‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-48

பகுதி ஏழு : காற்றன்

bowதெற்கெல்லையின் பன்னிரண்டாவது காவலரணின் காவலர்தலைவனாகிய சந்திரநாதன் அவனே தன்னை காணும்பொருட்டு வந்தது துர்மதனுக்கு வியப்பை அளித்தது. தெற்கு விளிம்பில் அமைந்த தன் பாடிவீட்டில் அவன் அன்றைய போரின் அறிக்கையை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் உடலின் புண்களுக்கு மருந்திட்டு வேது அளித்துக்கொண்டிருந்தனர் மருத்துவர். சிறு அம்புகளை அவர்கள் பிடுங்கும்போது அவன் முனகினான். அறைக்குள் கந்தகநீரின் எரிமணம் நிறைந்திருந்தது. சூழ்ந்து நின்றிருந்த படைத்தலைவர்கள் தங்கள் படைகளின் அழிவை அறிவித்துக்கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் தங்கள் படைகளின் அழிவையும் எச்சத்தையும் அறிவித்தனர். எட்டு காலாட்படையினருக்கு ஒரு வில்லவர் என களம்பட்டிருப்பதை அவன் பார்த்தான். விழிகளை சுருக்கியபடி “காலாட்படையினரின் இறப்பின் மடங்கு பெரிதாக உள்ளதே?” என்றான். “எப்போதுமே அவ்வாறுதான். நான்கு மடங்கு என்பது கணக்கு. இப்போது சற்று மிகுதி” என்று படைத்தலைவனாகிய துர்வீரியன் சொன்னான். துர்மதன் “எட்டு மடங்கு எனில் அதை நாம் புறக்கணிக்க முடியாது” என்றான். “அது உளச்சோர்வை உருவாக்கும். காலாட்படையினர் மிக எளிதில் அஞ்சி பின்னகரக்கூடும்.”

பிறிதொரு படைத்தலைவனாகிய உஜ்வலன் “அரசே, வில்லவர்கள் படைத்தொழில் பயின்றவர்கள். விரைந்துசெல்லும் தேரில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடையே இடைவெளி இருப்பதனால் அகலவும் இயலும். எனவே அவர்கள் களத்தில் அம்புகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும். காலாட்படையினர் குறைந்த பயிற்சி பெற்றவர்கள். மேலும் அவர்கள் ஒருவரோடொருவர் நெருங்கி களம் செல்கிறார்கள். எழுந்து பொழியும் அம்பு மழையிலேயே அவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்துவிடுவதுண்டு” என்றான்.

துர்மதன் “அவர்கள் கவசங்கள் அணிந்துகொள்கிறார்களே?” என்றான். “ஆம், பெரும்பாலும் அவை எருமைத்தோல் கவசங்கள். அரிதாகவே இரும்பு. அம்புகளிலிருந்து அவை ஓரளவே காக்கும்” என்றான் துர்வீரியன். துர்மதன் “இதற்கு ஏதேனும் செய்தாகவேண்டும். மூத்தவரிடம் பேசுகிறேன். காலாட்படையினர் மேலும் சற்று இடைவெளி விட்டு அகன்று வரலாம். அவர்களுக்கு சிறந்த கவசங்கள் அளிக்கப்படலாம்” என்றான். துர்வீரியன் “போர் தொடங்கி இது ஏழாவது நாள். இனிமேல் கவசங்களுக்கோ புதிய படைக்கலங்களுக்கோ நாம் ஒருங்கு செய்ய இயலாது” என்றான்.

அப்போதுதான் ஏவலன் வந்து தெற்கெல்லைக் காவலரணின் தலைவன் சந்திரநாதன் வந்திருப்பதாக சொன்னான். துர்மதன் “தெற்கெல்லைக் காவலனிடமிருந்து தூதா?” என்றான். “தூதல்ல அரசே, அவரே வந்திருக்கிறார்” என்றான் ஏவலன். “அவனேவா? காவலரணை விட்டுவிட்டா?” என்றபடி எழுந்த துர்மதன் படைத்தலைவரிடம் கையசைத்துவிட்டு அவனே வெளியே வந்தான். தெற்கெல்லைக் காவலன் அருகே வந்து வணங்கி “அரசரைப் பார்த்து செய்தி ஒன்றை அளிக்கவேண்டும். அதன் பொருட்டே வந்தேன். இங்கு தாங்களிருப்பதை அறிந்தேன்” என்றான். “சொல்க!” என்றான் துர்மதன்.

