‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46

bowபாண்டவப் படையின் நடுவே பாஞ்சால அக்ஷௌகிணியின் ஏழாவது புரவிப்படையின் பரிவீரனாகிய பீலன் அனிலையெனும் பெரும்புரவியின் மீது அமர்ந்திருந்தான். வலக்கையில் நீண்ட குத்துவேலை தண்டை நிலத்தூன்றிப் பற்றி இடக்கையால் கடிவாளத்தை தளர்வாகப் பிடித்து சேணத்தில் கால்களை நுழைத்து உடல் நிமிர்த்தி நீள்நோக்கு செலுத்தி அசையாச் சிலையென காத்திருந்தான். அவனுக்கு முன்னால் நான்கு அடுக்குகளுக்கு அப்பால் படைகளின்  பொருதுமுகத்தில் இரு எடைமிக்க இரும்புத்தகடுகள் உரசிக்கொள்வதுபோல பேரோசையும் அனல்பொறிகளென அம்புகளும் எழுந்துகொண்டிருந்தன.

ஆடியை நோக்கும் ஆடியிலென இருபுறமும் புரவிகளின் நேர்நிரை விழி தொடும் எல்லை வரை அகன்று சென்றது. அவன் அந்த எல்லையின்மையை உளம்தவிர்த்து தன் படைப்பிரிவை மட்டும் எண்ணத்தில் நிறுத்தினான். கங்கைக்கரையில் நீண்ட கொடிக்கயிற்றில் புலத்தியர் உலரவிட்ட ஆடைகள்போல அவை உள்ளதாக எண்ணிக்கொண்டான். புரவிகளின் வால்கள் சுழன்றுகொண்டே இருந்தன. அவை உடல் எடைமாற்றியும் பொறுமையிழந்தும் அசைந்தன. அவற்றின் கவசங்களும் மணிகளும் உரசும் ஒலிகளுடன் படைக்கல ஒலிகளும் இணைந்து சாலையில் வண்டிகள் பெருகிச்செல்லும் ஓசை என கேட்டுக்கொண்டிருந்தன.

அப்புரவிகள் அனைத்திலும் அனிலையே உயரமானது. எடையும் விசையும் கொண்டது. ஆகவே தேர்ந்த பரிவீரனாகிய பீலனுக்கு அது அளிக்கப்பட்டது. அவன் அதைப்பற்றி பெருமிதம் கொண்டிருந்தான். எப்போதும் முதல்நிரையில் தானும் புரவியும் நிறுத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அவனுடைய படைப்பிரிவு சீராக அணிவகுத்துச் செல்கையில் நோக்கும் படைத்தலைவர்களின் விழிகள் அனிலையைக் கண்டு விரிவதை அவன் ஒருபோதும் தவறவிடுவதில்லை. அப்போது அவன் உடல் மேலும் நிமிரும். அவர்களில் பலர் பின்னர் கொட்டிலுக்கு வந்து அனிலையை பார்த்துச் சென்றதுண்டு. துருபதரே இருமுறை கொட்டிலுக்கு வந்து அதை தொட்டு வருடிவிட்டுச் சென்றார்.

பாஞ்சாலப் படை உபப்பிலாவ்யத்திற்கு வந்த பின்னர் நகுலன் மாதமிருமுறையேனும் அனிலையை நோக்க வருவான். முதல்நாள் நகுலன் அணுகியதுமே நெடுநாட்களாக அறிந்த ஒருவனை நோக்கி உளம்பாய்வதுபோல் அனிலை நிலையழிந்து கட்டுக்கயிற்றை இழுத்து உடல்திருப்பி மெய்விதிர்த்து கனைப்போசை எழுப்பியது. அவன் வந்து அதன் பிடரியில் கைவைத்ததும் திரும்பி தன் பெருந்தலையை அவன் தோள்மேல் வைத்து அழுத்தி அவன் மணம் முகர்ந்து மூச்செறிந்தது. ஒவ்வொரு முறையும் அவன் வருவதற்கு முன்னதாகவே, அன்று காலையிலேயே அது அவனுக்காக உளமொருங்கி நிலையழிந்து குளம்புமாற்றி மிதித்தும் தலைதாழ்த்தி மூச்சுசீறியும் பிடரிகுலைத்தும் காத்திருக்கும். நகுலன் வரும் நாள் அதற்குத் தெரியும் என பீலன் எண்ணிக்கொண்டதுண்டு. ஆனால் நகுலன் சீரான நாளிடையில் வருவதில்லை என்பதை பின்னர் நோக்கியபோது புரவி எப்படி அதை அறிகிறது என அவன் வியப்புறுவான்.

