‘நானும்’ இயக்கம், எல்லைகள்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
நேற்றைய கடித-பதிலில் ஆண் பெண்ணிடம் விழைவை வெளிப்படுத்துவது சீண்டலோ அத்துமீறலோ அல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் குறிப்பிடுகின்ற விழைவு காதல் விருப்பம் குறித்தென நான் பொருள்கொண்டு வாசித்தேன். அப்படித்தான் பொருள்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். எவ்வாறு காதல் விழைவிற்கும் பாலியல் அத்துமீறலுக்கும் பெண்களுக்கு வேறுபாடு தெரியாத நிலை உள்ளதோ அதேபோல ஆண்களுக்கு காதல் விழைவிற்கும் பாலியல் விழைவில் படுக்கைக்கு அழைப்பதற்கும் வேறுபாடு தெரியவில்லை. “பாருங்கள், ஆசானே சொல்லிவிட்டார்” என்று ஒரு தீவிர ‘நானும்’ எதிர்ப்பாளர் உங்களது நேற்றைய பதிலைச் சுட்டியிருந்தார்.
காதல் விருப்பத்தை ஒரு ஆடவன் தெரிவிப்பது இயல்பான ஒன்று. அவன் மீதும் அவ்வாறான எண்ணமிருந்தால் ஏற்றுக்கொள்வேன், இல்லையெனில் மறுப்பேன். ஆனால் என்னை வெறும் பாலியல் பொருளாகக் கருதிப் படுக்கைக்கு அழைக்கும் பட்சத்தில் அதைக் காதல் விழைவு போலச் சாதாரணமாகக் கருதிப் புறந்தள்ள இயலாது. கண்டிப்பாக இச்சூழலை எதிர்கொள்கிற எல்லாப் பெண்களுக்கும் ஒரு சீற்றத்தைத் தரும். திருமணமாகாத பெண்களுக்கே இது ஓர் உளஅழுத்தம் தரக்கூடிய கேள்வியெனில் திருமணமான பெண்கள் இதை எவ்வாறு எதிர்கொள்வார்கள்? இன்று முகநூல் உட்பட இன்ன பிற தனிச்செய்திகளில் மிக எளிதாக ஒரு ஆண் எத்தகைய காரணங்களோ நோக்கங்களோ இன்றி ஒரு பெண்ணிடம் பாலியல்ரீதியிலான அழைப்பு விடுக்கமுடியும். அப்படியான ஆண்களை ப்ளாக் செய்துவிடுங்கள் என்கிற அறிவுரையைக் கூறிக் கடக்கலாம். ஆனால் இத்தகைய தனிச்செய்தியை அப்பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் பார்க்க நேர்ந்தால் பெருஞ்சிக்கல் ஏற்படும். எனவே முற்போக்கு ஆண்கள் பாலியல் விழைவையும் காதல் விழைவையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதை நீங்கள் கொஞ்சம் விளக்க வேண்டும்.
வெண்பா.
***
அன்புள்ள வெண்பா
ஆண் பெண் உறவு விஷயங்களில் கறாரான நெறிகளை எழுத்தாளர்கள் சொல்லமாட்டார்கள். அது ஒழுக்கவியலாளர்களின் பணி. எழுத்தாளர்களுக்கு ஆண்பெண் உறவு எத்தனை சிக்கலானது என்று தெரியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே ‘தூயகாதல் ‘திருமணம் செய்துகொள்வதற்கான விழைவு’ தவிர வேறு பாலியல் ஊடாட்டமே இருக்கக்கூடாது என்று எந்த எழுத்தாளனாவது சொல்லமுடியுமா என்ன?
ஒரு பெண் ஆண்கள் சூழ்ந்த நவீன உலகில் முற்றிலும் உடலாக பார்க்கவே படாமல் வாழமுடியுமா? அப்படி ஒரு வாழ்க்கை உருவானால் அது இயல்பாக இருக்குமா? பெண் உடலும்கூடத்தானே? பெண் உடல் மீதான ஆணின் கவற்சி என்பது ஓர் உயிர்ச்சக்தி அல்லவா? அப்படி அல்ல என்று அறுபதை நெருங்கும் நான், முற்றிலும் வேறொரு வாழ்க்கைச்சூழலில் உள்ளவன், இன்றைய நவீன வாழ்க்கையிலுள்ள சின்னப்பையன்களுக்கான ஒழுக்கநெறியாகச் சொல்வேன் என்றால் அது பொருந்துவதா?