“அரசே, விதர்ப்ப நாட்டு அரசர் ருக்மி தன் படைகளுடன் கிளம்பி வந்திருக்கிறார். நம்முடன் சேரவிழைகிறார். அரசரிடம் அளிக்கும்பொருட்டு என்னிடம் ஓர் ஓலை அளித்திருக்கிறார்” என்றான் சந்திரநாதன். முதலில் துர்மதனுக்கு அவன் சொல்வதென்ன என்று புரியவில்லை. “யார்?” என்று மீண்டும் கேட்டான். குழம்பி “அவரா? ஆனால் விதர்ப்ப நாட்டு அரசர் பீஷ்மகர் அல்லவா?” என்றான். காவலன் “அறியேன். ஆனால் விதர்ப்ப நாட்டு அரசருக்குரிய முத்திரை ஓலையுடன் வந்திருக்கிறார்” என்றான். துர்மதன் ஒருகணம் தயங்கி “அவர் எங்கிருக்கிறார்?” என்றான். “தெற்கெல்லை காவல்மாடத்திலேயே காத்திருக்கிறார்” என்றான். “அவரது படைகள்?” என்றான் துர்மதன். “அவை மூன்று நாழிகைத் தொலைவுக்கு அப்பால் காத்திருக்கின்றன” என்றான் சந்திரநாதன்.

துர்மதன் பொறு என்று கைகாட்டி தன் பாடிவீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த படைத்தலைவரிடம் “படைத்தலைவர்கள் மூவர் தெற்கெல்லைக்கு செல்க! அங்கு விதர்ப்ப நாட்டு படை மூன்று நாழிகை அப்பால் நின்றுள்ளது. அது தான் நின்றிருக்கும் இடத்திலிருந்து ஓர் அடிகூட முன்னகரக்கூடாது. நமது தொலைவில்லவர்கள் காவல் மாடங்களிலும் அரண்களிலும் காத்து நிற்கட்டும். வில் அணியும் விரைவுப்புரவி அணியும் ஒருங்கி நிற்கவேண்டும்” என்று ஆணையிட்டான். அவர்கள் தலைவணங்கினர். அவர்கள் குழப்பமடைந்திருப்பது தெரிந்தது.

துர்மதன் வெளியே வந்து “அவரை அழைத்து வா!” என்றான். “அரசரை பார்த்துவிட்டு…” என்று சந்திரநாதன் தயங்க “வேண்டியதில்லை. அவரே அரசரிடம் பேசட்டும். இன்னும் சற்று நேரத்தில் படைசூழ் அமர்வு நிகழவிருக்கிறது. அரசர் அரியணையில் அமர்ந்து அவை கேட்பார். அதில் விதர்ப்பரே தன்னுடைய சொற்களை உரைக்கட்டும்” என்றான். காவலன் தலைவணங்கி கிளம்ப “பொறு” என்று துர்மதன் மீண்டும் சொன்னான். “அவரை நானே வந்து அழைத்து வருவதுதான் முறை. அவர் அரசர்” என்றான். சந்திரநாதன் “ஆம்” என்றான்.

துர்மதன் சென்று தன் புரவியிலேறிக்கொண்டான். சந்திரநாதனை தன்னை தொடரச் சொல்லிவிட்டு படைகள் நடுவே அமைந்த பலகைகள் விரவிய விரைவுப்பாதையில் புரவிக்குளம்படி தாளம் எழுப்ப விரைந்து சென்றான். செல்லும் வழியெல்லாம் அவன் உள்ளம் குழம்பிக்கொண்டிருந்தது. திரும்பிச்சென்று துச்சகனை அழைத்து வந்தாலென்ன என்று எண்ணினான். ருக்மியுடன் அணுக்கமான கௌரவன் அவன்தான். ருக்மியை இறுதியாக எப்போது பார்த்தோம் என எண்ணிப்பார்த்தான். உள ஓவியம் திரளவில்லை.

தெற்கெல்லையை அவர்கள் அடைந்தபோது புரவிகள் வியர்த்து மூச்சிறைத்துக்கொண்டிருந்தன. துர்மதன் இறங்கி தொடர்ந்து வந்த காவலனிடம் “அவர் எங்கிருக்கிறார்?” என்றான். திரும்பிவிடலாமா என்னும் எண்ணம் அப்போதும் ஏற்பட்டது. “காவலரணின் கீழ் அறையில்” என்றான் சந்திரநாதன். “நன்று” என்றபின் துர்மதன் தன் ஆடைகளை சீர்படுத்தியபடி சென்று காவலரணின் வாயிற்காவலனை அணுகி கைகளாலேயே அவனை விலகிப்போகும்படி காட்டிவிட்டு சிற்றறைக்குள் நுழைந்தான்.

