‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45

bowஒவ்வொரு திசையிலிருந்தும் போர்ச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. கடோத்கஜன் பிரக்ஜ்யோதிஷத்தின் படைகளை மத்தென கலக்கிக்கொண்டிருந்தான். முன்னூறு பேர் கொல்லப்பட்டுவிட்டனர். பகதத்தனுக்கும் கடோத்கஜனுக்கும் நேர்ப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பகதத்தன் மூன்று முறை எறிகதை வீச்சுக்கு ஆளானார். கவசங்கள் உடைந்து பின்னடி வைத்து செல்கிறார். அவருக்குத் துணையாக துச்சாதனனும் துரியோதனனும் செல்கிறார்கள். துரியோதனனின் கதைக்குமுன் நிற்கவியலாமல் கடோத்கஜன் பின்னடைகிறான்.

போரின் விசை கூடக்கூட கடோத்கஜனின் பின்னிலிருந்து திருஷ்டத்யும்னனின் ஆணை அழைத்து காத்தது. அர்ஜுனனை ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சேர்ந்து எதிர்கொள்கிறார்கள். அம்புக்கு அம்பென நிகழ்கிறது போர். சர்வதனை இளைய கௌரவர் எழுவர் சூழ்ந்துள்ளனர். சுதசோமனை கௌரவர் பன்னிருவர் சூழ்ந்துள்ளனர். எஞ்சியவர் பீமனைச் சூழ்ந்து போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள். போர் ஒவ்வொரு கணமும் நிகர்நிலையில் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் தடையற்றவராக பீஷ்மர் முன்சென்றுகொண்டிருக்கிறார். அவரிடமிருந்து அபிமன்யூவைக் காத்து கொண்டுசெல்கின்றனர். அதோ வெறிகொண்ட அபிமன்யூ கௌரவப் படையின் தேர் அணியொன்றை பிளந்துகொண்டு முன்னெழுகிறான். அவன் முன் அம்புபட்டு அலறியபடி கௌரவ மைந்தர்கள் தேரிலிருந்து உதிர்கிறார்கள்.

சுவாங்கனும் உத்வேகனும் ஊர்ஜிதனும் விழுந்தார்கள். கனகனும் சுப்ரதீகனும் சுப்ரபனும் தீர்க்கதேஜஸும் தீர்க்கரோமனும் காதரனும் வீழ்ந்தனர். அபிமன்யூ இளைய கௌரவ மைந்தர்களை கொன்று குவித்துக்கொண்டிருந்தான். வாசவனும் வக்ரனும் ருத்ரடனும் ருத்ரனும் ருத்ரநேத்ரனும் கொல்லப்பட்டார்கள். மதுபர்க்கனும் வல்லபனும் சாமனும் சார்த்தூலனும் வத்கலனும் சாலியும் வர்தனனும் சால்மலியும் வர்ச்சஸும் சமியும் வீரபாகுவும் விஜயபாகுவும் சமடனும் வீரகனும் லோகிதனும் சதபாகுவும் லோலனும் மூலகனும் லோபனும் மூஷிகனும் ரைவனும் கொல்லப்பட்டார்கள்.

சகுனி “மைந்தரை காத்துக்கொள்க… அனைத்து கௌரவர்களும் மைந்தரை சூழ்ந்துகொள்க!” என்று ஆணையிட்டார். கௌரவர்கள் இருபுறத்திலிருந்தும் திரண்டு மைந்தரின் உதவிக்காக செல்ல கடோத்கஜன் எழுந்து அவர்களைத் தடுத்து அறைந்து பின்னடையச் செய்தான். மறுபுறம் சர்வதன் அவர்களை தடுத்தான். துணையின்றி கௌரவ மைந்தர்கள் அபிமன்யூவின் முன் விடப்பட்டனர். திடஹஸ்தன், பாசன், பாமகன், சாந்தன், சுபத்ரன், சுதார்யன் என பெயர்கள் வந்தபடியே இருந்தன. சகுனி “முன்செல்க! முன்செல்க! மைந்தரை காத்துகொள்க!” என்று தன் தேர்ப்படைவீரர்களுக்கு ஆணையிட்டார். அவருடைய தேரைச் சூழ்ந்து காந்தாரப் படையும் சுபலரும் மகாபலரும் அம்புகளைத் தொடுத்தபடி வந்தனர்.

