தனசேகர் என்ற வாசகர் என்னுடைய பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் இருநாவல்களையும் பற்றி எழுதியிருந்தார். பின்பு எங்கள் பயணங்களை கவனித்துவிட்டு தன் ஊரான மேகமலையைப்பற்றி சொன்னார். நானும் முடிந்தால் வருகிறேன் என்று சொல்லி வைத்தேன்.

ஆனால் ஈரோடு கிருஷ்ணனிடம் அதைப்பற்றி விவாதிக்கையில் திட்டங்கள் வேறெங்கோ செல்லும். சிலமாதங்கள் கழித்து போய்த்தான் பார்ப்போமே என்று ஒரேநாளில் திட்டமிட்டு மூன்றாம்நாள் கிளம்பிவிட்டோம். கிருஷ்ணன், வசந்தகுமார், கல்பற்றா நாராயணன் இருந்தார்கள். சின்னமனூரில் தனசேகர் அறிமுகமானார்.

இன்று தம்பி தனா எங்கள் குழுவின் செல்லப்பிள்ளை. அவனுடைய இனிய சிரிப்பும் உற்சாகமும் எல்லாரையும் தொற்றிக்கொள்ளக்கூடியது. மீண்டும் ஒரு மேகமலை திட்டத்தைச் சொன்னான். அவன் ஊரான சின்னமனூரில் ஒரு கடாவெட்டு. கிளம்பலாமென முடிவெடுத்து திட்டங்கள் போட்டபோது நடுவே நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது. அந்தகூட்டம் சென்னையில் நண்பர்கள் அதற்கு முன்னுரிமை அளித்தமையால் இதை கைவிடவேண்டிய கட்டாயம். நாஞ்சில் வரமுடியவில்லை. விஜயராகவனும் வரவில்லை. ராஜகோபாலனுக்கு புத்தம் புதிதாக விஸ்வஜித் பிறந்தமையால் வரமுடியவில்லை.

பதிலுக்கு மூவர் புதிதாகச் சேர்ந்தார்கள். ’குரங்குத்தவம்’ அரவிந்த் இணையம் வழியாக அறிமுகமானவர். பென்சில்வேனியா பல்கலையில் ஆய்வுமாணவர். கென் வில்பர் பற்றி அவருடன் இணையத்தில் விவாதித்து நண்பரானேன். நியூயார்க்கில் சுற்றியபோது அவரும் கூடவே வந்தார். இப்போது விடுமுறைக்காக வந்தவர் திருவண்ணாமலைக்கு வந்து அங்கிருந்து சென்னை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மேகமலைக்கும் வருவதாகச் சொன்னார்.

செந்தில்குமார் தேவன் ஜெர்மனியில் புற்றுநோய் ஆராய்ச்சி செய்கிறார். இணையத்தில் என் வாசகராக அறிமுகமானவர். அவர் எழுதிய பல நல்ல

கடிதங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. விடுமுறைக்காக வந்தவர் சென்னை நிகழ்ச்சிகளில் கூட இருந்தார். அவரும் வருவதாகச் சொன்னார். விருதுநகர் அவரது சொந்த ஊர். மூன்றாமவர் குருசாமி தங்கவேல். சித்தமருத்துவம் பயின்று சமூகமருத்துவத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கு பின் எம்ஜிஆர் பல்கலை ஆய்வகத்தில் மேல் ஆய்வுசெய்கிறார். லண்டனில் இருந்து சங்கர் கடைசி கணத்தில் சேர்ந்துகொண்டார்

அர்விந்த்

உபரியாக கே.பி.வினோத். வழக்கம்போல ஈரோடு வழக்கறிஞர் கிருஷ்ணன். நான் தனாவுடனும் அவர் குடும்பத்துடனும் முத்துநகர் ரயிலில் பயணம் செய்தேன். நானும் தனாவும் திண்டுக்கல்லில் விடிகாலையில் வந்திறங்கினோம். கிருஷ்ணன் சங்கருடன் காரில் வந்து திண்டுக்கல்லில் காத்து நின்றார். ஏற்கனவே செந்தில்குமார் வந்திருந்தார். அதிகாலைக் குளிர் இதமாக இருந்தது. ஒருவர் சைக்கிளில் சுக்கு டீ விற்றார். அதை வாங்கி குடித்துவிட்டு சின்னமனூர் கிளம்பினோம்.

தங்கவேல்

சின்னமனூருக்கு கெ.பி.வினோதும், அரவிந்தும் , தங்கவேலும் காலை ஆறுமணிக்கு வந்தார்கள். அங்கே ராஜகுமாரன் என்ற ஓட்டலில் மொட்டைமாடி அறை போட்டோம். பல் மட்டும் தேய்த்து விட்டு கிளம்பி எதிரே கடையில் காலையுணவு உண்டுவிட்டு சின்னச்சுருளி என்ற அருவிக்குக் கிளம்பினோம். நான் ஓட்டலில் பூரியை உண்பது என்ற விபரீத முடிவை எடுத்தமையால் கொஞ்சம் குமட்டல் அவ்வப்போது இருந்தது.