அவைகளில் பார்த்திருந்தாலும்கூட அங்கே அமந்திருந்த முனிவர்தான் ருக்மி என்று புரிந்துகொள்ள சற்று பிந்தியது. நெஞ்சுக்குக் கீழ் தழைந்த செந்தழல் தாடியும், தோள்களில் இறங்கி இடைவரைக்கும் சென்ற சடைவிழுதுகளும், மெலிந்து ஒட்டிய முகமும், சினந்தவைபோல் கூர்கொண்டிருந்த விழிகளும், சற்றே கூன் விழுந்த நெடிய உடலும் கொண்ட அவரை ஒரு நாட்டின் அரசர் என்று எண்ணி கொண்டுசென்று பொருத்துவது இயலாததாக இருந்தது. துர்மதன் நெஞ்சில் கைகுவித்து வணங்கி “விதர்ப்பத்தின் அரசரை வணங்குகிறேன். நான் அஸ்தினபுரியின் பேரரசர் துரியோதனருக்கு இளையோனாகிய துர்மதன். அஸ்தினபுரியின் படை எல்லைக்குள் தாங்கள் வந்தது எங்கள் பேறு” என்றான்.

ருக்மி மறுமுகமன் எதுவும் உரைக்காமல் “நான் உமது மூத்தவரை பார்க்க விழைகிறேன், அதன் பொருட்டே வந்தேன்” என்றான். “இன்னும் இரு நாழிகையில் அவரது பாடிவீட்டிலேயே படைசூழ்கை அமர்வு நிகழும். அவர் அமர்ந்து சொல் கேட்பார். தாங்கள் அங்கு வந்து அவையிலேயே அவரிடம் பேசலாம்” என்றான் துர்மதன். ருக்மி ஒருகணம் எண்ணியபின் “அவையிலென்றால்…” என முனகி “அதுவும் நன்று” என்றான். “தங்கள் படைப்பிரிவுகள் இப்போதிருக்கும் இடத்திலேயே இருப்பது நன்று. மூத்தவரின் ஆணை வரை” என்றான் துர்மதன். “ஆம், அவை அங்கிருக்கும். நான் என் படைகளுடன் கௌரவதரப்பில் நின்று போரிட வந்துள்ளேன்” என்றான் ருக்மி.

துர்மதன் “ஆனால் தங்கள் தந்தை பாண்டவர்களை ஆதரிக்கிறார். தங்கள் உடன்பிறந்தாரான ருக்மரதரும் ருக்மகேதுவும் ருக்மபாகுவும் ருக்மநேத்ரரும் மறுதரப்பில் இருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் என்னுடன் இல்லை. நான் எனக்குரிய நிலத்தை பகுத்துக்கொண்டு நெடுநாட்களாகின்றன. குண்டினபுரிக்குள் நான் நுழைவதில்லை. போஜகடகத்தை தலைநகராகக்கொண்டு ஆள்கிறேன்” என்ற ருக்மி “கிளம்புவோம்” என்று எழுந்தான்.

துர்மதன் தெளிவுற நினைவுகூரமுடியாமல் தலையை விரல்களால் தட்டி “முதலில் தங்கள் தந்தை பீஷ்மகரும் தாங்களும் இங்கே எங்களுடன் சேர்வதாகத்தானே சொன்னார்கள்?” என்றான். “ஆம், ஆனால் அவருடனிருக்கும் குலத்தலைவர்கள் பன்னிருவரும் ஒரே குரலில் பாண்டவர்களிடம் சென்று சேரவேண்டும் என்றே சொன்னார்கள். தந்தைக்கு வேறுவழியில்லை” என்றான் ருக்மி. “ஆனால் அவருடைய சொல் என்னை கட்டுப்படுத்தாது. என் படைகள் வேறு.” உள்ளம் நிலையழிந்திருந்தமையால் அவன் செயற்கையான உரத்த குரலில் பேசினான்.

துர்மதன் ருக்மியின் பதற்றத்தை விந்தையாக நோக்கியபடி “வேறு எங்கிருந்து படைதிரட்டினீர்கள்?” என்றான். ருக்மி “என் எல்லைக்கு அப்பாலிருந்தும் படைதிரட்டினேன். ஆகவேதான் இத்தனை பிந்தினேன்… குலத்தலைவர்களில் மூவர் என்னுடன் இருக்கிறார்கள்” என்றான். ஏவலன் அருகே வந்து தலைவணங்க துர்மதன் திரும்பி ருக்மியிடம் “தங்களுக்கான தேர்…” என்றான். “தாழ்வில்லை. புரவியில் செல்வதே விரைவு” என்றான் ருக்மி. “நெடுந்தொலைவு. அங்கு சென்றபின் தாங்கள் களைத்து அவையில் அமரமுடியாமலாகலாம்” என்றான் துர்மதன். “நான் களைப்படைவதில்லை” என்று ருக்மி சொன்னான்.