“விரைக! விரைக!” என சகுனி தேரை ஊக்கினார். தேர் படைகளைப் பிளந்தபடி அபிமன்யூவை நோக்கி சென்றது. ஆனால் பாண்டவப் படைகளுக்கு பின்னாலிருந்து வந்த தொலையம்புகளால் காந்தாரப் படை நிறுத்தப்பட்டது. கழுகிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகள் ஒளிரும் அலகுகளுடன் முழங்கியபடி இறங்கி தேர்களின் புரவிகள்மேல் குத்தி இறங்கி அமைந்தன. தேர்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்குழம்பின. “முன்செல்க! முன்செல்க!” என்று சகுனி கூவினார். அபிமன்யூவை துணைத்த பின்படையினரால் காந்தாரப் படையின் முன்னணிப் பரிவீரர்கள் விழுந்தனர். மூன்றுபுறமும் துணைப்படை தடுத்து நிறுத்தப்பட்டது. கழையன் மேலேறி நோக்கி செய்தியறிவிக்க சகுனி தன் வில்லால் தேரை ஓங்கி அறைந்து கூச்சலிட்டார்.

வலைக்குள் சிக்கிய மீன்களென கௌரவ மைந்தர்கள் சுற்றி வந்தனர். அஞ்சி கூச்சலிட்டு விற்களையும் ஆயுதங்களையும் கீழே விட்டு கைதூக்கினர். பலர் தலையைப் பொத்தியபடி உடல் வளைத்து தேர்த்தட்டில் அமர்ந்து நடுங்கினர். அபிமன்யூ ஒற்றைநாணில் கொத்துக்கொத்தென அம்புகளை எடுத்து எடுத்து அவர்களை கொன்று அழித்தான். சரணன், மானசன், வேகன், தந்தகன், பிச்சலன், விபங்கன், காலவேகன், கண்டகன், விரோகணன், பிரபாவேனன், ஹனு, அகோராத்ரன், அகோவீரன், சம்பு, விக்ரன், விமலன், ஏரகன், குண்டனன், வேணிதரன், வேணுஹஸ்தன், சார்ங்கன், கதாவேகன், மகாகாலன், சேசகன், பூர்ணாங்கன், சுதிரத்மன், ரிஷபன், சங்கு, கர்ணகன், குடாரன், குடமுகன், சுஹாசன், சுசரிதன், விரோசனன் என முழவுகள் வீழ்ந்த கௌரவ மைந்தரின் பெயர்களை அறிவித்துக்கொண்டே இருந்தன.

கைதளர்ந்து சகுனி வெறித்து நோக்கிக்கொண்டு நின்றார். நூற்றெண்பது கௌரவ மைந்தர் கொல்லபட்டுவிட்டனர். கணமொருவர் என கொல்லப்படுகிறார்கள். “பிதாமகர் பீஷ்மர் எழுக! கௌரவ மைந்தர்களை காத்துக் கொள்க!” என்று அவருடைய ஆணை முரசுகளாக வானில் முழங்கிக்கொண்டிருந்தது. விண்ணிலிருந்து எழும் மூதாதையரின் பதைபதைப்பு என. ஒலியிலிருந்து ஒலி தொடுக்க மிகத் தொலைவில் பீஷ்மர் அதை கேட்பதை அவரால் காண முடிந்தது. திரும்பி தேரைச் செலுத்தி பீஷ்மர் அபிமன்யூவை நோக்கி வந்தார். சுருதகீர்த்தி அவரை தடுக்க அவனை அம்புகளால் செறுத்து பின்னடையச் செய்து அவன் இடையில் அம்புபாய்ச்சி தேர்த்தட்டில் விழச்செய்தார். அபிமன்யூவின் பின்னணிப்படையினரின் சூழ்கையை உடைத்து உட்புகுந்து அதே விசையில் நான்கு அம்புகளால் அவன் தேர்ப்பாகனை கொன்றார். சீற்றத்துடன் திரும்பி தன் கால்களாலேயே கடிவாளத்தைப் பற்றி தேரைத் திருப்பி அபிமன்யூ பீஷ்மரை நோக்கி சென்றான். “மைந்தரை மீட்டெடுங்கள்! மைந்தரை சூழ்ந்துகொள்க!” என்று காந்தாரப் படையினருக்கு சகுனி ஆணையிட்டார்.