நானும் வசந்தகுமாரும் சுருளி அருவிக்கு முன்னரே சென்றிருந்தோம். அப்போது தான் அந்த அருவி பொதுமக்களால் மலம்கழுவத்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இது வேறு அருவி, பொதுமக்களுக்கு இதைப்பற்றி தெரியாது என்றான் தனா. மலையைச்சுற்றிக்கொண்டு ஏறிச்சென்றோம். கொஞ்சம் குளிர் ஆரம்பித்தது

தனசேகர்

வழி நெடுக பேசிக்கொண்டு வந்தது அனாமலி என்ற கருத்தாக்கம் பற்றி. மேட்ரிக்ஸ் படத்தில் அதைப்பற்றி ஒரு விவாதம் வருகிறது. மேட்ரிக்ஸ் மென்பொருள்கட்டுமானத்தின் கட்டமைப்பாளார் [மென் கடவுள்! ] வந்து அவரது கிட்டத்தட்ட பரிபூரணமான அவரது உலகில் எங்கோ எவ்விதமோ ஒரு பிறழ்வு நிகழ்கிறது. அது மீட்பு சம்பந்தமான ஒரு தீர்க்கதரிசனமாக எழுகிறது. விடிவும் ஒரு பிறழ்வின் விளைவான கனவாகவே இருக்கிறது.

லண்டன் சங்கர்

மானுட உயிரே ஒரு பிறழ்வின் விளைவுதான் என்கிறார்கள். மனிதமூளையின் செயல்பாடே பிறழ்வுகள்மூலம் நடக்கும் ஒரு மாபெரும் ஒத்திசைவு என்றால் அது மிகையல்ல. படைப்பு என்பது என்றும் பிறழ்வே. அதன் வெளிப்பாட்டுத்தன்மையின் மாயத்தை மீண்டும் மீண்டும் தர்க்கம் தொட்டு தொட்டு தோற்று மீள்வது அதனால்தான். பிறழ்வின்மேல் ஒட்டுமொத்த கட்டமைப்ப்பே தன் எடையை செலுத்தி மோதுகிறது. அந்த மோதல்மூலம் அது தன்னை மீளமைக்கிறது.

என்றாவது புற்றுநோய் முழுமையாக விளக்கப்படுமென்றல் அது படைப்பை விளக்கியதாக ஆகும். படைப்பு என்ற பிறழ்வுப்பேரியக்கத்தினுள் நிகழும் ஒரு பிறழ்வு அது. பிறழ்வை கட்டமைப்பின் ஆழத்து விழைவு என்று கவித்துவமாகச் சொல்லிப்பார்க்க முடியும் போலும்.

உண்மைதான், அருவியில் கூட்டமே இல்லை. எங்களைத்தவிர இன்னொரு குழுதான். அவர்களும் குளித்து முடித்திருந்தார்கள். சுருளியை விட சற்றே பெரிய அருவி ஏன் சின்னச்சுருளி என்றழைக்கப்படுகிறதென தெரியவில்லை. அழகான அருவி. தூய நீர். அருவியில் குளிப்பதற்காக எப்போதுமே சற்று வேகமாகப் பாய்ந்து செல்லும் வழக்கம் கொண்டவன் நான், அந்த தயக்கத்தை வெல்ல அதுவே வழி. அப்படி செல்லும்போது காலின் ஒரு கல் குத்தி விட்டது. அதிக வலி தெரியவில்லை. ரத்தமும் அதிகம் வரவில்லை.

கி.ரா பாஷையில் ‘குளூக்க’ எண்ணை வைத்து குளித்தேன். எங்களூரில் எண்ணை அந்தக்காலத்தில் விலையேறியது. வசதியான வீட்டு பிள்ளைகள் நிறைய எண்ணை தேய்த்துக்கொண்டு காதுவழியாக எண்ணை சொட்டிக்கொண்டு வருவார்கள். அறுபதுகளில்கூட பரட்டைத்தலை என்பது வறுமையின் சின்னமாக இருந்தது. எழுபதுகளில் அது மீறலின் குறியீடாக ஆகியது. தலையை சிலுப்பிய ரஜினிகாந்த் அந்தக்கால இளமையின் சின்னம்.