ருக்மி விட்டிலொன்று தாவுவதுபோல புரவியிலேறிக்கொண்டான். புரவியில் உடன் செல்கையில் துர்மதனுக்கு அவனுக்கு கதை பயிற்றுவிக்கையில் துரோணர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. “உள்ளத்தின் விசையை உடல் தவறவிட்டு நின்றுவிடுகையிலேயே தசைகள் கொழுப்பேறி பருக்கின்றன. நதி விரைவழிந்து தேங்குவதுபோல. உள்ளத்தின் விசையை உடலும் அடைகையில் உடல் இருப்பதையே உள்ளம் உணராது. வாளில் பிடியே எடை மிக்கதாக இருக்கவேண்டும், உடல் உள்ளத்தை ஏந்தியிருக்கும் பீடம்.” அவன் ஓரக்கண்ணால் திரும்பி ருக்மியை பார்த்தபடி புரவியில் சென்றான்.

அவர்கள் துரியோதனனின் பாடி வீடு அமைந்த அரசவட்டத்தை அடைந்தபோது இரவு செறிந்து படைகள் முற்றமைந்துவிட்டிருந்தன. அதற்கேற்ப கலைந்து முழங்கிக்கொண்டிருந்த ஓசை சீரடைந்து மெல்லிய உள் முழக்கமென கார்வைகொண்டிருந்தது. துச்சலன் அரசவட்டத்தின் முதன்மைக்காவலரணில் இருந்தான். துர்மதன் இறங்கிச்சென்று அவனிடம் ருக்மி வந்திருப்பதை சொன்னதும் அவன் வெளியே வந்து வணங்கி முகமனுரைத்தான்.

“அவை முன்னரே கூடிவிட்டது, விதர்ப்பரே. படைசூழ்கையை பேசிக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் உள்நுழைவதற்கான தருணம் எதுவென நான் சென்று கேட்டு சொல்கிறேன். அதுவரை இக்காவலரணில் தாங்கள் இளைப்பாறலாம்” என்று துச்சலன் சொன்னான். ருக்மி கைவீசி “அமரவேண்டுமென்பதில்லை” என்று காவலரணின் முதல் தூணில் சாய்ந்து நெஞ்சில் கைகளைக் கட்டியபடி தொலைவில் காடு பற்றியதுபோல் தெரிந்த படைகளை நோக்கியபடி நின்றான்.

துர்மதன் அருகே நின்று அவன் முகத்தை நோக்கினான். மானுட முகங்களில் உணர்வுகளும் எண்ணங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதை அவன் கண்டிருந்தான். ஒற்றை உணர்வில் மாறாது நிலைத்த முகத்தை அப்போதுதான் பார்க்கிறான் என்று எண்ணிக்கொண்டான். என்ன உணர்வு அது? வஞ்சம்! போர்க்களத்தில் தன் மைந்தரை இழந்து சீற்றத்துடன் வில்லேந்தி வந்த சாத்யகியின் முகமா அது? அந்த உச்சகணம் அப்படியே சிலைத்ததுபோல. இவருள் இப்போது வஞ்சம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறதா என்ன? எவர் மீதான வஞ்சம்?

ஒருமுறை அவன் உள்ளம் நடுங்கியது. ஒருவேளை அது மூத்தவர் மீதுள்ள வஞ்சமாக இருக்கலாம். அவைக்குள் நுழைகையில் இவருடைய படைக்கலங்கள் அனைத்தையும் அகற்றிவிடவேண்டும். என் வாளுடன் இவருக்கு மிக அருகில் நின்றிருக்கவேண்டும். மூத்தவரை நோக்கி இவர் ஓர் அடி எடுத்து வைத்தால் இந்நெஞ்சைத் துளைத்து இவரை வீழ்த்திவிடவேண்டும் என்று துர்மதன் எண்ணிக்கொண்டான். அவ்வெண்ணம் அவனை இயல்படையச் செய்ய உடலை எளிதாக்கி மூச்செறிந்தான்.

மேலும் சற்று நேரம் அவனை கூர்ந்து நோக்கியபோது அவ்வஞ்சம் அப்போது எழும் உணர்வல்ல என்றே தோன்றியது. ருக்மி தன் உதடுகளால் மெல்ல ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். சுட்டு விரலை காற்றில் சுழித்தான். உடலை நிலையழியச் செய்து மெல்ல அசைந்தான். அவ்வப்போது திரும்பி துரியோதனனின் பாடிவீடு இருக்கும் திசையை பார்த்தான். அவனுக்குள் எண்ணங்கள் மாறிக்கொண்டிருப்பதை அவ்வசைவுகள் காட்டின. அவன் நிலைகொள்ளாமலிருந்தான். ஆனால் முகத்தின் ஆழுணர்ச்சி அவ்வண்ணமே இருந்தது.