அவன் தந்தை அவனிடம் “புரவி அறிவனவற்றை மானுடர் அறியவியலாது. விலங்குகள் கொள்ளும் அறிவை மானுடரால் விளக்கவே இயலாது. அவை பேரன்பால் மெய்யுணர்கின்றன” என்றார். அனிலையை அவன் தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு முறையும் அந்தத் திகைப்பை அடைவான். அதற்குள் வாழ்வது எது? வலியும் நோயும் பசியும் இறப்பும் அதற்குமுண்டு. ஆனால் துயரில்லை, கவலையுமில்லை. மானுடரை விட தெய்வங்களுக்கு உகந்த ஊர்தியாக அது இருப்பது அதனால்தான் போலும். மானுடரில் நோக்கிலேயே அடிமையும் மிடிமையும் கொண்ட புல்லர்களை அவன் கண்டதுண்டு. புரவிகளில் நோயுற்றும் உணவின்றியும் நொய்ந்தவற்றையே கண்டிருக்கிறான். நிமிர்விலாத புரவியென ஏதுமில்லை. கால்மடித்து ஒருக்களித்துப் படுத்து தலைநிமிர்ந்து இளவெயில் காய்ந்து விழிமூடி அசைபோட்டுக்கொண்டிருக்கும் புரவியின் அழகு அவனை விழிநீர் கசிய வைப்பதுண்டு. பேரரசர்கள் அரியணையில் அமர்கையில் மட்டுமே எழும் நிமிர்வு அது.

புரவிச்சாலையில் பிறந்து வளர்ந்தவன் அவன். அவன் தந்தை சுபாங்கர் தேர்ந்த பரிமருத்துவர். அவர்களின் குலமே பரிமருத்துவத்தில் ஈடுபட்டு தலைமுறைகளாக அவ்வறிதலைத் திரட்டி கையளித்து சேர்த்தது. அவர்கள் உத்கலத்திலிருந்து பாஞ்சாலத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள். முன்பு சோனக நாட்டிலிருந்து புரவிகள் உத்கலத்தின் துறைமுகங்களில் வந்திறங்குகையில் அவற்றை வாங்கி நெடுந்தொலைவிற்கு கொண்டு சென்று பிறநாடுகளில் விற்கும் தொழிலை செய்துவந்ததனர் பலர். அவன் குலம் சோனக மருத்துவர்களிலிருந்து அவர்கள் பரிமருத்துவத்தை கற்றுக்கொண்டது. வணிகர்கள் ஊர்திரும்பிவிட்ட கார்காலத்தில் மருத்துவர்களுக்கான தேவை மிகுந்திருந்தது.

நான்கு கால்கள் கொண்டவை எனினும் யானையும் பசுவும் எருமையும் அத்திரியும் கழுதையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. அவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது புரவி. பிற விலங்குகளின் தசைகள் முரசில் இழுத்துக் கட்டப்பட்ட தோல் போன்றவை. புரவியின் தசை வில்லில் முறுகி நின்றிருக்கும் நாண். பிற விலங்குகளை நிற்கவைத்தோ அமரவைத்தோ படுக்கவைத்தோ மருத்துவம் பார்க்கலாம். புரவி நின்றிருக்கையிலும் விரைந்தோடிக்கொண்டிருப்பதென்றே அதன் உடல் அமைந்திருக்கும். விரைந்து புண் ஆறும். ஆறாப் புண் உயிர்குடித்துச் செல்லும். புண்பட்ட, நோயுற்ற புரவி அதுவே தான் உயிர்வாழவேண்டுமென்று எண்ணவேண்டும். அப்புண்ணை குளிர்விக்க வேண்டுமென்று அதனுள் வாழும் தெய்வங்கள் கருதவேண்டும்.

புரவி மானுடரைப்போலவே எண்ணங்களாலானது. ஐயமும் தயக்கமும் ஆறாச் சினமும் கொண்டது. ஆனால் வஞ்சமற்றது, ஆகவே துயரற்றது. மறதி இல்லாதது, ஆகவே கடந்தகாலமற்றது. “புரவி பேணுபவன் ஒவ்வொரு கணமும் உணரவேண்டியது ஒன்றுண்டு, தன்னைவிட உடலால் உள்ளத்தால் உள்வாழ்வதனால் பலமடங்கு மேம்பட்ட ஒன்றுடன் அவன் உரையாடிக்கொண்டிருக்கிறான். மண்ணில் பெருகி நிறைந்துள்ள உயிர்க்குலங்கள் பிரம்மத்தின் வடிவங்கள். எண்ணிலாக் குணங்கள் நிறைந்த பிரம்மத்தின் ஒவ்வொரு இயல்பும் ஓர் உயிர். மானுடன் பிரம்மத்தின் விழைவின் ஊன்வடிவு. புரவி அதன் விசையின் உயிர் கொண்ட உடல். புரவி வடிவிலேயே காற்று புவியில் தன்னை உடலென நிகழ்த்திப்பார்க்கிறது. எண்மூன்று மாருதர்களும் புரவியுடலில் குடிகொண்டுள்ளனர் என்றறிக!” என்றார் தந்தை.