சுபலரும் காந்தார இளவரசர்களும் எதிரம்புகளைச் செறுத்து கடந்துசென்று எஞ்சிய கௌரவ மைந்தர்களை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் அனைவருமே தேர்த்தட்டுகள் மேல் உடல்குறுக்கி அமர்ந்து குளிர்கண்டவர்கள்போல் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். துர்த்தாரகன் உரத்த குரலில் “இது போரல்ல… படைக்கலம்விட்டு அமர்ந்துவிட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது நெறியே அல்ல…” என்று கூவினான். சகுனியின் தேர் அருகே வந்த பரிவீரன் ஒருவன் “இருநூற்றியேழு இளவரசர்கள் கொல்லப்பட்டனர்… புண்பட்டு எஞ்சியோர் எவருமில்லை” என்றான். அருகே நின்றிருந்த தேர்வீரன் “இன்று மிகுந்த பேரழிவு, காந்தாரரே” என்றான்.

அதற்குள் முழவு இருநூற்றுப் பதினேழு கௌரவ இளவரசர்கள் கொல்லப்பட்டிருப்பதை தெரிவித்தது. “பிணங்களை கண்டெடுக்கிறார்கள்!” என்றான் பராந்தகன். கொக்கிச்சரடுகளை வீசி களத்திலிருந்து கௌரவ மைந்தரை இழுத்து எடுத்துக்கொண்டே இருந்தனர். இருநூற்றி முப்பத்தேழுபேர் என்றது முழவு. தேர்த்தட்டில் ஒருவர் மீது ஒருவரென அடுக்கப்பட்ட கௌரவர்களின் உடல்களை சகுனி ஒருமுறை மட்டும் நோக்கினார். கைகள் விரிந்து விரல்கள் அகன்று களைத்துத் துயில்பவர்கள் போலிருந்தனர். வாழ்ந்திருந்தபோது அவர்கள் அனைவர் முகங்களிலும் ஒற்றை உணர்ச்சியே திகழ்ந்தது. இறந்தபோதும் அவ்வாறே ஒற்றை உணர்ச்சிதான் நிலைகொண்டிருந்தது. வியந்து, திகைத்து, செயலிழந்தவர்கள்போல.

முதல்முறையாக அவர்களை கான்வேட்டைக்கு கொண்டுசென்றதை அவர் நினைவுகூர்ந்தார். காட்டின் ஆழத்துள் நுழைந்ததும் அவர்கள் ஓசையடங்க விழிகள் வெறித்து வாய் திறந்து புரவிகளில் அமைந்திருந்தனர். அதே நோக்கு. கதைபயிலக் கூட்டிவருகையில் மீளமீளச் சொன்னாலும் மிக எளிய பாடங்கள்கூட அவர்களுக்கு புரிவதில்லை. பலமுறை சொன்னபின் சினம்கொண்டு ஆசிரியர் அவர்களை அடிக்க தன் கதையை ஓங்கும்போதும் அதே திகைப்பையே அவர்களின் முகங்களில் காண்பார். எரிபுகுவதற்கென்றே சிறகுகொள்ளும் விட்டில்கள். சகுனி நாவில் கசப்பென ஊறிய எச்சிலை திரும்பி துப்பிக்கொண்டார். துப்புந்தோறும் கசப்பு ஏறி ஏறி வந்தது.