நெடுங்காலமாக மாறாது கொண்டிருக்கும் உணர்ச்சி முகமாக மாறிவிடும் என்று அவன் பயின்றிருந்தான். பீஷ்மரின் முகத்தில் உறுதியையும் விதுரரின் முகத்தில் கவலையையும் கர்ணனின் முகத்தில் அகன்று நிற்கும் தன்மையையும் அவன் கண்டது உண்டு. ஆனால் அவை ஓடைக்கு அடியில் பாறை என ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கும் அன்றாட உணர்ச்சிகளுக்கு அடியில் நிலைகொண்டவை. இந்த முகத்தில் இந்த ஓர் உணர்வன்றி பிறிதேதும் இல்லை. தெய்வச்சிலைகளுக்குரிய மாறாமை. “மாறாமை என்பது தெய்வங்களின் இயல்பு. மானுடர் மாறுபவர் என்பதனால்தான் மாறாதவர்கள் தெய்வங்களாகிறார்கள். மாறா மானுடரும் தெய்வங்களே” கிருபரின் சொற்கள்.

இப்போது இவையெல்லாம் ஏன் எனக்கு நினைவுக்கு வருகின்றன என்று துர்மதன் வியந்தான். ருக்மியின் முகத்தை பார்ப்பது அவன் பதற்றத்தை பெருக்கிக்கொண்டிருந்தது. துச்சலன் அங்கிருந்து வருவதை கண்டான். ருக்மி திரும்பிப்பார்த்து தன் மேலாடையை இழுத்து சீரமைத்தான். அக்கணத்தில் சிறு அதிர்வென துர்மதன் ஓர் எண்ணத்தை அடைந்தான். இதே போன்று மாறா உணர்வில் நிலைத்த பிறிதொரு முகம் அவனுக்கு தெரிந்திருந்தது. எவர் முகம் அது? நன்கறிந்த முகம்! மாறாமையை தன் இயல்பெனக்கொண்ட தெய்வ முகம்! எவர் முகம் அது என அவன் உள்ளம் நெளிந்து துழாவித் தவித்தது.

bowதுச்சலன் அருகே வந்து தலைவணங்கி “தாங்கள் அவை புகலாம், விதர்ப்பரே” என்றான். ருக்மி தலையசைத்து முன்னால் செல்ல துச்சலன் பின்தொடர்ந்து செல்லும்படி துர்மதனிடம் கைகாட்டினான். துர்மதன் தலைவணங்கி ருக்மியை பின்தொடர்ந்து நடந்தான். ருக்மி பாடிவீட்டின் வாயிலை அடைந்ததும் அங்கு நின்ற காவலன் தலைவணங்கி உள்ளே சென்று அவன் வரவை அறிவித்து வெளியே வந்தான். ருக்மியின் முகத்தை அப்போது நோக்கியபோது அது வஞ்சமல்ல என துர்மதன் எண்ணினான். அது பிறிதொன்று, அவன் அறியாதது.

ருக்மி உள்ளே நுழைந்தபோது வாள் தொடும் தொலைவில் துர்மதனும் சென்றான். உள்ளே சென்ற ருக்மி அவையை ஒருமுறை விழியோட்டி நோக்கிவிட்டு துரியோதனனை தலைவணங்கினான். முகமனெதுவும் உரைக்காமல் “நான் கௌரவப் படைப்பிரிவுகளுடன் சேர்ந்து போரிடும் பொருட்டு வந்துள்ளேன், தார்த்தராஷ்டிரரே” என்றான். ஒருகணத்திற்குப் பின் துரியோதனன் விழிசுருங்க “போர் தொடங்கி ஆறு நாட்கள் முடிந்துவிட்டன” என்றான். “ஆம், நான் அறிவேன். என் படைப்பிரிவுகளை திரட்டுவதற்கு பொழுதாகியது” என்றான். “ஏன்?” என்று துரியோதனன் கேட்டான்.

“தாங்கள் அறிவீர்கள் என் தந்தைக்கும் எனக்குமான பூசலை. நான் போஜகடகத்தில் தனி நாடமைத்து தனிக்கொடியும் தலைநகரும் கொண்டு ஆள்வதே அவருக்கு எதிராகத்தான். இளைய யாதவன் என்னை சிறுமை செய்து என் தங்கையுடன் சென்று முப்பத்தாறாண்டுகள் கடந்துள்ளன. அன்று முதல் இன்று வரை ஷத்ரிய அவைகளில் அமரமுடியாதவனாகிவிட்டேன். அக்கீழ்மகனின் நெஞ்சைப் பிளந்து குருதிகொள்வேன் என்று வஞ்சினம் உரைத்தேன். அச்சொற்களை அணையா விளக்கென நெஞ்சில் ஏந்தி இதுகாறும் வாழ்ந்துளேன். தந்தையும் அன்று என் உணர்வுகளை புரிந்துகொண்டார். ஆனால் அவர் யாதவனுடன் போரிட விதர்ப்பத்தால் முடியாது என்னும் எண்ணம் கொண்டிருந்தார்.”