புரவி மருத்துவன் காற்றுக்கு மருந்திடுபவன். புரவி விலங்குகளில் இளந்தளிர். மலர்களில் அது வைரம். புரவி மீதுள்ள பற்று அவன் குடியினரை பிற அனைத்திலிருந்தும் விலக்கியது. பித்துகொண்டவர்களாக அவர்கள் புரவியைப்பற்றி மட்டுமே பேசினர். புரவிகளுடன் வாழ்ந்தனர். புரவிகளை கனவு கண்டனர். அவர்களின் தெய்வங்களும் புரவி வடிவிலேயே அமைந்திருந்தன. இருபத்துநான்கு புரவி வடிவ மாருதர்களுக்கு மேல் அமைந்த ஹயக்ரீவன் அவர்களின் ஆலயங்களில் அமர்ந்து அருள்புரிந்தான். அவர்களின் குடியில் புரவிகளின் பெயரே மைந்தருக்கும் இடப்பட்டது. மண்மறைந்த புரவிகள் மைந்தராகவும் புரவிக்குருளைகளாகவும் அவர்களிடையே மீண்டும் திகழ்ந்தன.

ஆறு தலைமுறைக்கு முன் அவருடைய மூதாதை ஒருவர் புண்பட்ட புரவியின் ஊன் திறந்த வாயை தைத்துக்கொண்டிருந்தார். புண்ணை தைப்பதற்கு முன் அப்புரவியிடம் அதை அறிவித்து ஒப்புதல் பெற்றாகவேண்டும். ஏழு முறை புண்ணைத் தொட்டு ஊசியையும் நூலையும் அதன் முன் காட்டி அதன் விழியசைவை கண்டபின்னரே முதல் கண்ணியை குத்திச் செலுத்தி எடுத்து முடிச்சிடவேண்டும். அன்று அந்த மூதாதை களைத்திருந்தார். பொழுது தொடங்கியது முதல் அவர் மருந்திட்டு தைக்கும் நூறாவது புண் அது. அப்பால் கலிங்கத்திற்கும் உத்கலத்திற்கும் நடுவே அம்பொழியா பெரும்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. புரவிகள் புண்பட்டு வந்துகொண்டே இருந்தன.

தன் உதவியாளனிடம் சினத்துடன் ஏதோ கூறிய பின் அருகிருந்த கந்தகம் கரைத்த நீருக்குள்ளிருந்து நூல் கோத்த ஊசியை எடுத்து புரவியின் முன் தோளிலிருந்த ஊன்வாயை இடக்கைவிரலால் சேர்த்துப் பற்றி வலக்கை விரல்களால் ஊசியைக் குத்தி தூக்கினார். சினந்து திரும்பிய புரவி அவர் தோள் தசையைக் கடித்துத் தூக்கி அப்பாலிட்டது. பின்னர் எழுந்து விரைந்தோடி அப்பால் சென்று நின்று நடுங்கியது. மூதாதையின் உதவியாளர்கள் சென்று அவரைத் தூக்கி எடுத்தனர். புரவியின் கடிபட்டு தசைகிழிந்து குருதி கொட்டிக்கொண்டிருந்தது. படிக்காரம் கரைத்த நீரால் அதை மும்முறை கழுவி, கந்தகப் பிசினால் நீவி மெழுகுத் துணியால் கட்டிட்டு அவரை மெல்ல பற்றி இல்லத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்புரவி தனக்குரிய மரத்தை கண்டடைந்து அதில் உடல் சாய்த்து நின்று முன்வலக்கால் தூக்கி விழிமூடி தலை தாழ்த்தியது. அதன் தசைகள் ஒவ்வொன்றாக நாண்தளர்ந்தன. மூன்று பகல் அவ்வாறே அது நின்றிருந்தது. புண்ணிலிருந்து குருதி ஒழுகி மறைய, உடல் நடுங்கி சோர்ந்து, பெருந்தலை எடைமிகுந்து மண்தாழ்ந்து, நீரிலாதுலர்ந்த கருமூக்கு மண்ணில் ஊன்ற, செவிகள் மடிந்து முன் தொங்க, நீர்வடிந்து காய்ந்த விழிகள் அசைவிழந்து வெறிக்க, முன்கால் மடித்து மண்ணில் அமைந்து பக்கவாட்டில் சரிந்து விழுந்து, தோல்பை என வயிறு எழுந்தமைய, புழுதிபறக்க மூச்சிரைத்து, மெல்ல அடங்கி கமுகுப்பூக்குலை வாலைச் சுழற்றி ஓய்ந்தது.

அம்மூன்று நாட்களும் தன் இல்லத்தில் கடும்காய்ச்சலில் உடல்சிவந்து, நினைவழிந்து, நாவில் பொருளிலாச் சொற்கள் எழ, அவ்வப்போது வலிப்பில் கைகால் இழுத்துக்கொள்ள, இறப்பு நோக்கி சென்றுகொண்டிருந்தார் மூதாதை. புரவி இறந்த மூன்றாவது நாழிகையில் அவரும் உயிர்துறந்தார். அப்புரவியுடன் சேர்த்து அவரையும் மண்ணில் புதைத்தனர். நாற்பத்தியோராவது நாள் நிமித்திகன் கல்பரப்பி கோள்நோக்கி கணித்து அவர் செய்த பிழையென்னவென்று உணர்த்தினான். அவர் குடியை குலம் விலக்கி வைத்தது. மூன்றாண்டுகள் பிறிதொரு நிலத்திற்குச் சென்று அங்கே பரிபேணி பிழைநிகர் செய்து மீளவேண்டுமென்று ஆணையிட்டது.