எனக்கு இதெல்லாமே குழப்பமாகவே இருக்கிறது. ஒரு பெண் பாலியல்சார்ந்து ‘மாட்டேன்’ என்று சொல்லும் உரிமையை அறுதியாக தக்க வைத்துக்கொள்ளவேண்டும், ஒரு சொல்லுக்கு அப்பால் எவ்வகையிலும் ஆண் கடக்கலாகாது என்று மட்டுமே இன்றைய சூழலில் சொல்லமுடியும்.
உடலாக மட்டும் ஒருவன் தன்னை அணுகினால் அவனை அப்பெண் அருவருக்க, ஒதுக்க எல்லா நியாயமும் உள்ளது. தன்னை அவன் அவமதித்தான் என எண்ணக்கூட உரிமை உள்ளது. தன்னை ஆளுமை என ஏற்பவர்களிடம் மட்டுமே அனைத்து தொடர்பாடல்களையும் அவள் வைத்துக்கொள்வதே நல்லது ஆனால் ஒருவன் அப்படி அணுகினாலே அது தன் மீதான பாலியல் சீண்டலாகக் கொள்ளமுடியுமா என்ன?
நம் சூழலில் இன்று பின்தொடர்தல், வற்புறுத்துதல், மிரட்டல், விலக மறுத்தல், பணிச்சூழலில் தொல்லைகொடுத்தல் என பாலியல்சீண்டல்களை தெளிவாக வரையறை செய்யவேண்டும். பேசினான், என்னை இப்படி நினைத்தான், இப்படி என்னை மதிப்பிட்டான் என்பதெல்லாம் பாலியல்தொல்லை என்றால் அது மிகப்பெரிய சிக்கல்களைத்தான் உருவாக்கும். ஏனென்றால் அது மிகமிக தனிநபர் சார்ந்த ஒன்று.
புகழ்பெற்ற தருண் தேஜ்பால் வழக்கில் தருண் தேஜ்பால் நீதிமன்றத்தில் தன் தரப்பாகச் சொன்னது இது–” தான் பெண்களுடன் தொடர்புகள் கொண்டவன், பெண்களை பாலுறவுக்காக அணுகுபவன் என்பது அந்தப்பெண் உட்பட அனைவருக்கும் தெரியும். அச்சூழலில் அது பரவலாக ஏற்கப்பட்டதும்கூட. அந்தப் பெண்ணையும் அவ்வாறே அணுகினேன். அவள் ‘நோ’ சொன்னாள். ஆனால் அந்தப்பெண் சொன்ன நோ திட்டவட்டமானதாக இல்லை. பெண்கள் ‘நோ’வையே ‘எஸ்’ என்னும் பொருளில் சொல்வார்கள். அதை கறாராகவும் திட்டவட்டமாகவும் சொல்லாமல் ஒரு கொஞ்சலாகவே சொன்னாள். ஆகவே அதை ஒப்புதல் என எடுத்துக்கொண்டேன்.
நீதிமன்றம் இதில் ஒருபகுதியை ஏற்றுக்கொண்டது. அந்தப்பெண்ணை அவர் அணுகியது பிழை அல்ல. அவள் நோ சொன்னதை தனக்கேற்ப விளக்கிக் கொண்டதும், உடல்ரீதியாக அவளிடம் சுதந்திரம் எடுத்துக்கொண்டதும்தான் பிழை என்றது. அதனடிப்படையிலேயே ஜாமீன் மறுக்கப்பட்டது. இப்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது
நாம் அமெரிக்க ஐரோப்பிய வாழ்க்கைமுறை நோக்கிச் செல்கிறோம். ஆகவே அங்குள்ள விழுமியங்களையும் ஏற்றுக்கொள்கிறோம். ஒருத்தியை ஒருவன் டேட்டிங் -குக்கு அழைப்பது அங்கே பிழை அல்ல. அவள் மறுத்தபின் வற்புறுத்தினால்தான் அது பாலியல் தொல்லை. இன்றைக்கு இந்திய உளவியலுக்கு இது ஏற்கத்தக்கதாக இல்லை. இங்குள்ள பெண்கள் உளக்கொதிப்படைகிறார்கள். இன்று இந்திய வாழ்க்கையிலுள்ள பல்வேறு தளங்களில் இது ஒவ்வாததும்கூட. ஆனால் பல தொழில்துறைகளில் முழுமையாகவே ஐரோப்பிய வாழ்க்கைமுறை நிலவுகிறது. பார்ட்டிகள், பயணங்கள், மதுக்கூடுகைகள் என அனைத்தும் உள்ளன. அங்கெல்லாம் ஐரோப்பிய அமெரிக்க வாழ்க்கையை வைத்துக்கொண்டு ஒழுக்கவியலில் மட்டும் அதை புறக்கணித்து மரபான மனநிலையை விதியாக ஆக்க முடியுமா என்ன?