“அரசே, மீளமீள அரச அவைகளில் யாதவனுக்கு பெண்ணளித்தவர் என்று என் தந்தை சிறுமை செய்யப்பட்டார். ஆயினும் காலம் எளிதில் அனைத்தையும் மறக்க வைக்கிறது. இன்று அவர் அவர்களை ஆதரிக்கிறார். தன் மைந்தர்கள் நால்வரை அவர் பாண்டவர்களுக்கு ஆதரவாக படைகளுடன் அனுப்பியிருக்கிறார். நான் மறக்கவில்லை. மறப்பது எனக்கு எளிதும் அல்ல. என் வஞ்சம் நூறுமடங்கு நஞ்சும் கூரும் கொண்டுள்ளது. இளைய யாதவனை களத்தில் வென்று பழிகொள்ளவே இங்கு வந்தேன்” என்றான் ருக்மி.

“அவ்வஞ்சத்தை மறக்க முயன்றுளீரா?” என்று துரியோதனன் கேட்டான். “இல்லை” என்றான் ருக்மி. “என் முழு உயிர்விசையாலும் நெய்யூற்றி வஞ்சத்தை வளர்க்கவே முயன்றேன்.” துரியோதனன் “அது தங்கள் தோற்றத்தைப் பார்த்தால் தெரிகிறது. விதர்ப்பரே, இன்று இந்த அரியணையில் அமர்ந்து இவ்வுலகுக்கு நான் சொல்வதற்கு ஒரு சொல்லே உள்ளது, வஞ்சத்தால் எப்பயனும் இல்லை. எவ்வஞ்சமும் அது கொண்டவரைத்தான் முதலில் அழிக்கும். அது அனலின் இயல்பு. விரும்பி தன்னை ஏற்றுக்கொண்டவரை உண்டு நின்றெரித்து எச்சமிலாதாக்கி விண்மீள்வது அது” என்றான்.

ருக்மி அதை எதிர்பாராததனால் சொல் தளர்ந்து அவையை ஒருமுறை நோக்கிவிட்டு “என்னால் இளைய யாதவனை எதிர்க்க முடியும். ஏழு நாழிகைப்பொழுது தனியொருவனாக வில்விஜயனை தடுத்து நிறுத்த முடியும். அரிய அம்புக்கலைகளை கற்றிருக்கிறேன். நான் உங்கள் படைகளில் இணைவது உங்கள் வெற்றியை உறுதி செய்யும்” என்றான். “உங்களுடன் வந்துள்ள படைகள் எந்த உள நிலையில் இருக்கின்றன என்பது இப்போது நீங்கள் சொன்னதிலிருந்தே புரிகிறது. நீங்கள் உடன்பிறந்தாருக்கு எதிராக படை கொண்டெழுவதை அவர்கள் விரும்பவில்லை” என்றான் துரியோதனன்.

“அவர்களை விழைவும் அச்சமும் காட்டி திரட்டி அழைத்து வந்திருக்கிறீர். வஞ்சினம் உரைத்து வெறி கொண்டெழுந்த படைகளே இங்கு உளம் சோர்ந்து சிதைந்துள்ளன. உங்கள் விழைவும் அச்சமும் எத்தனை பொழுதுக்கு களம் நிற்கும்?” என்றான் துரியோதனன். எழாக் குரலில் ஆற்றல் வெளிப்பட “படைவல்லமையும் தோள் வல்லமையும் அல்ல ஊழ் வல்லமையாலேயே போர்கள் வெல்லப்படுகின்றன என்று உணர்ந்து இங்கு அமர்ந்திருக்கிறேன். நீங்கள் இந்த அவையில் அமர்வதற்கு எனது ஒப்புதல் இல்லை. திரும்பிச்செல்க!” என்றான்.