இறந்த மூதாதையின் மைந்தர் கபிலர் தன் மூன்று மனையாட்டிகளுடனும் பன்னிரு மைந்தருடனும் உத்கலத்திலிருந்து கிளம்பி பாஞ்சாலத்திற்கு வந்தார். அன்று பாஞ்சாலம் பயிலா பழங்குடிகள் ஒருவரோடொருவர் பூசலிட்டுப் பரவிய மலை நிலமாக இருந்தது. ஆண்டுக்கு இருமுறை ஏழுமடங்கு பெருகும் ஐந்து நதிகளின் சதுப்பில் அவர்கள் கோதுமையும் கரும்பும் பயிரிட்டனர். நதிகளினூடாக வந்துசேரும் பொருட்களை மலை மடம்புகளுக்குள் அமைந்த சந்தைகளுக்கு கொண்டுசெல்லும்பொருட்டு அத்திரிகளை பேணினார்கள். சுழிப் பிழையாலும், காலொருமை இன்மையாலும் போருக்கும் பயணத்திற்கும் ஒவ்வாதவை என தவிர்க்கப்பட்ட புரவிகளை வணிகர்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டு வந்து பாஞ்சாலப் பழங்குடிகளுக்கு விற்றனர். அவை பிறிதொரு வகை அத்திரிகள் என்றே அக்குடிகள் எண்ணின. அத்திரிகளை நிலமும் நீரும் காற்றும் ஒளியுமே பேணின.

அங்கு வந்து சேர்ந்த கபிலர் இருபுறமும் சுமைதூக்கியபடி மலைவிளிம்புகளினூடாக கொடிபோல் சுற்றிப்படர்ந்திருந்த சிறுபாதைகளில் சென்றுகொண்டிருந்த புரவிகளை கண்டார். அவற்றில் பல புரவிகள் நோயுற்றிருந்தன. முறையாக பேணப்படாமையால் உடற்குறைகள் பெருக வலிகொண்டு துயருற்றிருந்தன. அவற்றை பேணுவதெப்படி என்று அவர் அம்மக்களுக்கு கற்பித்தார். “புரவி வானுக்குரியது. வேள்விக் களத்திலெழும் அனலுக்கு நிகரானது புரவியின் உடல். அதை அவியிட்டு, நுண்சொல் உரைத்து வளர்க்கவேண்டும். மண்ணுக்கு கைப்பிடி விதையை அளியுங்கள், களஞ்சியம் நிறைய அன்னத்தை அது அளிக்கும். அனலுக்கு அவியளியுங்கள், மண் குளிர்ந்து பெருகும் மழையை அது அளிக்கும். புரவிக்கு உங்கள் அன்பை அளியுங்கள், திசைகளைச் சுருட்டி உங்கள் காலடிகளில் வைக்கும். எதிரிகளுக்கு முன் உங்கள் காவல்தெய்வமென எழுந்து நின்றிருக்கும். புரவியை அறிந்தவர்கள் மண்ணில் எங்கும் தோற்பதில்லை” என்று அவர் கூறினார்.

புரவி பாஞ்சாலத்தில் பெருகலாயிற்று. ஏழு தலைமுறைகள் கடந்தபோது பாஞ்சாலம் ஆற்றல்மிக்க ஐந்து குடிகளின் நிலமாக மாறியது. சூழ்ந்திருந்த நாடுகள் அனைத்தும் அவர்களை அஞ்சின. நகரங்களும் கோட்டைகளும் சாலைகளும் சந்தைகளும் என அந்நாடு செழித்தது. அதன் நடுவே காம்பில்யம் அருமணி ஆரத்தில் வைரமென பொலிந்தது. அதன்பின் அவர்கள் அங்கிருந்து திரும்பிச்செல்லவில்லை. பாஞ்சால அரசர்களால் பேணப்பட்டு அவர்களின் குலம் பெருகியது. நூற்றெட்டு குடிகளாகி நாடெங்கும் பரவியது. கபிலகுலத்தவர் ஒருவரேனும் ஒரு நகரியில் இருந்தாகவேண்டும் என முறையிருந்தது.