பீஷ்மர் அபிமன்யூவை தடுத்து மேலும் மேலும் பின்னடையச் செய்தார். “இளையோன் உயிர்கொடுக்கத் துணிந்தவனாக களம் நின்றிருக்கிறான்” என்றான் ஒரு பரிவீரன். “அவன் உயிரால் ஈடுகட்டுவோம் இன்றைய இழப்பை!” என அருகே பிறிதொருவன் கூவினான். பீஷ்மரை சூழ்ந்துகொண்ட பாஞ்சாலப் படைவீரர்கள் அலறி விழ அபிமன்யூவை காக்கும்பொருட்டு வில்லவர்கள் அரைவட்டமென பின்வளையம் அமைத்தனர். தடைகளை உடைத்தபடி கௌரவர்கள் இருபுறத்திலிருந்தும் இளைய கௌரவர் களம்பட்ட இடத்தை நோக்கி வந்தனர்.

“சூழ்ந்துகொள்க! அபிமன்யூவை சூழ்ந்துகொள்க! மைந்தரை காக்க வருக!” என்ற அவருடைய ஆணை முழங்கிக்கொண்டிருந்தது. அதை அவரே கேட்டபோது ஒருகணம் திகைத்தார். அது ஒரு சூழ்ச்சி. தூண்டிலில் மீன்களையே மீன்களுக்கு வைத்திருக்கிறார்கள். “முன்செலல் ஒழிக! கௌரவர் பின்னடைக!” என்று ஆணையிட்டார். ஆனால் அவ்வாணை ஒலிக்கையிலேயே காந்தாரப் பரிவீரன் அவர் முன் பாய்ந்து வந்து “பீமசேனரை ஏற்கெனவே நம்மவர் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்… கௌரவர் நாற்பதின்மர் அவரை ஒருங்கிணைந்து எதிர்க்கிறார்கள்” என்றான். மைந்தர் இறந்த செய்தி கௌரவர்களை வெறிகொள்ளச் செய்யும். இறந்த மைந்தரின் தந்தையர் இறப்புக்கு நெஞ்சுகாட்டி முன்சென்று களம் நிற்பார்கள். தாங்களும் வீழ்வதே அவர்களுக்கு நிறைவளிக்கும்.

“கௌரவர்களை காக்கவேண்டும்! கௌரவர் பின்னடைக!” என அவருடைய ஆணை முழங்கியது. சோமதத்தர் அவர் அருகே தேரில் வந்து “நமது படைகள் முழுமையாகவே இளைய பாண்டவனை சூழ்ந்துகொண்டுள்ளன. இதுவே நற்தருணம்” என்றார். “அவன் மைந்தன் உடனெழுவான். கௌரவர்களை உடைப்பான். கௌரவர்கள் கொல்லப்படுவார்கள்… இன்று கௌரவர்களும் கொல்லப்பட்டால் நமது படை உளம் தோற்றுவிட்டதாக பொருள்” என்று சகுனி கூறினார். நாற்புறத்திலிருந்தும் கௌரவப் படையினர் திரண்டு பீமனை நோக்கி சென்று கதைகளும் விற்களுமாக பொருதுவதை சகுனி கண்டார். “விலகுக… விலகுக!” என்று கூவியபடி அம்புகளை எய்து படைகளை விலக்கியபடி பீமனை நோக்கி சென்றார்.

அவர் எண்ணியதுபோலவே வெறிகூச்சலிட்டபடி தேர்த்தட்டில் நின்று நெஞ்சில் அறைந்து கதறி அழுதபடி கௌரவர்கள் பீமனை சூழ்ந்துகொண்டனர். செல்லும் வழியெங்கும் அவர்கள் தங்கள் மைந்தர்களின் உடல்களை கண்டிருந்தனர். “கௌரவர்கள் விலகட்டும்! போரை திரிகர்த்தர்களும் உசிநாரர்களும் முன்னெடுக்கட்டும்! கௌரவர்கள் விலகுக!” என்று சகுனி ஆணையிட்டார். அவருடைய தேர் ஊடே புகுந்த பாண்டவக் குறும்படையொன்றால் தடுக்கப்பட அவர்களை அம்புகளால் அறைந்து வீழ்த்தி விலக்கி அவர் திரும்பி நோக்கியபோது கௌரவர்களின் வளையத்தை ஒருபுறம் சுதசோமனும் மறுபுறம் சர்வதனும் உடைத்துவிட்டதை கண்டார்.

