என் படங்கள்

sarkar-7592

அன்புள்ள ஜெ

வரவிருக்கும் மூன்று படங்களில் நீங்கள் உங்கள் அரசியலைப் பேசியிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது. அல்லது அவ்வாறு உங்கள் வாசகர்கள் கருதுவதாக. நீங்கள் உங்கள் அரசியலை அவற்றில் எழுதியிருக்கிறீர்களா என்ன?

சந்திரகுமார்

***

அன்புள்ள சந்திரகுமார்

தமிழ்மக்கள் அதிகமாகக் கவனிப்பது சினிமாவை. ஆகவே சினிமா சம்பந்தமான ஏதேனும் செய்தியை போட்டுக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம் இதழ்களுக்கு உள்ளது. அதேசமயம் சினிமா குறித்து அதிக செய்திகள் இன்று இல்லை. சொல்லப்போனால் சினிமா பற்றிய ரகசியம் இன்று கறாராகப் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே அவர்கள் என்னதான் எழுதுவார்கள்? பெரும்பாலும் மேஜையிலிருந்துகொண்டு எதையேனும் எழுதுவதுதான். சாதாரணச் செய்திகளை ஒருவகை வம்புகள் போல ஆக்குவது, முடிச்சுகள் போடுவது என அவர்களுக்கு பல உத்திகள்.அது அவர்களின் தொழில்.

நான் பலமுறை சொல்லியிருப்பதுபோல, சினிமா என் தொழில். தொழில்மட்டுமே. இங்கே எழுத்தாளன் எழுத்தாளனாக வாழமுடியாது. வேறெந்த தொழிலைவிடவும் எனக்கு நேரத்தை, பயணங்களுக்கான பணத்தை அளிப்பது சினிமா என்பதனால்தான் எனக்கு அதில் ஈடுபாடு. சினிமாவில் என் பங்களிப்பு என்பது கதைக்கட்டுமானத்தை உருவாக்க இயக்குநருக்கு உதவுதல், வசனம், அவ்வளவுதான். அதை இயக்குநர் கோரியதற்கு ஏற்பவே எழுதுகிறேன். இயக்குநர்கள் உகந்ததை படத்தில் சேர்க்கிறார்கள். என் தனிப்பட்ட கருத்துக்களென அவற்றில் ஏதுமிருப்பதில்லை. ஒட்டுமொத்தமாக படத்தின்மேல் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை

இயக்குநர்தான் படத்தின் ‘ஆசிரியர்’. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலையமைப்பு, இசையமைப்பு, ஒப்பனை என பிற அனைத்துமே இயக்குநருக்குச் செய்யப்படும் உதவிகள், சேவைகள் மட்டுமே. இயக்குநர் தன் தேவைக்கும் ரசனைக்கும் ஏற்க அவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறார். படத்தின்மேல் கட்டுப்பாடுள்ள ஒரே ஒருவர் இயக்குநர்தான். ஆகவே தங்கள் பங்களிப்பு சார்ந்து எவரும் தனிச்சாதனையை சினிமாவில் கோரமுடியாது. படம் வெற்றிபெற்றால் அந்த வெற்றியில் பங்கெடுத்து மகிழ்ச்சி அடையலாம். அதற்கும் அடிப்படை ஏதுமில்லை. வெற்றி என்பது முழுக்க முழுக்க முழுக்க இயக்குநருக்குரியது மட்டுமே. பெரிய நடிகர்களுக்காக கதை செய்யும்போது அவருடைய ஆளுமை, அவர் திரையில் தோன்றும்விதம் ஆகியவை கருத்தில்கொள்ளப்படும்.

இவற்றில் சர்க்கார் மட்டுமே அரசியல்படம். மற்ற இரண்டும் அரசியல்படங்கள் அல்ல, கேளிக்கைப்படங்கள்தான். அவற்றின் இயக்குநர்கள் தெளிவான சினிமாப்பார்வையும், வெற்றிகளின் தடமும் கொண்டவர்கள். அந்த சினிமாக்களை அவர்களே தீர்மானிக்கிறார்கள். ஆகவேதான் இத்தனை ஆண்டுகளாகக் களத்தில் நிற்கிறார்கள். அவர்களின் வெற்றிகள் அவர்களின் தனித்திறன் சார்ந்தவை மட்டுமே. அது நுட்பமாக வெகுஜன ரசனையை கணித்து வைத்திருப்பது, நினைத்ததை திரையில் கொண்டுவர உழைப்பது என்னும் இரண்டு இயல்புகள் சார்ந்தது.

இக்காரணத்தால்தான் நான் சினிமாக்களை என் படைப்புகள்  அல்லது நான்  பங்களித்தவை என்றுகூடச் சொல்லிக்கொள்வதில்லை. இந்த தளத்தில்  நான் எழுதும் சினிமாக்களைப்பற்றி ஏதும் வெளிவந்ததில்லை.

என் வாசகர்களும் முதிர்ச்சியானவர்கள், அவர்களுக்கும் இது தெரியும். பத்திரிகைகளின் சினிமாத் துணுக்குகளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமிருப்பதில்லை

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46
அடுத்த கட்டுரைவெண்முரசு கிண்டில் -சலுகை