அவன் தந்தையின் தந்தை ஊர்வரர் பாஞ்சாலத்தின் தென்னிலத்தில் புண்யகுண்டம் என்னும் ஊரில் குடியேறி அங்கே நிலைகொண்டார். அவன் தன் தந்தைக்கு எட்டாவது மைந்தன். அவனுக்கு இளமையிலேயே போரில்தான் ஆர்வமிருந்தது. மருத்துவ நூல்கள் உளம்புகவில்லை. புரவித் தொழிலுடன் போர்க்கலையும் பயின்றபின் அவன் வாழ்வு தேடி காம்பில்யத்திற்கு சென்றான். அங்கே அரிய புரவிகள் கொண்ட பெரும்படை ஒன்றிருப்பதை அவன் அறிந்திருந்தான். அவன் அரண்மனையை அடைந்து அரசவைக்குச் சென்று பணிகோரினான். அவனைக் கண்ட முதல்நாளே திருஷ்டத்யும்னன் “பெரும்புரவி ஒன்று கொட்டிலில் உள்ளது. தனக்கான வழிகள் கொண்டது. அதை அடக்கி ஆளும்பொருட்டு ஒரு பரிவலரை தேடிக்கொண்டிருந்தோம். நீர் அமைந்தீர்” என்றான்.

அவனுடைய ஆணையைப் பெற்று பீலன் கொட்டிலுக்குச் சென்றான். கொட்டில் காவலனாகிய பப்ரு அவனிடம் “நீரா? இளையோனாக இருக்கிறீர். அனிலை சற்று கட்டற்றது” என்றார். அவன் “நான் உத்கலத்தின் கபிலகுலத்தவன்” என்றான். பப்ரு ஒருகணம் வெறித்து நோக்கியபின் “வருக, கபிலரே” என எழுந்தார். அவனுடைய மணத்தை அறிந்ததும் அனிலை மூச்சுசீறி பெரிய குளம்புகளை கொட்டிலின் கற்தரையில் முட்டியது. அவன் அதை அணுகி சற்று அப்பால் நின்று தன் உள்ளத்தால் அதனுடன் உரையாடலானான். “என் அன்னையே, நான் எளியவன். உன்னை பேணும்பொருட்டு வந்துள்ள அடியவன். உன் காலடிகளில் என் வாழ்க்கையை நிறைவுசெய்ய விழைபவன். எனக்கு அருள்க! என்னை உன்னருகே அணுகவிடுக!”

மீண்டும் மீண்டும் உதடுகள் மெல்ல அசைய அதை சொன்னபடி அருகே சென்று அதன் கழுத்தில் தொட்டான். தொடப்போன இடம் முன்னரே விதிர்த்தது. அனிலை திரும்பி அவன் தலைக்குமேல் தன் தலையை தூக்க அதன் எச்சில் வழிந்து அவன் மேல் விழுந்தது. அவன் முகம் மலர்ந்து அண்ணாந்து நோக்கி “அன்னையே, வணங்குகிறேன்” என்றான். பப்ருவிடம் “அன்னை என்னை ஏற்றுக்கொண்டுவிட்டாள்” என்றான்.

bowஅனிலை நான்கு அகவை வரை குழவி என்றும் கன்னி என்றும் கொட்டிலில் நின்றாள். இனிய விளையாட்டுத் தோழியாகவும் விரைவுக்கு மேல் விரைவெடுக்கும் விசைகொண்டவளாகவும் பரிவலர் அவளை எண்ணியிருந்தனர். கருவுறுவதற்காக அவளை பொலிக்குதிரைகளை நோக்கி கொண்டுசெல்லத் தொடங்கியபோதுதான் அவள் இயல்பு மாறத்தொடங்கியது. முதல் முறையாக அவளை பொலிநிலைக்கு கொண்டுசென்ற ஏவலர் அதன் வாயிலிலேயே முன்காலை அழுந்த ஊன்றி, மூக்குத்துளைகள் விரிய, விழிகளை உருட்டி நின்றுவிட்டதை கண்டனர். அவள் உடல் முழுக்க தோல் சிலிர்த்துக்கொண்டிருந்தது.

அவர்கள் மெல்ல கழுத்திலும் விலாவிலும் தட்டி “செல்க! செல்க! என் அரசியல்லவா? என் இனிய மகளல்லவா?” என்று நற்சொல் உரைத்தனர். துருத்தியென மூச்சுசீறி அனிலை மீண்டும் பின் அடி எடுத்து வைத்தாள். “செல்க!” என்று கடிவாளம் பற்றி இழுத்தார் பரிவலரான ருத்ரர். தலையால் ஓங்கி அறைந்து அவரைத் தூக்கி அப்பால் வீசி அவர் உதவியாளரை விலாவால் தட்டித் தள்ளிவிட்டு நான்கு குளம்புகளும் நிலத்தில் அறைந்து ஒலி எழுப்ப விரைந்தோடி மூடியிருந்த கொட்டில் வேலியை தாவிக்கடந்து வந்து தன் நிலையை அடைந்து உள்ளே சென்று நின்றிருந்தாள்.