கௌரவர்கள் மேலும் பீமனை சூழ்ந்துகொண்டார்கள். அம்புகளைப் பெய்தபடி அவர் செல்லும்போதே “பிதாமகர் பால்ஹிகர் வருக! கௌரவர்களை காக்க வருக!” என ஆணையிட்டார். திருதசந்தனும் ஜராசந்தனும் பீமனின் அம்புகளால் அறையுண்டு வீழ்ந்தனர். துராதாரனும் விசாலாக்‌ஷனும் பீமனின் கொக்கிக் கயிற்றில் சிக்கி தேரிலிருந்து நிலத்தில் உருண்டனர். அவர்கள் எழுவதற்குள் பீமனின் கதை வந்து அவர்களின் தலைகளை உடைத்தெறிந்தது. அக்கணம் பாண்டவப் படையின் பின்னிரையிலிருந்து கழைமேல் எழுந்து பறந்து களம்நடுவே வந்திறங்கிய கடோத்கஜன் சுஹஸ்தனையும் வாதவேகனையும் பீமவிக்ரமனையும் அறைந்து தேரிலிருந்து சிதறடித்தான். அவர்கள் தேர்கள் தேடி ஓட பீமனின் சங்கிலியில் துள்ளிய கதை சுழன்று அவர்களை அறைந்து மண்ணில் குருதிச்சிதைவுகளாக பரப்பியது.

பீமன் தன் தேரிலிருந்து கழையூன்றி தாவி மகாபாகுவின் தேரிலேறி அக்கணமே அவனை அறைந்து கொன்றான். அருகிலிருந்த தேரிலிருந்து சித்ராங்கன் கூச்சலிட அவனை இழுத்துத் தூக்கி தன் முழங்கால்மேல் அறைந்து முதுகெலும்பை முறித்து அப்பால் வீச அவன் புழுதியில் புழுவென துடித்தான். சித்ரகுண்டலன் தேரிலிருந்து பாய்ந்திறங்க பீமனின் கொழுக்கயிற்றின் கூர்தூண்டில் அவன் கழுத்தைக் கவ்வி கவசத்துடன் கிழித்து பறந்தது. குருதிபெருகும் கழுத்தைப் பற்றியபடி அவன் மண்ணில் விழுந்தான். கௌரவர்கள் அந்தக் கொலைகளால் தளர்ந்து பின்னடையத் தொடங்க அவன் தேரிலிருந்து தேருக்கு பாய்ந்து பிரமதனையும் அப்ரமாதியையும் தீர்க்கரோமனையும் கொன்றான்.

தீர்க்கபாகு தேரிலிருந்து பாய்ந்திறங்கியபோது தேர்முகடிலிருந்து கீழே பாய்ந்த பீமனைக் கண்டு “மூத்தவரே!” என அலறினான். எட்டி அவன் நெஞ்சை மிதித்து தேர்ச்சகடத்தின் அச்சுக்கோலுடன் அறைந்தான் பீமன். கழுவில் கோத்தவன்போல் அவன் நின்று உதறிக்கொள்ள அஞ்சி தேரிலிருந்து பாய்ந்த சுவீரியவானை பின்னிருந்து கதையால் தலையிலறைந்து கொன்றான். சகுனி அம்புகளுடன் கௌரவச் சூழ்கையைக் கடந்து பீமனை அடைந்தபோது பீமன் உடலெங்கும் குருதியுடன் ஓங்கி நிலத்தை உதைத்து வெறிக்கூச்சலிட்டான். சகுனியின் இரு பேரம்புகள் பீமனின் கவசங்களை உடைக்க அவன் பாய்ந்து தன் தேரிலேறிக்கொண்டான்.