“நான்… ” என்று ருக்மி சொல்லெடுக்க “திரும்பிச்செல்க!” என்று துரியோதனன் உரக்க சொன்னான். “திரும்பிச்செல்லப் போவதில்லை. போருக்கென கிளம்பி வந்துவிட்டேன். போரில் ஈடுபட்டே திரும்புவேன்” என்றான் ருக்மி. “உங்கள் படை வல்லமை எனக்கு தேவையில்லை. உங்கள் போர்த்துணையையும் நான் விரும்பவில்லை” என்றான் துரியோதனன். “ஏன்?” என்று ருக்மி உரக்க கேட்டான். “நீங்கள் உங்கள் உடன்பிறந்தாருடன் போர்புரிய வேண்டியிருக்கும். விதர்ப்பர்கள் ஒருவரோடொருவர் கொன்று குவிக்க வேண்டியிருக்கும்” என்று துரியோதனன் சொன்னான்.

ருக்மி ஏளனத்தால் வளைந்த இதழ்களுடன் “அதைத்தானே இங்கே நீங்கள் இன்று செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்றான். “ஆம், ஆகவேதான் அதன் பொருளின்மையை இவ்வுலகுக்குச் சொல்லும் தகுதியுடையவன் ஆகிறேன். இனி என் ஒப்புதலுடன் ஒருபோதும் குலம் குலத்தோடும் குருதி குருதியோடும் போரிடமாட்டார்கள்” என்று துரியோதனன் சொன்னான். ருக்மி “என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிடில் அதை அவைச்சிறுமை என்றே கொள்வேன். ஏனெனில் நான் இங்கு வருவதை முரசறிவித்து குடியினருக்கும் நாட்டினருக்கும் சொல்லிவிட்டே கிளம்பினேன்” என்றான்.

அவன் குரல் தழைந்தது. “அரசே, இளைய யாதவர் மேல் நான் கொண்ட வஞ்சம் உலகறிந்தது. இத்தருணத்திற்காகவே இத்தனை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளுமெனக் காத்திருந்தேன். ஒவ்வொரு படைசூழ்கையாக பயின்றேன். நீங்கள் என்னை திருப்பி அனுப்புவது என் இலக்குகளை முற்றழிப்பது. என் வாழ்வையே பொருளற்றதாக்குவது. அளிகூருங்கள், இதை நான் ஒரு அருட்கொடையெனக் கோருகிறேன். நான் உங்கள் படைகளுடன் நிற்கவேண்டும். அந்த யாதவ இழிமகனை எதிர்கொள்ள வேண்டும். அவனை நான் கொல்ல வேண்டும். அன்றி அவன் கையால் நான் மடியவேண்டும். அதுவே என் குடிகளுக்கு முன் வீரனென்றும் ஆண்மகனென்றும் எழுந்து நிற்கும் தருணம்.”

துரியோதனன் “உம்மை என்னுடன் ஏற்றுக்கொள்ளாததற்கான அடிப்படையே இப்போது நீங்கள் சொன்னதுதான். இளைய யாதவருக்கு எதிரான வஞ்சத்துடன் எழுந்திருக்கிறீர்கள். இம்மண்ணில் எவரேனும் அவருக்கெதிரான வஞ்சத்தை நிறைவேற்ற இயலுமா என்ன? நீர் மலையில் தலைமுட்டி அழிகிறீர். அதற்கு களமொருக்குவதல்ல என் பணி” என்றான். ருக்மி சீற்றத்துடன் “நீங்களும் இங்கு யாதவருக்கு எதிராகவே போர்புரிகிறீர்கள். உங்களை அவர் முற்றழிப்பார். அது பசி கொண்ட பாம்பு, தீண்டி குறிவைக்கும், விடாது தொடர்ந்துவரும்” என்றான் ருக்மி.

துரியோதனன் புன்னகையுடன் “அறிந்துளீர்! நன்று! நானும் அதை அறிந்துளேன். எழுந்தபின் அமைவது என் இயல்பல்ல என்பதனால் இது என் வழி. உமக்குரியதல்ல அது” என்றான். ருக்மி எண்ணியிராக் கணத்தில் குரல் உடைந்து தளர உடல் வளைத்து “நான் என்ன செய்யவேண்டும்? இன்று நான் இயற்றக்கூடுவதென்ன? அதை சொல்க!” என்றான். “சென்று அவர் அடிபணிக! வஞ்சம் கொண்டேனும் இத்தனை நாள் அவரை நாளும் எண்ணியிருக்கிறீர். அதனாலேயே அவர் அருளைப்பெறும் தகுதி கொண்டிருக்கிறீர். அவருக்கு ஊர்தியாகுக! அவர் கையில் படைக்கலமாகுக! அவரால் முழுமை கொள்வீர்” என்று துரியோதனன் சொன்னான்.