அவர்கள் இருவரும் மூச்சிரைக்க ஓடி வந்தபோது கொட்டில் நிலையில் அவள் காய்ச்சல் கண்டதுபோல் நடுங்கிக்கொண்டிருப்பதை பார்த்தனர். ருத்ரர் அருகே வந்தபோது மூச்சு சீற விழிகளை உருட்டி அவள் திரும்பிப்பார்த்தாள். ருத்ரர் அதிலிருந்த குறிப்பை உணர்ந்து நின்றுவிட்டார். அவர் உதவியாளரையும் தன்னை அணுக அவள் விடவில்லை. கொட்டிலில் இருந்த வேறு இரு உதவியாளர்கள் வந்து அவள் கடிவாளத்தை பற்றிக் கட்டினார்கள். அன்று முழுக்க உணவருந்தாமல் தலை தாழ்த்தி உடல் நடுங்கி அதிர்ந்து மூச்சு சீற அவள் நின்றிருந்தாள்.

மறுநாள் புலரியில் அவள் கடிவாளத்தை அவிழ்த்து வெளியே கொண்டுவந்தபோது முன்னால் கொண்டுவைத்த மென்தவிடும் மாவும் கலந்த நீரை அவள் அருந்தவில்லை. “நோயுற்றிருக்கிறாள். உள்நோயின்றி புரவிகள் உணவு மறுப்பதில்லை” என்றார் கொட்டில் மருத்துவர் சுதலர். அவள் உடலை அவர் எங்கு தொட்டபோதும் அங்கே தோல் விதிர்த்தது. கடிவாளத்தை பற்றித் தாழ்த்தி அவள் வாயின் மணத்தை முகர்ந்து “குடலில் புண் நிறைந்திருப்பதுபோல் மணம் எழுகிறது” என்றார். “ஒரே நாளில் புண் எவ்வாறு எழும்?” என்றார் ருத்ரர். “உளம் கொதித்திருக்கிறாள். என்ன நிகழ்ந்தது?” என்று சுதலர் கேட்டார். அவர்கள் அதை சொன்னபோது “விந்தை! இப்பருவத்தில் புரவிகள் பொலிநிலையின் குருதிமணத்தை அறிந்ததுமே உவகைகொண்டு கனைப்பதையே கண்டுள்ளேன். அவற்றை நாம் உள்ளே கொண்டுசெல்லத் தேவையில்லை. நம்மை அவை இழுத்துச்செல்லும்” என்றார் சுதலர்.

அவளைச் சூழ நோக்கி “நடுக்கம் உள்ளது. அஞ்சியிருக்கிறாள். அஞ்சும்படி எதுவோ நிகழ்ந்துள்ளது” என்றார் சுதலர். ருத்ரர் “என்ன செய்வது? எப்படியும் கருவுற்றாகவேண்டுமே?” என்றார். “பார்ப்போம். இப்போது இவள் உணவுண்ண வேண்டும். இன்னும் ஒருநாள் உணவொழிந்தால் இவள் குடலும் இரைப்பையும் புண்ணாகிவிடும். அப்புண்ணை ஆற்றிய பிறகே உணவு அளிக்க இயலும்” என்றார் சுதலர். “மூங்கில்குழாய் வைத்து உணவை உள்செலுத்தலாமே?” என்றார் ருத்ரர். “தன்னினைவின்றி படுத்திருந்தால் அவ்வாறு செய்யலாம். முழு ஆற்றலுடன் நின்றிருக்கும் புரவிக்கு குழாய் வழியாக உணவுநீரூட்ட இயலாது. ஆனால் ஒன்று தோன்றுகிறது…” என்று சொன்ன மருத்துவர் கொட்டிலில் துள்ளிக்கொண்டிருந்த இரு குதிரை மகவுகளை கயிறு கட்டி இழுத்துகொண்டு வரச்சொன்னார்.

சிறு புரவியான பசலன் ஆர்வத்துடன் அருகே வந்து அனிலையின் கால்களில் தன் முதுகையும் விலாவையும் உரசி அப்பால் சென்றான். அவன் தோழனான ஹரிதன் மேலும் அருகணைந்து அவள் கால்களுக்கிடையில் புகுந்து சிறிய மடியை தன் முகத்தால் முட்டி காம்புகளில் வாய்வைத்தான். கால்களை உதறியபடி பின்னகர்ந்த அனிலை குனிந்து ஹரிதனின் வாலையும் முதுகையும் நக்கத் தொடங்கினாள். “நன்று! நாக்கு அசைந்துவிட்டது. நீரை கொண்டுவையுங்கள்” என்றார் மருத்துவர். மீண்டும் நீரை அருகில் கொண்டுவைத்தபோது அனிலை குனிந்து விழிவரை முகம் முக்கி நீர் அருந்தினாள். நீர் உள்ளே செல்லும் ஒலியை கேட்ட மருத்துவர் “அணைக! உள்ளெழுந்த அனல் முற்றணைக!” என்றார். முகவாய் முள்மயிர்களில் நீர்த்துளிகள் நின்றிருக்க தலைதூக்கி நீள்மூச்செறிந்தாள் அனிலை. தலையை உலுக்கி காதுகளை அடித்துக்கொண்டு மீண்டும் ஹரிதனை நக்கினாள்.