குளித்துவிட்டு சின்னமனூருக்கு இரண்டு மணிக்கு வந்து சேர்ந்தோம். தோட்டத்து கொட்டகையில் காத்திருந்தோம். ஆட்டோவில் வந்து சேரவேண்டிய கறிசோறு வர தாமதமாகியது. தனாவின் மச்சானின் மோபெட் ஒலி கேட்டது. வினோத் ‘ஆட்டை பாத்தியா? எங்கிட்டோ ஓடிப்போய்ட்டுது மச்சான்’ என்று சொல்ல வருகிறார் என்றதும் எல்லாரும் பசியுடன் சிரித்தனர். வந்தவர் ‘ஆட்ட’ என ஆரம்பித்ததும் திகிலாகியது. ’ஆட்டோ வர்லியா மச்சான்?’ என்றார் அவர்.

ஆட்டோவில் கறிக்குழம்பும் சோறும் வந்தன. கொட்டகையில் இலை போட்டு அமர்ந்து சாப்பிட்டோம். கிருஷ்ணனுக்கும் தங்கவேலுக்கும் சைவம். அவரவர் விதி, வேறென்ன சொல்ல முடியும்? மதியம் தூங்குவதற்காகவே ஞானவான்களால் அமைக்கப்பட்ட கொட்டகை. ஆனால் ஒருமணி நேரம் தூங்கியதுமே மேகமலை போகலாம், இருட்டி விடும் என்றார்கள்.

மேகமலை செல்லும் பாதை முழுக்க இந்திய தத்துவம் மேலை தத்துவம் இலக்கியம் என்று பேசிக்கொண்டே சென்றோம். சாரவாத [ontology] அணுகுமுறை ஒரு சிந்தனையின் அடிப்படையை எப்படி தீர்மானிக்கிறது என்று. [சாரமைய வாதம் என்றும் சொல் புழங்குகிறது] ஒன்றை கருத்துருவாக சாராம்சப்படுத்திக்கொண்டு மேலே சிந்திப்பதே இந்திய சிந்தனை முறை முன்வைக்கும் வழி. அது மைய உருவாக்கம் அல்ல. ஆனால் கண்டிப்பாக குறைத்தல்வாதம். ஆனால் அது இல்லாமல் அடிப்படை கருதுகோள்களை விவாதிக்கமுடியாது.

தீவிர விவாதத்துக்கும் நகைச்சுவைக்குமாக ஊடாடியபடியே சென்ற பயணம். இருளில் தான் மேகமலைக்குச் சென்று சேர்ந்தோம். அறைக்கு முன்னால் நின்றாலே ஏரி தெரியும். ஆனால் அன்று சுத்தமாக ஒன்றுமே தெரியவில்லை. அருகே முருகன் டீக்கடையில் சாப்பிட்டோம். பழம் கொண்டுவந்திருந்ததனால் நான் அதை சாப்பிட்டேன். சென்றமுறை தனா பழம் ஏற்பாடு செய்யவில்லை. அன்று அவன் எனக்கு புதியவன் . வருத்தப்படுவான் என கோழிக்கறி சாப்பிட்டு இரவெல்லாம் அச்சுப்பிழை நிறைந்த புத்தகங்களை வாசிக்கும் துர்க்கனவுகளில் அலைந்தேன்.

காலையில் கிருஷ்ணனால் அதட்டப்பட்டு எழுந்து வெளிவந்தால் கண்ணெதிரே நீல நிற ஏரிக்கு மேல் இளநீலநிறமான மேகப்படலம். சுற்றும் நிறைந்த மலைகள் நீரில் பிரதிபலித்தன. தடாகத்தை பிரம்மாவின் மனம் என்று சொன்னவன் கவிஞன்.

முந்தையநாள் இரவே அரங்கசாமி சந்திரகுமாருடன் வருவதாகச் சொல்லியிருந்தார். இரவெல்லாம் செல் பேசி தூங்கவிடமாட்டார்கள் என்பதனால் செல்லை தனாவிடமே கொடுத்திருந்தேன். திருப்பூரில் இருந்து கிளம்பி காலை ஆறரை மணிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களையும் கூட்டிக்கொண்டு காட்டுக்குள் ஒரு காலைநடை சென்றோம். ஏரிக்கரை வழியாகச் சென்று ஏரிக்குள் இறங்கி நீர் விளிம்பில் அமர்ந்திருந்தோம்.

இரவில் விடுதியைச் சுற்றிக்கொண்டு யானைசென்றிருந்தது. கீழே சோலைக்காட்டில் அதன் பிளிறல் சன்னமாக கேட்டது. ஆனால் யானையை பார்க்க முடியவில்லை. பார்க்க வேண்டும் என்ற ஆசையும் எதிரே வந்து தொலையக்கூடாது என்ற பயமும் கலந்த நடை. தூரத்து மலைச்சரிவில் காட்டெருதுக்கூட்டம் ஒன்றைப் பார்த்தோம். முழுக்கமுழுக்க நக்கலும் சிரிப்புமாக அரங்கசாமி கூடவே இருந்தார்.