ருக்மி “இதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. நான் அங்கு சென்று அடிபணிவதென்பது என் வாழ்க்கையின் ஒவ்வொரு எண்ணத்தையும் நானே மறுப்பதுபோல” என்றான். துரியோதனன் “வந்த பாதையை ஒவ்வொரு அணுவும் என முற்றிலும் மறுத்து திரும்பிச்செல்லாமல் எவரும் மெய்மையை அடைவதில்லை, விதர்ப்பரே” என்றான். “இத்தகைய சொற்களை நான் வெறுக்கிறேன். இவை மானுடரை சிறுமை செய்கின்றன. புழுதியின் பொடியாக மாற்றுகின்றன” என்றான் ருக்மி. “சிறுமையின் எல்லை வரை செல்லாமல் எவரும் முழுமையை உணர்வதில்லை. இந்தக் களம் ஒவ்வொருவரும் தங்கள் சிறுமையை உணர்வதற்கு உகந்தது” என்று துரியோதனன் சொன்னான்.

“நேற்று இரவு களம்பட்ட என் உடன்பிறந்தாரின் கவசங்களையும் கங்கணங்களையும் என்னைச்சுற்றி பரப்பி வைத்து ஒவ்வொன்றையும் எடுத்து நெஞ்சிலும் தலையிலும் சூடி விழிநீர்விட்டு கலுழ்ந்தேன். அப்போது அறிந்தேன் புழுதிப்பொடி மட்டுமே நான் என. அதற்கப்பால் எதுவுமே இல்லை. அத்தகைய பெரும் இழப்புகளுக்கு ஆளாகாமல் அதை நீரும் உணரமுடியுமெனில் நல்லூழ் கொண்டவர் நீங்கள்” என்றான் துரியோதனன். புன்னகையுடன் மீசையை நீவியபடி “இவ்வுலகில் ஒவ்வொருவரிடமும் கைபற்றி கண்ணீர்விட்டு தோள் அணைத்து நான் சொல்லவிருப்பது இது ஒன்றே. புழுதிப்பொடியென்று உணர்க! அறிதல் அனைவருக்கும் இயல்வது, உணர்தல் தெய்வங்களால் அளிக்கப்படுவது. அறிந்ததை தவம்செய்து உணர்க! இல்லையேல் தெய்வங்கள் அதை குருதி சிந்தி உணரச்செய்யும்” என்றான்.

பதற்றத்துடன் கைகள் அலைபாய அவையை சூழநோக்கியபின் “இறுதியாக என்ன சொல்கிறீர்கள்?” என்று ருக்மி உரத்த குரலில் கேட்டான். “இந்த அவையில் எவ்வகையிலும் நீங்கள் அமர இயலாது. கௌரவப் படைகளில் விதர்ப்பத்திற்கு இடமில்லை. இளைய யாதவர் மேல் வஞ்சமழியமாட்டீர் என்றால், போர் புரியத்தான் போகிறீர் எனில், அது உங்கள் ஊழ். அதன் பொருட்டு எங்கள் மேல் ஏறி நீர் நின்றிருக்க இயலாது. செல்க!” என்றான் துரியோதனன். சீற்றத்துடன் உடல் தத்தளிக்க “இது அவைச்சிறுமை! விதர்ப்பம் தூசியென தட்டி விலக்கப்படுகிறது. பெரும்புகழ் கொண்ட நாடு என்னுடையது. பாரதத்தின் பெருவீரர்களிலொருவனாக அறியப்பட்டவன் நான். எனது படையுதவி உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று கருதினீர்கள் என்று உங்களைச் சூழ்ந்திருக்கும் ஷத்ரியர்கள் எண்ணுவார்கள் என்றால் ஆயிரம் ஆண்டுகாலம் இந்தச் சிறுமை எங்கள் மேல் தங்கும். சூதர் சொல்லில் இது பெருகும். எங்கள் கொடிவழிகள் இதை நாணும்” என்றான்.

“இவையனைத்தும் வெறும் உளமயக்குகளே. காலத்தின் பொருட்டும், குடியின் பொருட்டும், சொல்லின் பொருட்டும் ஒருவன் வாழ்வானெனில் அவன் இருளையே சென்றடைவான். உள்ளிருக்கும் ஒளியின் பொருட்டு வாழ்க! இவை அவ்வொளியை மறைக்கும் புகை. செல்க!” என்றான் துரியோதனன். மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்து பின் சீற்றத்துடன் தன் சடைப்புரிகளை அள்ளி பின்னால் வீசி ருக்மி திரும்பிச்சென்றான். துர்மதன் அவனை தொடர்ந்து செல்லப்போக துரியோதனன் “இளையோனே, தெற்கு படைப்பிரிவின் கணக்குகளை சொல்” என்றான். துர்மதன் தலைவணங்கினான்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைதற்குறிப்பேற்றம்
அடுத்த கட்டுரைகுடும்பத்திலிருந்து விடுமுறை-கடிதம்