இரு நாட்களுக்குள் முற்றிலும் சீரடைந்து உணவுண்ணத் தொடங்கினாள். அடுத்த கருநிலவு நாளில் மீண்டும் அவளை பொலிநிலைக்கு கூட்டிச்சென்றனர். இம்முறை கொட்டிலிலிருந்து பொலிநிலைக்குச் செல்லும் சிறு பாதையின் திருப்பத்திலேயே அனிலை காலூன்றி நின்றுவிட்டாள். பின்னர் திரும்பி கொட்டில் நோக்கி நடந்தாள். அவளை பற்றிக்கொண்டிருந்த பரிநிலைக்காவலன் கடிவாளத்தைப்பற்றி இழுக்க அவனை கடிவாளத்துடன் மேலே தூக்கி சற்றே சுழற்றி அப்பாலிட்டுவிட்டு கொட்டிலுக்குள் புகுந்துவிட்டாள்.

மீண்டும் மூன்று முறை முயன்ற பின் “இவள் காமஒறுப்பு கொண்டவள் போலும். யாரறிவார், முற்பிறவியில் அருந்தவம் எதுவோ ஆற்றி அது நிறைவடையாது உயிர் துறந்திருக்கக்கூடும்” என்றார் மருத்துவர் சுதலர். அடுத்த கருநிலவு நாளில் உசிநாரத்திலிருந்து வந்திருந்த மருத்துவரான ஜம்பர் “இதை நான் பார்த்துக்கொள்கிறேன். பலமுறை செய்து வென்ற சூழ்ச்சி ஒன்றுள்ளது. அங்கிருப்பவை நூற்றுக்கு மேற்பட்ட பொலிக்குதிரைகள். அவற்றின் விந்து கலந்த மணமும் அவையெழுப்பிய விழைவொலிகளின் தொகையும் அவளை அச்சுறுத்துகின்றன. சில புரவிகள் அவ்வாறு அஞ்சுவதுண்டு. பொலிநிலைக்கு அவளை கொண்டுசெல்ல வேண்டியதில்லை. காட்டுக்குள் பொலிக்குரிய நிலை ஒன்றை அமையுங்கள்” என்றார்.

புரவிநிலைக்கு அப்பால் காட்டுக்குள் பொலிநிலை ஒன்று அமைக்கப்பட்டது. முப்புறமும் எடைமிக்க தடிகளும் மூங்கிலும் வைத்து கட்டப்பட்ட சிறிய அறையில் அனிலையை கொண்டுசென்று கட்டினர். அவள் முன்கால்களுக்குப் பின்னும் கழுத்துக்குப் பின்னாலும் மூங்கில் வைத்து இறுக்கி அசையாது நிறுத்தினர். திரும்பவோ உடலை அசைக்கவோ அவளுக்கு இடமிருக்கவில்லை. இரு பின்னங்கால்களும் மூங்கில் தூணுடன் சேர்த்து கட்டப்பட்டன. என்ன நிகழ்கிறது என்று அறியாமல் முதலில் கட்டப்படுவதற்கு இடங்கொடுத்த அனிலை பின்னர் பதற்றமடைந்தாள். பெரிய குளம்புகளால் தரையை அறைந்தபடி நிலைகுலைந்து துள்ளத்தொடங்கினாள்.

பொலிநிலையிலிருந்து குருதிவிசை நிறைந்த பொலிக்குதிரையாகிய பாவகன் அழைத்து வரப்பட்டான். அனிலையின் பின்புறத்திலிருந்து கோழையை எடுத்து மரவுரி ஒன்றில் நனைத்து பாவகனின் முகத்தருகே தொங்கவிட்டனர். மணம்கொண்டு காமம் எழுந்து உறுமி விழியுருட்டி முன்கால்களால் மண்பறித்து பாவகன் வெறிகொண்டான். அவன் ஆணுறுப்பு இரும்புலக்கையென வெளிவந்தது. அனிலையைவிட இருபிடி உயரமும் கால்பங்கு எடையும் கொண்டிருந்தான். அவனை இழுத்து வந்து அனிலையின் அருகே நிறுத்தியதும் உறுமி உடல் மெய்ப்பு கொண்டு தலைகுலுக்கியபடி அணுகினான்.

தலையைத் தாழ்த்தி விழிகளை உருட்டி அசைவிலாது நின்றாள் அனிலை. மருத்துவர் ஜம்பர் பழுப்புக் கூழாங்கல்போல பற்களைக் காட்டி “நோக்குக! உலகின் இன்சுவைகளில் முதன்மையானது காமம். தெய்வங்களுக்கு உகந்தது. அதன் முதல் கனி சற்று துவர்க்கும். பின்னர் ஒவ்வொரு கனிக்கும் இனிப்பு மிகுந்து செல்லும்” என்றபின் மேலும் நகைத்து “தோலும் கொட்டையும் இனிக்கும் ஒரு பருவமும் வந்துசேரும்” என்றார். பாவகன் அருகே சென்று உரக்க கனைத்தபடி முன்கால்களைத் தூக்கி அனிலையின் பின்தொடை மேல் வைத்து உடலை நெருக்க அனிலை பெருங்குரலில் கனைத்து தன் கழுத்தால் முன்னாலிருந்த மூங்கிலை ஓங்கி அறைந்து உடைத்தாள். மூங்கில் நெரிபடும் ஒலியுடன் திரும்பி இரு கால்களையும் காற்றில் தூக்கி ஓங்கி உதைக்க பாவகன் அறைபட்டு வலியுடன் ஓசையிட்டபடி இருமுறை தள்ளாடி பக்கவாட்டில் விழுந்தான்.