“கௌரவர் பின்னடைக… கௌரவர் பின்னடைக!” என்று சகுனி ஆணையிட்டார். அவருடைய ஆணை வீணொலியென காற்றில் நின்று அதிர கௌரவர்கள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மேலும் மேலும் திரண்டு பீமனை நோக்கி சென்றனர். அவ்வாறு பெருந்திரளென சூழ்வதுபோல் பிழையான போர்முறை பிறிதொன்றில்லை என்று அவர் அறிந்திருந்தார். உணர்வுக் கொந்தளிப்பால் அவர்களுக்குள் எந்த ஒத்திசைவும் இருக்கவில்லை. பலர் கதறி அழுதுகொண்டிருந்தனர். நெஞ்சிலறைந்து வஞ்சினம் கூவினர். வெறிகொண்டு தலையை தூணில் முட்டிக்கொண்டனர். ஒவ்வொருவரும் தங்கள் கைகளால் பீமனை கொல்ல விழைந்தனர். எனவே நீர்ப்பரப்பிலிருந்து மீன்கள் துள்ளி எழுவதுபோல் பீமன் முன்சென்று விழுந்தனர். சுவர்ச்சஸும் ஆதித்யகேதுவும் பீமனின் அம்புகளால் கொல்லப்பட்டு தேரிலிருந்து விழுந்தனர்.

சகுனி பீமனை அம்புகளால் அறைந்து நிறுத்தியபடி துச்சாதனனும் துரியோதனனும் வந்து பீமனை எதிர்கொள்ளும்படி ஆணையிட்டார். “துரியோதனர் எழுக! துச்சாதனர் எழுக!” என அவருடைய ஆணை காற்றில் அதிர்ந்தது. ஆனால் அப்பால் வந்த துரியோதனனின் தேரை கடோத்கஜன் தடுத்து நிறுத்தினான். துச்சாதனன் துரியோதனனை விட்டுவர இயலாது தவித்தான். “ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் வருக! கௌரவர்களை காத்து நிற்க வருக!” என்று சகுனி ஆணையிட்டார். அவர்கள் அர்ஜுனனால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். திருஷ்டத்யும்னன் பூரிசிரவஸை எதிர்த்து நிற்க சாத்யகி வந்து இணைந்துகொண்டான். சாத்யகி பித்தன்போல் வெறிகொண்டு தாக்க பூரிசிரவஸ் கை ஓய்ந்து அடிக்கு அடி வைத்து பின்னகர்ந்துகொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் தங்களுக்குள் மட்டுமே என போர்புரிந்துகொண்டிருக்க ஜயத்ரதன் திருஷ்டத்யும்னனை அம்புகளால் அறைந்து பின்கொண்டு சென்றான். பீமனுக்குத் துணையாக சர்வதனும் சுதசோமனும் வில்லுடன் எழ சகுனி கை ஓய்ந்து பின்னகர்ந்தார். பீமன் அந்த இடைவெளியில் பாய்ந்து மீண்டும் கழையிலெழுந்து தாவி வந்து துஷ்பராஜயனையும் அபராஜிதனையும் கொன்றான். “இளவரசர்கள் களம்பட்டதை முரசுகள் அறிவிக்க வேண்டியதில்லை” என்று சகுனி ஆணையிட்டார். அவரது ஆணை ஒலித்துக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் களம்பட்ட செய்தியை அறிவித்து முழவுகள் முழங்கின.

சகுனி சீற்றத்துடன் “பிதாமகர் பால்ஹிகர் எங்கே? பிதாமகர் களமெழட்டும்! பால்ஹிகர் களம் எழுக!” என்று கூவினார். ஆனால் பால்ஹிகர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. வெவ்வேறு இடங்களில் தொழும்பர்கள் மேலெழுந்து பால்ஹிகரை தேடி மிகத் தொலைவில் அவர் நிஷாதர்கள் நடுவே பாண்டவப் படைக்கு உள்ளே இருப்பதை கண்டுகொண்டனர். “பிதாமகர் துணை வருக! பிதாமகரை அழைத்து பீமனுக்கு பின்னால் கொண்டு வருக!” என்று சகுனி ஆணையிட்டார். உசிநாரர்களும் காம்போஜர்களும் இணைந்த படை கிராதர்களையும் நிஷாதர்களையும் தாக்கி வழி உருவாக்கி பால்ஹிகரை நோக்கி சென்றது. அதற்குள் சாருசித்ரனும் சராசனனும் பீமனால் கொல்லப்பட்டார்கள்.