பணிச்சூழல்களை தனிப்பட்ட உறவுகளுக்கு முற்றிலும் அப்பாலானதாக வைத்துக்கொள்ளுதல், மனிதர்களை மதிப்ப்பிட்டு அதற்கேற்ப உறவுகளை அமைத்துக்கொள்ளுதல், தன் செயல்கள் மற்றும் சொற்கள் வழியாக தான் எண்ணாத குறிப்புகள் வெளிப்படாமல் காத்துக்கொள்ளுதல், திட்டவட்டமான மறுப்புகளைத் தெரிவிக்கப் பழகுதல், அதன்பின்னர் தொல்லைகள் தொடர்ந்தால் கறாரான நடவடிக்கைகள் எடுத்தல் ஆகியவையே இன்றைய பெண்களுக்குத் தேவை என நான் நினைக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் சினிமா, விளம்பரத்துறை போன்ற தளங்களில் இன்று ஆண்களுக்கும் இந்த எச்சரிக்கைகள் தேவை.
இந்த மிடூ எல்லாம் கூடிப்போனால் ஆறுமாதமே. இது ஒரு சின்ன விழிப்புணர்வை மட்டுமே உருவாக்கும். இப்போதே இது ஏதேனும் அமைப்பாக திரண்டு உருவாகாவிட்டால் இதனால் எந்தப் பயனும் இல்லாமல் போகும். அரசியல் கலக்காமல், இந்த ஒரு நோக்கத்திற்காக மட்டுமே செயல்படும் ஒரு கண்காணிப்பு அமைப்பு உருவாகியாகவேண்டும். ஓருசிலரேனும் அதற்கு முழுநேர உழைப்பைச் சிலகாலம் அளிக்கவேண்டும்
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களது தளத்தில் என்னைப் பற்றிய கடிதம் கண்டேன்.’நானும்’ இயக்கம் கடிதங்கள் பொதுவாக நடுத்தர வயதுப்பெண்கள் தங்களது இல்லப்பொறுப்புகளை முடித்துவிட்டு சீரியல் பார்ப்பதற்கு மாற்றாக முகநூலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச வாசிப்பனுபவம் கிடையாது. முகநூல் பக்கங்களில் வருகிற தகவல்களைப் பகிர்கின்றனர். பெரிதாகத் தற்படங்கள் கூடப் பதிவிடுவதில்லை. ஆனால் முகநூல் உளவியல் எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களது நட்புப்பட்டியலில் இருக்கின்றனர். உண்மையில் இப்பெண்மணிகளுக்குப் பாலியல் தேவை இருந்தால் திண்டுக்கல், மதுரை, திருச்சி என எங்கெங்கோ இருந்துகொண்டு சென்னையில் இருக்கிற ஒருவருக்குத் தினமும் தனிச்செய்தி அனுப்பித் தூண்டிலிட வேண்டிய அவசியமில்லை. தத்தமது நகரங்களில் பார்த்துக்கொள்ளலாம். இங்கே விஷயம் அதுவன்று. எவ்வாறு அதிகாரத்தைக் கொண்டு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடக்கிறதோ அதேபோல எழுத்தைக்கொண்டும் ஓர் அத்துமீறல் நிகழ்கிறது.