அனிலை மேலும் முன்னகர்ந்து அதே விசையில் உடலை பின்னெடுத்து முழு ஆற்றலாலும் இரு மூங்கில்களை உடைத்தபடி அறையிலிருந்து வெளி வந்தாள். தரையில் விழுந்துகிடந்த பாவகன் முன் கால்களை ஊன்றி எழ முயல ஓங்கி அவனை முட்டி அப்பாலிட்டாள். அடிவயிறு தெரிய, நான்கு கால்களும் காற்றில் உதைத்துக்கொள்ள, மல்லாந்து விழுந்த பாவகனின் மேல் தலையால் முட்டி அவன் கழுத்தைக் கடித்து தூக்கிச் சுழற்றி அப்பாலிட்டாள். பாவகனின் பெருநாளம் உடைந்து கழுத்திலிருந்து கொழுங்குருதி பீறிட்டு அனிலையின் முகத்திலும் கழுத்திலும் வழிந்தது. குழைந்து வாழைத்தண்டுக் குவியலென நிலத்தில் கிடந்த பாவகனை மீண்டும் கடித்துத் தூக்கி இருமுறை உதறினாள் அனிலை.

“இது புரவியல்ல! இது வேங்கை! புரவி இவ்வாறு செய்வதில்லை! புரவியின் இயல்பே இது அல்ல!” என்று கூவியபடி மருத்துவர் ஜம்பர் விரைந்து ஓடி அருகே நின்ற சால மரமொன்றின் கிளைகளைப்பற்றி மேலேறி உச்சிக்கிளையில் இறுகப்பிடித்தபடி அமர்ந்து நடுங்கினார். பிற ஏவலர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். முகமயிர் முட்களிலும் பிடரியிலும் குருதி செம்மணிகள்போல உருண்டு ஓடையென்றாகி வழிய, திமிர்த்த தசைகள் இறுகி நெளிந்தசைய, மெல்ல நடந்து மீண்டும் கொட்டிலுக்கு வந்த அனிலை உறுமி பரிகாவலரை அழைத்தாள். அவர்கள் எவரும் வந்து வாயில் திறக்கத் துணியவில்லை. வாயிலை தலையால் அறைந்துடைத்து உள்ளே நுழைந்தாள். மீண்டும் தன் கொட்டிலை அணுகி அங்கே நின்றுகொண்டாள்.

அனிலையின் பிறவிநூலை கணிக்க பீலனிடம் கோரினர். அவன் அவளின் ஐந்து நற்சுழிகளையும் நாநிறத்தையும் குளம்புகளின் அமைப்பையும் விழிமணிகளின் ஒளியையும் கணித்து “இவள் காமத்தை தொடப்போவதில்லை. புரவிகளில் தெய்வக்கூறுகள் மூன்று உண்டு. திருமகளின் கூறு மட்டுமே கொண்டவள் ஐம்மங்கலங்கள் நிறைந்தவள். தெய்வங்கள் ஊர்வதற்கு உரியவள். திருமகளும் கலைமகளும் கூடிய புரவி முனிவர்களுக்குரியது. திருமகளும் கொற்றவையும் கூடிய புரவி அரசர்களுக்குரியது. திருமகள் கூறோ கலைமகளின் கூறோ சற்றுமின்றி முற்றிலும் கொற்றவையின் கூறு மட்டுமே கொண்ட புரவி பல்லாயிரத்தில் ஒன்று. அவளை எவரும் ஆள இயலாது. அவள் மேல் ஊர்வதும் எளிதல்ல” என்றான்.

“ஆனால் அன்னை பெருங்கனிவு நிறைந்தவள். தன் மகவையென தன்னை ஊர்பவனை கொண்டு செல்பவள். அவன் தேவியை அடியவனென அவளை வழிபடவேண்டும். அவள் காலடியில் அமர்ந்து பணிவிடை செய்யவேண்டும். போர்முனைகளில் களிறுகளும் அவளைக் கண்டு அஞ்சுவதை காண்பீர்கள். இவளுக்கு அனிலை என்று பெயர் சூட்டியவர் நாளும் கோளும் நன்கறிந்த நிமித்திகர். அவர் வாழ்க!” என்றான் பீலன்.

 வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஅஞ்சலி- ந.முத்துசாமி
அடுத்த கட்டுரைஎன் படங்கள்