கௌரவப் படை நொறுங்கி ஒன்றிணைவதுபோல் தோன்றியது. “துரோணரை துணை கொள்க! பால்ஹிகரை துரோணர் அழைத்து வருக!” என்று சகுனி கூவினார். துரோணர் தன்னை எதிர்த்து நின்றிருந்த பாஞ்சாலப் படைகளை விலக்கி இடைவிடாத அம்புகளால் கிராதர்களை வீழ்த்தி உருவாக்கிய பாதையினூடாக கவசமணிந்த யானைமேல் பால்ஹிகர் திரும்ப வந்தார். அவர் மையப்படையில் இணைந்துகொண்டதும் அங்கே முரசொலிகள் எழுந்தன. “பால்ஹிகரை பீமனிடம் அழைத்துச் செல்க!” என்று சகுனி ஆணையிட்டார். பீமன் தேரிலிருந்து கழையூன்றி எழுந்து பறந்து யானையொன்றின்மேல் சென்றமர்ந்து கதையால் கௌரவர்களாகிய சத்யசந்தனையும் சதாசுவாக்கையும் தலையறைந்து கொன்றான். குருதி வழிய அவன் நிமிர்ந்தபோது நேர் எதிரில் பால்ஹிகரை கண்டான். பாய்ந்தெழுந்து கதையை வீசி அவரை எதிர்கொண்டான்.

பால்ஹிகரின் பெருங்கதை காற்றில் சுழன்றெழுந்து வந்து அவன் அமர்ந்த யானையின் மத்தகத்தை அறைந்தது. அலறியபடி யானை பின்னடைந்து வலம் சரிவதற்குள் அதன் மேலிருந்து தாவி பீமன் இன்னொரு யானைமேல் ஏறிக்கொண்டான். அந்த யானையையும் அவர் அறைந்து வீழ்த்தினார். பீமன் வீழ்ந்த யானைக்கு அடியில் சிக்கிக்கொண்டான். பால்ஹிகரின் பெரிய கதை பறக்கும் மலை என அவனை நோக்கி வர மண்ணில் படுத்து அதை ஒழிந்து காலை உருவிக்கொண்டு அது மீண்டு வந்தறைவதற்குள் ஓடிச்சென்று தன் தேரில் ஏறிக்கொண்டான். அந்தத் தேரை பிதாமகரின் கதை அறைந்து சிம்புகளாக தெறிக்க வைத்தது.

மீண்டும் அவர் பீமனை தாக்குவதற்குள் அவரை கடோத்கஜன் தன் கதையால் தாக்கினான். ஆனால் பெரிய கதையின் அறைபட்டு அவன் கதை உடைந்து தெறித்தது. அவர் அறைந்தபோது கடோத்கஜனின் அணுக்கப்படையினரான இரு இடும்பர்கள் உடல்சிதைந்து துண்டுகளாக தெறித்தனர். கடோத்கஜன் தன் கொக்கிக்கயிற்றில் தொற்றிப் பறந்து அப்பால் விலகினான். சர்வதனும் சுதசோமனும் பாய்ந்து பின்னடைய திருஷ்டத்யும்னனின் ஆணையின்படி நீண்ட நிலைக்கேடயங்களை ஏந்திய யானைகள் வந்து அவனை மறைத்தன. பாஞ்சாலப் படை பீமனைத் தூக்கி அப்பால் எடுத்துச்சென்றது.