சமூகவலைதளங்களில் பாலியல் அணுகுமுறைகளிலும் அத்துமீறல்களிலும் ஈடுபடுபவர்கள் உளவியல் எழுத்தாளர்கள் என்கிற பட்டத்தைத் தாங்கி நிற்கின்றனர். தினமும் தங்களது மனவக்கிரங்களையும் பாலியல் கனவுகளையும் உளவியல் எழுத்துகளாக வடிக்கின்றனர். அல்லது என் தோழி ஒருத்தி என்கிற மாதிரியான உளவியல் அனுபவங்களை எழுதுகின்றனர். இதுவரை எதுவுமே வாசித்திராத பெண்மணிகளுக்கு இந்தப் போலியான எழுத்துநடை ஒரு பிரமிப்பை உருவாக்குகின்றது. எனவே அவ்வவ்வபோது அந்த எழுத்தாளரைப்(?!) பாராட்டத்துவங்குகின்றனர். பிறகு எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுத வேண்டியுள்ளது கொஞ்சம் அனுபவம் பகிரலாமே என்று வீட்டு விஷயங்களை வாங்கிக்கொள்கின்றனர். அடுத்து குழந்தைகள் நலன் மற்றும் கணவரது நலன் முதலியவற்றிற்கும் குறிப்புகள் தருகின்றனர். இதுவரை ஆண் நட்புகள் இல்லாத பெண்மணிகள் இவரை தம்மீது அக்கறை உள்ளவராகக் கருதி வீட்டில் நிகழும் பிரச்சனைகள், குறைகள் போன்றவற்றை உளற ஆரம்பிக்கின்றனர். உடனே அந்த உளவியல் ஆன்மாக்கள் இரட்டை அர்த்தப் பேச்சுகள், டேட்டிங், பாலியல் சுதந்திரம் போன்ற உரையாடல்களில் ஈடுபட்டு இறுதியாக பாலியல் அழைப்பை விடுக்கின்றன. இது ஒரு தொடர் நிகழ்வாக இருக்கின்றது. #Metoo ட்ரெண்ட் ஆவதற்கு முன்னும் முகநூலில் பொதுச்சூழல் குறித்து அறியாத நடுத்தரவயதுப் பெண்களுக்கு இத்தகைய தடுமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நான் #metooவில் குறிப்பிட்ட பெண்கள் சுதாரித்து வெளியே வந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் இருக்கின்ற கொந்தளிப்பு எழுத்தாளர் இப்படிச் செய்யலாமா என்பதுதான்.
வெறும் பெர்வெர்ஷன்களை எழுதித் தன்னை எழுத்தாளராகச் சொல்லிக்கொண்டு இதுபோல பெண்களிடம் அத்துமீற முயற்சித்த சம்பவங்கள் என்னை எரிச்சலடையச் செய்தன. நம்முடைய பெண்கள் உளச்சோர்வெனில் உளவியல் மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை பெறுவதற்குத் தயங்குகின்றனர். ஆனால் முகநூலில் இத்தகைய போலிக்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். நல்ல வாசிப்பறிமுகம் தேவையெனில் நூலகங்களை நோக்கிச் செல்வதில்லை. முகநூலுக்கு வந்து உளவியல் களவியல் போன்ற ஏதேதோ இயல்களிலும் இஸங்களிலும் மாட்டிக்கொள்கின்றனர். இன்று வாசிப்பதற்கு நூலகம் வரை கூட செல்லவேண்டியதில்லை; Scribd மற்றும் kindleஇல் எவ்வளவோ புத்தகங்கள் வாசிக்கலாம். இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை இந்த #metoo சமாச்சாரம் அளித்திருப்பதாகக் கருதுகின்றேன்.
#metoo வெறும் பணியிட பாலியல் பேரங்களையும் சுரண்டல்களையும் மட்டுமே சொல்கிற ஓர் தளமாக நான் பார்க்கவில்லை. பொதுவெளிகளிலும் சமூகவலைதளங்களிலும் நிகழ்கின்ற பாலியல் சுரண்டல்களும் இதன்மூலம் வெளிப்படுத்தப்படவேண்டும். ஏனெனில் பாலியல் வசைகள் மற்றும் sexual manipulations அதிகம் நிகழ்கிற இடம் சமூகவலைதளங்களாகும். பெண்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தும்போது பாலியல் விழிப்புணர்வும் அவசியம். #metoo சர்ச்சைகளுக்குப்பின் இப்போது பெண்மணிகள் தனிச்செய்திகளில் கேட்டு சிறுகதைகள் வாசிக்கப் பழகுகின்றனர். இலக்கிய எழுத்தாளர்கள் குறித்துத் தெரிந்து கொள்கின்றனர். இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து குறித்த புரிதல் அவர்களுக்கு வரும். எனவே அத்தகைய பெண்மணிகள் ஆண்கள் கூப்பிட வேண்டுமென்றோ பாலியல் நோக்கங்களுக்காகவோ தனிச்செய்திகளுக்குச் செல்லவில்லை. இதுவரை காணாத விஷயங்களைக் கண்டுகொண்ட மிகைஆர்வத்தில் உள்ளே செல்ல அந்த ஆர்வத்தை ஆண்கள் பயன்படுத்திக்கொள்ள முயன்றதும் தப்பித்து விலகியவர்கள். மற்றொரு விஷயம், வெறும் வீட்டுச்சூழலுக்குள் வாழ்கிற இந்திய நடுத்தர வயதுப்பெண்மணிகளுக்குக் கணவனைத் தவிர வேறு ஆண்களிடம் தோழமைரீதியாகப் பேசிப் பழகவோ நட்பு பாராட்டவோ வாய்ப்பு கிடையாது. அந்த இடைவெளியைத்தான் சமூகவலைதள ஆசாமிகள் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.