பகலில் மீண்டும் கொஞ்சதூரம் காட்டுக்குள் சென்று வந்தோம். மதியம் அசைவ உணவு. கொஞ்சநேரம் தூங்கிவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்றோம். நாங்கள் சென்ற வழியே யானை கடந்துசென்றிருந்தது. சூடான லத்தி உருளைகள் ஆவிபறக்க கிடந்தன. யானையை பார்த்துவிடுவோம் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு கணத்திலும் யானை கூடவே இருந்தது , பார்த்த யானையைவிட பெரியது இந்த பார்க்காத யானை.

இருள் ஆரம்பிக்கும் நேரத்தில் மலைவிளிம்பில் அமர்ந்துகொண்டு கண்ணெட்டும் தொலைவுவரை விரிந்த மலைமுகடுகளை நோக்கி எங்கள் வழக்கமான பார்வைத்தியானத்தைச் செய்தோம். அந்தக்காட்சியாக அகம் விரிவதை அறியமுடிந்தது. கண்களும் மனமும் ஒன்றாகும் கணமும் இரண்டாக பிரியும் கணமும் மாறி மாறிக்காட்டும் ஓர் விளையாட்டு அது.

ஏழுமணிக்கு சந்திரகுமாரும் அரங்கசாமியும் சந்திரகுமாரும் கிளம்பிச்சென்றார்கள். ஒரு பகலுக்காக இரு இரவுகள் பயணம்செய்து வந்த அந்த வெறி ஆச்சரியமூட்டியது. இரவில் கொஞ்சதூரம் நடந்து சென்று சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பிரம்மம் கூடவே இருந்தது, ஆம், அங்கும் ஒருவர் வந்து யானை இருக்கிறதே என்று பயமுறுத்தி சென்றார்.

இரவில் நாலைந்து கார்களில் சிலர் வந்தார்கள். அவர்களுக்கு காடு ஏரி எதுவுமே ஒரு பொருட்டாக படவில்லை. வரும்போதே குடி. அதில் ஒருவர் அதி உற்சாகம் கொண்டு கெட்டவார்த்தை கக்கி எம்பிக்குதித்து மல்லாந்து விழுந்து அவஸ்தைப்பட்டார். ‘வரலாற்றிலே இவருக்கு இடமிருக்கா சார்?’ என்றார் கிருஷ்ணன். பரிதாபமாகவே இருந்தது. இந்த ஆசாமிகள் தங்களுக்குள் இருக்கும் மாபெரும் வெற்றிடமொன்றை போதையால் நிரப்பிக்கொள்கிறார்கள். கலை இலக்கியம் சிந்தனை இயற்கை ஆன்மீகம் அன்பு மதம் ஏதும் நிரப்பாத உலர்ந்துபோன ஓர் அகவெளி அது.

மறுநாள் காலை ஏரியைச்சுற்றி நடந்து சென்று அணைக்கட்டை அடைந்தோம். உள்ளே இறங்கிச்சென்று ஆற்றுக்குள் நடந்து ஆறு ஒரு பெரும் சரிவாக பள்ளத்தில் இறங்கி மலையில் இருந்து செல்லும் விளிம்பில் அமர்ந்திருந்தோம். கண்முன் மாடு கடல் போல விரிந்து ஒளி பரவி சுடர்ந்துகொண்டிருந்தது. திரும்ப ஏறும்போது என் காலில் இருந்த புண்ணில் இன்னொரு கூரிய கல் குத்திவிட்டது. நல்ல வலி. ஆனால் உற்சாகமான பேச்சு குறையக்கூடாதென அப்படியே விட்டுவிட்டேன்

பின்னர் அறையில் கவனித்தபோது குருதி வழிந்துகொண்டிருந்தது. பக்கத்து எஸ்டேட் மருத்துவமனைக்குச் சென்று கட்டு போட்டுக்கொண்டேன். மதிய உணவுக்குப்பின் சின்னமனூர் கிளம்பினோம். நானும் செந்தில்குமாரும் மதுரை வரை சேர்ந்து வந்தோம். ஓர் அன்னிய நாட்டில் தங்கிப்படிக்கும் மாணவனின் தனிமையையும் சவால்களையும் பற்றி செந்தில்குமார் பேசிக்கொண்டே வந்தார்.

நள்ளிரவு மதுரையில் இருந்து நாகர்கோயில் கிளம்பினேன். அருண்மொழிக்கு காலையில் புத்தாண்டு வாழ்த்து சொல்லவேண்டுமென எண்ணிக்கொண்டேன்.

மேகமலைபயணம் -தங்கவேல்


மேகமலை படங்கள்

மேகமலை தாடிக்கொம்பு


மேகமலை


மேகமலை கடிதங்கள்

முந்தைய கட்டுரைநாஞ்சில்நாடன் பாராட்டுவிழா பதிவுகள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்