நான்கு விரல்கடை பருமனுள்ள இரும்புத் தகடாலான ஆறு ஆள் உயரமுள்ள அந்த இரும்புக்கேடயங்கள் ஒவ்வொன்றும் மூன்று யானையின் எடைகொண்டவை. முகப்பில் எதிரடியை தாங்குவதற்குரிய முழைவளைவுகள் கொண்டவை. யானைமருப்புகளை எதிர்க்கும்பொருட்டு அவற்றில் கூரிய வேல்முனைகள் பொருத்தப்பட்டிருந்தன. பின்னால் யானைகள் துதிக்கையால் பற்றும்பொருட்டு வளையங்கள் கொண்டவை. கீழே இரண்டு சிறு இரும்புச்சகடங்களில் அவற்றை உருட்டிச் செல்லமுடியும். அவற்றை மத்தகத்தால் ஏந்தி துதிக்கையால் பற்றிக்கொண்டுவந்த யானைகள் ஒன்றுடன் ஒன்று இணைத்து உருவாக்கிய இரும்புக்கோட்டைக்கு அப்பால் பாண்டவப் படை பின்வாங்கிக்கொண்டிருந்தது. அங்கே கௌரவர் கொல்லப்பட்டதை அறிவித்து வெற்றிமுரசுகள் முழங்கின. பாண்டவ வீரர்கள் “வெற்றிவேல்! வீரவேல்! வெற்றி! வெற்றி!” என்று கூச்சலிட்டனர். வேல்களும் கைவாள்களும் காற்றிலெழுந்து சருகலையென தெரிந்தன.

பால்ஹிகர் கதையை வீசி யானைகள் ஏந்திவந்த கேடயங்களை அறைந்து உடைத்தார். அவருடைய கதையின் மோதலில் இரும்புடன் இரும்பு பட்டு பொறியெழுந்தது. அறைபட்ட யானை பின்னடைய அங்கே ஈரப் பரப்பிலென குழியமைந்தது. ஆனால் பின்னிருந்து இன்னொரு யானையால் உந்தப்பட்டு கேடயம் முன்னால் வந்தது. கேடயம் உடைந்து சரிய அந்த இடைவெளியை பக்கவாட்டு யானைகள் இணைந்து உடனே மூடின. பால்ஹிகர் மீண்டும் மீண்டுமென கேடயங்களை அறைந்து உடைத்துக்கொண்டே இருந்தார். கேடயச்சுவர் நீர்விளிம்பென அலைகொள்வதை சகுனி கண்டார்.

“கௌரவ இளையோரை நோக்குக! எவரேனும் உயிர் பிழைக்கக்கூடுமா?” என்று சகுனி கேட்டார். கௌரவர்களை இழுத்து பின்னாலெடுத்துக்கொண்டிருந்தார்கள். “இருபத்திரண்டுபேர்” என்று காவலன் கூவினான். “இதோ இன்னுமொருவர்” என்றான் இன்னொருவன். “நோக்குக!” என்று ஆணையிட்டபடி சகுனி பின்னால் சென்றார். சங்கொலியுடன் துரியோதனனின் தேர் முன்னால் வர உடன் துச்சாதனனும் வந்தான். சகுனி துரியோதனனின் முகத்தை கூர்ந்து சிலகணங்கள் நோக்கிவிட்டு எதிர்த்திசையில் தேரை திருப்பிச்செல்ல ஆணையிட்டார்.

ஒருகணம் உடலில் இருந்து ஆற்றல் முற்றாக விலக மாபெரும் ஓவியத் திரைச்சீலை காற்றிலாடுவதுபோல் குருக்ஷேத்ரக் களம் அலைபாய்ந்தது. அவர் தேர்த்தூணை பற்றிக்கொண்டு மெல்ல இருக்கையில் அமர்ந்தார். கண்களை மூடிக்கொண்டு மிக அருகே என தன் மேல் பதிந்திருக்கும் ஒரு நோக்கை உணர்ந்தார். பின்னர் விழிதிறந்து திரும்பி தேரிலிருந்த ஆவக்காவலனிடம் “நீர்!” என்று கைநீட்டினார்.

முந்தைய கட்டுரைபேயை அஞ்சுவது ஏன்?
அடுத்த கட்டுரைஏழாம் உலகம்- கடிதம்