வெண்பா.
***
அன்புள்ள வெண்பா
இது எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் பிழைகளுக்கு அறியாமையை காரணமாகச் சொல்லமுடியாது, அறியாமையே ஒரு பிழைதான் என ஒரு தொல்கூற்று உண்டு
ஜெ
நான்கு நாட்கள் முன்பு உளவியல் எழுத்தாளர்களுக்காகவே நான் முகநூலில் எழுதியது
உளவியல் எழுத்தாளர்கள்– #MeToo
முன்பு சினிமாவில் இருப்பவர்களிடம் “சினிமானா அப்பிடி இப்பிடியாமே” என்று கண்ணடித்துக் கேட்கும் கும்பல் இலக்கியத்தின் பக்கம் தற்போது கொட்டகை போட்டுள்ளது. தமிழ்ச்சமூகத்தில் மூன்று வகையான எழுத்துகள் வாசிக்கப்படுகின்றன. ஒன்று இலக்கியச் சார்பானது, இரண்டு முற்போக்கு மற்றும் புரட்சிச் சார்புடையது மற்றும் மூன்றாவது கேளிக்கைவகை.
இவற்றையும் கடந்து இந்த facebook, உளவியல் எழுத்து என்கிற ஓர் புதுமையான எழுதுமுறையை அளித்திருக்கின்றது. அவற்றை வாசித்த உளவியல் மருத்துவர்கள் சிலர் மயங்கிவிழுந்த கதைகளையும் கேட்டிருக்கின்றேன். இந்த முதல் மூன்று வகைகளைவிட நான்காவது வகைக்குதான் வாசகர்கள் ஜாஸ்தியாக இருக்கின்றனர். ஏனெனில் உளவியல் என்கிற தலைப்பின் கீழ் எவ்வளவு மோசமான perversionஐயும் நியாயப்படுத்திக் கொள்ள முடியும். அனைத்து சல்லித்தனங்களையும் தரிசனங்களாகவும் பரிசோதனை முறைகளாகவும் மாற்றிக்கொள்ள இயலும்.உதாரணமாக நண்பனின் காதலியை கரெக்ட் செய்து அந்தக் காதலில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு பெண்ணென்பவள் பொருளில்லை அவளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்கிற தரிசனமுடிவை அனுபவ ரீதியாக எழுதிப்போட்டுவிட்டால் நல்லதொரு உளவியல் எழுத்து தயார். இதேபோல ஒவ்வொரு விஷயங்களையும் உளவியல் ரீதியாக அணுகி அதற்கொரு தீர்க்கமான முடிவையும் தந்துவிடுகின்றனர். இதுவரை எதையுமே வாசிக்காதவர்களுக்கு மெய்யாகவே இத்தகைய எழுத்துவகை ஓர் எழுச்சியையும் பிரமிப்பையும் தரும். அவர்கள் எழுத்து என்பது இதுதான் என அறுதியிட்டு எழுத்தாளர் என்று கொண்டாடத்துவங்கிவிடுகின்றனர்.
இத்தகைய எழுத்தினால் வருகிற பயன் யாதெனில் பெண் சமூகம் இவர்களை ஓர் உளவியலாளராகக் கருதி தம்முடைய அந்தரங்கங்களைப் பகிர ஆரம்பிக்கிறது. குறிப்பாகப் பெண்கள் “உங்க போஸ்ட் படிச்சுதாங்க ஹேப்பியா ஃபீல் பண்றேன், எனர்ஜி தருது” என்று சிலாகித்து வருகின்றனர். இவர்களுக்குப் பாலியல் தேவை இருக்காது, அத்துடன் அதைப் பற்றியும் யோசித்திருக்கமாட்டார்கள். பாலியல் தேவையிருந்தால் fbவரை ஏன் வர வேண்டும்? தன்னுடைய ஏரியாவிலேயே எளிதாக பிறகாதல் பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்ளலாம். அதனால் இங்கே வருபவளுக்குத் தேவை இருப்பது போன்ற பாவனையை உருவாக்க வேண்டும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக அவள் வீட்டு விஷயங்கள் மற்றும் கணவன் குறித்து அடிக்கடி விசாரித்து விசாரித்து விரிசல்களைத் தேடுகின்றனர். “பாவம்ங்க நீங்க, ஒத்த ஆளா கணவர், பிள்ளைகள்,குடும்பத்தை எப்படி சமாளிக்கிறீங்க?” என்று லாஜிக்கில்லாத பிட்டெல்லாம் போட வேண்டும். எல்லார் வீட்டிலும் ஒரு மனைவிதானே கணவனையும் வீட்டையும் சமாளிக்கிறார் என்கிற அறிவு இந்த உளவியல் எழுத்தாளர்களிடம் பேசும்போது தோன்றாது. இதேதொனியைத்தான் manipulation என்கிறேன். மெதுமெதுவாக நம்மை brainwash பண்ண இன்னுமிரண்டு மூன்று முற்போக்கான சம்பவங்களைத் தெரிந்த பெண்களைக் குறிப்பிட்டுச் சொல்லி அப்படியே தேற்றி correct செய்து விடுவது. இது பெண்களை வீழ்த்தும் எளிய வழி, ஆனால் இதற்கு நிறைய உழைப்பைப் போட வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் #metooக்களாக மாறிவிடும். இங்கு மாட்டியவர்கள் அவ்வாறு பிசகித் தோற்றவர்கள். அதற்காக சிக்காத இந்த உளவியல் எழுத்தாளர்கள் யாரும் நல்லவர்களில்லை. சிக்கிய பெயர்களை விடவும் சல்லிகள் என்பதால் யாரும் சொல்வதற்கு முன்வரவில்லை.
இங்கு பிரச்சனை யாதெனில் இந்த நால்வகையினரையும் பிரித்துப் பார்க்க அறிவில்லாமல் மொத்தமாக இலக்கியவாதிகள் என்கிறோம். எனவே எழுத்தாளர் என்கிற labelஐ ஒட்டிக்கொண்டு எதையாவது கிறுக்கிக்கொண்டு யாரையாவது come to my home என்று கையைப்பிடித்து இழுத்தால் “இலக்கியவாதிகளே இப்படித்தான்” என்கிற பேச்சுக்கு ஆளாக வேண்டியுள்ளது. அடுத்து மற்றொரு சாரார் இருக்கின்றனர். இவர்கள் எழுத்தாளர் என்றாலே எந்நேரமும் மதுவில் மிதந்துகொண்டு மங்கைமீது சாய்ந்துகொண்டு எழுத வேண்டும் என்கிற நியதியைக் கடைபிடிப்பவர்கள். கடைசியாக மதுவருந்தி மங்கைமீது சாய்ந்து என்ன படைத்தீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தால் “மங்கைமேல சரிஞ்சப்புறம் என்னத்த படைக்குறது, அதான் எப்படி சரிஞ்சேன்னு குறிப்பா எழுதிட்டேன்” என்றபடி கழன்றுகொள்வார்கள். எழுத்தைக் கொண்டு பெண் வேட்டையாடுவது எளிதான செயல். ஆனால் எழுத்துக்கு அப்பால் உங்களது நிலையென்ன என்பதுதான் பெண்களைச் சேர்வதற்கான வழி. அத்தகைய நேரடித்தன்மை இங்கிருக்கும் பலருக்கும் வராது. எழுதவேண்டுமென்றால் எழுத மட்டுமே செய்யுங்கள்; அதிகாரத்தைக் கொண்டு பெண்ணை அனுசரிக்க வைப்பது எப்படித் தவறோ அதேபோல எழுத்தைக் கொண்டு பெண்ணை மடக்குவதும் தவறுதான். உங்கள் சுயமெனும் மிருகம் எழுத்தைப் போர்த்திக்கொண்டு மறைந்துள்ளது.
பெண்களுக்கு, உயிரோடிருப்பவர்களும் fbயில் எழுதுபவர்களும் மட்டுமே எழுத்தாளர்கள் கிடையாது. இவர்களுக்கு முந்தைய சூழலில் நவீன தமிழ் இலக்கியத்தில் பிரம்மாண்டங்களையும் புனைவுகளையும் படைத்தவர்கள் ஏராளம் உண்டு. அவர்களை வாசிக்கப் பழகினாலே இங்கு கோலம் போடுகின்ற போலிக்களைப் புறந்தள்ளலாம்.